Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    222.தரையினில்
    222
    கூந்தலூர்
    (பூந்தோட்டம், திருவீழிமலை அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ தொலைவில். சூரசம்காரத்திற்கு முன்பே மயில் வாகனாமாக இருந்தது இத்தலத்தில் அறியலாம்)


    தனதன தனதன தாந்த தானன
    தனதன தனதன தாந்த தானன
    தனதன தனதன தாந்த தானன தனதான


    தரையினில் வெகுவிழி சார்ந்த மூடனை
    வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
    சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகுகேள்வி
    தவநெறி தனைவிடு தாண்டு காலியை
    யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
    சமடனை வலியா சாங்க மாகிய தமியேனை
    விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
    மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
    விழிவலை மகரொ டாங்கு கூடிய வினையேனை
    வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
    மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
    விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ அருள்வாயே
    ஒருபது சிரமிசை போந்த ராவண
    னிருபது புயமுட னேந்து மேதியு
    மொருகணை தனிலற வாங்கு மாயவன் மருகோனே
    உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
    ரமரர்கள் முனிவர்க ளிந்த பாலகர்
    உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி லுறைவோனே
    குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
    களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
    குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழு முனிவோனே
    கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
    மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
    குருபர னெனவரு கூந்த லூருறை பெருமாளே



    222 - கூந்தலுர்

    பதம்பிரித்து உரை


    தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை
    வெறியனை நிறை பொறை வேண்டிடா மத
    சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி


    தரையினில் = நில உலகில் வெகு வழி சார்ந்த மூடனை = எதனினும் உறுதி இன்றி பல வழியில்சென்று அறிவு பழுதானவனும், வெறியனை = (ஜாதி, மொழி, சமய அருமைகளை அறியாமல் அறிந்தவன் போல் தீரா) வெறி பிடித்துத் திரிபவனும்,நிறை பொறை வேண்டிடா மத சடலனை = நிறை உடைமை, பொறுமை உடைமைகளை விரும்பாமல்மதம் கொண்ட தேக மதர்பினனும், மகிமைகள் தாழ்ந்த வீணனை = வாக்கு சக்தி, மனோ சக்தி,ஆத்ம சக்தி முதலிய வித்தக மகிமைகள் ஆசாபாசங்களால் விரயமான வீணனும், மிகு கேள்வி =தலை சிறந்த


    தவ நெறிதனை விடு தாண்டு காலியை
    அவமதி அதனில் பொ(ல்)லாங்கு தீமை செய்
    சமடனை வலிய அசாங்கம் ஆகிய தமியேனை


    தவ நெறிதனை விடு தாண்டு காலியை = கேள்விஞானம், அதன் வழி மேற்கொள்ளும் பலசாதனைகள், முதலியவைகளை அடியோடுகைவிட்டு, தகா தவைகளை அனுபவிக்க தாண்டுகால் போட்டு நடந்நவனும் அவமதி அதனில் பொ(ல்)லாங்கு தீமை செய் சமடனை = அற்ப அறிவால் பொல்லா தீச்செயல்களை புரிகின்ற மடமை யானவனும் (சமடன் = அறிவிலிகளின் தலைவன்) வலிய அசாங்கம் ஆகிய தமியேனை =அரிய வல்லாண்மை கூட்டுறவிற்கு அயலாகி அதன் பயனாக அகதியானவனும், (அசாங்கம்=சத் சங்க சார்பு இல்லாமை)


    விரை செறி குழலியர் வீம்பு நாரியர்
    மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர்
    விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை


    விரை செறி குழலியர் = கூர்த்த மண நிறை கூந்தலினர், வீம்பு நாரியர் = அன்புளர் போல் நடிக்கும் அநாகரீகர் ( நாரம் = அன்பு, வீம்பு =அன்புளர் போல் நடிக்கும் போலி கௌரவ போக்கு)மதி முக வனிதையர் = நிறை மதி போன்றமுகமுடைய இயற்கை வனப்பினர், மோக தாகம்மூழ்விப்பவர் ஆகிய விழி வலை மகளிரொடுவாஞ்சை மோகியர் = கண்வலை வீசும்காரிகையுரடன் = ஆங்கு கூடிய வினையேனை = கலக்கும் கர்மியான அடியேனை (ஆங்கு = அந்த இடம்)


