சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.......................)
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 218:*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
சிவ தல அருமைகள் பெருமைகள்:*
ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயில், அச்சிறுபாக்கம்:*
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபத்து எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* எமையாட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர்.
*இறைவி:* இளங்கிளி அம்மை, உமையாம்பிகை, அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்:* கொன்றை மரம்.
*தல தீர்த்தம்:* சிம்ம தீர்த்தம்.
ஆகமம்:* காமிக ஆகமம் முறையில்.
தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.- முதலாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
இருப்பிடம்:*
அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் நான்கு கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோயிலை அடையலாம்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம்.
அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோயிலை அடையலாம்.
சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த தலம் இருக்கிறது.
*அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி.
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயில்,
அச்சிறுபாக்கம் அஞ்சல்,
மதுராந்தகம் வட்டம்,
காஞ்சீபுரம் மாவட்டம்,
PIN - 603 301
ஆலயப் பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலையில் 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயம் ஐந்து நிலைகளைத் தாங்கியபடி கிழக்கு நோக்கியபடி இராஜகோபுரம் அமைந்திருக்க *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். நேராக உள் வாயில் இருந்தது. ஆனால், கோபுர வாயிலைக் கடந்தவுடன், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை நேராக இல்லாமல் சற்று இடதுபுறம் வடக்கே அமைந்திருந்தது.
இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும்.
கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றபோது, நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி இருந்ததது.
உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம் இருக்க, நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்து, பலிபீடத்தருகாக வந்து நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இதற்கடுத்தாற்போல, நந்தி மண்டபத்தில் நந்தியாரைக் கண்டு வணங்கிவிட்டு, மேலும் ஆலயத்துக்கு சென்று ஈசனைத் தரிசிக்க அனுமதி வேண்டிக் கொண்டு தொடர்ந்தபோது,
ஆட்சீஸ்வரர் சந்நிதிக்கு வந்து நின்றோம்.
இவர் வாயிலின் இரு புறத்திலும், துவாரபாலகர்களாக, சிவனாரால் வதம் செய்யப்பட்ட, தாரகனும், வித்யுன்மாலியும், இருந்தனர்.
தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் முருகனும் இருக்கப்பெற நால்வரையும் வணங்கிக் கொண்டு, உள் புக அனுமதி வேண்டிக் கொண்டோம்.
இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்து, கண்கள் குளிர்ச்சி தரிசித்து, ஈசனுக்கு ஏற்றி இறக்கி காட்டிய தீபாராதனையை கண்டு தரிசித்து, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.
கோஷ்ட மூர்த்தங்களாக இருந்த தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி இருக்க, ஒரு முறை சுற்றி வந்து வணங்கி ஆனந்தப் பட்டோம்.
ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று மேலும் சென்றோம். அடுத்து உமையாட்சீஸ்வரர் சந்நிதி காணக் கிடைத்தது.


உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்திருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு, உமையாட்சீஸ்வரர் சந்நிதிக்குள் புகுந்தோம்.
கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருட்காட்சி தந்தார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்தார்.
அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்றாம். அதனால் கருவறைக்குள் பின்சுவரில் இத்திருமணக்கோலம்..
இங்கேயும் மனமுருக பிரார்த்தனை செய்து, எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் உருவாக கொடுப்பினை அருள்வாயாக என விண்ணப்பம் செய்து வணங்கிக்கொண்டு வெளிவந்தோம்.
இதற்கருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகையை கண்கள் குளிரக் கண்டு ஆனந்தித்து, மணங்குளிரத் தரிசித்து அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் இருந்தது. பார்த்து கைதொழுது கொண்டோம்.
சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி இருந்தது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் இருந்தனர்.
அனைவரையும், கூப்பிய கைகளை தாழ்த்தாமல் வணங்கியபடியே நகர்ந்தோம்.
*தல அருமை:*
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றைக் கொண்டு மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.
இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருக்கப் பெற்றன.
இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.
தேவர்கள், அசுரர்களின் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் வந்து முறையிட்டனர்.
மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாக்கி புறப்பட்டார்.


ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்து விட்டனர்.


இதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார்.


தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் சென்று திரிபுர அசுரர்களை அழித்தார்.


தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.


*தல பெருமை:*
பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான்.


திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார்.


கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை அனுகி விபரம் கேட்டான்.


முனிவரும் "அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன்" என்று கூறினார்.


வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தந்தாள்.


அம்பாளைக் கண்டு வணங்கிக் கொண்டோம். அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


*அச்சுமுறி விநாயகர்:*
சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார்.


புதிய செயல்கள் தொடங்குவதற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.


அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு விநாயகர் துதி பாடி பிறகு தான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் எனபதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம்.


விநாயகர் துதியில் "முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த" என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்.


*சம்பந்தர் தேவாரம்:*
பண் :குறிஞ்சி.
1.பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரிநூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத்தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.


2.தேனினுமினியர் பாலனநீற்றர் தீங்கரும்பனையர்தந் திருவடிதொழுவார்
ஊனயந்துருக வுவகைகடருவா ருச்சிமேலுறைபவ ரொன்றலாதூரார்
வானகமிறந்து வையகம்வணங்க வயங்கொளநிற்பதோர் வடிவினையுடையார்
ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
🏾அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.


3.காரிருளுருவ மால்வரைபுரையக் களிற்றினதுருவுகொண் டரிவைமேலோடி
நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி நீறணிந்தேறுகந் தேறியநிமலர்
பேரருளாளர் பிறவியிற்சேரார் பிணியிலர்கேடிலர் பேய்க்கணஞ்சூழ
ஆரிருண்மாலை யாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத்தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.


4.மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.


5.விண்ணுலாமதியஞ் சூடினரெனவும் விரிசடையுள்ளது வெள்ளநீரெனவும்
பண்ணுலாமறைகள் பாடினரெனவும் பலபுகழல்லது பழியிலரெனவும்
எண்ணலாகாத விமையவர்நாளு மேத்தரவங்களோ டெழில்பெறநின்ற
அண்ணலானூர்தி யேறுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.


6.நீடிருஞ்சடைமே லிளம்பிறைதுலங்க நிழறிகழ்மழுவொடு நீறுமெய்பூசித்
தோடொருகாதினிற் பெய்துவெய்தாய சுடலையிலாடுவர் தோலுடையாகக்
காடரங்காகக் கங்குலும்பகலுங் கழுதொடுபாரிடங் கைதொழுதேத்த
ஆடரவாட வாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கதில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும் பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.


7.ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி யிளங்கிளையரிவையொ டொருங்குடனாகிக்
கூறுமொன்றருளிக் கொன்றையந்தாருங் குளிரிளமதியமுங் கூவிளமலரும்
நாறுமல்லிகையு மெருக்கொடுமுருக்கு மகிழிளவன்னியு மிவைநலம்பகர
ஆறுமோர்சடைமே லணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளையகிளி போன்ற அழகிய பார்வதிதேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகியஇவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.


8.கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.


9.நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.


10.வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க ணல்வினைநீக்கிய வல்வினையாளர்
ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா ருள்கலாகாததோ ரியல்பினையுடையார்
வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியுமீறு மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


🏾அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.


11.மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய மதுமலர்ப்பொய்கையிற் புதுமலர்கிழியப்
பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப் பதியவரதிபதி கவுணியர்பெருமான்
கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக் கருத்துடைஞானசம் பந்தனதமிழ்கொண்
டச்சிறுபாக்கத் தடிகளையேத்து மன்புடையடியவ ரருவினையிலரே.


🏾கருநிறம் பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப்பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத்தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாதகருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.


திருச்சிற்றம்பலம்.


*திருவிழாக்கள்:*
சித்திரை மாதத்தில் பிரமோற்சவம் பத்து நாட்களாக நடைபெறுகிறது.


விழாவின் கடைசி நாளன்று பெறும்பேறு கண்டிகை கிராமத்திற்கு சுவாமி எழுந்தருளி அகத்தியருக்கு காட்சி அளிக்கும் வகையில் ஐதீக விழா நடைபெறுகிறது.


மற்றும், நவராத்திரி, பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.


*தொடர்புக்கு:*
98423 09534
044- 2752 3019