208.சுருதி மறை
208
உத்தரமேரூர்
(செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ தூரத்தில். முருகன் தனிக் கோயில் ஆறடி உயர முருகன் ஒரு முகம் நான்கு கரங்களுடன் காட்சி )


தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான தனதான


சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லிடுவி னுலகோர்கள் மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறிவு மறிவூற அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள்
துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர்


சுருதி = வேதங்கள் மறைகள் = உபநிடதம்,ஆகமங்கள் இரு நாலு திசையில் அதிபர் = எடடுத் திக்குப் பாலகர்கள் முநிவோர்கள் =
முனிவர்கள் துகள் இல் = குற்றமில்லாத இருடி =ரிஷிகள் எழு பேர்கள்= எழுவர். சுடர் மூவர் =முச்சுடர்கள்.


சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர்
தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள்


சொல இல் முடிவில் = சொல்லுதற்கு முடிவில்முகியாத = முடியாத. பகுதி புருடர் = பிரகிருதி புருஷர் நவ நாதர் = ஒன்பது நாதர்கள்தொலைவில் = தூரத்தில் உள்ள உடுவின் உலகோர்கள் = நட்சத்திர உலகில் உள்ளவர்கள்மறையோர்கள் = வேதம் வல்லோர்கள்.


அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சதகோடி
அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி


அரிய சமயம் ஒரு கோடி = கோடிக் கணக்கான அருமையான சமயங்கள் அமரர் = தேவர்கள் சத கோடி சரணர் = நூற்றுக் கோடி வீரசைவப் பெரியோர்கள் அரியும் அயனும் = திருமால்,பிரமன். ஒரு கோடி = (மற்றும்) ஒரு கோடி பேர்இவர் கூடி = இவர்கள் எல்லாம் கூடி.


அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும்
அறிவு உள் அறியும் அறிவு ஊற அருள்வாயே


அறிய அறிய = நன்கு ஆராய்ந்து அறிந்து பார்க்கஅறியாத = அறிய முடியாத அடிகள் = (உனது) திருவடிகளை அறிய = அறிந்து கொள்ள அடியேனும் = அடியவனாகிய நானும் அறிவுள் அறியும் அறிவு ஊற = எனது அறிவுக்குள் அறிய வல்லதான அறிவு ஊறும்படி. அருள்வாயே =அருள் புரிவாயாக.


வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக
மகர சலதி அளறு ஆக முது சூரும்


வரைகள் = கிரௌஞ்சம் ஆதிய மலைகள் தவிடு பொடியாக = தூள்பட. நிருதர் = அசுரர்களின் பதியும் அழிவாக = ஊர்கள் அழிவு பெற மகர சலதி = மகர மீன்கள் வாழும் கடல் அளறு ஆக = சேறாக முது சூரும் = பழைய சூரனும்.


மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள்


மடிய = இறந்துபட அலகை நடமாட = பேய்கள் நடனம் செய்ய விஜய வனிதை = வெற்றித் திருமகள் மகிழ்வாக = மகிழ்ச்சி அடைய மவுலி சிதறி = (அசுரர்களுடைய) தலைகள் சிதறி விழஇரை தேடி வரு நாய்கள் = உணவு தேடி வந்த நாய்களுடன்.


நரிகள் கொடிகள் பசி ஆற உதிர நதிகள் அலைமோத
நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி


நரிகள் கொடிகள் = நரிகளும் காகங்களும். பசி ஆற = பசி நீங்க உதிர நதிகள் = இரத்த ஆறுகள் அலை மோத = அலை மோதி ஓட நமனும் வெருவி =யமனும் அச்சமுற்று அடி பேண = உனது திருவடியைத் துதிக்க மயில் ஏறி = மயில் மீது ஏறி வந்து.


நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு
நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


நளின = தாமரை போன்ற உபயம் கர வேலை =மகிமை வாய்ந்த திருக்கரத்தில் உள்ளவேலாயுதத்தை முடுகு = விரைவில் செலுத்திய.முருக = முருகனே வட மேரு நகரி = உத்திர மேரூர் என்னும் தலத்தில். உறையும் =வீற்றிருக்கும் பெருமாளே இமையோர்கள் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.

[link]சுருக்க உரை
வேதங்கள், ஆகமங்கள், எட்டுத் திக்கு பாலகர்கள், முனிவர்கள்,ரிஷிகள், முச்சுடர்கள், பிரகிருதி புருடர்கள், நவ நாதர்கள்,நட்சத்திர உலகில் உள்ளவர்கள், வேதம் வல்லோர்கள், கோடிக் கணக்கான சமயங்கள், சிவனடியார்கள், திருமால், பிரமன் இவர்கள் எல்லோரும் கூடி அறிந்து பார்த்து அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் எனது அறிவுக்குள் அறிய வல்லதான அறிவு ஊறும்படி எனக்கு அருள் செய்வாயாக.
மலைகள் பொடிபட, அசுரர்கள் மாள, கடல் சேறாக, பேய்கள் நடம் இட, வெற்றித் திருமகள் மகிழ, அசுர்களுடைய தலைகள் சிதற, உணவு தேடிய நாய்களும், காக்கைகளும உண்டு பசி நீங்க, நமன் அச்சமுற்று உன் அடியை வணங்க, மயில் மீது ஏறி விரைவில் வேலைச் செலுத்திய முருகனே. உத்திர மேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. நான் அறியும் அறிவு ஊற அருள்வாயே.[/lik]


விரிவுரை குகஸ்ரீ ரசபதி

எம்பெருமான் திருக்கரங்களில் இரு வேல்கள் இருக்கின்றன. ஒன்று விடு வேல். மற்றொன்று தொடு வேல். இதனை நளின உபய கரவேல் என்பதிலும் அறிகிறோம். தொடு வேல் நிமலன் கரத்தை விட்டு நீங்காது.


ஒரு காலத்தில் சுரரை அசுரர்கள் சூரை ஆடினர். முனிவர்களை கலங்க வைத்து முருவலித்தனர். கலை என்று பெயரிட்டு கற்பை அழித்தனர். குலைந்தது உலகம். குமுறினர் மேலோர். முறையோ முறையோ இறையோனே என்று முறையிடலாயினர். உடனே ஏறு மயில் முருகா, நீ ஏறினை. விடு வேலை விரையுமாறு விடுத்தனை. அதன் பயனாக தானவர் மலைகள் தவிடு பொடியாயின. அவுண நகர்கள் அழிந்தன. வளர்ந்து இறுமாந்த கடல் வற்றியது. மாபெரும் சூரன் மடங்கி அடங்கினன். போரில் உக்கிர முகடுகள் உருண்டன. பொருகளம் முழுவதும் பிண மயமாயின. பேய்கள் பெரும் கூத்தாடின. வெற்றி மகள் விருது கூறினள். நாயும் , காக்கையும், நரியும் கூடி பாவியரைத் தின்று தம் பசியாறின. குருதி ஆறு அலை மோதி கொப்புளித்தது.
அஞ்சிய எமனும் அடி பணிந்தான். இது வரை உனது அரிய நிக்ரக நிலையை அறிந்தேன். அழிந்த சராசரம் அனைத்தையும் மறுபடியும் ஆக்கினை. இந்நில உலகில் உள்ள உத்திர மேரூர் எனும் தலத்தில் அனுக்ரக கோலம் காட்டி அமர்ந்தாய். அன்று மேருவில் இருந்த அமரர்கள் வாழ்த்தி உன்னை வழிபட உத்திர மேரூரில் வந்துளர். இமையா நாட்டம் கொண்டு அவர்கள் என்றும் உன்னை இரைஞ்சுகின்றனர். அதனால் இமையோர்கள் பெருமாள் எனப் பேறு தரும் நாமம் பெற்றனை.
இப்படி ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் நீ. இதைவரை உன் அண்ட வரலாற்றின் ஆடலை ஒரு சிறிது அறிந்தோம். பிண்டத்தில் நீ செய்யும் பேரருளை உணர்ந்தால் தான் உன்னை முழுக்க உணர்ந்தவர்கள் ஆவோம். அது கருதி அருமை உபநிஷத்துக்களை அணுகினோம்.அவைகளோ, - போன்று பர சாத்திரமும் கண்டோம். அந்த சொப்பனமும் கண்டோம். மேல் சுருதி கண்டோம். ஆன்ற பல துரிய நிலை கண்டோம். அப்பால் அது கண்டோம். அப்பாலால் அதுவும் கண்டோம் என்ற உப சாந்த நிலை கண்டோம். அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்று சான்ற உபநிடத எல்லாம். இப்படி சலிப்படைந்து வருந்துவதை அறிந்தோம். அதன் பின் அற்புத வேத தேவதைகளை அணுகிணோம். அவைகளும்,- அந்தம் இங்கு அறிவோம். மற்றதனில் அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உள அறிவோம். ஆங்கே உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம். ஜீவன் உற்ற நிலை அறிவோம். மற்றனைத்தும் நாட்டும் எந்தை நினதருள் விளையாட்டு அந்தோ அந்தோ எள்ளவும் அறந்திலேம் என்னே என்று முந்து அனைந்த மறைகள் எல்லாம் - என முறையிட்டு முடி சாய்த்து நிற்பதனையும் அறிந்தோம்.


