சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
_*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........)
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 205.*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*


வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர் திருக்கோயில்.*
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பதினைந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.


*இறைவர்:* வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர்.


*உற்சவ இறைவர்:* இரத்னசபாபதீஸ்வரர்.


*உற்சவ தாயார்*சமீசீனாம்பிகை


*இறைவி:* பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.


*தல விருட்சம்:* பலா. (ஆலமரம் என்றும் ஒரு சாரார் கூறுவர்.)


*தீர்த்தம்:*
சென்றாடு தீர்த்தம் (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி),
முக்தி தீர்த்தம்.


*வழிபட்டோர்:*
கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர்,


*தேவாரம் பாடியவர்கள்:*
சம்பந்தர்- ஒரு பதிகம்.
அப்பர் - இரண்டு பதிகம்.
சுந்தரர்- ஒரு பதிகம்.


*ஆலயப் பூஜை காலம்:*
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.


*இருப்பிடம்:*
சென்னை அரக்கோணம் இரயில் பாதையில், உள்ள திருவாலங்காடு இரயில் நிலையத்திலிருந்து நான்கு கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.


இரயில் நிலையத்திலிருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.


திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்துகளில் சென்று, திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால், திருக்கோவில் அருகிலேயே உள்ளது.


திருவள்ளூரிலிருந்து பதினெட்டு கி.மி. தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து பதினான்கு கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.


*சிறப்புகள்:*
நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.


மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.


இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை இருக்கிறது.


கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் நிறைய உள்ளன.


உள்ளனன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.


இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் *'ரத்ன சபாபதி'*என்று அழைக்கப்படுகிறார்.


சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும், திருமுறைபேழையும் இருக்கின்றன.


காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர், ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்த ஆலங்காட்டப்பன் "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார்.


சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணமுடிகிறது.


இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் அமைந்துள்ளது.


கருவறை நல்ல கற்கட்டமைப்புடன் காணக் கிடைக்கிறது.


கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக இருக்கிறது.


இங்கு பஞ்சபூத தல லிங்கங்களும் உள்ளன.


பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து, செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த *'தீப்பாய்ந்த மண்டபம் '* இருக்கிறது.


இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


இதற்கு எதிரில் *'சாட்சி பூதேஸ்வரர்'* சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் இருக்கிறது.


தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாள்தோறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.


சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில் *"கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை"* என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக வைத்துள்ளனர்.


இம்மரபினரின் கோத்திரமே *'கூழாண்டார்கோத்திரம்'*அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம்.


சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தியைக் கேட்கும்போது, நெஞ்சு நெகிழ்கிறது.


*தல அருமை:*
சும்ப- நிசும்பன் என்ற அரக்கர்கள் இரண்டு பேர்கள் நாங்கள் யாருடன் போரிட்டாலும், மண்ணில் விழும் எங்களின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் ஓர் அசுரன் உருவாக வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தனர்.


இதனால் அவர்களிருவரும் நிறைய அட்டூழியங்களைச் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆலமரத்தடியில் சுயம்புலிங்கத்தை பூஜித்துக் கொண்டிருந்த தேவர்களை வதைத்தனர்.


ஏனைய தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி சிவனாரிடம் வந்து முறையிட்டனர்.


இவர்களின் அல்லல் தீர்க்க திருவுளம் கொண்ட சிவனார், தேவியை நோக்கினார்.


ஈசனின் குறிப்பை பார்வதியாளும் புரிந்துகொண்டாள். மறுகணம் தன் பார்வையாலேயே காளி தேவியை உருவாக்கினாள்.


எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து அசுரர்களை அழிக்கப் புறப்பட்டாள் காளி.


அசுரர்களது இருப்பிடத்தை அடைந்து அவர்களுடன் போரிட்டாள். அவர்களின் ரத்தம் தரையில் சிந்தினால்தானே அதிலிருந்து அசுரர்கள் தோன்றுவார்கள்?!.....


ஆனால் காளி, ஒரு துளி ரத்தம்கூட தரையில் சிந்தாமல், தன்னுடைய ஒரு கரத்தில் இருந்த கபாலத்தில் அசுரர்களின் ரத்தத்தை ஏந்தினாள்.


