பகவானுக்கும் பக்தனுக்கும் போட்டி


ஆயிரக்கணக்கில் நந்த பாலன் விஷமங்கள் செய்த போதிலும், அவர்கள் வீட்டில் சென்று த்வம்சம் செய்த போதிலும், அவனது அத்தனை லூட்டிகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அவன் மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் கோகுல வாசிகள்.


எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தாலும், ஒரு புறம் புகார்களாக அடுக்கிய போதும், மற்றொரு புறம் அவன் வரவில்லையென்றாலோ, அவனைப் பார்க்கவில்லையென்றாலோ ஏங்கிப்*போவார்கள்.
பழம் விற்கும் ஏழைப்பாட்டியின் குரல் கேட்டு, வாசலில் ஓடி வந்தான் கண்ணன்.


பாட்டீ, நில்லுங்க..


பழம் வேணுமா சாமீ...


எனக்குத் தருவீங்களா?


குட்டிக் கண்ணனின் அழகு அவளை என்னவோ*செய்தது. போதாகுறைக்கு பாட்டி என்று உறவு கொண்டாடுகிறான்.
உறவுகள் ஏதுமின்றி, தனியாக பழங்கள் விற்று வயிற்றைக் கழுவிக் கொள்பவளுக்குப் புதிய உறவு. அதுவும் இறைவனோடு.
சின்னக் கண்ணன் இதழ்களைக் குவித்துக் குவித்துப் பேசும் எழிலைக் காண்போர் பேச்சற்றுப் போவாரன்றோ.


உங்களுக்குதான் எல்லமே...


அப்படியா? எல்லமே எனக்கா?
ஆமாங்க துரை.. எல்லாம் உங்களுக்குத் தான்..


இருங்க வரேன்..


உள்ளே ஓடிச்சென்று இரண்டு பட்டுக் கரங்கள் நிறைய தானியங்களை அள்ளிக்கொண்டு வந்தான்.


தத்தித் தத்தி அவன் ஓடி வரும் வேகத்தில், கைஇடுக்குகள் வழியாக தானியங்கள் சிந்திக்கொண்டே வந்தது.
மூன்றாம் கட்டிலிருந்து வாசலுக்கு வருவதற்குள் எல்லா தானியங்களும் கீழே சிந்திவிட,


இந்தாங்க பாட்டி, நீங்க எனக்கு சும்மா தரவேணாம். இதை எடுத்துக்கோங்க.


கையை நீட்டியது.
கீழே இரைந்ததுபோக மீதி சில தானியங்கள் கைகளில் மிஞ்சியிருந்தன.


சரிங்க சாமீ, உங்க கையால எது கொடுத்தாலும் போதும்..


கூடையை நீட்டினாள். கண்ணன் தாமரைக் கைகளைக் கூடையில் உதற, அக்ஷயமான செல்வங்களை அளிக்கும் வரத ஹஸ்தங்களிலிருந்து, கூடையில் விழுந்த தானியங்களை பழைய துணியில் சுற்றி வைத்துக்கொண்டாள். கொண்டு வந்த அத்தனை பழங்களையும் கண்ணன் கை நிறைய அடுக்கினாள்.


உண்மையில், பழங்களை விற்றால்தான் அன்றைய உணவு என்ற நிலையில், அவள் மனம் கண்ணனைப் பார்த்ததும் நிறைந்துவிடிருந்தது.
பசியும், பட்டினியும் பழகிப்போனவைதாம். ஆனால், இப்பேர்ப்பட்ட குழந்தை பாட்டீ,பாட்டீ என்று பத்து தடவைக்கு மேல் அழைத்தானே..
நினைத்துக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்தாள்.


வீட்டுக்குச் சென்றால் அவளது கூடை நிறைய விலை உயர்ந்த ரத்தினங்கள் நிரம்பியிருந்தன.


இரண்டு நாட்கள் சென்றன. பழம் விற்கும் பாட்டியின் ஏழ்மையைப் போக்கிவிட்ட சந்தோஷம் கண்ணனுக்கு. இனி அவள் வாழ்நாள் முழுதும் உட்கார்ந்து சாப்பிடலாம். தள்ளாத வயதில் வீதிவீதியாய் அலைய வேண்டியதில்லை.


மூன்றாம் நாள் காலை..
பழம் வாங்கலியோ.. பழம்...


அதே பாட்டியின் குரல்தான்.
ஓடி வந்தான் கண்ணன்.


ஏன் பாட்டீ, உங்களுக்கு அவ்வளவு ரத்தினம் தந்தேனே. பாக்கலியா ?


நீங்க குடுத்தீங்க சாமீ.. இதோ பாருங்க.. கூடை நிறைய பழங்களுக்கு அடியில் கண்ணனுகான நகைகள். நீங்க பாட்டீ பாட்டீன்னு கூப்பிட்டீங்க.. பாட்டியால முடிஞ்சது. எல்லாம் நீங்க தந்ததுதான். இதெல்லாம் நான் வெச்சுட்டு என்ன செய்யப்போறேன்? எனக்கு ஒரு கால் வயத்துக் கஞ்சி போதுமே...
சொல்லிக்கொண்டே அத்தனை நகைகளையும் கண்ணனுக்குப் பூட்டி அழகு பார்த்தாள்.


கண்ணனுக்கு ஒரே புதிராய்ப் போனாள் அவள். ஏழையாய் இருக்கிறாள். செல்வத்தைக் கொடுத்தால், எனக்கே திருப்புகிறாளே..
கொஞ்சம் அசந்துதான் போனான் கண்ணன்.


மறுநாள் காலை மறுபடியும்
பழம் வாங்கலியோ.. பழம்...


பாட்டியின் குரல் கேட்டு, கண்ணன் மிகவும் ஆச்சாரியப்பட்டான்.


ஓடி வந்தான். இப்போது பாட்டியைப் பார்க்கக் கண்ணனுக்கு ஆவல்.
பாட்டீ உங்க வீடு..?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஆமா சாமீ, நீங்க என் குடிசையைவே அரணமனை போலாக்கிட்டீங்க...


அது பத்தலையா பாட்டீ? மறுபடி ஏன் பழம் விக்கறீங்க..


அதிருக்கட்டும். நீங்க என் கூட என் வீட்டுக்கு வருவீங்களா சாமீ?


ஓ வரேனே...


ப்ரம்மம் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு தளர்நடை நடந்து சென்றது.
அங்கே...
ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டில் கண்ணனின் அழகான சித்திரம் வைத்து கோவில்போல் செய்து, ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன.அதன் எதிரே சிறிய குடிசை போட்டுக் கொண்டாள் அவள்.


என் ஒருத்திக்கு எதுக்கு சாமீ மாளிகை? சாமிக்குதான் எல்லாம். என்றாளே பார்க்க வேண்டும்.


அவளது பக்திக்கு ஈடு செய்யமுடியாத கண்ணன் திணறிப்போனான்.


பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள போட்டி, பக்திக்கும் கருணைக்கும் உள்ள போட்டி. அதில் பகவான் எப்போதும் தன்னைத் தோற்பவனாகவே கருதுகிறான். அதனாலேயே பக்தனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தன் நிலையை விட்டு இறங்கியும் வருகிறான் அல்லவா?