சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.
*நெல்லை மாவட்ட சிவாலயத் தல தொடர்.*
*அருள்மிகு ஸ்ரீசங்கரநாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோவில்.*
*தீர்த்தங்கள்:*
இத்தலத்திற்கு ஐந்து தீர்த்தங்கள்.


அக்கினி தீர்த்தம்,
அகத்திய தீர்த்தம்,
சூரிய தீர்த்தம்,
வைரவ தீர்த்தம்,
கெளரி தீர்த்தம், என்பவையாகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சங்கரலிங்க சுவாமிக்கு நிருதி திசையில் சங்கர தீர்த்தம் இருக்கிறது.


சங்கரலிங்க சுவாமிக்குண்டான தீர்த்தத்திற்கு, இந்திர தீர்த்தம் என்ற பெயருமுண்டு.


சங்கன், பதுமன் என்னும் பாம்பரசர்களால் இத்தீர்த்தம் உருவாக்கப் பட்டவையாகும்.


முழுகப் பெற்ற தீர்த்தமான நாகசுனை எனும் தீர்த்தம், கோவிலுக்குள்ளே நுழையுமிடத்தில் கோமதியம்மை சந்நிதிக்கு முன்பாக அழகிய தோற்றத்துடனான நடுமண்டபத்தைக் கொண்டு விளங்குகிறது.


காற்றை உணவாகக் கொண்டு புசிக்கின்ற சர்ப்பங்களாலேயே உருவாக்கக்கப்பட்ட இத்தீர்த்தமாதலால், இத்தீர்த்தத்தினில் நண்டு, ஆமை, தவளை, மீன், போன்ற நீர்வாழ்வனவைகள் இத்தீர்த்தத்தில் இன்றளவும் இருக்கப் பெறவில்லை.


ஊருக்குத் தென்பக்கமாக இருக்கும் ஆவுடைப் பொய்கையில், தெப்பத் திருவிழா விசேஷம், தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகின்றது.


இத்தலத்திற்கு தலமரம் புன்னை மரம். இது மேற்குப் பிரகாரத்தில் வலம் வரும்போது பார்க்கலாம். ஆதியிலும் இத்தலம் முழுவதும் புன்னை வனமரங்களாகவே சூழப்பட்டு இருந்தன.


*தல கோபுரச் சிறப்பு:*
சங்கரனார் திருக்கோயிலின் முகப்பில் உள்ள கோபுரம் நூற்றி இருபத்தைந்து அடி உயரங் கொண்டவையாகும்.


இத்திருக்கோபுரத்தை ஒன்பது திருநிலவுகள் அலங்கரித்து ஆட்சி செய்கிறது.


திருக்கோபுரத்திலுள்ள திருக்கலசங்கள், ஏழடி மற்றும் நான்கு அங்குல உயரத்துடன் ஆளுமை செலுத்துகிறது.


கோபுரத்தின் உச்சியானம் தெற்கிலிருந்து வடக்காக ஐம்பத்தாறு அடி நீளமாகவும், கிழக்கிலிருந்து மேற்காக பதினைந்து அடி அகலமாகவும் கம்பீரம் தரும் இத்திருக்கோபுரத்தின், அடியஸ்திவார அழகுப் பொலிமைகளை, நீங்களே கண்களுக்குள் அளந்து கொண்டு, *சிவ சிவ* என மொழிந்து, இத்திருக்கோபுரத் தரிசனத்தை, இதை வாசிக்கும் போது உணரப்பெற்று, வணங்கிக் கொள்ளுங்கள் இங்கிருந்தவாறே!


*கோமதியம்மை:*
கோமதியம்மை திருவுருவைப் பார்க்க பார்க்க மனம் சந்தோஷம் பெறும்.


கூத்துடையப் பெருமான் திருவுருவம், சிவகாமியம்மையார் திருவுருவம், இவர்களின் அம்பலத்து முன் நின்று தரிசிப்போரின் மனம் கொள்ளை கொள்ளும் பேரழகை நாம் காண பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.


