Announcement

Collapse
No announcement yet.

Miracle - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Miracle - Periyavaa

    யார் வரச்சொன்னது?
    "1979-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் பாட்டனார் தியாகி எஸ். சிதம்பரஅய்யர் தன்னுடைய 92-வது வயதில் உடல் நலம் குன்றியிருந்தார். அவருக்கு தெய்வம் உலகம் எல்லாமே காஞ்சி பரமாச்சாரியார்தான்.
    மஹாபெரியவாளின் அவதார ஸ்தலமான விழுப்புரத்தில் அவர் அவதரித்த இடத்தில் அமைந்திருக்கின்ற வேதபாட சாலையின் கௌரவ நிர்வாகியாக பணியாற்றி வந்த நேரம் அது. அந்தச் சமயம் அவர் பேரரான நான் சபரிமலைக்கு செல்வதற்காக விரதமிருந்து மாலை அணிந்திருந்தேன்.
    என் தங்கையின் கணவரே எனக்கு குருசாமி. அவர் அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் தார்வார் என்னுமிடத்தில் LIC-ல் பணியாற்றி வந்திருந்தார். மலைக்கு செல்வதற்கு முன்பு என்னை தார்வார் வரச் சொல்லியிருந்தார். என் பாட்டனார் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே நான் தாராளமாக மலைக்கு போய் வரலாம் என்று டாக்டர்கள் தைரியம் கொடுத்ததின் பேரில் நான் தார்வார் போய்ச் சேர்ந்தேன். அப்பொழுது மாலை 6 மணியாகி விட்டது.
    இரவு ஐய்யப்பன் பூஜையை அவர் வீட்டிலேயே முடித்துவிட்டு பிறகு உறங்கினேன். மறுநாள் விடியற்காலையில் என் பாட்டனார் இறந்து விட்டது போலவும் அதனால் என் புனிதப் பயணம் தடைபட்டது போலவும் கனவு கண்டேன். விழித்துப் பார்த்தால் அது விடியற்காலை 4 மணியாகி விட்டது. விடியற்காலை கனவு என்பதால் எனக்கு பயம் பிடித்துக் கொண்டது.
    குருசாமியிடம் விளக்கம் கேட்டேன். இருமுடி கட்டுவதற்கு மட்டும்தான் நான் குருசாமியே தவிர வேறு என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. ஒருவேளை தாத்தாவின் நினைவாகவே நீ இருப்பதால் இதுபோன்ற கனவு வந்திருக்கலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஒரு யோசனையை சொன்னார். தார்வாரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் அப்பொழுது காஞ்சி பெரியவரும் அவருடன் *பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி* ஸ்வாமிகளும் 'கோகாக்' என்ற இடத்தில் முகாமிட்டுக் காண்டிருந்தார்கள். என்னை அவர்களிடம் போய் உத்தரவு கேட்கச் சொன்னார். அவர்கள் உத்திரவு கொடுத்தால் நீயும் என்னுடன் வரலாம் என்று சொல்லிவிட்டார்.
    காலை 8 மணிக்கு நானும் குருசாமியின் தாயாரும் பஸ்ஸைப் பிடித்து 'கோகாக்' என்ற இடத்திற்கு போய் சேர்ந்தோம். அங்கே வெங்கடேஸ்வரா பள்ளிக் கூடத்தில் புது பெரியவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் செவ்வாய் கிழமை பூஜையை முடித்துவிட்டு எல்லா பக்தர்களுக்கும் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் மட்டும்தான் இருந்தார்கள். பெரியவாளை அங்கு காணோம்.
