அஞ்சனாத்ரி (Tirumala)
திருப்பதியில் ஏழுமலையாக இருக்கிறார் ஆதிசேஷன். இதில் உள்ள சில மலைகள் பக்தர்களின் பெயரில் பிரசித்தி ஆனது.
7 மலைகளின் பெயர் :
நாராயணாத்ரி
வ்ருஷபாத்ரி
அஞ்சனாத்ரி
சேஷாத்ரி
வெங்கடாத்ரி
நீலாத்ரி
கருடாத்ரி
த்ரேதா யுகத்தில், ராவணன், பிரம்மாவிடம் யாராலும் எனக்கு மரணம் கூடாது என்று வரம் வாங்கினான். குரங்குகளையும், மனிதர்களையும் தவிர.
மனிதர்களும், குரங்குகளும் ராவணனை பொறுத்த வரை மதிப்பு அற்றவர்கள்.
இதையே, காரணம் கொண்டு, தேவர்கள் யாவரும்,
வானரர்கள் போன்று அவதாரம் செய்தனர்.
இவர்களில் கேசரி என்றொரு ராஜா இருந்தார்.
அவருக்கு அஞ்சனா தேவி, மாலை சூட்டினாள்.
பிடரி மயிர் அதிகம் இருப்பதால், இவருக்கு கேசரி என்ற பெயர் காரணம் ஏற்பட்டது.
இவருடைய வானர ராஜ்யம் மிக பெரியதாக இருந்தது. பல தேசங்களில், த்வீபங்களில் வானர ராஜ்யம் பிரிந்து இருந்தது.
உலக சாதாரணமான குரங்குகள் அல்ல இவர்கள், மாறாக தேவர்கள்.
தெய்வங்களே, வானர ரூபமாக அவதாரம் எடுத்து, ராவண வதத்திற்காகவும், ஸ்ரீ ராமருக்கு கைங்கர்யம் செய்வதற்காகவும் அவதாரம் செய்து இருந்தனர்.
பார்க்க குரங்கு போல இருந்தாலும், ராஜ்யம் நடத்துகிறார்கள் என்று பார்க்கும் போதே இவர்கள் தெய்வாம்சம் உடையவர்கள் என்று தெரிகிறது. ஸ்ரீ ராமாயணத்தில், கிஷ்கிந்தை காண்டத்தில், வானரர்கள் ராஜ்யம் நடத்துகின்றனர் என்று உள்ளது.
இவர்கள் பொதுவாக குரங்கு ரூபத்தில் இருக்க மாட்டார்கள். தாரை, அஞ்சனா போன்றோர், அதி சுந்தரமான ரூபத்தில் தான் இருந்தனர். தேவ ஸ்திரீயாக தான் இருந்தனர்.
வாலி, சுக்ரீவன் போன்றோர் குரங்கு போல இருந்தாலும், இஷ்டப்பட்ட போது, மனித ரூபம் எடுத்துக்கொள்வார்கள். பல பாஷைகள் பேசுவார்கள். சமஸ்கரிதம் பேசுவதில் வல்லவர்கள்.
ஸ்ரீ ராமர், பட்டாபிஷேகத்திற்கு அயோத்தியா திரும்பும் போது, 'நீங்கள் மனித ரூபம் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சுக்ரீவனையும் அவர் படைகளையும் பார்த்து சொன்னார், என்று பார்க்கிறோம்.
தேவர்களே, வானர ரூபம் எடுத்து வந்துள்ளதால், மகா பலம் கொண்டவர்களாக இருந்தனர். தேவைப்பட்டால், மரத்தையே பிடுங்கி விடுவர், மலையை தூக்கி விடுவர், அணை கூட கட்டி விடுவர். இப்படி ஒரு சாதாரண குரங்கு செய்யுமா? இவர்கள் தெய்வங்களின் அவதாரம்.
கேசரி என்பவர், அஞ்சனா தேவியுடன் கிருஹஸ்த தர்மத்தில் இருந்து கொண்டிருந்தார்.
இவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்படவில்லை.