பழங்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட மண்டபங்களும் அம்மண்டபங்களில் நின்றிருக்கும் தூண்களில் மன்மதன், ரதி, மற்றும் காவற்பறையன் சிலைகளை கண்டிப்பாக ஒவ்வோருவரும் கண்டு தரிசிக்க வேண்டிய வையே!.


நாயக்கர் ஆட்சி புரிந்த காலத்தில் திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளையன் என்பவரால்,
கோமதியம்மை சந்நிதி கொடிமர மண்டபம்,
அம்பலம்,
கோபுரம்,
களஞ்சியம்,
மடப்பள்ளி,
மணி மதில்,
தேர் மண்டபம்,
நிருதித் திசை மண்டபம்,
மேலவீதித் திருமடம்,
பூங்காவனம்,
தெப்பக்குளம்,
மணி மண்டபம்,
கைலாய வாகனம்,
சிங்க வாகனம்,
பூத வாகனம்,
அம்மைக்கு அங்கி ஆகியவற்றை அமைத்தார்.


இதோடு, அறுபத்து மூவரையும் வகுத்தமைத்தார். இது, சங்கரலிங்கர் உலா என்னும் நூல் கூறுகிறது.


இங்கிருக்கும் கொடிமரத் தூண் ஒன்றில் கல்லுருவமாக நின்று இந்நிமிடம் வரை இன்னும் வணங்கிக் கொண்டிருக்கிறார்.


*சந்நிதிகள்:*
அருள்மிகு வன்மீக நாதர் சந்நிதி,
அருள்தரும் துர்க்கையம்மன் சந்நிதி,
அருள்மிகு சர்ப்ப விநாயகர் சந்நிதி,
அருளும் நடராஜர் சந்நிதிகள் - இவர்கள் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 'நீங்களும் வாருங்கள்!


திருச்சிற்றம்பலம்.
இன்னும் சங்கரலிங்கர் அருள்வார்.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.


*சங்கரநயினார் திருக்கோவில். சங்கரன்கோவில்.*
*சங்கரலிங்கப் பெருமானின் மற்றொரு சிறப்பு:*
ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத் துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கிறது.


லசமயம் நான்கு நாட்கள் கூட விழுகிறது. இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன.
நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.


சங்கரனார் கோயில் ஓர் அழகிய திருக்கோயில். இங்கிருக்கும் மகா மண்டபத்தைச் சுற்றி பல திருவுருவங்கள் நான்கு பக்க திசைகளிலும் செதுக்கப்பட்டிருக்கின்றதைக் காணப்பெறும்போது நாம் நம்மை, மெய்மறந்து இச்சிலையின் பிரதியோடு ஒன்றிவிடுவோம்.


உருவங்கள் சிறிதெனினும் சிற்பச் செறிவுகள் பெரிதும் பாராட்டத்தக்கது.


*அவைகள்:*
துவாரபாலகர்,
யோக நரசிம்மம்,
கார்த்த வீரியன்,
தசகண்ட இராவணன்,
ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி,
வீணா காளி,
பத்திரகாளி,
மாறியாடும் பெருமாள்,
அகோர வீரபத்திரர், நடராஜர்,
துவாரபாலகர்கள்,
ரிஷபாரூடர்,
உபதேச தஷ்ணமூர்த்தி, ருத்ர மூர்த்தி,
ஐம்முகப் பிரம்மா, ஸிம்ஹவாஹன கணபதி, ஸ்ரீ இராமர்,
மன்மதன்,
வெங்கடாசலபதி,
செண்பக வில்வவாரகி, சங்கரநாராயணர்,
சந்திர சேகரர்,
உக்கிரபாண்டிய அரசர்,
ஸிம்ஹாசனேஸ்வரி,
மஹாவிஷ்ணு,
பாலசுப்பிரமணியர், துர்க்காதேவி,
ஸ்ஹண்முகர்,
மகிஷாசுர மர்த்தினி, கபாலி,
கால பைரவர்,
ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி,
கஜசம்ஹார மூர்த்தி,
தக்ஷசம்ஹார மூர்த்தி,
உச்சிட்ட கணபதி,
ராமர்,
லட்சுமணர்,
பரமேஸ்வரர்,
மயூராரூடர்,
மஹா விஷ்ணு,
வீரபத்திரர்,
பைரவர்,
த்ரிவிக்கிரமர்,
வாமனாவதாரம்,
ஹம்சாரூடர்,
துவாரபாலகர்.
மேலும், இம்மதிலைச் சுற்றி தென்பக்கமாக தக்ஷிணாமூர்த்தியும், மேல்பக்கமாக நரசிம்மமூர்த்தியும், வடபக்கமாக பிரம்மாவும் எழுந்தருளி அருள்கிறார்கள்,


திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாக எழுந்தருளியிருக்கிறார்.


கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள்.


மண்டபத்தில் தெற்கு பார்க்கமாக நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்றார்.


சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்திருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.


*ஆடித் தபசு:*
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில், *ஆடித்தபசு* விழா ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.


அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தை இங்கே பதித்துள்ளார்.


அந்த சக்கர பீடத்தில், . அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில்
மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.


கோவிலுக்கு வருவோர், தங்கம்,
பித்தளை,
வெண்கலச் சாமாங்கள், துணி,
ஆடு,
கோழி,
உப்பு,
மிளகாய்,
மிளகு,
காய்கறிகள்,
பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு,
தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பின்னர் இவை ஆலயத்தில் வைத்து ஏலம் விடப்படும்.


*பாம்புப் புற்று:*
கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இருப்பதைக் காணவும் முடிகிறது.


இங்குள்ள சுவாமியின் பெயர் *வன்மீக நாதர்* என்று அழைக்கப்படுகிறார்.


மேலும் இவ்விடத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வில் யாரும் இன்றுவரை ஈடுபடவில்லை என்றும், தொன்னூறு வயதைக் கடந்த அவ்வூரார் பலர் கூறுகின்றனர்.


கோமதி அம்மனின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் புற்றுமண் சேமிக்கப்பட்டுள்ளது.


இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்திருக்கும் தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண், புற்றுமண் என்று பனை ஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர்.


புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.


*உண்மையான வரலாறு:* புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை.


திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்ததாம்.


ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது.


இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்டது.


உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார்.


ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம்.


இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார்.


சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன.


வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் குறிப்பிடத்தக்கன.


இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது.


ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


எது எப்படியாயினும் சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.


தக்கணை தவமிருந்து முக்தி பெற்றது,


வீர்சேனை பிணி தீர்ந்தது,


சயந்தன் வினை தீர்ந்தது,


கானவன் வீடுபேறடந்தது,


கன்மாடன் நற்பேறடைந்தது போன்ற தகவல்களும் தலபுராணத்தில் உள்ளன.


பத்திரகார முனிவன், இந்திரன்,
அகத்தியர்,
பைரவர்,
சூரியன்,
அக்கினி ஆகியவர்களும் சங்கரனாரையும் கோமதியம்மையாரையும் வழிபட்டுத் திருவருள் பெற்றுள்ளதாகவும் தல புராணம் கூறுகிறது.


அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரை ஆட்சி செய்த பிரகத்துவச பாண்டியன் சங்க்கரனாரை வழிபட்டு விசய குஞ்சரபாண்டியன் என்ற வாரிசைப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.


*சரித்திர அருமை:*
தச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது.


அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு வெளி வந்திருக்கிறது.


அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம்.


ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் சேர்த்து அரசாண்டார்.


அக்காலத்தில் சங்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது.


சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார்.


பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார்.


இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது.


