212.விரகற
212
எழுகரைநாடு
(கொங்குமண்டலத்தில் திருச்செங்கொடு உள்ள பிரிவு)


வள்ளிமலை ஸ்வமிகளின் முன் வள்ளி ஒரு சிறுமியாக நேரில் வந்து இந்த பாட்டை பாடினாதாக அவர் சரித்திரம் சொல்கிறது-


ஞானப்பொருளை அடியேனுக்குத் தந்தருளுக


தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன தந்ததான
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை யுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திப என்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
முழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
பரமப ராக்ரம சம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதி தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே.- 212 எழுகரைநாடு
[

பதம் பிரித்து உரை


விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும்
விழி புனல் தேக்கிட அன்பு மேன் மேல்


விரகு அற = தந்திரம் இன்றி, உண்மை நிலையுடன்நோக்கியும் = உன்னைக் கருதியும் உருகியும் = மனம் உருகியும் வாழ்த்தியும் = (உன் திருநாமங்களைக் கூறி உன்னை) வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட =கண்களில் நீர் நிறைந்து வழிய அன்பு மேன்மேல் =அன்பு மேலும் மேலும்.


மிகவும் இரா பகல் பிறிது பராக்கு அற
விழைவு குரா புனையும் குமார


மிகவும் = பெருகவும் இராப்பகல் = இரவும் பகலும்பிறிது பராக்கு அற = உன்னை நினைப்பதைத் தவிர வேறு சிந்தனைகள் அற்று ஒழிய விழைவு = (உன்) விருப்புக்குரிய குராப் புனையும் = குரா மலரை அணியும் குமார = குமரனே.


முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை
முலை நுகர் பார்த்திப என்று பாடி


முருக = முருகனே ஷடாக்ஷர = ஆறு எழுத்து அண்ணலே சரவண = சரவணனே கார்த்திகை =கார்த்திகை மாதர்களின் முலை நுகர் = முலைப் பாலைப் பருகிய பார்த்திப = அரசனே என்று பாடி =என்று பாடி.


மொழி குழறா தொழுது அழுது அழுது ஆட்பட
முழுதும் அ(ல்)லா பொருள் தந்திடாயோ


மொழி குழறா = மொழிகள் குழறும்படி தொழுது =உன்னை வணங்கி அழுது அழுது = ஓயாமல் அழுதுஆட்பட = நான் உனக்கு ஆளாக. முழுதும் அல்லாப் பொருள் = உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் கடந்த ஞானப் பொருளை தந்திடாயோ = தந்து அருளாயோ?


பர கதி காட்டிய விரக சிலோச்சய
பரம பராக்ரம சம்பராரி


பரகதி = முத்தி வீட்டை காட்டிய = காட்டிய விரக =சாமர்த்தியசாலியே சிலோச்சய = மலை அரசே பரம பராக்ரம = மிக வலிமை வாய்ந்த வனே சம்பராரி =மன்மதன்.


பட விழியால் பொரு பசு பதி போற்றிய
பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே


பட = அழிய விழியால் = (தமது நெற்றிக்) கண்ணால்பொரு = அவனை எதிர்த்து அழித்த பசுபதி =சிவபெருமான் போற்றிய = போற்றித் துதித்த பகவதி =பகவதியாகிய பார்ப்பதி = பார்வதி தந்த வாழ்வே =ஈன்ற செல்வமே.


இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட
எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா


இரை கடல் = ஒலிக்கின்ற கடல் தீப்பட = எரி படவும்நிசிசரர் = அசுரர்கள் கூப்பிட = கூச்சலிட எழு கிரி ஆர்ப்ப = ஏழு கிரிகள் பேரொலி இட்டுக் கூச்சலிடவும்வென்ற வேலா = வெற்றி கொண்ட வேலனே.


இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே.


