சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)*
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல எண்: 202*


*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*


*சிவ தல அருமைகள் பெருமைகள்.*


*ஜலநாதேஸ்வரர் திருக்கோவில், திருஊறல் (தக்கோலம்).*
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பன்னிரண்டாவது தலமாகுகப் போற்றப் படுகிறது.


திருஊறல் ஊரை தற்போது தக்கோலம் என்று அழைக்கிறார்கள்.


*இறைவன்:* ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்.


*இறைவி:*
கிரிராஜ கன்னிகாம்பாள்.


*தல விருட்சம்:* தக்கோலம்.


*தல தீர்த்தம்:* பார்வதி தீர்த்தம், சத்யகங்கை தீர்த்தம், குசத்தலை நதி.


*ஆகமம்:* சிவாகம முறைப்படி.


*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர். முதலாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.


*இருப்பிடம்:*
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து ஏழு கி.மி. தொலைவில் இந்தத் தலம் அமைந்துள்ளது.


மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு
அருகில் இருக்கிறது.


திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.


*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்,
தக்கோலம் அஞ்சல்,
அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம்.
PIN - 631 151


*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.


*கோவில் அமைப்பு:*
குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.


சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரளவுடன், சுற்றிலும் மதிற்சுவர்களுடன் அமைந்துள்ளன.


மேற்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம் காணக்கிடைத்ததும், சிரமேற் கைகளை உயர்த்தி குவித்து *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.


கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்களைக் கண்டோம். மிக மிக இச்சிற்பங்கள் அழகாக உள்ளன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றோம். மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம் இருந்தன.


இதனருகாக நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.


அடுத்திருந்த கொடிமரத்தருகே நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கிப் பணிந்தெழுந்து நிமிர்ந்தோம்.


அடுத்திருந்த நந்தியாரைக் கண்டு வணங்கிக் கொண்டோம் பின், ஆலயப் பிரவேசம் செய்ய இவரிடம் அனுமதியும் வேண்டிக்கொண்டு தொடர்ந்தோம்.


கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி தனிக்கோயிலா இருந்தது.


இவரைப் பார்த்ததும் விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.


நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் இருந்தது.


வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது.


வெளிப்பிரகார மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதிக்குச் சென்று வணங்கி நகர்ந்தோம்.


மேற்கிலுள்ள உள்வாயில் வழியே செல்லும்போது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கிக் கொண்டு உள்ளே சென்றோம்.


ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது.


அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகள் காணக் கிடைத்ததும் தொழுது கொண்டோம்.


அடுத்திருந்த நடராச சபைக்குச் சென்று, ஆடவல்லானை நன்றாக தரிசனம் செய்தோம். அவரருள் வேண்டி வணங்கி நகர்ந்தோம்.


அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றோம்.


மூலவர் சந்நிதி வாயிலின் இருபுறத்திலும் இருந்த துவாரபாலகர்களைக் கண்டு வணங்கிக் கொண்டு, மேலும் உள் சென்று மூலவரைத் தரிசிக்க அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.


பக்தர்களின் கூட்டம் அதிகமில்லை. மூலவர் தரிசனம் நன்றாக கிடைத்தது.


சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனவர். ஆதலால் இவர் தீண்டாத்திருமேனி ஆவார். ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள்.


ஈசனை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


அடுத்து, அம்மை சந்நிதிக்கு சென்றோம். அம்பாள் நின்ற கோலத்தில் அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் அருள்காட்சி வழங்கிய வண்ணமிருந்தார்.


இங்கேயும் ஈசனை வணங்கிக் கொண்டதுபோல, மனமுருகி பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் இருக்கக்கூடும் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.


கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகளையும் சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.


இவற்றுள் துர்க்கையைத் தவிர மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே காணக்கிடைத்தன.


தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தந்தார்.


லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் காட்டி, இடக்கையைத் தொடைமீது வைத்து காட்சி தந்தார்.


பிரம்மாவும் அமர்ந்த நிலையிலேதான் இருந்தார். வணங்கிக் கொண்டோம்.


விஷ்ணு, துர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும், அழகான வேலைப்பாடுடன் காணக்கிடைத்தது.


இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம் காண வேண்டிய அமைப்பு.


*தல அருமை:*
இங்கிருக்கும் நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாம்.


இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் எனப் பெயர் என்கின்றனர்.