உக்கிரபாண்டியர் இக்கோயிலைக்கட்டிய காலத்திலேயே கருவை நகரை ஆண்ட பேரரசராகிய பிரசுத்துவச பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்தார்.


இவரின் மகன் விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரநயினார் கோயில் இருக்கும் இடம் கருவை நகர்க் கோயிலுக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் தல புராணத்தால் அறிந்திடும் செய்திகள்.


*சீவலமாறர்:*
சீவலமாற பாண்டியரே இத்தலபுராண ஆசிரியர்.


இவர் இவ்வூரிற் பலகாலம் தங்கியிருந்தார்.


இவர் பெயரால் ஊருக்குத் தென்மேற்கே இப்போதுள்ள *சீவலப்பேரி* என்ற குளத்தினாலும், கிழக்கே இரண்டு மைலுக்குள் உள்ள *சீவலராயன் ஏந்தல்* என்ற ஊராலும் நிலைநாட்டப்பெற்றவை.


இவர் பெயர்
கங்கை கொண்டான், மானூர்,
தென்காசி,
சீவலப்பேரி ஆகிய தலங்களிலும், சம்பந்தப்படுகிறது.


*கோமதியம்மை திருமுன் சக்கரம்:*
இறைவர் திருவடியடைந்த மாபாடியம் சிவஞான முனிவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது, திருவாவடுதுறையிற் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார் என்பவர் ஆவார்.


இறைவர் திருவடிக்கு மெய்யன்பராதலினாலே அவரிடம் குட்டம், குன்மம் போன்ற நீங்கா நோய்களையும் போக்கும் அருட் சக்தி பதிந்து விளங்கியது.


அவர் சங்கரன்கோயிலுக்கு வந்து மேலை வீதியிலுள்ள தமது திருமடத்தில் எழுந்தருளியமையை அறிந்த *நெற்கட்டுஞ்ச்செவலின்* என்றும் ஊரின் குறுநில மன்னராகிய சிவபக்தனான பூலித்தேவர் குருமூர்த்தியைக் கண்டு பணிந்தார்.


அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவை சிவ பூஜை, குரு பூஜை, மகாசேசுர பூஜைகளின் பொருட்டு சாசனம் செய்து கொடுத்தார்.


வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார்.


அச்சக்கரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது.


தீராத நோயும் தீர்ந்து போகின்றது.


இந்தத் தேசிக மூர்த்திகள் சங்கரன்கோவிலிலே வழிபாடியற்றி இருக்கும்போது ஒரு புரட்டாசி மாத மூல நாளிலே சங்கரனார் திருவடிமலர் சேர்ந்து பேரின்பம் எய்தினார்.


மேற்கு வீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வீற்றிருந்து இன்றும் அருள்பாலித்து வருகின்றார்.


ஆண்டுதோறும் குருபூஜையும் சமபந்தி போஜனமும் இன்றும் தொடர்ந்து தவறாமல் நடைபெற்று வருகின்றது.


*சங்கரன்கோவில் குறிப்பு:*
1.இறைவன் பெயர் : ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி.


2.இறைவி பெயர் : ஸ்ரீ கோமதி அம்பிகை.


*(வேறு பெயர்கள்):*
சங்கரி,
ஆவுடைய நாயகி,
மனோன்மணி,
வாளைகுமாரி மற்றும் மஹாயோகினி.


*உற்சவர்:*
ஸ்ரீ உமா மகேஸ்வரர்.


*விநாயகர்:*
சித்தி விநாயகர்,
சர்ப்ப விநாயகர் , புன்னைவன விநாயகர்.


*முருகர்:*
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சஹித ஸ்ரீ ஷண்முகர்.


*பைரவர்:*
மஹா கால சர்ப்ப பைரவர்.


