சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
_________________________________________
* திருவிசைப்பா.*
ஒன்பதின்மார்கள் அருளிய ஒன்பதாம் திருமுறை.
* 10-ஆம் பாடல்.*
__________________________________________
*மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு*


*அருள்புரி வள்ளலே! மருளார்*


*இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்*


*ஏறிய ஏறுசே வகனே!*


*அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்*


*அடர்த்தபொன் னம்பலத் தரசே!*


*விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே! உன்னைத்*


*தொண்டனேன் விரும்புமா விரும்பே!*
நரசிங்கத் தோற்றமாய்த் தூணில் வெளிப்பட்டு இரணியனின் மார்பைக் கிழித்த திருமாலுக்கு அருள் செய்த கொடையாளனாகிய சரபமூர்த்தியே!


சிவபூஜையை மறந்து பெளத்த மதத்தில் மயங்கி நின்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி போன்ற அசுரர்கள் வசிக்கும் இடமான திரிபுரம் எரிந்து அழியும்படி நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பெற்ற தேரின் மேல் ஏறிய ஆண்சிங்கம் போன்றவனே!


வலிமை நிறைந்த அரக்கனாகிய இராவணனின் அகங்காரம் ஒடுங்கும்படி அவனைக் கயிலை மலையின்கீழ்த் திருவருள் கொண்டு நசுக்கிய கனகசபையில் எழுந்தருளிய அரசே!


விடத்தைக் கண்டத்தில் அணிந்த எமது அழகனே!


உன்னைத் தொண்டனாகிய யான் விரும்பும் வண்ணம் நீ விரும்பி அருள்வாயாக!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதிருவிசைப்பாவின் ஆசிரியர் திருமாளிகைத்தேவர் அருளிய முதல் பத்து பாடல்களில் கடை வரிகளில் எங்ஙனம் ஏங்கி உருகுகிறார் பாருங்களேன்.


* தொண்டனேன் விளம்புமா விளம்பே!*


* தொண்டனேன் பணியுமா பணியே!*


* தொண்டனேன் கருதுமா கருதே!*


* தொண்டனேன் உரைக்குமாறு உறேயே!*


* தொண்டனேன் நணுகுமா நணுகே!*


* தொண்டனேன் இசையுமாறு இசையேன்!*


* தொண்டனேன் நுகருமா நுகரே!*


* தொண்டனேன் புணருமா புணரே!*


* தொண்டனேன் தொடருமா தொடரே!*


* தொண்டனேன் விரும்புமா விரும்பே!*


* தொண்டனேன் நினையுமா நினையே!*
என்று.....

* தினமும் கொஞ்சம் கொஞ்சமாக திருமாளிகைத் தேவரை பற்றி...*


அந்தணமாதர்கள் பலர் திருமணப் பேறு வாய்க்கப் பெறாமல் இருந்து வந்தனர்.


திருமாளிகைத்தேவரை மனதால் நினைந்த பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள், அவரை மனத்தால் தியானிக்க அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர்.


அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே அழகையொத்து இருந்தன.


அதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்றார்கள். இதை புகாராக எடுத்துக் கொண்டு, அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர்.


அதைக்கேட்ட நரசிங்கன் சினந்தெழுந்தான்,


திருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர்கள் பலரை அனுப்பி வைத்தான்.


அரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள்..... மதிமயங்கி நினைவுற்ற நிலையில், தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசன் முன் வந்து நின்றனர்.


இதனைக் கண்டு மேலும் சினமுற்ற மன்னன், மேலும் பல படைத்தலைவர்கள் பலரை அழைத்து, திருமாளிகைத்தேவரை இழுத்து வருமாறு அனுப்பினான்.


திருமாளிகைத்தேவரை இழுத்து வரச்சென்ற படைத்தலைவ வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு செத்து ஒழிந்தார்கள்.


இதை அறிந்த மன்னன், நால்வகைச் சேனைகளோடு தானே, திருமாளிகைத்தேவர் மேல் நடவடிக்கை விரைந்தான்.


அதேநேரம், மன்னனின் நடவடிக்கையைக் கண்ட திருமாளிகைத்தேவர், குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோல ஒப்பிலா முலையம்மையிடம் சென்று வணங்கி விண்ணப்பித்தார்.


உடனே, அம்பிகை மதில் மேலிருந்த நந்திகளையெல்லாம் அழைத்து ஒரே நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள் அம்பிகை.


நந்தி தேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளை யெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்துவந்து நிறுத்தினார்.


பின்பு, அரசன் திருமாளிகைத்தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இறைந்தான்.


திருக் கோயிலுக்கும் சென்று இறைவனைப் பணிந்து நின்றான்.


திரு மாளிகைத்தேவரும் தம்மை வணங்கிய மன்னனுக்கு அருள் புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை நினைந்து வணங்கினார்.


திருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றிருப்பதைக் காணலாம்.


இவ்வரசன் வந்து தங்கிய இடம் *நரசிங்கன் பேட்டை* எனவாகும்.


*குறிப்பு:*
இவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலின் மேலே நந்திகள் கிடையாது.


மேலும் பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்கு கின்றது.


திருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றம்பலம்!!
திருச்சிற்றம்பலம்!!!


*இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக நாளைய திருவிசைப்பா பாடலுடன்.......*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*