    வெகு மலர் அது கொ(ண்)டு வேண்டி ஆகிலும்
    ஒரு மலர் இலை கொ(ண்)டும் ஓர்ந்து யான் உனை
    விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே


    வெகு மலர் அது கொ(ண்)டு வேண்டி ஆகிலும் =அளவிறந்த மலர்களால் உன்னை அர்ச்சிக்கும் காமிய வழிபாட்டு வேண்டுதல் மூலமாகவாவது (=நினைத்தது நிறைவேற அருள்க என பிரார்த்தித்தல்) ஒரு மலர் இலை கொ(ண்)டும் ஓர்ந்து = ஒரு மலரோ அல்லது ஒரு பச்சிலையோ எடுத்து நிஷ்காமியமாக நினைத்து (ஓர்தல் = உணர்ந்து ஒன்றுதல்) யான் உனை விதம் உறு பரிவொடு = நான் தேவரீரை பலவிதமாக அன்பின் செயலுடன், வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே=திருவடிகளில் வீழ்ந்து வணங்குமாறு சிறந்த அருளைச் செய்தருள்




    ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன்
    இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும்
    ஒரு கணை தனில் அற வாங்கு மாயவன் மருகோனே


    ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் = ஒப்பற்றபத்து தலைகளுடன் வந்த இராவணனது இருபதுபுயமுடன் ஏந்தும் ஏதியும் = இருபது தோள்களுடன் சந்திரகாசம் எனும் ஏந்திய வாளும் ஒரு கணை தனில் அற வாங்கு மாயவன் மருகோனே = அம்பு ஒன்றால் அழியுமாறு கோதண்டத்தை வளைத்த (மாயவன் அம்சமான) ராமன் மருமகனே,


    உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின்
    அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர்
    உயர் கதி பெற அருள் ஓங்கு மா மயில் உறைவோனே


    உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் = அன்போடுஎண்ணும் உன்னுடைய அடியவர்களும் திருவருட் புகழ் மிகுதியை அலசி அனுபவிக்கும் நூல் ஆய்வினரும், அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் = அமுதம் அருந்தும் இமையோர்களும்,அருந்தவ தியான ஆன்றோர்களும், வளம் உதவிகாக்கும் வள்ளல்களும் (பாலகர் = பரிபாகனர்,காப்பாளர் ) உயர் கதி பெற அருள் ஓங்கு மா மயில் உறைவோனே = பர முக்தி பயன் அடைய பரமஅருளை பெரிது பாலிக்கும் சிறந்த மயிலைச் செலுத்துபவனே,


    குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு
    களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள்
    குல(ம்) முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே


    குரை கழல் = விமல நாதம் எழுப்பும் திருவடிகளைபணிவொடு கூம்பிடார் = வினயம் கொண்டு கும்பிடாதவர்களும், பொரு களம்= யுத்த தர்மம் புறம் காட்டுமாறு மிசை அறம் அது தீர்ந்த = போர் களத்தில் அளவிலா அக்கிரமங்கள் செய்த சூரர்கள் குல(ம்) முழுது அனைவரும் = சூரபத்மன் முதலிய அவுணர் குல அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே = பொசுங்கி புழுதி பொறி பறக்குமாறு முன்னேறிச் சினந்த முதல்வனே ( தூள் = புழுதி),


    கொடு விடம் அது தனை வாங்கியே திரு
    மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர்
    குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே


    கொடு விடம் = கனன்ற ஆலகால விடத்தை அது தனை வாங்கியே = கரத்தில் எடுத்து, திரு மிடறினில்= அழகிய கழுத்தில் இரு என ஏந்தும் ஈசுரர் = அமர்ந்து இரு என்று அதை அங்கேயே தங்கவைத்துள அளவிலா செல்வரான இறைவரது(ஈசுரர் = சர்வ ஐஸ்வர்ய செல்வர்) குரு பர என =குரு முதல்வர் எனுமாறு வரு கூந்தலூர் உறை பெருமாளே = கூந்தலூரில் வந்து என்றும்எழுந்தருளி இருக்கும் பெருமிதம் பெற்றுள பெருமாளே