*ஸ்தல துர்க்கை:*
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை (தெற்கு நோக்கி தரிசனம்)


*தீர்த்தம்:*
நாக சுனை தீர்த்தம்,
சங்கர தீர்த்தம்,
கௌரி தீர்த்தம்,
இந்திர தீர்த்தம்,
அகஸ்திய தீர்த்தம்,
சர்வ புண்ணிய கோடி தீர்த்தம் (அம்பிகையின் அபிஷேக தொட்டி )


*ஸ்தல விருட்சம்:*
புன்னை மரம்


இங்கு ஸ்ரீ சங்கர நாராயணர் சந்நிதியில் ஒரு வெள்ளி பேழையில் ஸ்படிக லிங்கமான ஸ்ரீ சந்திர மௌலீச்வர லிங்கம் இருக்கிறது.


இதற்கு காலை வேளையில் தினமும் அபிஷேகம் நடத்தப் படுகிறது.


இந்த லிங்கத்தை, மறைந்த சிருங்கேரி பெரியவர் இந்த கோவிலுக்கு வழங்கியிருந்தார்.


மேலும் மறைந்த காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துள்ளார்கள்.


பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிரிதிவி அதாவது மண் ஸ்தலமாகும்.


*திருவிழாக்கள்:*
ஆடி தபசு பிரம்மோத்சவம் (12 நாட்கள்),
சித்திரை பிரம்மோத்சவம் (10 நாட்கள்),
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா (12 நாட்கள்), மார்கழி திருவாதிரை திருவிழா (10 நாட்கள்), நவராத்திரி விழா (9 நாட்கள்),
விநாயகர் சதுர்த்தி,
ஸ்கந்த சஷ்டிவிழா,
வசந்த விழா,
எண்ணெய் காப்பு உற்ச்சவம்,
வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு.


*ஸ்ரீ சாஸ்தா பீடம்:*
சப்த மாதாக்கள்,
ஸ்ரீ சரஸ்வதி,
ஸ்ரீ பிரம்மா,
ஸ்ரீ சனீச்வரன் தனி சன்னதி,
நாகராஜர் தனி சன்னதி, நாகராஜர் புற்றுகோவில், யானை மாடம் (கோமதி என்ற யானை இங்கு வளர்கிறது).
தனி நடராஜர் சன்னதி,
போன்றவை இங்கு இருக்கின்றன .


*பூஜைகள்:*
இத்திருக்கோயில் காமிக ஆகமம் படி பூஜைகள் நடந்து வருகின்றன.


தினந்தோறும் ஏழு கால பூஜைகள் நடைபெறுகின்றன.


திருவனந்தல்- காலை 6.00 மணிக்கு,
விளாபூசை- காலை 6.30 மணிக்கு,
சிறுகாலசந்தி- காலை 8.30 மணிக்கு,
காலசந்தி- காலை 10.30 மணிக்கு,
உச்சிக் காலம்- காலை 12.30 மணிக்கு,
சாயரட்சை- மாலை 5.30 மணிக்கு,
அர்த்தசாமம்- 9.00 மணிக்கும்.
*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்,
சங்கரன்கோவில்.
திருநெல்வேலி. 627 756
*தொடர்புக்கு:*
04636- 222265.
*இருப்பிடம்:*
திருநெல்வேலியிலிருந்து ஐம்பத்து நான்கு கி.மி.


இராஜபாளையத்திலிருந்து முப்பத்தைந்து கி.மி.


கோவில்பட்டியிலிருந்து நாற்பது கி. மி.


புளியங்குடியிலிருந்து பதினைந்து கி.மி.


தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து பேருந்துகள், இரயில்கள் இயங்குகின்றன.


இத்திருக்கோயிலின் உள்ளார அனைத்து வசதிகளைக் கொண்ட அறைகள் இருக்கின்றன.


மேலும் இருபத்தொன்று நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் உள்ளன.


நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களின் நாளையப் பதிவு *அருள்மிகு ஒப்பனையம்மன் உடனுறை அருள்மிகு பால்வண்ணநாத சுவாமி திருக்கோயில். கரிவலம்வந்தநல்லூர்.*


திருச்சிற்றம்பலம்.