சிவாயநம திருச்சிற்றம்பலம்
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
_______________________________________
*தல எண்: 170.*


*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்*


*சிவ தல அருமைகள் பெருமைகள்.*


*உத்வாக நாதர் கோவில், திருமணஞ்சேரி.*
_________________________________________
*இறைவன்:*
அருள்வள்ளல் நாதர், உத்வாகநாத சுவாமி, கல்யாணசுந்தரேஸ்வர்.


*இறைவி:* கோகிலாம்பாள், யாழின்மென்மொழியம்மை.


*தல விருட்சம்:* வன்னிமரம், கொன்றை மரம், கருஊமத்தம்.


*தல தீர்த்தம்:* சப்தசாகர தீர்த்தம், (இத்தீர்த்தமே, இறைவனின் திருமணத்திற்காக, மாலைகளாக மாறி வந்தன. இந்த ஏழுகடல்களும் அப்படியே இங்கே தங்கி தீர்த்தமாகிக் கொண்டன.)


*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் - ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகம்.
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகம். ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.


*பெயர்க்காரணம்:*
வேள்விக் குண்டத்தில் மகவாகத் தோன்றிய உமாதேவியாரை திருமணம் செய்து கொண்ட தலமாதலால் இப்பெயராயிற்று. எனவே இத்தலத்தில் அம்பிகை மணக்கோலத்தில் அருட்காட்சி தருகிறார்கள்.


*இருப்பிடம்:*
மயிலாடுதுறை கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் ஆறு கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது.


மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.


*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்,
கீழைத்திருமணஞ்சேரி,
திருமணஞ்சேரி அஞ்சல்,
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 813


*ஆலயப் பூஜை காலம்:*
காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


*ஆலயத் தொடர்புக்கு:*
செயல் அலுவலர்:
04364- 230661
04364- 235002


*கோவில் அமைப்பு:*
இவ்வாலயத்திற்கும் செல்ல நீண்ட விளையாட்டு நினைத்திருந்தோம்.


சுமார் ஒரு வருட காலத்திற்குப் பிறகே இந்தத் தரிசன வாய்ப்பை ஈசன் ஐஅருளித்தந்தான்.


கிழக்கு நோக்கிய இவ்வாலயம் அமைந்திருந்தது.


ஐந்து நிலைகளைத் தாங்கிக் கம்பீரருளுடன் இராஜகோபுரம் காட்சியளித்தது. *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டு, கோபுர வாயில் வழியாக உள் புகுந்தோம்.


உள்ளே நுழைந்ததும், முதலில் கொடிமர கணபதி காட்சி தர வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்..


அடுத்து, கொடிமரத்தருகே வீழ்ந்து வணங்கியெழுந்து கொண்டோம்.


அடுத்திருந்த பலிபீடத்தருகாக வந்து நின்று, நம்முள் இருக்கும் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.


பின்பு, நந்தி மண்டபத்தருகே வந்து நந்தியாரை வணங்கிப் பணிந்து, ஈசனைத் தரிசிக்கும் அனுமதியையும் இவரிடம் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.


இதன்பிறகு, மூன்று நிலைகளையுடைய இரண்டாவது கோபுரத்தை வணங்கி, உள்ளே நுழைந்தோம்.


நேராக மூலவர் ஆலயம் காணக்கிடைத்தது.


கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சியருளிக் கொண்டிருந்தார்.


மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.


கருவறையின் முன் மண்டபத்திற்குதிரும்பியபோது, வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இறைவி சந்நிதி காணக் கிடைத்தது.


கூப்பிய கைகளுடன் அம்பாள் சந்நிதி முன் வந்தோம்.


அம்பாளுக்கு திரையிட்டு நைவேத்யம் ஆகிக் கொண்டிருந்தது.


சில நிமிடங்கள் கண்களை மூடி அம்பாளை நினைத்து தியாணித்தோம்.


திரைவிலகி, அம்பாள் அருட்காட்சி காணக் கிடைத்தது.


அம்பாள் கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தந்தாள்.


மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


கருவறையின் இடதுபுறம் திரும்பி நடக்கையில், நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியருளிக் கொண்டிருந்தார்கள்.


சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.


அடுத்திருந்த நடராஜப் பெருமானை வணங்கித் தோழுது நகர்ந்தோம்.


பின்பு, சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகளுக்குச் சென்று ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.


மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்த காரணத்தினால், ஈசனின் நெற்றிக்கண் பார்வையில் எரிந்து சாம்பலானான்.