இதனால், கேசரி தன் மனைவியை பார்த்து, "நீ தெய்வங்களை ஆராதனை செய். தெய்வத்தை வழிபடு, நமக்கு குழந்தை உண்டாகும்' என்று சொன்னார்.
மறுக்காமல், அஞ்சனா தேவி, தபசு செய்வதற்காக, திருப்பதி மலை வந்து சேர்ந்தாள்.
திருப்பதியில், அஞ்சனா தேவி வாயு பகவானை குறித்து தபசு செய்ய தொடங்கினாள்.
வெகு காலம் உபவாசத்தோடு தபசு செய்து கொண்டிருந்த அஞ்சனா தேவிக்கு வாயு பகவான் அனுக்கிரகம் செய்ய நினைத்தார்.
ஒரு நாள், தியானம் கலைந்து, அஞ்சனா தேவி கண் விழித்து பார்க்க, அப்போது, காற்றின் வேகத்தில், மரத்திலிருந்து, ஒரு பழம் அவள் அருகில் விழுந்தது. வாயு பகவான் தரிசனம் தராவிட்டாலும், இந்த பழம் மூலம் இவளுக்கு புத்ர பாக்யம் கிடைக்க அருள் செய்தார்.
தியானம் கலைந்து, பழத்தை பார்த்த அஞ்சனா தேவி, பசியினால், அந்த பழத்தை எடுத்து சாப்பிட்டாள். சாப்பிட்டதுமே, அவள் கர்பவதி ஆகிவிட்டாள்.
தெய்வ அனுகிரஹத்தால் தான், தான் கர்பவதி ஆனோம் என்று நிச்சயமாக தெரிந்தும், அவளுக்கு மனதில் ஒரு பயம் உண்டானது.
'உலகம் இதை நம்புமா? ஏதோ குழந்தை வேண்டும் என்று தபசுக்கு சென்றாள், திடீரென்று கர்பம் என்று சொல்கிறாளே !!' என்று சொல்லுமே!! உலகம் என்னவோ சொல்லட்டும், ஆனால் என் கணவர் இதை நம்ப வேண்டுமே !!.
என் அப்பா இதை நம்ப வேண்டுமே ! என்று பயந்தாள்.
மேலும், "வாயு பகவானே ! நான் புத்ர பாக்கியம் வேண்டி தபசு செய்தாலும், இப்படி திடீரென்று கர்பம் ஆக வேண்டும் என்று கேட்கவில்லையே !! தெய்வங்களுக்கு ஆச்சர்யங்களை செய்து காட்ட முடியும் என்றாலும், இப்படி ஒரு விசித்திரமான விளையாட்டு என் மூலமாக காட்டி விட்டீர்களே !! நான் எப்படி இந்த நிலையில் செல்வேன்? நான் எப்படி இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லுவேன்?" என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.
வாயு பகவான், அசரீரியாக "நான் சொல்லுகி்றேன். பயப்படாதே !" என்று சமாதானம் சொன்னார்.
இந்த தைரியத்தில், அஞ்சனா தேவி, கேசரியிடம் சென்று "தெய்வ அணுகிரஹத்தால் தான் இந்த கர்ப்பம் உண்டாயிற்று" என்று சொல்ல, கேசரி கடும் கோபம் கொண்டு மிரட்ட ஆரம்பிக்க, "இவளுக்கு தெய்வ அணுகிரஹத்தால் தான் இந்த கர்ப்பம் உண்டாயிற்று. நீ சந்தேகப்படாதே" என்று அசரீரி வாக்கு கேட்டது.
இதை கேட்டு, கேசரி மிகவும் சந்தோஷப்பட்டார்.
வாயு பகவானின் அம்சத்தோடு, உசிதமான காலத்தில், அஞ்சனா தேவி, இந்த திருப்பதி மலையில், உலகம் இன்றும் இவர் பெயரை சொல்லும் "ஸ்ரீ ஆஞ்சநேயரை" பெற்றாள்.

வாயு அம்சமாகவே அவதாரம் செய்த "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அஞ்சனாவுக்கு சாதாரண குழந்தை போல பிறக்கவில்லை, ஆனால் அஞ்சனா தேவி பெற்றாள்.