கபாலம் நிரம்பியதும் பருகினாள். தொடர்ந்து சண்டையிட்டாள். போரின் முடிவில் அசுரர்கள் அழிந்தனர்.


ஆனாலும் இன்னொரு பிரச்னை ஆரம்பமானது! அசுர ரத்தத்தைப் பருகியதால் காளிக்கும் அசுர குணம் மேலோங்கியது.


மீண்டும் தேவர்கள் தொல்லைக்கு ஆளானார்கள். காளியைக் கட்டுப்படுத்த வந்த சிவனார், அவளுடன் நடனப்
போட்டியில்
பங்கேற்க நேர்ந்தது.


சிவனாரின் தாண்டவம் தொடர்ந்தது. இவர் ஒரு தாண்டவத்தை ஆடிக்காட்ட, காளிதேவியும் அதே போல் ஆடிக்காட்டினாள்.


பதினேழு தாண்டவங்கள் ஆடி முடித்தாயிற்று. அடுத்த தாண்டவம், தன்னுடைய வலக்காதில் இருந்த குண்டலத்தை கீழே தவறவிட்ட சிவனார், சட்டென்று இடது காலால் அந்தக் குண்டலத்தை எடுத்து, அதே காலை உயரத் தூக்கி, குண்டலத்தை கரத்தில் வாங்கி அணிந்துகொண்டார்.


காளிதேவியால் இப்படி காலை உயரத் தூக்கி ஆட முடியாததால், சிவனார் வெற்றிபெற்றார்.


இந்தப் போட்டி நடைபெற்ற தலம் திருவாலங்காடு என்கிறது புராணம்.


*தல பெருமை:*
காளிக்கும், ஈசனுக்கு மற்றும் ஐநடந்த நடன போட்டியை நடத்தி வைத்தவர்கள் சுனந்த முனிவரும் கார்கோடகனும் (நாகம்) என்பவராவர்.


சிவதாண்டவத்தைக் காண வேண்டும் எனும் ஆவலில், தலையில் நாணல் வளரும் அளவுக்கு கடும்தவம் செய்தாராம் சுனந்த முனிவர்.


அதன் பலனால் திருவாலங்காட்டில் சிவ தாண்டவம் காணும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு.


அதேபோல், ஈசனின் கைகளில் ஒருமுறை விஷத்தை கக்கியதால் சாபம் பெற்ற கார்கோடகன், இங்கு வந்து சாப விமோசனம் பெற்றாராம்.


அதனால், இங்குள்ள ஸ்ரீநடராஜர் இடக்கரத்தில் பாம்பை ஏந்தியபடி காட்சி தருகிறார்.


அதுமட்டுமல்ல, மற்றொரு இடக்கரத்தில் அக்னியையும், வலக்கரங்களில் உடுக்கை, சூலம் போன்றவை திகழ உயரத் தூக்கிய பொற்பாதத்துடன் கனகம்பீரமாக காட்சி தருகிறார் ஆலங்காட்டு ஆடல்வல்லானாம் ஸ்ரீரத்னசபாபதீஸ்வரர்.


அருகிலேயே ஸ்ரீசமீசீனாம்பிகை *(வியந்திருந்து அருகிருந்த நாயகி என்று அர்த்தம்.)*


சுவாமி அருள்புரியும் ரத்தின சபை, ஒருகாலத்தில் ரத்தினங்களாலேயே இழைக்கப்பட்டிருந்ததாம்.


ஈசனுடன் ஆடலில் போட்டிப்போட்ட காளிதேவியின் தனிக்கோயில், திருக் குளத்துக்கு வடக்கு திசையில் உள்ளது.


முதலில் இவளை வணங்கிவிட்டே ஸ்ரீநடராஜபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.


*கோவில் அமைப்பு:*
நீண்ட நெடிய நாளைய கணவாகவே இருந்து வந்தது நமக்கு.


ஆலயத்திற்கு புறப்பட்டுச் செல்ல முனைந்தபோதெல்லாம், ஏதோ ஒரு காரணத்தில் தள்ளிபோய்க் கொண்டே வந்தது.


ஆனால், இதற்கிடையில் நினையாத கோவிலுக்கெல்லாம் சென்று வர ஈசன் அருள்புரிந்திருந்தார்.


சுமார் மூன்று ஆண்டுகளாக நினைத்திருந்த நினைப்பு அதன்பிறகே கூடிவந்தது.


இவ்வாலயத்தை நோக்கிச் செல்கையில், கிழக்கு திசையில், ஐந்து நிலைகளைத் தாங்கிய இராஜகோபுரத்தை முதலில் காணப் பெற்றோம்.


*சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.


கோபுரத்தில் அழகிய சுதை வேலைப்பாடுகள் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.


கோபுர நுழைவு வாயிலுக்குள் உள் புகுந்ததும், இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தந்தார்.


விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.


வலதுபுறத்தில் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தந்தார். இவரையும் ஆனந்தித்து வணங்கிக் கொண்டோம்.


மேலும் தொடர வலதுபுறத்தில் நூற்றுக்கால் மண்டபம் இருந்தது.


இம்மண்டபத்தில் வைத்துத்தான் விசேஷத்தின்போது, நடராசர்க்கு அபிஷேகம் நடத்துவார்கள் என்று அருகிருந்தோர் கூறினர்.


நுழைவு வாயிலைக் கடந்தவுடன், எதிரே பலிபீடத்தைக் காணப் பெற்றோம்.


நம்மிடம் ஆணவமலம் இல்லை. இருப்பினும் வணங்கு மரபுப்படி பலிபீடத்தருகாக நின்று, இனியேனும் ஆணவமலம் உருவாகவாதிருக்கும்படி வணங்கி நகர்ந்தோம்.


அடுத்திருந்த கொடிமரத்து முன் நெடுஞ்சான்கிடையாய் விழுந்து, சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கிப் பணிந்தெழுந்து நிமிர்ந்தோம்.


பின்பு, நந்தி மண்டபத்திலிருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஈசனின் தரிசனத்திற்கு அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.


மூன்று நிலைகளுடைய இரண்டாவது கோபுரம் காணக் கிடைத்தது. சிவ சிவ என வணங்கிக் கொண்டோம்.


இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.


இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறத்தில், காரைக்கால் அம்மையாரின் வரலாற்றையும், வலதுபுறத்தில் மீனாட்சி திருக்கல்யாண வரலாற்றையும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.


இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும், இண்டாவது சுற்றுப் பிரகாரம் இருந்தது.


வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.


நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில் இருந்தது.


இந்த நுழைவு வாயிலின் மேற்புறத்தில், சிவபெருமானின் ஐந்து சபைகளை, அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சியாக்கி வைத்திருந்தார்கள்.


ஈசன் முன் பிரசன்னமானோம்.
கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தந்து கொண்டிருந்தார்.


மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.


மூலவரைத் தரிசிக்கும் உள் பிராகாரத்திற்குள்ளாக, சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் இருந்தன.


ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று, நெஞ்சுக்கு நேராக கூப்பி குவித்த கரங்களை இறக்காது, ஒவ்வொருத்தரையும் வணங்கியபடியே நகர்ந்தோம்.


கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களையும் தொடர்ந்து வணங்கியபடி சென்றோம்.


துர்க்கைக்குப் பக்கத்திலேயே துர்க்கா பரமேஸ்வரர் என்ற ஒரு உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாக இருந்தது. வணங்கிக் கொண்டோம்.


சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று, இவரை வணங்கும் மரபு முறைப்படி வணங்கிக் கொண்டு திரும்பினோம்.


அடுத்து, பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக இருக்க விடாது தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.


சஹஸ்ரலிங்கத்தை தரிசித்தோம். மிக மிக நேர்த்தியான அழகு அமைப்பு இது.


சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வரலிங்கம் முதலிய சந்நிதிகளும் உள்ளன. வணங்கிக் கைதொழுதோம்.


பைரவரைக் கண்டு வணங்கிக் கொண்டோம். இவர் தனது வாகனமில்லாமல் காட்சி அருளினார்.


பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தினசபை வாயிலில் அமைந்திருந்தன.


நடராஜர் அபிஷேகத்தின்போது அனைவருக்கும் அபிஷேகத் தரிசனம் கிடைப்பதற்காக சபைக்கு எதிரில் பெரிய நிலைக்கண்ணாடியை பொருத்தி வைத்துள்ளார்கள்.


அடுத்து சந்நிதிக்கு விரைந்தோம். தெற்கு நோக்கியபடி நின்ற கோலத்துடன் அம்பாள் காட்சியருளிக் கொண்டிருந்தாள்.


மனமுருக பிரார்த்தனை செய்து, பரிபூரணமாக அருளைப் பெற்றுக் கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்று வெளிவந்தோம்.


அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் எதுவும்
காணக்கிடைக்கவில்லை.


இருந்தாலும், அம்பாள் சந்நிதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காணவேண்டியவைகள். மிக மிக அழகுடையதாக இருந்தது.


இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனியை தரிசித்தோம்.


மனதிற்கு இனிமையாக இருந்தது. இவரின் நடனக் கோலத்தைக் கண்டதும், நம் நெஞ்சில் குடியிருந்த மனக்கவலையாவும் தொலைந்தொழிந்து போயிருந்தன.


அருகே, சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் இருந்தன. பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டோம்.


இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் இருந்தன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது என சொன்னார்கள்.


இரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் இருப்பதைக் கண்டதும், நம் கரங்கள் சிரசின் மேல் உயர்ந்தன.


இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடுகளினால் வேயப்பட்டிருந்தன. இதில் ஐந்து கலசங்களை நிறுவியிருந்தார்கள். கலசத்தை நோக்கி இன்னும் கொஞ்சம் சற்று உயரமாக நம் கைகள் உயர்ந்தன.
*காரைக்காலம்மையார்:*புனிதவதி என்ற அம்மையார், காரைக்கால் எனும் ஊரில் பெருவணிகருக்கு தவப் புதல்வியாய் பிறந்தாள்.


நாகப்பட்டினத்து வணிக நீதிபதியின் மகனான பரமதத்தனுக்கும், புனிதவதிக்கும் திருமணம் நடந்தது.


திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியினறை, தனதத்தர் தனிக்குடித்தனம் அமர்த்தினார்.


பரமதத்தனின் இல்லம் தேடி உதவி வேண்டி வந்தவர் அவரிடம் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.


அக்கனிகளை அவர் தன் மனையாளிடம் ஒப்படைத்தார். அவ்வேளையில் பரம தத்தனின் இல்லம் தேடி சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் அமுதுண்ண வந்தார்.


அவ்வேளையில் அமுதோடு மாங்கனிகளுள் ஒன்றையும் அரிந்து வைத்தார் அவ்வம்மையார்.


பின் கணவன் உணவருந்தும் வேளையில் இன்னொரு கனியை அமுதுடன் பறிமாறினார்.


கனி சுவை மிகுந்து காணப்பட்டதால், மீண்டும் சுவைக்க மற்றொரு கனியையும் அரிந்து தரக் கேட்டார் கணவர்.


செய்வதறியாது திகைத்த அம்மையார், கணவனின் நினைப்பு ஏற்றமாகக் கூடாது என்று, சிவனை வேண்டினார்.


இறைவனருளால் இன்னொரு கனியை இறைவனிடமிருந்து பெற்றாள்.


சுவையின் வேறுபாடு அறிந்த கணவன், இக்கனி எப்படி வந்ததென வினவினான்.


சிவனருளால் கனி கிட்டியதாக அம்மையார் கூறினார்.


அம்மையார் பதிலில் திருப்தியடையாத பரமதத்தன், அப்படியானால்சிவனிடம் மீண்டும் வேண்டி இன்னொரு கனியைப் பெற்றித் தருமாறு கேட்கச் செய்தான்.


இறைவனிடமிருந்து சிவனருளால் மீண்டும் ஒரு கனியைப் பெற்று கணவர் கைகளில் அளிக்க, கணவனின் கைகளில் தோன்றி மறைந்தது.


