சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
*135*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*


*சிவ தல அருமைகள் பெருமைகள்*


*நெல்லிவன நாதேசுவரர் கோவில், திருநெல்லிக்கா.*


தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதினேழாவது தலமாகப் போற்றப் படுகிறது.


*இறைவன்:*
நெல்லிவனநாதர்,
நெல்லிவன நாதேசுவரர், ஆம்லகனேஸ்வரர், ஆம்லகேஸ்வரர்,


*இறைவி:*
மங்களநாயகி, ஆம்லகேஸ்வரி.


*தல விருட்சம்:* நெல்லி மரம்.


*தல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம். (கோவிலுக்கு எதிரிலுள்ளது.)
சூரிய தீர்த்தம். (கோயிலின் வடபுறத்தாலுள்ளது.)


*திருமேனி:* சுயம்புவுருவானவர்.


*புராணப் பெயர்:* திருநெல்லிக்கா.


*ஊர்:* திருநெல்லிக்கா.


*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


*பதிகம்:*
திருஞானசம்பந்தர்.


*இருப்பிடம்:*
திருவாரூரில் இருந்து தெற்கே பதின்மூன்று கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.


அருகில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ளது.


திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி தொடர்ந்து நான்கு கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.


திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதியுள்ளது.


இங்கிருந்து இரண்டு கி.மி. தொலைவில் திருதெங்கூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் இருக்கிறது.


*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு நெல்லிவன நாதேசுவரர் திருக்கோவில்,
திருநெல்லிக்காவல்,
திருநெல்லிக்காவல் அஞ்சல்,
திருவாரூர் வட்டம்.
திருவாரூர் மாவட்டம்.
PIN - 610 205


*ஆலயத் திறப்பு காலம்:*
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


*தல அருமை:*
தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண் டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை.


இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது.


அதன் காரணமாக ஒருமுறை தேவலோகம் வந்த துர்வாசரை மதிக்காததால் அவர் கோபம் கொண்டு *"நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள்"* என்று சாபமிட்டார்.


அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றினார்.


ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன.


நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் நெல்லிவனநாதர் என அழைக்கப்படுகிறார்.


இறைவன் தங்கிய இத்தலமும் திருநெல்லிக்கா என அழைக்கப்பட்டது.


*கோவில் அமைப்பு:*
இத்தலத்திற்கு வந்தபோது திருக்கோயிலுக்கு எதிரிலிருக்கும் பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் கரைக்கு வந்தோம்.


அங்கே பிரம்ம தீர்த்தகரை படிகள் அருகே, விநாயகப் பெருமானைக் கண்டோம்.


இவரைத் தோப்புக்கரணமிட்டுத் தொழுது பணிந்து வணங்கிக் கொண்டோம்.


அப்படியே பிரம்ம தீர்த்தக் குளக்கரைப் படிகளில் இறங்கி, தீர்த்தத்தினை வாரியெடுத்து சிரசிலிட்டு ஒற்றிக் கொண்டு, வானினை நோக்கிப் பெருமானை நினைந்து வணங்கிக் கொண்டு,
ஆலயத்தை நோக்கித் திரும்பி நடந்தோம்.


மேற்கு நோக்கிய திருக்கோயிலுடனும், ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடனும், முதலில் காட்சியானதைக் கண்டு பரவசமடைந்து, *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


ஆலயத்தைச் சுற்றிலும் மதில்கள் சூழ காட்சி அளிக்கிறது.


ஐந்து நிலை கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள கவசமிட்ட கொடிமரத்தருகே வந்து நின்று வணங்கிப் பணிந்தோம்.


அடுத்திருந்த கொடிமரத்து விநாயகரையும் பணிந்து வணங்கிக் கொண்டோம்.


நந்தியாரிடமும் நம் வருகையை வணங்குமுகத்துடன் கூறிப்பணிந்து, நந்தி மண்டபத்தைக் கடந்து நடந்தோம்.


பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.


தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் இருக்க தொழுது கொண்டோம்.


பிரகார வலம் முடித்துப் படிகளேறி முன் மண்டபத்தை அடைந்தால் இடதுபறம் சோமாஸ்கந்தர் தரிசனம் கிடைத்தது. உள்ளமுருக பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.


இம்மண்டபத்திற்கெதிரே நேரே நடராஜ சபை இருந்தது. இவரின் இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் இருக்க வைக்கப்பட்டிருந்தன.


ஆடல் நாயகியின் தூக்கிய திருவடியையும், அவரின் மொத்த அழகிய ரூபங்களும், நம் கண்களையும் மனதையும் பறித்துக் கொண்டது.


இவரை விட்டு அவ்விடம் அகழ்ந்து நகர்ந்தாலும், அவர் ஆடற்கலை நிலையுடனேயே சென்று கொண்டிருந்தோம்.


மண்டபத்தில் மேற்புறத்தை நோக்கினோம். மேல்தள அடிப்பகுதியில், நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய சித்திரங்களை அழகுடன் தீட்டப்பட்டிருந்தன.


சுவாமி சந்நிதிக்கு வந்தோம். மூலவர் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.


மனமுருகப் பிரார்த்தனை செய்துவிட்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


இத்தலத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், .மாசி மாதம் 18-ம் தேதி முதல் ஓரு வார காலத்திற்கும் மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது என்று அருகிருந்தோர் கூறினர்..


கோஷ்டத்தில் வலம் செய்யும்போது, மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளுக்குச் சென்று ஒவ்வொருத்தரையும் வணங்கிப் பணிந்தெழுந்தோம்.


அடுத்திருந்த சண்டேசுவரர் சந்நிதிக்கு வந்தோம். இவருக்குண்டான முறையான வணங்கு முறையை, முறையுடன் வணங்கியொழுகித் திரும்பினோம்.