    விரிவுரை குகஸ்ரீ ரசபதி


    பத்து தலைகட்கு தக்க பருமை அறிவு, அதிகரித்த இருபது தோள்களுக்கு உரிய ஆற்றல், சகல உலகையும் அழிக்கும் சந்திரகாச வாள் முதலியவைகளால் இருமாந்து இடரே விளைவித்த ராவணனை
    சத்திய சாரமான கோலால் ( அம்பால்)திருமால் கொன்று தொலைத்தார்.
    அதன் பின் அரக்க அறிவால் விளையும் அவதி அழிந்தது. உய்ந்தது
    உலகம். அது செய்த மாயவன் தன் மருகோன் நீர்.


    வாழ்விக்கும் திருவடிகளை வழிபடலாம். தீராத் தீவினைகள் இதனால் தீரும். சிறந்த இச்செயலைச் செய்யாமல், 1008அண்டங்களிலும் அசுரர்கள் அராஜகம் இயற்றினர். ஆணவ ஆட்சி,மாயை மாட்சி, கன்மக் காட்சியுடன் அரிஜாதி தோசங்களை படபடத்து எங்கும் பரப்பினர். இது முறையல்ல என்று அறிவித்தீர். அது பொறாத அவர்கள் அதர்ம யுத்தத்தை ஆரம்பித்தனர். அதை உணர்ந்து அவுணர் குல முழுதும் அனைவரும் மாய்ந்து தூளெழ வேலால் வென்ற வீரர் நீர். மாமானாருக்கு கோல், உமக்கு வேல்.


    அகில உலகையும் அழிக்க ஆலகாலம் எழுந்தது. அதைச் சிவனார்
    எடுத்தார். இங்கேயே நீ இரு என்றார். அவ்வளவில் அதன் வெம்மை
    அடங்கியது. அதன் பின் சீரார் தென்திசை நோக்கி அமர்ந்தார் சிவபிரான். சிஷ்ய பாவம் காட்ட அவர் உமது சீடர் ஆயினர். அவரது மற்றொரு ரூபமான நீர் அவருக்கு குருபரராகினீர்.
    உபதேசச் செதி ஒரு அருள் ஆடல் என உணரப் பெறும். தன் பின்
    அங்கிருந்து கூந்தலூர் தலத்திற்கு வந்தீர். என்றும் கோயில் கொண்டு
    இருந்தீர். விமலா, அடியேன் விண்ணப்பம் கேட்டருளும்.


    ஜாதி நெறி, மொழி வழி, சமய மார்க்கம் பல. எந்த வழிதில்சென்றாலும்
    நேர்மை நிறைவு நிலைத்திருந்தால் வாய்மை அமைதிவரும். அவைகள்
    பெருகிய இயற்கை தந்த பிரசாதங்கள்.அவைகளின் அருமையை அறியாமல் வம்பு நெறி, பகட்டு நெறி, பொய்மை நெறி முதலிய புன்மை வழிகளில் புகுந்து முன்பின் அறியா மூடன் ஆயினன். தரையினில் வெகுவழி சார்ந்த மூடன் ( மூடு = தகுதி, அறிவில் இருள் அகன்றவன் என்பது பொருள்) பன் மார்க்கமான பல அடி பெற்றேனும் ஒரு சன்மார்க்கம் கண்டுஉறங்கும் நாள் எந்நாளோ?என்ற தாயுமானார் வழியல்லா வழி செல்வார் தம் தீரா வேதனையைத்தெரிவிக்கிறார். (வெறி வென்றவறோடுறும் வேலவனே), அடியேன் ஜாதி வெறி, சமய வெறி, மொழி வெறி,கலகவெறி, காமவெறி முதலிய எத்தனையோ வெறிமயமாக வெம்புகின்றவன். இவைகளால் இன்ப நெறி தோன்றாமல் துன்பச் சேற்றில் துவழுகின்றேன். ( வெறி = மயக்கின் முதிர்வில் பிறக்கும் அசுர ஆவேசம் )