இதனால் மனம் நொந்த ரதி ஈசனிடம் யாசிக்க, மன்மதன் திருந்தி சிவப்பெருமானை துதிக்க, சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது.


இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது.


சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தம் கோயிலின் பக்கத்தில் அமைந்து உள்ளது.


சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.


இத்தலத்தில் இருந்து சுமார் இரண்டு கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி
என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண சடங்குகள் நடைபெற்றன.


*தல அருமை:*
உமாதேவி ஒருமுறை கையிலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள்.


சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே ஒப்புக்கொண்டு வாக்களித்தார்.


அதன்பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார்.


பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.


உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர்.


திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார்.


அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.


சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார்.


பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார்.


சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.


*தலச் பெருமை:*
திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமனஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றவை.


மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும்.


இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி மூலவரை வணங்கிப் பின், இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.


*திருமண பிரார்த்தனை விபரம்:*
திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால்விரைவில் திருமணம் இனிதே கைகூடும்.


ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் ஐந்து தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.


திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் தினமும் காலையில் நீராடி விட்டு ஆலயத்தில் வழங்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை பிழிந்து உப்பு சர்க்கரை சேர்க்காமல் நீரில் கலந்து சாப்பிட்டுவிட்டு ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும்.


பின்பு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.


திருமணம் முடிந்தவுடன், ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை தம்பதி சமேதராய் வந்து ஆலயத்தில் செலுத்தி பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ள வேண்டும்.


நெய்தீபம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், சந்தனம், இரண்டு மாலை, இரண்டு தேங்காய் ஆகிய பூஜை சாமான்கள் அனைத்தும் ஆலயத்தின் உள்ளே ஆலய நிர்வாகத்தால் நியாயாமான விலையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.


*தல சிறப்பு:*
மன்மதன் பூசித்து பேறு பெற்ற தலம் இது.


ஆமை வழிபட்ட தலம் இது.


குலச்சிறை நாயனார் வழிபட்ட தலம் இது.


தேரெழுந்தூரில் பசுவாகப் பிறக்க அம்பாளுக்கு சாபம் பெற்று, அசுவத வனத்தில் பசு உரு ஏற்று அம்பிகை உலாவி வந்தார்கள்.


கோமலில் திருமால், திருமால் மாடுமேய்ப்பவனாக வந்து, பசுக்களை பாதுகாத்து வந்தார்.


திருக்கோழம்பத்தில் குளம்பின் வருடத்தை ஏற்கப்பட்டது.


தியுவாவடுதுறையில் அம்பாளான பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டது.


குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாகத்தில் உமையம்மை தோன்றினார்கள்.


திருவேள்விக்குடியில் கல்யாண நீராடலைக் கொண்டு, கங்கணதாரணம் கொண்டன.


குறுமுலை பாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டது.


எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர்கொண்டழைக்கப்பட்டது.


திருமணஞ்சேரியில் வைத்து உமையம்மையை ஈசன் திருமணம் செய்து கொண்டார்.


இத்தலத்தில், கல்யாணசுந்தரரை எழுந்தருளச் செய்து, இவர் முன்னால், ஒரு புறம் வரிசையாக, மாலை சார்த்தி அர்ச்சனை செய்பவர்களையும், மறுபுற வரிசையில், திருமணம் நடந்தேறிய தம்பதியர்களையும் அமரச் செய்து, அர்ச்சனை செய்யும் காட்சிகள் காணவேண்டிய காட்சிகள்.


*சம்பந்தர் தேவாரம்:*
1. அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.


🏾கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.


2. விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.


🏾நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.


3. எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையு மாள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.


🏾வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.


4. விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
உடையானை யூழிதோ றூழி யுளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.


🏾விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசைபாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.


5. எறியார்பூங் கொன்றையி னோடு மிளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.


🏾ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான்கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.


6. மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே.


🏾முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.


7. எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.


🏾யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண்போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.


8. எடுத்தானை யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.


🏾கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகியபத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.


9. சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே.


🏾வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப்படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.


10. சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.


🏾சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.


11. கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே.


🏾கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.


திருச்சிற்றம்பலம்.


*திருவிழாக்கள்:*
சித்திரை மாதத்தில், பூச நட்சத்திரத்தில், திருக்கல்யாண வைபவம் மூன்று நாட்களாக நடைபெறும்.