சிறு வயதில் (சுமார் 17 வயதிருக்கும்போது) அடியேனால் இயற்றி சிறு புத்தமாக வெளியிடப்பட்டது.
இத்துடன் மேலும் இசையுடன் கூடிய ஒரு பாடலும்
மெட்டமைக்கப்பட்ட ஒரு பஜனையும் உள்ளது. அடுத்தடுத்து வெளியிடப்படும்.
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பகிர்ந்துகொள்ளவும்.

ஸ்ரீ:

ஸ்ரீதேவி காமாட்சி துணை

வாழ்த்து

1.
அம்மையே நீயும் பொய்யே - நின்
ஆண்டருள் யாவும் பொய்யே
இல்லை யென்றறிவுளார்க்கு -நின்
ஈகையாம் இயல்பும் பொய்;யே!

உண்மையே உந்தன் நாமம் - என்
ஊணுடன் கலந்து வாழும்
எழிலுறு வடிவே நின்னை
ஏற்றகம் பொருந்துவார்க்கு
ஐயமற மெய்யானாயே!

ஒன்றுளம் உன்னை எண்ணி
ஓத ஓர் வாயும் தந்து
ஒளவியம் தனை அகற்றி - என்
அஃகம் இருந்தாள்வாய் நீயே!

கஞ்சியில் உறைந்து வாழும்
காமாட்சி நாமம் போற்றி!
கடலிலே வீழ்ந்த போதும்
கரம் கூப்பி நிற்பேன் போற்றி

கஞ்சிக்கே அலைந்தபோதும்
கலைமகள் பாதம் போற்றி!
கருணையின் வடிவாய் நிற்கும்
காமாட்சி பாதம் போற்றி!

கனகமுலை ஒழுகு பாலை
கருணையில் ஈந்தாய் போற்றி
காரிருள் தன்னில் என்னை
கண்கட்டி விட்டபோதும்

காரீயம் தன்னைக் காய்ச்சி
கண்ணிலிட் டெரித்தபோதும்
கல்லில்லை சொல்லேகொண்டு
கருணையற்றடித்தபோதும்

காலன் என் முன்னே தோன்றி
காலக் கணக்கிறும் முன்னே உன்னை
காலக் கயிற்றைக் கொண்டு
கட்டி இழுப்பேன் என்று
கடிந்துரை பகன்றபோதும்

காலா என் முன்னே வாடா
கண் உனக்குண்டோ அன்றோ
காமாட்சி பக்தன் யானே - நின்
கயிறுகள் அனைத்தும் வீணே - என்
காலடி மண்ணைத் தொட்டுன்
கண்களில் ஒற்றிக் கொண்டால்

காட்டெருமை மீதில் ஏறிக்
காடுமேடெல்லாம் கடந்து

கயிறுகொண்டுயிரைக் களையும்
கரு விலா வாழ்வை விட்டு
கவினுற வாழ்வாய் நீயே - என
காலனுக் கஞ்சேன் யானே
காணிக்கும் மாறமாட்டேன்

காலங்கள் தோறும் உன்னை
கரம் கூப்பி சிரமும் தாழ்ந்து
கானங்கள் பலவும் பாடி
கனவொடு நினைவில் தொழுவேன்
காரணம் நீயேயன்றிக்
காட்டுதல் வேறும் உளதோ
காஞ்சி காமாட்சியே என் அன்னையே!!