சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை. கு.கருப்பசாமி.*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*131*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*வில்வாரண்யேசுவரர். திருக்கொள்ளம்புதூர்.*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதின்மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.


*இறைவன்:* வில்வாரண்யேசுவரர், வில்வனநாதர்.


*இறைவி:* செளந்தரநாயகி, அழகுநாச்சியார்.


*திருமேனி:* சுயம்புவானவர்.


*தல விருட்சம்:* வில்வம்.


*தல தீர்த்தம்:* வில்வ தீரீத்தம், பிரம்ம தீர்த்தம், காண்டீப தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வெட்டாறு (முள்ளியாறு-அகத்திய காவேரி.)


*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


*ஆகமம்:* காமிக ஆகமம்.


*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.


*புராண பெயர்கள்:*
கூவிளவனம், பிரமவனம், காண்டீப வனம், பஞ்சாக்கரபுரம், கொள்ளம்புதூர் , திருக்கொள்ளம்புதூர்.


*இருப்பிடம்:*
கொரடாச்சேரியில் இருந்து ஏழு கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


கும்பகோணத்தில் இருந்து தெற்கே இருபது கி.மி. தூரத்தில் இருக்கிறது.


கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.


*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்,
திருக்களம்பூர்,
திருக்களம்பூர் அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 622 414


*ஆலயத் திறப்பு காலம்:*
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


*கோவில் அமைப்பு:*
ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இருந்த இவ்வாலயத்துக்குள் *"சிவ சிவ"* *சிவ சிவ* என மொழிந்து உள் புகுந்தோம்.


முகப்பு வாயிலினுள் நுழைந்ததும் மேற்குப்புறத்தில் ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்துடனான சுதையுடன் காட்சி கிடைக்க, வணங்கித் தொடர்ந்தோம்.


அடுத்து இருபுறமும் துவார விநாயகர் இருக்க கைதொழுது நகர்ந்தோம்.


அடுத்து உள் தொடர்ந்தபோது, விசாலமான முற்றவெளிக்கு வந்து சேர்ந்தோம்.


வலதுபுறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி இருக்க வணங்கிக் கொண்டோம்.


இரண்டாவது வாயிலருகே வந்த போது ஐந்து நிலைகளையுடைய கோபுரக் காட்சி தெரியவும், சிவ சிவ என மொழிந்து கோபுரத்தைத் தரிசித்து உள் சென்றோம்.


வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர் இருக்க பணிந்து வணங்கிக் கொண்டோம்.


தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக இருக்க, இங்கும் முன்நின்று வணங்கிப் பணிந்தோம்.


வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எதுவும் காணக்கிடைக்காது வெட்டவெளியாயிருந்தது.


தெற்கு வெளிப் பிரகாரத்திலிருந்து நகர்ந்து இரண்டம் பிரகாரத்துள் நுழைந்தோம்.


இங்கு மூன்று நிலைகளுடான கோபுரத் தரிசனம் கிடைத்தது. சிரசிற்கு மேலாக கைகளை உயர்த்தி கூப்பி *சிவ சிவ* என வணங்கிக் கொண்டோம்.


ஐந்து நிலை கோபுர வாயில் வழியே உள் நுழைந்ததும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பத்தைக் கண்டு மெய்மறந்து நின்றோம்.


உள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் இருக்க தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கி நகர்ந்தோம்.


அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகளைக் கண்டு வணங்கி வலம் செய்தோம்..


வலம் வந்து தரிசித்து வந்தபோது, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தைக் காணப் பெற்று வணங்கிப் பணிந்தெழுந்தோம்.


கொடிமரத்து விநாயகரையும் வணங்கிக் கொண்டோம்.


மண்டபத்தினுள் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி இருந்தது. அம்பாள் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பார்வை தந்து கொண்டிருந்தாள்.


மனமுருக பிரார்த்தனை செய்வித்து அர்ச்சகர் காட்டிய தீபாரதனையைப் பெற்று வணங்கி வெளிவந்தோம்.


சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணப்பெற்றோம்.


சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் இருப்பதைக் காணப்பெற்றோம்.


துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடைந்தோம்.


நேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததினால், தரிசனம் மிகத் தெளிவாக அமைந்தன.


பிரார்த்தனை செய்து, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.


கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களை கண்டு வணங்கிக் கொண்டோம்.


சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இவருக்குண்டான வணங்குதல் முறையை, முறையாக வணங்கி வெளிவந்தோம்.


*வழிபட்டோர்கள்:*
அர்ச்சுனன், கங்கை, விநாயகர், காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட் சோழன், பிருகுமுனிவர், காசிபர், கன்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் வழிபட்டனர்.


இடைக்காட்டுச் சித்தர் முக்தி பெற்ற தலம் இது.


இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமான் பஞ்சாட்சர மந்திரத்தை காதில் ஓதி முக்தி அளிக்கின்றார் என்பது தொன்மை.


அனைத்து ஆலயங்களிலும் இரவு ஆலயத்தை மூடும் முன் அர்த்தஜாம பூஜையை செய்வது வழக்கம்.


ஆனால், தீபாவாளி அன்று மட்டும் முந்தைய நாள் செய்யவேண்டிய அந்த பூஜையை அதிகாலையில் மேற்கொள்ளும் ஆலயம் இவ்வாலயம் இது.


சோழ வள நாட்டில் வாழ்ந்தவர்கள் பாதிரி வனம் எனும் *திருக்கருகாவூரில் உஷத்கால (சூரியோதய) பூஜையையும்,*
முல்லை வனம் எனும் *அவளிவளநல்லூரில் கால சந்தி (முற்பகல்) பூஜையையும்,*


வன்னிவனம் எனும் *ஹரித்வார மங்கலத்தில் உச்சிகால பூஜையையும்,*


பூளைவனம் எனும் *ஆலங்குடியில் சாயரட்சை (சூரிய அஸ்தமனகால) பூஜையையும்,*


வில்வவனம் எனும் *திருக்கொள்ளம்புதூரில் அர்த்தஜாம (நள்ளிரவு) பூஜையையும்* ஒரே நாளில் அடுத்தடுத்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.


பல சிவத்தலங்களை தரிசனம் செய்தவாறே ஊர் ஊராக வந்து கொண்டிருந்தார் ஞானக் குழந்தை திருஞான சம்பந்தர்,


இவ்வூர் வழக்கப்படி நான்கு ஆலயங்களுக்குச் சென்று அந்த பூஜைகளை தரிசித்துவிட்டு, ஐந்தாவது ஆலயமான திருக்கொள்ளம்புதூர் நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார்.


மறுநாள், ஐப்பசி மாத அமாவாசை நாள். தீபாவளிப் பண்டிகையை எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.


இருள் அடர்ந்த அந்த வேளையில் திருஞான சம்பந்தர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடந்து செல்ல முயன்றார்.


சோதனையாக ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது.


அனைவரும் திகைத்து செய்வதறியாமல் நின்றனர்.


திருஞான சம்பந்தர் தைரியமாக தாமே படகை செலுத்தத் தீர்மானித்து,
கட்டியிருந்த படகை அவிழ்த்து அதில் ஏறி அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார்.


இருட்டான அந்த அமாவாசை இரவில் பயந்த அடியார்களுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் பதிகம் பாடினார் சம்பந்தர்.


வெள்ள நீரோட்டத்தை எதிர்த்து மெல்ல படகைச் செலுத்தி மறுகரையை அவர்கள் அடைந்த போது அதிகாலை ஆகிவிட்டது.


திருக்கொள்ளம்புதூர் அர்ச்சகர்கள் திருஞான சம்பந்தர் ஆலயத்திற்கு வருவதை வரவேற்க ஆவலாக பூரண கும்பத்தோடு காத்திருந்தனர்.