எட்டு திக்கு பாலகர்கள் எவ்வளவோ முயலுகின்றார்.48,000 முனிவர்கள் நாள்தோறும் நினைக்கின்றார். சப்த ரிஷிகளின் சாதனை கொஞ்ச நஞ்சமல்லவே. ஒளிமயமான ஆதித்தர், மதியர்,அக்னி தேவர் மூவரும் அறிய நின் அடி அடைய அரும் பாடு படுகின்றனர். பகுதி புருடரை பார்க்கிறோம். அவர் ப்ரகிருதி புருஷர் எனப் பெறுவர்.
ப்ர - எழுச்சி, கிருதி - சிருஷ்டி எனவே மா பெரும் படைப்பில் மன எழுச்சியர் இவர். ப்ர - சத்வ குணம், கிரு - ரஜோ குணம், தி - தமோ குணம். இப்படி பொருள் செய்து திரி குணாத்ம சக்திதரர் என்று இவரைக் கூறுவர் மேலோர். இனி ப்ர - முதல், க்ருதி - சிருஷ்டி படைப்பிற்கு முதலாமவர் என்பதும் ஒரு வகை. இப் ப்ரகிருதி புருஷரும் ஏங்கி மனம் மாடுகிறார்.
நவ நாத சித்தர்களும் முயன்று எவ்வளவோ முன்னேறியவர்கள். அவர்கள் சிந்தனைக்குதான் அளவுண்டா? விண் மீன் உலகில் விளங்குவாரும் கூதாயது வேதம் ஓதுவாரான வேதியரும், சாதனை பல செய்த சமய வாதிகளும், அளவிலாத வானவரும் சாரணரும், தேர்ந்த பிரம்மாதி தேவர்களும், அடே அப்பா, எண்ணி எண்ணி உன்னை எய்த முடியாமல் ஏமாந்து நிற்கின்றார். இவர் கூடி அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் ஆவலிக்கின்றேன். அருமைத் திருவடிகளை அறியும் வழி முறையை அறிவேன். அறிந்து என்ன பலன்?
வழி அறியும் வரை கல்வி தேவை. இது சொல் உலகம் எனப் பெறும். வழி தெரிந்த பின் அம் மாபெரும் கல்வியை மறந்திட வேண்டுமாம். சுவை,ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், மண், நீர், தீ, காற்று, விண், மெய், வாய் கண், மூக்கு, செவி இவை முதலாக சொல்லப் படுவன பொருள் உலகமாகும். மயிக்கப் பெறும் இவைகளையும் மறந்து விட வேண்டுமாமே?. ஏறிய பேயை இறக்குவது சுலபமா என்ன ?
இவைகளை சாதித்தால் எதனோடும் ஒட்டாது இருக்கின்றேன் நான் என்ற முனைப்பு எழுமே. சொல்லறிவும், பொருள் அறிஒவும் பின் வாங்க எல்லாவற்றையும் விட்டேன் எனும் வீணாண தடிப்பும் என்னை விட்டு விலகினால் அதன் உதயமாகும் அருள் அறிவு. அதனுள் உனது வீரு பெற்ற கோலம் விளங்கும். சுலபமாக சொற்களால் இது வரை சொல்லி விடுகிறேன். இதுவும் படித்த நூல்களால் அடைந்த பறை. போதுமா ???
அறிவுள் அறியும் அறிவு ஊற நீ அருள் பாலித்தால் எவரும் காணாத திருவடி தரிசனம் நேருமே.
ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாள் நீ. -அறிவொன்றற நின்ற அறிவால் அறிவில் பிறிவொன்றற நின் பிரான் அலையோ என உணர்ந்து முன் ஒரு சமயம் ஓதி இருக்கின்றேனே. இவைகளை எண்ணும் போதே நெஞ்சம் பெரிதும் நிகழ்கிறதே. முருகா,குமரா, குகா, மயிலேறிய மணியே, அயிலேந்திய அரசே, அருள் கோல் ஏந்திய துரையே, - அறியாமை அறிவு அகற்றி அறிவினுள்ளே அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பையாகில் பிரியாத சிவன் தானே பிரிந்து தோன்றி பிரபஞ்ச பேதமெல்லாம் தானாய் தோன்றி நெறியாதே இவை எல்லாம் அல்லவாகி நின்று என்றும் தோன்றிடுவன். நிராதாரன் ஆயே-. எனும் சாத்திர அனுபவம், நேறச் செய் நிறையச் செய் என்று விமல முருகனை வணங்கி வேண்டிய படி.

