206.வாட்பட
206
ஆய்க்குடி
தென் காசிக்கு அருகில் உள்ளது
பரமேட்டியை காவல் இடும் ஆய்க்குடி காவல
தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
தாத்தனத் தானதன தனதான


வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும்
மாத்திரை போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக்
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக்
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினைப் பூரையிட அமையாதோ
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநிள் கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனு மிமையோரும்
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
மாய்க்குடி காவலவு ததிமீதே
ஆர்க்குமத் தானவரை வேர்கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே


பதம் பிரித்து உரை
வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு
உடை தாள் அரசர் பெரு வாழ்வும்
வாள் பட = வாள் வீச்சு படுவதால் சேனை பட =படைகள் அழியும்படி ஓட்டரை ஓட்டி = (பகைவர்களை) விரட்டி ஓட்டி இறுமாப்பு உடைத்த = செருக்கு அடைந்துள்ள தாள் =முயற்சியை உடைய அரசர் = அரசர்களின் பெரு வாழ்வும் = சிறந்த வாழ்வும்.
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்
வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல
மாத்திரைப் போதில் = ஒரு நொடிப் பொழுதில்இடு காட்டினில் = சுடு காட்டில் போம் என =அழிந்து போகும் என்று இல் வாழ்க்கை =இல்லற வாழ்க்கையை விட்டு ஏறும் = துறந்து கரை ஏறும் அடியவர் போல = அடியார்களைப் போல.
கோள் பட பாத மலர் பார்த்து இளைப்பு ஆற வினை
கோத்த மெய் கோலமுடன் வெகு ரூப
கோள் பட = ஒரு துணிவான முடிவைமேற்கொள்ளவும் பாத மலர் பார்த்து = திருவடி மலரைக் கண்டு இளைப்பாற = இளைப்பாறவும்வினை = வினையால் கோத்த = ஏற்படுகின்றமெய்க் கோலமுடன் = உடல் என்னும் பல உருவங்களாகிய.
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும்
கூத்தினை பூரை இட அமையாதோ


கோப்பு உடைத்தாகி = அலங்காரங்கலைப் பெற்று அலமாப்பினில் = துன்பங்களில் பாரி வரும் = வளர்ந்து வரும் கூத்தினை =ஆட்டத்தில் பூரை = (இனியேனும் இந்தப்) பயனற்றவனை இட = நீ தள்ளுதல்அமையாதோ = ஒரு முடிவு பெறாதோ?
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை
சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி
தாள் பட = கால் பட்டால் கோப = கோபித்துச் சீறும் விஷப் பாம்பினில் = பாம்பு போல பாலன் மிசை = பாலனாகிய மார்க்கண்டன் மீது சாய் =குறிக் கொண்டு தொடு பாரவு = தொடர்தல் மிக்கவுடன் நீள் = (தமது) நீண்ட கழல் தாவி =திருவடியை நீட்டி.
சாற்றும் அக் கோர உரு கூற்று உதைத்தார் மவுலி
தாழ்க வஜ்ர ஆயுதனும் இமையோரும்
சாற்றும் = (உன்னை விடேன் பார் என்று) பேசியஅக் கோர உரு கூற்று = அந்தக் கோர ரூபம் உள்ள யமனை உதைத்தார் = உதைத்த சிவ பெருமான் மவுலி = (தமது) முடியை தாழ்க்க =தாழ்க்கவும் வஜ்ர ஆயுதனும் = குலிசாயுதத்தை ஏந்திய இந்திரனும். இமையோரும் =தேவர்களும்.
ஆள் பட சாமம் பரமேட்டியை காவல் இடும்
ஆய்க்குடி காவல உததி மீதே
ஆள் பட = ஆட்பட்டு நிற்கவும். சாமம் =பொன்னிறமுடைய பர மேட்டியை = பிரமனை காவல் இடும் = சிறையிட்ட. ஆய்க்குடிக் காவல = ஆய்க்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசே உததி மீதே = கடலின் மேல்.
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை
ஆர்ப்பு எழ சாட வல்ல பெருமாளே.


ஆர்க்கும் = போர் புரிந்த. அத் தானவரை =அந்தச் சூரன் முதலான அசுரர்களை வேல் கரத்தால் = கையில் இருக்கும் வேலாயுதத்தால்வரையை = (அந்த அசுரர்கள் இருந்த) எழு கிரியையும். ஆர்ப்பு எழ = பேரொலி உண்டாகும்படி. சாட வல்ல பெருமாளே =அழிக்க வல்ல பெருமாளே


விளக்கக் குறிப்புகள்
1. அரசர் பெரு வாழ்வும் மாத்திரைப் போதில் இடு காட்டினில்...
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி விடலாமோ... திருப்புகழ்,தினமணிசார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
2. பாலன் மிசை சாய்த்தொடுப் பாரவு நின் கழல் தாவி....


மார்க்கண்டனுக்கு விதித்திருந்த பதினாறு ஆண்டுகள் முடிந்து என்று அவன் உயிரைக்
கவரக் காலன் வந்த போது அவர் சிவ பூசையில் செய்து கொண்டிருந்தார். அப்போது
சிவ பூசை செய்வதையும் மதியாமல் காலன் பாசத்தை வீசினான். இறைவன்
எழுந்தாருளி காலனக் காலால் உதைத்து அவனை வீழ்த்தினார்.


பதிமூன்றும் சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி உதைத்தான் கூற்றான் விண்முகில் போல் மண்ணுற வீழ்ந்தான் - கந்த புராணம்
மறலியி னாட்ட மறசர ணீட்டி.. திருப்புகழ், பாட்டிலுருகிலை


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. ஒரு சமயம் அக்குளத்தை மக்கள் தூர்வாறியபோது, அதனடியில் பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் அழகிய சுப்பிரமணியர் சிலை ஒன்று கிடைத்தது. அச்சிலையை எடுத்துக்கொண்ட பக்தர் ஒருவர் தமது வீட்டின் பின்புறத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்தில் வைத்து பூஜை செய்துவந்தார். ஒர்நாள் அவரது கனவில் தோன்றிய பாலசுப்பிரமணியர், அரசும், வேம்பும் இணைந்திருந்த இடத்தில் தன்னைப் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடும்படி கூறினார். சுப்பிரமணியர் கூறியதைப்போன்ற இடம் தனக்கு தெரியாது என அவர் கூறவே, அவரது தொழுவத்தில் இருக்கும் செம்மறி ஆடு சென்று நிற்கும் இடத்தில் தன்னை பிரதிஷ்டை செய்யும்படி கூறி அருளினார். அதன்படி, இவ்விடத்தில் ஆடு நிற்கவே சிறிய அளவில் பாலசுப்பிரமணியருக்கு ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சைவ, வைணவ ஒற்றுமை கருதி இராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வணங்க ஆரம்பித்தனர். எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியர் ஹரிராமசுப்பிரமணியர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் பாலசுப்பிரமணியர், இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு, வேம்பு, மாவிளக்கு, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்ச விருட்சங்கள் இக்கோயிலில் உள்ளன.