அர்த்த ஜாம பூஜைக்கான நேரம் கடந்து விடிகாலையும் வந்து விட்டது. என்ன ஆயிற்றோ சம்பந்தருக்கு என அவர்கள் கவலைப்பட்டனர்.


அப்போது தம் அடியவர்களுடன் திருஞான சம்பந்தர்ஆலயப் பிரவேசம் செய்தார்.


அவருக்காக அர்த்த ஜாம பூஜை, உஷத்காலத்தில் செய்யப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் அந்த ஆலயத்தில் இவ்வாறு பூஜை நடத்தப்படுகிறது.


திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்ததை நினைவுறுத்தும் வகையில் ஓடத்திருவிழா நடக்கிறது.


திருஞான சம்பந்தரின் உற்சவத்திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு செலுத்துகிறார்கள்.


அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரை சேருகிறது. அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.


இந்த விழாவிற்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம் இன்றுவரை தொடர்ந்த வண்ணம் அமைந்து வருகிறது.


அன்று உஷத்காலத்தில் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை நடக்கும். ஆண்டிற்கொருமுறை நடக்கும் அபூர்வத்திருவிழா என்பதால் அன்று சிவனடியார்கள் அதிக எண்ணிக்கையில் ஆலயத்தில் கூடுவர்.


அம்பாள் அழகு நாச்சியாரும், வில்வவனநாதரும் திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்லாமல் ஆலயம் நாடும் அடியார்களுக்கும் தம் அருளை வாரி வழங்கும் விழாவாக நடக்கிறது.


*ஐந்து சிவ தலங்களும்!, ஐந்து வேளை வழிபாடுகளும்!:*
பலர் அறிந்திடாத அற்புதத் தகவல்;


சிவதலங்கள் பற்றி நாமறிந்தவைகள் நிறைய, நாமறியாதவைகள் சில!


ஒன்று என்ற விகிததத்தில் ஐந்து வேளைக்கு வழிபடக்கூடிய ஐந்து சிவ தலங்கள் குறித்த அற்புதமான ஆன்மீக தகவல் இது.


ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டு முறையில் கலந்துகொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்கள் அதாவது பஞ்ச ஆரண்ய தலங்கள் ஆகும்.


ஒரே நாளில் ஒவ்வொரு ஐந்து வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறு பிறவி இல்லாத நிலையை அடையலாம்.


ஆரண்யம் என்றால் காடு என பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள்
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை, காலை, உச்சிவேளை, மாலை, அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.


தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச ஆரண்ய தலங்கள் முறையே


1. திருகருக்காவூர் விடியற்காலையிலும்,


2.திருஅவளிவநல்லூரில் காலையிலும்,


3.திருஅரதைபெரும்பாழியில் உச்சிவேளையிலும்


4. திருஆலங்குடியில் மாலையிலும்,


5. திருக்கொள்ளம்புதூரில் அர்த்தசாமத்திலும் என வழிபடுபவையாகும்.


திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பஞ்சஆரண்ய
தலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.


*சம்பந்தர் தேவாரம்:*
கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால்,இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப்படுவதாக. எம் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய சிவபெருமானே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவாயாக.


கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾நீர்நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம் பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப்படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾குலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில், விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


குவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்
தவள நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள். புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾திருநடனம் செய்யும் தலைவனான சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்றவனும், இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதிமுதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾பருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


நீர கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


🏾நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும், சமணர்களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே.


🏾கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புகழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப் பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர்.
திருச்சிற்றம்பலம்.


*திருவிழாக்கள்:* சித்திரையில் பிரமோற்சவ நாளில் சுவாமி புறப்படுதல், நவராத்திரியில் அம்மன் புறப்படுவதல், ஐப்பசி அமாவாசையில் திருஞானசம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர் பூஜை, மற்றும் தைப்பூசம்.


*தொடர்புக்கு:* 4366 262 239


பாடல் பெற்ற சிவ தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *ஜகதீசுவரர், ஓகைப்பேரையூர்.*


•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*