அடுத்து அம்பாள் சந்நிதிக்குச் சென்றபொழுது, அம்பாள்
நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து கொண்டிருந்தாள்.


அம்பாள் தெற்கு நோக்கிய முகமாக காட்சியானதை பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டோம்.


தெற்கிலுள்ள கோபுர வாயில் வழி ஒன்றும் இருந்தது. இதன் வழியாகவும் அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.


தெற்கு வாயிலுக்கு வெளியே எதிரில் ஆலயத்தின் தீர்த்தக்குளம் உள்ளது.


இத்தலத்தில் சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் ஆகியோர்கள் வழிபட்ட மேன்மையுடையது.


பஞ்சகூடபுரம் என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் திருநெல்லிக்காவல் தலமும் ஒன்று.


*மற்ற பஞ்சகூடபுர தலங்கள்:*
(1) நாட்டியத்தான்குடி,
(2) திருக்காறாயில்,
(3) திருத்தெங்கூர், மற்றும் (4) நமசிவாயபுரம் என்பன.


கந்தர்வன் ஒருவனின் குஷ்ட நோய் இத்தலத்தில் நீங்கியது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தம் இங்கிருக்கிறது.


*கோயில் சிறப்பு:*
மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசியில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட, அப்பொழுது சூரிய பூஜை நடத்துகிறார்கள்.


திருவாரூரில் வாழ்ந்த சிவபக்தர் ஒருவர் இத்தலம் வந்து இறைவனை தரிசித்தார்.


அப்போது அங்கு கொடிய மிருகங்கள் அனைத்தும் ஒற்றுமையாய் இருப்பதையும், தேவகணங்கள் நாள்தோறும் வந்து இறைவனை தரிசித்து விட்டு பொழுது
விடிவதற்கு முன் சென்று விடுவதையும் பார்த்து சோழ மன்னனிடம் சென்று தெரிவித்தார்.


சோழ மன்னன் மகிழ்ச்சியடைந்து அந்த தலத்தை பார்த்து, அங்கிருந்த காடுகளை அழித்து, நகரமாக்கி பெரிய கோயிலைக் கட்டினான். *"ஆமலா'* என்பது சமஸ்கிருதத்தில் நெல்லியை குறிக்கிறது.


எனவேதான் இங்குள்ள இறை வனுக்கு *ஆமலகேசன்* என்ற திருநாமமும் உண்டு.


ஈசனுக்கு இங்கு கோயிலைக் கட்டிய சோழமன்னனுக்குப் பிற்காலத்தில் ஆமலகேச சோழன் என்றும் அழைக்கப்பட்டான்.


பிறத்தல், தரிசித்தல், நினைத்தல், இறத்தல் முதலியவைகளால் வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் புண்ணிய
பயன்கள் அனைத்தும் இங்கு இந்த ஒரே தலத்தில் அனைத்தும் கிடைத்து விடுவது ஐதீகம்.


நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் *"நெல்லிவனநாதர்'* என அழைக்கப்படுகிறார்.


இறைவன் தங்கிய தலமும் *"திருநெல்லிக்கா'*எனவும் அழைக்கப்பட்டது.


துர்வாசர் தனது கோபம் நீங்க வழிபட்ட தலம் இது.


சூரியன் வழிபட்டதால் அருணபுரமானது இத்தலம்.


வழிபடும் பயன்கள் எளிதில் பெறக்கூடிய தலமாதலால் சர்வ உத்தமபுரம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஐந்தெழுத்தும் சிவனாரை வழிபட்ட தலமாதலால் பஞ்சாக்ஷரபுரம்.


ஐந்து தீர்த்தங்கள் கொண்ட தலமாதலால் பஞ்ச தீர்த்தபுரம்.
அவை,
1. பிரம்ம தீர்த்தம்
2. சூரிய தீர்த்தம்
3. சக்கர தீர்த்தம்
4. சந்திர தீர்த்தம்
5. ரோகநிவாரண தீர்த்தம்.


கந்தர்வனின் குஷ்ட நோய் நீங்கிய தலமாதலால் குஷ்டரோகஹரபுரம்.


சிவனருளால் அமிர்தம் கிடைக்கப்பெற்ற தலமாதலால் அமிர்த வித்யாபுரம்.


பிரம்மன் வழிபாட்டிற்காக உண்டாக்கிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இது கோயிலின் எதிரில் இருக்கிறது.


கந்தர்வனின் குஷ்ட நோயை போக்கிய தீர்த்தமான ரோகநிவாரண தீர்த்தம், கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளன.


*தேவாரம்:*
அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்
நிறத்தா நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற் கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன்.


பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டைவாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.


நலந்தா னவன்நான் முகன்தன் தலையைக்
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப் பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன்.


தலைதா னதுஏந் தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதின்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன்.


தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறை மதியை உவந்து சூடியவன். மீனக்கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன்.


வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன்.


பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
இறைதான் இறவாக் கயிலைம் மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம் பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன்.


மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன்.


தழல்தா மரையான் வையந்தா யவனும்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி அகியவற்றைக் காணமுயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளி வடிவினன்.


கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.


🏾நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் 'என் அத்தனே காப்பாற்று' என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன்.


புகரே துமிலா தபுத்தே ளுலகில்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே.


🏾குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர்.


திருச்சிற்றம்பலம்.


*திருவிழாக்கள்:* சித்திரையில் பெருவிழா பத்து நாட்களாய்,
ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் அம்பாள் கல்யாண உற்சவம்.
நவராத்திரி.
கந்த சஷ்டி.
தைப்பூசம்.
தை மாதம் கடைசி வெள்ளி திருவிளக்கு பூஜை.


*தொடர்புக்கு:*
91- 4369 237 507
91- 4369 237 438


தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி.*


*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*