Announcement

Collapse
No announcement yet.

be careful.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • be careful.

    நண்பர் ஒருவர் தன் விமான பயணத்திற்காக அதிகாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து விமான நிலையம் வரை ஓலா புக் செய்துள்ளார், புக் செய்த சில நிமிடங்களில் அழைத்த ஓலா ஓட்டுநர் தான் இன்னும் 20 நிமிடத்தில் வந்துவிடுவதாகவும், எங்கிருந்து பயணம் எது வரை, நீங்கள் ரெடியாக இருக்கிறார்களா? என்ற வழக்கமான கேள்விகளை கேட்க, நண்பரும் 'எல்லாம் ரெடியப்பா, வண்டி வந்தா கிளம்பிடலாம்' என்றிருக்கிறார். சரியாக ஒரு 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்த ஓட்டுநர், “சார் உங்க தெருவுக்குள் நுழைந்துவிட்டேன், வீடு எது, எங்கிருக்குனு கண்டுபிடிக்கமுடியல, இது சரியான அட்ரஸ் தானா" என கேட்க, நண்பரும், “அட என்னப்பா !, அட்ரஸேல்லாம் சரிதான், நீ எங்கிருக்க ? இதோ நான் வீட்டில் இருந்து வெளியே வர்றேன் பார், வெள்ளை சட்டை போட்ருக்கேன், தெரியுதா !” என்று மொபைலில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்து வெளியேறி தெருவை பார்த்தால் ஒரு ஆள் அரவம் இல்லை. “ஹலோ, என்னப்பா, தெருவுல உன் வண்டியே இல்லையே, நீ எங்கிருக்க ? என கேட்ட நொடி, முகத்தில் கர்சீப் கட்டிய இருவர், தெருவின் ஒரு இருளான பகுதியில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து நண்பரின் மொபைலை பிடுங்கி செல்ல, ஒரு நிமிடம் நிலைகுலைந்த நண்பர் அடுத்து அதிர கூட அவகாசம் இல்லாமல் எதிர்புறத்தில் இருந்து மேலும் இருவர், இன்னொரு வண்டியில் வந்து லேப்டாப் பேகை பிடுங்க, அதை இறுக பிடிக்க போராடிய நண்பர் முடியாமல் பிடி தளர்ந்து, அப்படியே கீழே விழ, நெற்றியில் காயத்துடன் நடு வீதியில் விழுந்துவிட்டார்.


    கண்ணிமைப்பதற்குள் நடந்து முடிந்த இந்த களேபரங்களை கண்டு கலவரமான அவர் மனைவி “ஏங்க, வீட்டுக்குள்ள வாங்க, ஐயோ, எப்படியாவது எந்திருச்சு வீட்டுக்குள்ள வாங்க” என வாசலில் நின்று உடல் நடுங்க கதறியிருக்கிறார், நண்பரும் தட்டு தடுமாறி எழ எத்தனித்த போது இன்னொரு இருசக்கர வாகனத்தின் என்ஜின் உறுமி ஹெட்லைட் மெதுவாக உயிர்பெற்றிருக்கிறது. ஆம் ! மேலும் இருவர் இவர் எழுவதற்காக காத்திருந்திருக்கிறார்கள், இவர் எழுந்து வீட்டை நோக்கி ஓட தொடங்கியதும் இவர் பர்ஸை குறிவைத்து பின்னால் அவர்கள் விரட்ட, உடமைகள் பறி போனதை விட இப்போது உயிர் பயம் நண்பரை ஆட்கொள்ள, எப்படியோ சுதாரித்து வீட்டினுள் நுழைந்து கதவை அடைத்து உயிர் தப்பியிருக்கிறார். இப்போது இருசக்கர வாகனத்தின் எஞ்சின் உறுமல் மிக அருகில் கேட்க, உடலெங்கும் பயம் பரவ ஜன்னலின் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். இவர் வீட்டு வாசலில் மூன்று வாகனங்களில், ஆறு பேர் “என்னடா தப்பிச்சிட்டியா” என்பது போல ஒரு எகத்தாள பார்வை பார்த்தபடி நின்றிருக்கின்றனர். அதற்குள் பக்கத்து குடியிருப்புகளில் விளக்குகள் எரிய ஆரம்பிக்கவும் வேண்டா வெறுப்பாக மூன்று வாகனங்களும் இருளில் கலந்து மறைந்திருக்கின்றன. பயத்தில் இதயம் உறைந்து கை கால் நடுங்க இதை கண்டிருந்தவரை தீடீரென வந்த மொபைல் அழைப்பு மேலும் அதிர வைத்திருக்கிறது. அழைப்பை எடுத்து பேசியிருக்கிறார்,


    "சார் ! ஓலா ட்ரைவர் சார். வீட்டு வாசல்ல தான் நிக்கிறேன், வெளிய வாங்க” என சொல்ல, பயணமே வேண்டாமடா சாமி என சொல்லி அழைப்பை துண்டித்திருக்கிறார். இச்சம்பவம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்காக பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஓலா டிரைவரையும் அழைத்து காவல்துறை விசாரித்திருக்கின்றனர், 'தனக்கு எதுவும் தெரியாது, மே பேகுனாப் சாப்' என சொல்லிவிட்டார் ஓலா ட்ரைவர். திருடர்களும் இன்னும் பிடிபடவில்லை, நண்பரும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து கொண்டிருக்கிறார், இந்த சம்பவத்தில் நாம் கவனிக்க வேண்டியது, செயின் பறிப்பு போல இது ஒரு ரேண்டம் கிரைமாக நிகழவில்லை, இவர் தான் அன்றைய இரை என முடிவு செய்து மொத்தமாக கிளம்பி வந்து இதை நிகழ்த்தியிருக்கிறார்கள், ஓலா ட்ரைவர் இந்த சம்பவத்தில் கூட்டு இல்லையென்றால் வேறு எப்படி இவர் அதிகாலை பயணம் மேற்கொள்ள போகிறார், அதுவும் அவரது வீடு, தெரு உள்ளிட்ட தகவல்கள் இவர்களுக்கு தெரிந்தது என்பதெல்லாம் இன்னும் விடை தெரியாத கேள்விகள்.


    ஆகவே அதிகாலை பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் இச்சம்பவத்தை சற்று கவனத்தில் கொள்ளுங்கள், உடமைகளுடன் வெளியில் நின்று காத்திருக்காதீர்கள். முடிந்தவரை வீதியில் நின்று மொபைலை உபயோகிக்காதீர்கள், போகிற போக்கில் மொபைலையும் செயினையும் லவட்டும் திருட்டு கூட்டம் நகர மக்களை இப்போது தினம் தினம் திணறடித்து கொண்டிருக்கிறது. சட்டம் தன் கடமையை சரிவர செய்கிறது என ஒரு சராசரி தமிழனாய் நம்புவோமாக.
Working...
X