மேலும் இறைவனை அழைக்காமல் அவமதித்த தக்கன் நடத்திய யாகத்தை, அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர்.


தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு *"ஓ"* என்று *ஓலமிட்டதால்* *தக்கோலம்* என்ற பெயர் பெற்றதாக உள்ளூரார் கூறுகின்றனர்.


வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் ஒன்று இருக்கிறது.


இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது.


உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம்.


இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.


*தல பெருமை:*
தேவகுருவாகிய வியாழனின் தம்பியாகிய உததிமுனிவர் தான் செய்யப் போகும் வேள்விக்கு காமதேனுவை தன்பொருட்டு இருக்குமாறு பணிவித்தார்.


அதற்கு காமதேனு சம்மதிக்க மறுத்தது. மறுத்த காமதேனுவை கட்டிவைக்க முனைந்தார்.


காமதேனு அவரது முதல்வரை சண்டாளராகுமாறு சபித்தது.


பதிலுக்கு முனிவரும் சாதாரண பசுவாகக் கடவாய் என்று சபித்தார்.


சாபம் நீங்குவதற்கு தக்கோலம் வந்து இறைவனை வழிபட்டார்.


இறைவன் வெளிப்பட்டு,........ நீ நந்திதேவரை வழிபட்டு, அவர் வாயிலிருந்து தெய்வகங்கையை இங்கு வரவழைத்து எமக்கு அபிஷேகம் செய்தால் சாபம் தீரும் என்று கூறி மறைந்தார்.


அதன்பொருட்டு நந்திதேவரை நோக்கி தவமிருந்தார்.


அவருக்கு, நந்திதேவர் வெளிப்பட்டு, தம் வாய் வழியாக தெய்வகங்கையை வரவழைத்தார்.


முனிவர் கங்கை நீரால் திருவூறல் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சாபம் நீங்கப் பெற்றார்.


காமதேனுவும் திருவூறல் இறைவனுக்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்து மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது.


தேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்து, காமதேனுவை தேவலோகத்திற்கு அழைத்துப் போயினர்.


*சம்பந்தர் தேவாரம்:*
முதலாம் திருமுறை.
பண்: வியாழக் குறிஞ்சி
1. மாறி லவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில்
தேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊற லமர்ந்தபிரா னொலியார்கழ லுள்குதுமே.
🏾தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.
2. மத்த மதக்கரியை மலையான்மக ளஞ்சவன்று கையால்
மெத்த வுரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை யுள்குதுமே.
🏾மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதென வினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.
. ஏன மருப்பினொடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊன மறுத்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.
🏾பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
4. நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு வும்மனலு மன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவில்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் றிருவூறலை யுள்குதுமே.
🏾நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள் புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.
5. எண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழு மிடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை யுள்குதுமே.
🏾எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
🏾 காணக் கிடைக்கவில்லை.
🏾 காணக் கிடைக்கவில்லை.
8. கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.
🏾சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவரவந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
9. நீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனுமறியா தன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன்சேரு மிடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரு மரவசைத்தான் றிருவூறலை யுள்குதுமே.
🏾கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.
10. பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னு மிவர்க்கருளா வீசனிடம் வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான் றிருவூறலை யுள்குதுமே.
🏾பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.
11. கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஓடு புனல்சடைமேற் கரந்தான் றிருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத் திருப்பாரே. 🏾செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற் கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.


திருச்சிற்றம்பலம்.


*திருவிழாக்கள்:*
சித்திரை மாதத்தில் பெளர்ணமி நாளோடு முடியும் பத்து நாட்களும் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.


வருடந்தோறும் நடராஜர் பூஜை ஆறு திருநாட்களில் நடைபெறுகிறது.


வைகாசி விசாகம்,
ஆனித் திருமஞ்சனம்,
ஆடிப்பூரம்,
மார்கழி திருவாதிரை,
மாசி மகம்,
தைப்பூசம்,
ஐப்பசியில் சூரசம்ஹார விழா.
கிருத்திகை,
பிரதோஷ வழிபாடு.


*தொடர்புக்கு:*
சம்பந்த மூர்த்தி சிவாச்சாரியார்.
04177- 246427,
93616 22427


பாபு சிவாச்சாரியார்.
99947 86919


தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *தெய்வநாயகேசுவரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர் (எலுமியன் கோட்டூர்.)*
_________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*