    நான் தீர்த்த பிரசாதத்திற்காக கையை நீட்டியபொழுது புது பெரியவாள் உத்தரினியை கீழே வைத்துவிட்டார்கள். இப்பொழுது தான் இங்கு வருகிறாயா? என்று கேட்டார்கள். மஹாபெரியவர் உனக்காக ஒரு சேதி சொல்ல காத்துக் காண்டிருக்கிறார்கள். உடனடியாக நீ இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மலையில் இருக்கும் கோகாக் நீர்வீழ்ச்சிக்கு போ. அங்கே சிவன் கோவிலில் பெரியவர் இருக்கிறார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
    எனக்கு தாங்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் அங்க போகப்போவது எனக்கே முன்கூட்டி தெரியாது. அப்படி இருக்கும்பொழுது எனக்காக ஒரு சேதி சொல்ல மஹாபெரியவாள் எப்படி காத்துக் கொண்டிருக்க முடியும். அதுவும் அதை எப்படி ஸ்ரீஜெயேந்திர ஸ்வாமிகள் அறிந்துகொள்ள முடியும். இதில் ஏதோ தெய்வத்தன்மை உள்ளது என்பதை உணர்ந்தேன். *மஹாபெரியவாளுக்கு இருக்கும் ஞானதிருஷ்டி காஞ்சி பீடாபதியான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு* என்பது அப்பொழுதுதான் என் மரமூளைக்கு எட்டியது.
    நீ போய் பெரியவாளை தரிசித்து பிறகு என்னை வந்து பார்த்து விட்டு போ என்று என்னை அனுப்பி வைத்தார்கள். நானும் என் குருசாமியின் தாயாரும் ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டு கோகாக் மலைக்குச் சென்றோம். அது மிகவும் கடினமான பாதையை கொண்ட மலை. நாங்கள் சென்ற ஆட்டோவே மூன்று இடத்தில் ஏற முடியாமல் நின்று விட்டது. எப்படித்தான் அந்த காஞ்சி கடவுள் தன் தாமரை பாதங்களால் ஏறி சென்றாரோ என்று இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    நாங்கள் அந்த நீர்வீழ்ச்சியை சென்று அடைந்தபொழுது பிற்பகல் 3 மணியிருக்கும். அங்கே அருவியை ஒட்டிய இடத்தில் ஒரு அழகான சிவன் கோவில் உள்ளது. அங்குதான் பக்கத்தில் மஹாபெரியவாள் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த அறை மூடியிருந்தது. அப்பொழுது என்னை நோக்கி இருவர் வந்தனர். அதில் ஒருவர் வடநாட்டுக்காரர். அவர் அந்த மலையில் ஒரு நூற்பாலையை நடத்திவரும் முதலாளி, மற்றொருவர் மாயவரத்தை சார்ந்த பிராமணர். அவர்தான் அந்த ஆலையின் மானேஜர் ஆவார். அவர்கள் சொல்லித்தான் இவையெல்லாம் எனக்கு தெரியும்.
    அவர்கள் என்னை பார்த்து 'ஐய்யப்பா நீங்கள் வருவதற்கு முன்னாலே உங்கள் வருகை எங்களுக்கு தெரியும். தாங்கள் ஸ்னானம் செய்துவிட்டு நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவை சாப்பிட வேண்டும்' என்று சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி தெரியும் என்று கேட்டேன். மஹாபெரியவாள் எங்களை இன்றுகாலை அழைத்து 'என்னை பார்க்க ஒரு ஐயப்பன் வருகிறார். அவருக்கு மதியம் உணவு ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறினாராம்.


    அந்த காலத்தில் கர்நாடகா மாநிலத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மிகமிகக் குறைவு. இருந்தாலும் என்னை ஞானக் கண்ணால் தெரிந்துகொண்டு எனக்கு ஆகாரத்திற்கும் முன்னேற்பாடு செய்திருக்கிறார் என்று எண்ணியபொழுது என் கண்களில் என்னை அறியாமலே கண்ணீர் பெருகியது. பெரியவாளை தரிசனம் செய்யாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று உறுதியாக அவர்களிடம் சொல்லிவிட்டேன்.
    ஐந்து நிமிடங்கள் கழித்து மஹாபெரியவாள் தங்கியிருந்த வாசல் கதவு 'படால்' என்று திறக்கப்பட்டது. காவி உடையுடன் சிவந்த மேனியாக ஈஸ்வர ஸ்வரூபமாக காஞ்சி முனிவர் காட்சி கொடுத்தார்கள். 'யாரெல்லாம் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள்?' என்று தன் அருகில் இருந்த சீடர்களை கேட்டார்கள். அதுவும் கொஞ்சம் உரத்த குரலில் கேட்டார்கள்.