பிறக்கும் பொழுதே, மிக அழகான ரூபத்துடன், பூணல் அணிந்து, இடுப்பில் ஒரு துண்டு அணிந்து, கையில் தர்பை புல்லுடன், ஒரு பிரம்மச்சாரி போல தரிசனம் கொடுத்தார் அஞ்சனா தேவிக்கு.

இந்த ஆச்சர்யத்தை பார்த்தும், தாயாக உள்ள அஞ்சனா தேவி, இவரை தன் குழந்தை என்று பார்த்ததால், எடுத்து கொஞ்சினாள்.
இதை பார்த்த அந்த சிறு குழந்தை, அஞ்சனா தேவியை பார்த்து, 'எனக்கு ஏதாவது நெய்வேத்யம் செய்' என்று ஆச்சர்யமாக பேசினார்.
தெய்வ அம்சம் உள்ள குழந்தை என்று உணர்ந்த அஞ்சனா தேவி பழம் ஏதாவது பறிக்கலாம் என்று செல்ல, விறு விறுவென்று தவழ்ந்து வர ஆரம்பித்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர்.
அந்த சமயத்தில், தக தகவென்று சூரியன் காலை வேளை உதயமாகி கொண்டிருந்தார். நல்ல சிவப்பாக, உருண்டையாக சூரியன் இருப்பதை பார்த்து, நல்ல கனிந்த பழம் என்று நினைத்து, தக்ஷிண தேசத்தில் இருந்த வேங்கடாச்சலத்தில் இருந்து, உதயமாகும் சூரியனை விழுங்க தாவினார். பிறந்து சில மணி நேரத்திலேயே, இவருக்கு இத்தனை பலம் இருந்தால், எத்தனை பலம் இருந்திருக்கும் ஸ்ரீ ராமரை பார்த்த பொழுது...
குழந்தையாக இருந்த ஆஞ்சநேயர், வாயை திறந்து கொண்டு, சூரியனை விழுங்கும் நோக்கத்தில், வேகமாக பாய்ந்து வானத்தில் கிளம்பி, சூரிய மண்டலத்தை அடைய, சூரியனுக்கே பதற்றம் அதிகமாயிற்று.
இதை எதிர்பார்க்காத, சூரிய தேவன், மற்றும் பல தேவர்கள், இந்திரனிடம் சென்று முறையிட, தேவர்களை காக்கும் இந்திரன், தன் 'வஜ்ர' ஆயுதத்தை எடுத்து, பாய்ந்து வந்து கொண்டிருந்த குழந்தை ஆஞ்சநேயர் மீது அடித்து விட்டார்.
'வஜ்ர' ஆயுதம் இவர் தாடையில் பட்டு, மூர்ச்சையாகி சூரிய மண்டலத்தில் கீழே விழுந்தார்.
பழம் பறிக்க சென்ற அஞ்சனா தேவி, குழந்தை காணவில்லையே என்று தேடி, வானரர்களும் தேவ அவதாரங்களாக இருப்பதால், சூரிய மண்டலம் வரை வந்து விட்டாள்.
அங்கு, அடிபட்டு விழுந்து கிடந்த தன் குழந்தையை பார்த்து பதறி போனாள். "இப்படி குழந்தையை போய் இரக்கமில்லாமல் அடிக்க எவனுக்கு மனம் வந்தது. அடித்தவனுக்கு குழந்தை இல்லையா?" என்று புலம்பி, "பழம் வேண்டும் என்று கேட்டாயே" என்று மூர்ச்சையாகி கிடந்த ஆஞ்சநேயர் பார்த்து அழ ஆரம்பித்தாள்.
வாயு பகவான், இதை கவனிக்க, தன் அம்சமாக ஒரு குழந்தை பிறந்து இருக்கும் போது, பிறந்த உடனேயே, இப்படி காயப்படுத்தி விட்டனரே என்று கோபம் கொண்டார்.
கோபத்தில், தேவ லோகம் முதல் சத்ய லோகம் வரை உள்ள அனைவருக்கும் மூச்சுப்பிடிப்பு வருமாறு செய்து விட்டார்.
Read Further on...
http://proudhindudharma.blogspot.in/2017//blog-post_58.html

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends