220.கறுத்த குஞ்சியும்
220
கும்பகோணம்
திருவடி தனை என்று உற்றிடுவேனோ


கறுத்த குஞ்சியும் வெளிறியெ ழுங்கொத்
துருத்த வெண்பலு மடையவி ழுந்துட்
கருத்து டன்திகழ் மதியும ருண்டுச் சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகுமு டங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகைந டுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வகள் விளம்பச் சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழியலொ ழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறுகு ழம்பப்
புகட்ட ரங்கிய விரகது ரங்கத் திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரியநெ ருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப்பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருகசி கண்டிப்
பரிச்சு மந்திடு குமரக டம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் பெருமாளே

பதம் பிரித்தது உரை
கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து
உருத்த வெண் ப(ல்)லும் அடைய விழுந்து உள்
கருத்துடன் திகழ் மதியும் மருண்டு சுருள் நோயால்


கறுத்த குஞ்சி வெளிறி = கருத்த மயிரும் வெளுத்துப் போய் எழும் கொத்து = எழுந்து வரிசையாக. உருத்த = உருவு கொண்டிருந்த.வெண் ப(ல்)லும் = வெண்மை நிறமான பற்களும்அடைய = எல்லாம் விழுந்து = விழுந்து போய் உள் கருத்து = உள்ளே கருத்துக்களுடன் திகழ் =விளங்கியிருந்த. மதியும் = புத்தியும் மருண்டு =மருட்சி அடைந்து சுருள் நோயால் = உடலைச் சுருட்டி மடக்கும் நோயால்.


கலக்கமுண்டு அலம் அலம் உற வெண்டி
பழுத்து எழும்பிய முதுகு முடங்க
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி


கலக்கமுண்டு = கலக்கம் அடைந்து அலம் அலம் உற = (இவ்வாழ்க்கை) போதும் போதும் என்னும் மன நிலை வர வெண்டி = நீர் வற்றி பழுத்து =பழுத்த பழமாய். எழும்பிய = நிமிர்ந்து ஓங்கி நின்றமுதுகும் அடங்க = முதுகும் வளைவு உறகழுத்தில் வந்து = கண்டத்தில் வந்து இளை =கோழையும் இருமல் ஒதுங்க = இருமலும் ஒதுங்கி நிற்க கொழு மேனி = கொழுத் திருந்த உடலானது.
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க
பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப சடமாகி


அற = மிகவும் திரங்கி = வற்றிச் சுருங்கி ஒர் தடி கை = ஒரு தடியைக் கையில் நடுங்கப் பிடித்த =நடுக்கத்துடன் பிடித்த இடும்பு உறு மனைவியும் =அவமதிப்புக்கு இடமான மனைவியும் நிந்தித்து =இகழ அடுத்த மைந்தரும் = பக்கத்தில் அடுத்துள்ளபிள்ளைகளும் வசைகள் விளம்ப = பழிக்க சடமாகி= அறிவில்லாத பொருள்போல் ஆகி


அழுக்கு அடைந்து இடர் படும் உடல் பங்க
பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு
அடுத்திரும் திருவடி தனை என்று உற்றிடுவேனோ


அழுக்கு அடைந்து = உடலெல்லாம் அழுக்கு சேரஇடர் படு = வேதனைப்படும் உடல் பங்க =உடலுக்கு இடமான சேறு போன்ற பிறப்பு எனும் கடல் = பிறவி என்கின்ற கடலில் அழியல் = அழிந்த போவது ஒழிந்திட்டு = ஒழிந்து அடுத்து இரும் திருவடிதனை = பெருமை வாய்ந்த உனது திருவடிகளைச் சரணம் அடைந்து என்று உற்றிடுவேனோ = என்று நான் பொருந்தி இருப்பேனோ ?


புற தலம் பொடி பட மிகவும் கட்டு
அற பெரும் கடல் வயிறு குழம்ப
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
புறத் தலம் = வெளி இடங்கள் எல்லாம் பொடிபட =பொடிபட்டு மிகவும் கட்டு அற = மிகவும் நிலை கலங்கவும் பெரிய கடல் வயிறு குழம்ப = பெரிய கடலும் அதனது உட்புறமெல்லாம் குழம்பிக் கலங்கவும் புகட்டு = (ஆங்காங்குள்ள அசுரர்கள் மீது) புகவிட்டு அரங்கிய = அவர்களை தேய்த்துச் சிதைத்த விரக = சாமர்த்தியமுள்ள துரங்க =குதிரையாகிய மயிலேறும் திறல் வீரா = வலிமை வாய்ந்த வீரனே


பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு
அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா


பொருப்பு = கிரௌஞ்ச மலையின் உரம் படர் =பரவி இருந்த வலிமை கிழிபட = பிளவு உண்டுவென்று = வெற்றி அடைந்து அட்டு =(பகைவர்களைக்) கொன்று அரக்கர் வன் தலை =அசுரர்களுடைய வலிய தலைகள் நெரிய =நெரிபட்டு அழிய நெருங்கி = நெருங்கிச் சென்றுபுதைக் குறும் தசை = உள்ளடங்கியுள்ள சதை குருதிகள் = இரத்தம் பொங்க = மேல் எழ பொரும் வேலா = சண்டை செய்யும் வேலனே.


சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச
சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற
தினை புனம் திகழ் குற மகள் கொங்கை கிரி மேவி


சிறுத்த = சிறிய தண்டைய = தண்டைகளை அணிந்தவனே மதலையொர் = பிள்ளைகள் அஞ்ச =பயப்படும்படி சினத்து மிஞ்சு அரி = கோபம் மிக்க சிங்கம் திரி தரு = திரிகின்ற குன்ற = வள்ளி மலையில் தினைப் புனம் திகழ் = தினைப்புனத்தில் விளங்கியிருந்த குறமகள் கொங்கைக் கிரி மேவி =குறப் பெண்ணாகிய வள்ளியின் தனங்களை விரும்பி


செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி
பரி சுமந்திடு குமர கடம்ப
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே.


செருக்கு நெஞ்சு உடை முருக = மகிழ்ச்சி கொண்ட மனத்தை உடைய முருகனே. சிகண்டி பரி = மயில் என்னும் குதிரை சுமந்திடு குமர = சுமக்கின்ற குமரனே கடம்ப = கடம்பனே திருக் குடந்தையில் =கும்பகோணத்தில் உறை தரு கந்தப் பெருமாளே =வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்


வெண்டி = நீர் வற்றி. இடும்பு = அவமதிப்பு. புகட் டரங்கிய = புகவிட்டு அரங்கிய. அரங்கிய = அரக்கிய.


ஒப்புக
மனைவியும் நிந்தித்து......
..மனையவள் மனம் வேறாய்
....மாதர் சீயெனா வாலர் சீயெனா...................................... திருப்புகழ், அறுகுநுனி


ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்............................சம்பந்தர் தேவாரம்