    அருகில் இருந்த ஸ்ரீபாலு அவர்கள் என்னை அறிமுகம் செய்தார்கள். விழுப்புரம் சிரம்பரஅய்யர் பேரன் வந்திருக்கிறான் என்று சொன்னார். உடனே பெரியவாள் என்னைப் பார்த்து 'உன்னை யார் இங்கு வரச் சொன்னது? உன் தாத்தாவின் உடல்நிலை இப்படி இருக்கும்பொழுது அவரை விட்டு விட்டு ஏன் வந்தாய்?' என்று படபடப்போடு கேட்டார்கள். 'டாக்டர்கள் தாத்தாவிற்கு ஆபத்து இல்லை என்று சொன்னார்கள். எனவே நான் சபரிமலை போய் வரலாம் என்று தைரியம் கொடுத்தார்கள்' என்று பதிலளித்தேன்.
    மின்னல் அடிக்கும் நேரத்திற்குள் பெரியவாள் 'டாக்டர்கள் ஊசி போடுவார்கள், மருந்து கொடுப்பார்கள், அவ்வளவுதான். பிராணனை கூடவா பிடித்து வைப்பார்கள். எங்கள் கணக்குப்படி இப்பொழுதே முடிந்துவிட்டது. உங்கள் கணக்கு நாளை காலையோடு முடிந்துவிடும். உடனே புறப்பட்டு திரும்பி போ' என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்கள்.
    ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருவரும் மலையிலிருந்து உடனே இறங்கி வந்து மீண்டும் புதுப்பெரியவாளை தரிசனம் செய்தோம். அப்பொழுது அவர் 'என்ன, பெரியவா சொன்னதெல்லாம் புரிந்ததா? ஏதாவது சந்தேகமிருந்தால் என்னைக் கேள்' என்று சொன்னார்கள்.
    நான் புரிந்தது என்று கண்ணீரோடு தலையாட்டினேன். உடனே புதுப்பெரியவாள் என்னிடம் விபூதி பிரசாதத்தை ஒரு இலையில் வைத்து கொடுத்து 'இதை உன் தாத்தாவிடம் உடனே செலுத்தி விடு' என்றார்கள். அப்பொழுதும் நான் அந்த பிரசாதத்தை தபாலில் தாத்தா விலாசத்திற்கு அனுப்பிவிட்டு சபரிமலை போய்வந்த பிறகு தாத்தாவை பார்க்கிறேனே என்று மடத்தனமாக உளறினேன்.


    அதற்கும் அவர் சிரித்துக்கொண்டே 'பேரன் மூலம் பிரசாதத்தை அனுப்ப நினைத்தால் நீ போஸ்ட்மேன் மூலம் அனுப்ப பார்க்கிறாயே. நீ காடு-மலையெல்லாம் திரிந்துவந்து அவருக்கு பிரசாதம் கொண்டு செல்ல நினைக்காதே. அதுவரை அவர் அவஸ்த்தை படவேண்டும். உடனே புறப்படு' என்று உத்திரவு கொடுத்தார்கள். உடன் இருந்தவர்கள் 'கடைசி பஸ் மாலை 5-45 மணியுடன் போய்விட்டது. இனி காலைதான் பஸ் உண்டு' என்று அவரிடம் சொன்னார்கள்.
    *அதற்கு அவர் 'நீ தைரியமாக பஸ் ஸ்டேண்டு போ. அந்த பஸ் இன்னும் வந்திருக்காது' என்று அதே புன்முறுவலுடன் ஆசிர்வதித்தார்கள்*. அவர் அருள்வாக்கு போலவே அந்த பஸ் இரவு 7 மணிக்குமேல் தாமதமாக வந்தது. நாங்கள் இருவரும் இரவு 10 மணிக்குமேல் தார்வார் வந்து சேர்ந்தோம். *ஆதிசங்கரர் வழிவந்த காஞ்சிமட பீடாதிபதிகள் அனைவருக்கும் தொலைநோக்கும் அருள்சக்தி இருக்கிறது என்ற முடிவிற்கு அன்றே வந்துவிட்டேன்*.