    எதனிலும் எவரிலும் நிறைவு காணலாம். புன்னறிவால் குறைவே
    காணுகின்றேன். அதனால் பொறுமை ஓடிப் போய் விடுகின்றது.
    மதமதப்பான உடலும் ஏதாயினும் ஒரு அக்கப் போரை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. அதானால் தான் என்னைநிறை பொறை வேண்டிடா மத சடலன் என்கிறேன். திருப்பொறையூர் தலத்தில் அத்தா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியை என்று நம்பி ஆரூர் விண்ணப்பித்தார். அது போல் தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே என்று முன்னம் ஒரு தரம் வேண்டியுளன்.


    தவநெறியில் சிவம். பிற நெறியில் பவம். பவநெறியில் சவம். சீ சீ
    என்ன வாழ்க்கை இது ?. மனனம் செய்யத் தக்க இவைகளை மறந்து
    தவளை போல் எதனில் எதனிலேயோ தாவி தளரும் அடியேன்தாண்டு
    காலி எனும் தகுதியற்ற பெயரை தழுவி உளன். அவமதிகாரணமாக,
    பொல்லாத தீமைகளையே புரிபவனாயினன். ஆம், நான் ஒரு சமடன். குறிப்பு மொழி இது. மட சாம்பிராணி இன்றைய வழக்கிலும் இருக்கிறது.


    அறிவு கொளுத்தி ஆள்வார் இல்லை. அதனால் இன்றுவரை அகதியாக
    இருக்கிறேன். என்றும் தமியேன் என்றேன். ( தமியன் = ஏழை
    ஆதரவற்றவன்) இதனால் குழலியர், காரியர், மதி முக வனிதையர்,
    மோகியர் விழி வலை மகளிரை விருபிய பாவியாய் இன்பம் எனும் துன்பம் கொண்டு துவழ்கின்றேன்.என்ன கன்றாவியான வாழ்வு இது.
    பொழுது வீணே போகிறதே.


    ஏராளமான மலர்களைப் பறிக்கலாம். அர்ச்சித்து அது தா இது தா அரசே என்று காமிய வழி பாட்டில் களிக்கலாம். அல்லது ஒரே மலர்,ஒரே பத்திரம் தேர்ந்து எடுத்து, முதன்மையான அன்பு முன் வந்து உதவ, எட்டுருப்பும் நிலமதில் தோய எதையும் வேண்டாமல் உமது திருவடிகளை இறைஞ்சலாம். புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு நீருண்டு, ஏதும் பெறாவிடில் பச்சிலை உண்டு, குடம் கை நீரும்,பச்சிலையும் இடுவார்க்கு இமையாக் குஞ்சரமும் தடங்கோள் பாயும்பூவணையும் தருவாய் மதுரை பரமேற்றி, என்றெல்லாம் ஆராதிக்கும் முறையும் பயனும் ஆன்றோர் பலர் அறிவித்துளர்.


    சிவமாக்கும் பண்பை அன்பு என்று அறிவம். அப்பண்பிலிருந்து
    வெளி வருவது பரிவு. வித விதமாக அப்பரிவு வெளிப்படும். திறமுறு
    பரிவோடு தாளில் விழுந்தால் ஜீவன் சிவமாவது திண்ணம். அந்த அனுபவம் விளைய மாயோன் மருகோனே, மயில் உறைவோனே,அவுணரை முனிவோனே, பெருமாளே, அருள்வாயே இன்று வீரிட்டு அழுது விண்ணப்பித்த படி.



    ஒப்புக


    1. ஒரு கணை தனில் அற வாங்கு மாயவன்....


    தனி யொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் களைவோனும்
    ...திருப்புகழ், கனகதம்பத்து


    2. கொடுவிட மதுதனை வாங்கியே திரு...


    கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை
    என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன். .. சம்பந்தர் தேவாரம்


    நஞ்சைக் கண்டத்து அடக்குமதவும் நன்மைப் பொருள் போலும்

    ...சம்பந்தர் தேவாரம்.
Working...
X