இதனால், அம்மையாரின் தெய்வீகத் தன்மையை உணர்ந்தான். அவளிடமிருந்து ஒதுங்கி வாழ தீர்மானித்தான்.


அதுமுதல் தன் இல்லற உறவுகளின் தொடர்புகளை அறுத்து வாழ்ந்தான்.


பின்பு, வணிக நிமித்தம் காரணம்கூறி, வெளியூர் சென்ற வேளையில் பாண்டி நாட்டு ஒரூரில் மறுமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ்ந்தான்.


மறுமண வாழ்க்கையின் மூலம் ஒரு பெண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தனர். அக்குழந்தைக்கு தன் முதல் மனைவியின் பெயரான புனிதவதியென்று பெயர் சூட்டி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்.


பின்பு, புனிதவதியாரின் பெற்றோர்கள், செய்தியறிந்து தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு மருமகனின்
இருப்பிடம் சென்றடைந்தனர்.


பரமதத்தரோ தன் மனைவி மகளுடன் அம்மையாரின் காலில் வீழ்ந்து
வணங்கினார்கள்.


தன்னிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்த கணவனின் செய்கை பிடிக்காத புனிதவதியார், தன் உடலின் பொழிவு ஒழியட்டும் என்று, உடலை வருத்தி இறைவனிடம் பேய் உருவம் கேட்டுக் கொண்டு அம்மையார் தலையால் நடந்து திருக்கயிலாயம் சென்றடைந்தார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார்.


ஈசன் புனிதவதியாரை *'அம்மையே'* என்றழைக்க அம்மையார் சிவபெருமானை *'அப்பா'* எதிறழைத்தார்.


என்னவரம் வேண்டுமென்று ஈசன் வினவ, அம்மையார், பிறவாமை வரம் வேண்டுமென்றும், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாதமனம் வேண்டுமென்றும், மேலும் உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினாள்.


*'அம்மையாரே நீ திருவாலங்காட்டில் சென்றமர்க'* என்று இறைவன் அருளினார்.


அம்மையாரும் தலையால் நடந்து திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடுகின்றார்.


*மார்கழி சிறப்பு:*
மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.


பங்குனிஉத்திரத்திற்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்காள்அம்மையார் ஐக்கிய விழா நடைபெறுகிறது.


*நித்தமும் நடனம்:*
நடராஜபெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் இங்கு இரத்தின சபை ஆகும்.


இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற
காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைக்க அமைந்திருக்கும் திருக்கோயில் இது.


அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.


*ஆலமரம்:*
முன் காலத்தில் ஆலமரக்காடாக இத்தலம் இருந்தது. இதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.


*பிரார்த்தனை:*
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் தலம் இது.


*நேர்த்திக்கடன்:*
மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.


*மூத்த திருப்பதிகம்:*
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது.


தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள *"கமலத்தேர்'* இங்கு தனி சிறப்பு.


*காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம்.*


1.கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.


2.கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.


3.வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப
மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே
கூகையொ டாண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித் தோட வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
ஈமம் இடுசுடு காட்ட கத்தே
ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடம் திரு ஆலங் காடே.


4.குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.


5.விழுது நிணத்தை விழுங்கி யிட்டு,
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழதி துடைத்து, முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் கா டே


6.பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய்
பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை
குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள்
குறுநரி சென்றணங் காடு காட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே
அட்டமே பாயநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.


7.கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.


8.நாடும், நகரும் திரிந்து சென்று,
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்ட மாடே,
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்
காடும், கடலும், மலையும், மண்ணும்,
விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.


9.துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.


10.புந்தி கலங்கி, மதிம யங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.


11.ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.


12.எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே.
13.நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.


14.புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே.


15.செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.


16.முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்
றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி யிடமும் அதுவே
ஆகப் பரமன் ஆடுமே.


17.வாளைக் கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ
டியம்பக் குழகன் ஆடுமே.


18.நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஒசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.


19.வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.


20.கடுவன் உகளுங் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந்
ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங்
கறங்கப் பரமன் ஆடுமே.


21.குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே.


22.சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.


திருச்சிற்றம்பலம்.