    இரவு தார்வாரில் பஸ் கிடைக்காததால் மறுநாள் முழுவதும் பயணம் செய்துவிட்டு அன்று இரவு பெங்களூர் வந்து பிறகு பஸ் பிடித்து விழுப்புரம் வந்து சேர்வதற்குள் ஒருநாள் ஓடிவிட்டது. மஹாபெரியவாள் கூறியதுபோல மறுநாள் காலை 6-30 மணியளவில் என் தாத்தா இறைவனடி அடைந்தார். நான் மறுநாள் சஞ்சயனத்திற்கு மயானத்திற்கு போக முடிந்தது.
    அதுவரையில் தாத்தாவினுடைய இருதய பாகம் மட்டும் நெருப்பு அணையாமல் கணிந்துகொண்டே இருந்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாரையும் கலக்காமலே பெரியவாள் கொடுத்த விபூதி பிரசாதத்தை தாத்தாவின் மார்பு பாகத்தில் கொட்டிவிட்டேன். உடனடியாக ஒரு நீல நிற ஒளி தோன்றிய பிறகு அப்பகுதியும் அணைந்து விட்டது. அப்படி நான் பிரசாதத்தை செலுத்தியது சரியா தவறா என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை. ஆனால் குருவின் உத்திரவை நிறைவேற்றி விட்டேன்.
    என் தாத்தாவின் உயிர் பிரிவதற்குள் அவர் அருகில் மஹாபெரியவாள் இருந்ததாக எங்கள் ஊரில் உள்ள ஒரு அய்யங்கார் மாமி கனவில் பார்த்திருக்கிறார்கள். அதை கனவாக கருதாமல் நிஜம் என்றே எண்ணி எங்கள் வீட்டு கதவை விடியற்காலை 6 மணிக்கு தட்டி 'மஹாபெரியவாள் இங்கு வந்தாரே, நான் அவரை சிதம்பர அய்யர் படுக்கையின் அருகில் பார்த்தேனே. இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்களே. இப்பொழுது அந்த மஹான் எங்கே என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம். சில நிமிடங்களுக்கு பிறகுதான் என் தாத்தாவின் ஆவி பிரிந்ததாம். இவற்றையெல்லாம் நான் விழுப்புரம் சென்றவுடன் என் குடும்பத்தினர் என்னிடம் மெய்மறந்து சொன்னார்கள்.


    நாளை நடக்க விருப்பதை அந்த முனிவர் எப்படி எனக்கு முதல் நாளே அறிவித்தார்கள்? மஹாபெரியவாள் மலை மீது இருக்கிறார், உனக்காக ஒரு சேதி வைத்திருக்கிறார் என்று புது பெரியவாள் எப்படி சொன்னார்கள்?
    என்னைத் தேடி ஒரு ஐயப்பன் வரப்போகிறான், அவனுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என்று முன்னாலேயே அங்குள்ள இருவரிடம் எப்படி பெரியவர் சொன்னார்? மஹாபெரியவா சொன்னது புரிந்ததா? சந்தேகமிருந்தால் என்னைக் கேள் என்று எப்படி புது பெரியவாள் அறிந்து கேட்டார்கள்? மாலை புறப்பட வேண்டிய பஸ் காலதாமதமாகத்தான் வரும், நீ தைரியமாக போ என்று அவர் சொன்னதுபோல அந்த பஸ்ஸும் இரவு 7 மணிக்கு மேல் எப்படி வந்தது?
    இவையெல்லாம் எனக்கு புரிந்து விட்டால் இன்னும் ஏன் நான் ஒரு சாதாரண சராசரி மனிதனாக இருக்கிறேன். அதனால்தான் அந்த மஹானை 'காலங்கள் அறிந்த காஞ்சி மாமுனிவர்' என்று போற்றி அவர் பாதம் என்றும் பணிகிறேன்.
    ஜய ஜய சங்கர...ஹர ஹர சங்கர...
    பின் குறிப்பு: பெரியவா மகிமையைப்பற்றி எல்லாருக்குமே தெரியும்... புதுப் பெரியவா மகிமை பற்றிச் சொல்ல இந்த ஒரு நிகழ்ச்சி போதுமே...
Working...
X