221.செனித்திடும் சலம்
221
கும்பகோணம்
சிவ யோகமும் ஞானமும் அருள்வாயே

தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன தனதான


செனித்த டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு முடலூடே
தெளித்தி டம்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை யனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு முடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு மருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திருப்பு யந்தரு மோகன மானினை யணைவோனே
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் பெருமாளே.
பதம் பிரித்து உரை


செனித்திடும் சலம் சாழலும் ஊழலும்
விளைத்திடும் குடல் பீறியும் மீறிய
செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் உடலூடே


செனித்தடும் = பிறப்பு என்கின்ற சலம் =பொய்ம்மையோடு சாழலும் = சாழல் எனப்படும் விளையாட்டு போன்றவை என்ன ஊழலும் =ஆபாசம் என்ன விளைத்திடும் = பிறப்பால் ஏற்படும்குடல் = குடல் பீறியும் மீறியும் = (அந்தக் குடலைக்) கிழித்துக் கொண்டு எழுவது போல மேல் நோக்கி எழுகின்ற செருக்கொடும் = ஆணவம் என்ன உடல் ஊடே = அந்த உடலில் உள்ள சதை பீளையும் ஈளையும் = சதை, பீளை, கோழை என்ன


தெளித்திடும் பல சாதியும் வாதியும்
இரைத்திடும் குலமே சில கால் படர்
சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும்


தெளித்திடும் = தோன்றியுள்ள பல சாதியும் = பல சாதிகள் என்ன வாதியும் = (அதைக் குறித்து) வாதிப்பவர் என்ன இரைத்திடும் = கூச்சலிட்டுப் பேசும் குலமே = குலத்தவர் என்ன சில கால் = சில சமயங்களில் படர் = துன்பம் சினத்திடும் =கோபித்து எழுவது போல் பவ நோய் எனவே =பிறப்பு என்னும் நோய் என்றே இதை =இவ்வாழ்வை அனைவோரும் = எல்லோரும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கனைத்திடும் கலி காலம் இதோ என
எடுத்திடும் சுடு காடு புகா என
கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல்பேணி


கனைத்து இடும் = ஒலித்து எழும் கலி காலம் இதோ என = கலி காலத்தின் கூத்தோ இது என்று கூறுவதும் எடுத்திடும் = (பிணத்தை) எடுங்கள் சுடு காடு புகா என = சுடு காட்டுக்குப் போக என்று (கூறுவதும்) கவிழ்த்திடும் = (அங்கே போய்க்) கவிழ்க்கப் பட்டதுமான சடமோ = உடல் பொடியாய் விடும் = சாம்பலாகிவிடும் உடல் பேணி = உடலை நான் விரும்பிப் போற்றி.


கடுக்கனும் சில பூடணம் ஆடைகள்
இருக்கிடும் கலையே பல ஆசைகள்
கழித்திடும் சிவ யோகமும் ஞானமும் அருள்வாயே


கடுக்கனும் = (அவ்வுடலை அலங்கரிக்கக்) கடுக்கன் முதலிய சில பூடணம் = சில அணிகலன்களை அணிவது என்னஆடைகள் =உடைகள் அணிவது என்ன இருக்கிடும் = இருக்கு வேத மந்திரங்களால் பெறப்படும். கலையே =சாத்திர நூல்களைப் படிப்பது என்ன பல ஆசைகள் = பல திறத்த ஆசை வகைகளைக் கொண்டிருப்பது என்ன கழித்திடும் = எல்லாவற்றையும் ஒழிக்க வல்ல சிவ யோகமும் ஞானமும் = சிவ யோகத் தையும் சிவ ஞானத்தையும். அருள்வாயே =(எனக்கு) அருள்வாயாக.


தனத்த............வீராணம் ஒடு அடல் பேரி


தனத்தனந்தன..........விராணமோடு = வீராணம் என்ற பெரிய பறையுடன் அடல் பேரி = வெற்றி முரசு இவைகளுடன் கூடிய


சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை
வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக
சமத்து உணர்ந்திடு மா தவர் பால் அருள் புரிவோனே


சமர்த்தம் ஒன்றிய = போருக்கு என்று கூடி வந்ததானவர் சேனையை = அசுரர்களுடைய சேனைகளை வளைத்து = வளைத்து வெம் =கொடிய சின = கோபம் கொண்ட வேல் விடு சேவக = வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உள்ளவரேசமர்த்து = (உனது) திறமையை உணர்ந்திடு =தெரிந்துள்ள மா = சிறந்த தவர் பால் =முனிவர்களுக்கு. அருள் புரிவோனே = அருள் செய்பவனே.


தினை புனம் தனிலே மயலால் ஒரு
மயில் பதம் தனிலே சரண் நான் என
திரு புயம் தரு மோகன மானினை அணைவோனே


தினைப்புனம் தனிலே = தினைப் புனத்தில்மயலால் = காம இச்சையால் ஒரு = ஒப்பற்றமயில் பதம் தனிலே = மயில் போன்ற வள்ளியின் பாதத்தில் சரண் நான் என = நான் அடைக்கலம் என்று நீ கூற திருப் புயம் தரும் = தனது அழகிய புயங்களைத் உனக்குத் தந்த மோகன மானினை =மயக்க வல்ல வள்ளியை அணைவோனே =அணைபவனே.


சிவ கொழும் சுடரே பரனாகிய
தவத்தில் வந்தருள் பால க்ருபாகர
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே.


சிவக் கொழும் சுடரே = சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே பரனாகிய தவத்தில் வந்து = தவம் செய்வோர் பொருட்டுப் பரனாகி வெளித் தோன்றி வந்து அருள் பால க்ருபாகர =அருளும் குழந்தைக் க்ருபாகர. திருக் குடந்தையில் வாழ் முருகா = கும்பகோணத்தில் வாழும் முருக.சுரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.


விளக்கக் குறிப்புகள்


சாழல் = மகளிர் விளையாட்டு. கேள்வியும், கேள்விக்கேற்ற பதிலும் சொல்லி
பாடக்கூடிய ஆட்டம்


ஒப்புக


மயலால் ஒரு மயில் பதத்தினில்....


பணியா என வள்ளி பாதம் பணியும தணியா
அதி மோக தயாபரனே... கந்தர் அனுபூதி .