விளக்கக் குறிப்புகள்
1. இருடிகள் எழுபேர்கள்.... (ரிஷிகள்)
அகத்தியர், புலத்தியர், அங்கிரசு, கௌதமர், வசிட்டர், காசிபர், மார்க்கண்டேயர்.
2. சுடர் மூவர்....
சூரியன், சந்திரன், அக்கினி.
3. பகுதி புருடர்...
பிரகிருதி புருஷர்கள் ( உலக மாயை அதிகாரிகள்).
4.நவ நாதர்......
சத்திய நாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வகுளி நாதர், மதங்க நாதர்,மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர்).ஒப்புக
1. அரியு மயனு மொருகோடி யிவர்கூடி....

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே. ..திருநாவுக்கரசர் தேவாரம்.

2. மகர சலதி அளறாக....
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு..
. திருப்புகழ் சீருலாவியவோதி.
சூர னுடலற வாரி சுவறிட
வேலைவிட வல பெருமாளே ..திருப்புகழ், பாதிமதிநதி.
கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமம் தாங்கி,சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.அவர் முன்புறம் வேலும், சேவற் கொடியும் இருக்க பாதத்தினருகே மயில்வாகனம் உள்ளது. முருகனுக்கு இடப் புறமாக கஜவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. முருகனின் இருதுணைவியரும் இணைந்து ஒரு வடிவாகி கஜவள்ளி அம்மனாக இங்கே சன்னதி கொண்டுள்ளாள் என்று கூறுகின்றனர். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக முருகன் தலத்தில் சன்னதி கொண்டிருப்பது ஆபூர்வக் காட்சியாகும். இந்த வேல் அமைந்திருக்கும் இடத்தில் தான் முருகன், காசிப முனிவரின் தவத்துக்கு இடையூறு நேராத வண்ணம் காத்தருள வேலை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாதது. இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரைப் போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. உள் பிராகாரத்தில் ஏகாம்பர நாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும், வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.