இமையவர் நாட்டினில் = தேவர்களின் பொன் னுலகத்தில் நிறை = அவர்கள் அனைவரையும் குடி ஏற்றிய = குடி ஏறி அமரும்படி செய்த எழு கரை நாட்டவர் தம்பிரானே = எழுகரை நாடுமென்னும் தலத்தவர்களுடைய தம்பிரானே.

தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு

ஒப்புக:


1விழிபுனல் தேக்கிட...
காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது... .சம்பந்தர் தேவாரம்


2. மிகவும் இராப்பகல் பிறிது பராக்கற....
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன்... திருநாவுக்கரசர் தேவாரம்


3. ஷடாக்ஷர சரவண....
ஆறெழுத்தை நினைந்து குகா குகா வென வகைவராதோ
... திருப்புகழ், ஓலமிட்ட
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோதுவித்த பெருமாளே
.....திருப்புகழ் வேதவெற்பிலே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
4. முழுதும் அல்லாப் பொருள் = உலகம் யாவற்றையும் கடந்த பொருள்.


வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே............கந்தர் அலங்காரம்.


உருவன் றருவன் துளதென் றிலதன்
றிருளன் றொளியன் றதுவே ........................கந்தர் அனுபூதி


5. எழு கிரி ஆர்ப்பெழ வென்ற வேலா...
சமுத்திர மேழுங் குலக் கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் தனிவீழத். ..........................திருப்புகழ்,பெருக்கவு

இப்படிக்கு, பொங்கி!
வள்ளியம்மையை 'பொங்கி என்று பெயரிட்டு வணங்கி வந்தார் வள்ளிமலை சுவாமிகள். ஒருமுறை, வள்ளிமலை சுவாமிகள் சென்னை தங்கசாலைத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அவரை வழிமறித்து, ''சுவாமி! ஒரு திருப்புகழ் பாடுங்கள்'' என்று கேட்டாள். சுவாமிகளும் அங்குள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, திருப்புகழ் பாடலைப் பாடினார். உடனே அந்த சிறுமி, ''நானும் ஒரு பாட்டுப் பாடுகிறேன், கேளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, ''விரகற நோக்கியும்'' எனத் தொடங்கும் திருப்புகழை மோகன ராகத்தில் அதி அற்புதமாகப் பாடினாள்.
பிறகு, ''சுவாமி! உங்கள் வெற்றிலை பாக்குப் பையைக் கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கிய அவள், ஓடிச்சென்று மறைந்தாள். அந்தச் சிறுமி போன பிறகுதான் வெற்றிலை பாக்குக் பையில் ஐந்து ரூபாய் நோட்டு வைத்திருந்தது அவருக்கு ஞாபகம் வந்தது.இரு நாட்களுக்குப் பிறகு, வள்ளிமலைக்கு வந்த சுவாமிகள், சிறுமி எடுத்துச்சென்ற தனது பாக்குப்பை அங்கே இருப்பதைக் கண்டு ஆச்சரியமானார். பையினுள் அவர் வைத்திருந்த 5 ரூபாய் நோட்டும் அப்படியே இருந்தது. அதிசயமாக ரூபாய் நோட்டுடன் சீட்டு ஒன்று இருக்கக் கண்டார். அந்தச் சீட்டில் ''உன் ரூபாய் பத்திரமாக இருக்கிறது; பார்த்துக் கொள்! இப்படிக்கு, பொங்கி' என்று கையெழுத்திடப்பட்டு இருந்தது. தான் வணங்கும் வள்ளியம்மையே சிறுமியாக வந்துபோனதை எண்ணி மகிழ்ந்தார் வள்ளிமலை சுவாமிகள்.
- வள்ளிமலை சுவாமிகள் 100-வது ஜயந்தி மலரில், தணிகைமணி டாக்டர் வ.சு.செங்கல்வராயப் பிள்ளை எழுதிய 'திருப்புகழடியார் திருவடிச் சென்னியர் கட்டுரையில் இருந்து...