223.நீல முகிலான
223
கோடி நகர்(குழகர் கோயில்)
வேதாரண்யத்திற்கு அருகில் 14 கி.மீ தொலைவில்
கையில் அமிர்த கலசம் ஏந்தி அமிர்தகர சுப்ரமணியன் என அழைக்கப்படுகிறான்


தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தனதான


நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
நேயமதி லேதினமு முழலாமல்
நீடுபூவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
நீரிலுழல் மீனதென முயலாமற்
காலனது நாவரவ வாயிலிடு தேரையென
காயமரு வாவிவிழ அணுகாமுன்
காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு
கால்முருக வேளெனவு மருள்தாராய்
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
தோகைகுற மாதினுட னுறவாடிச்
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
சோதிகதிர் வேலுருவு மயில்வீரா
கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
கூடிவிளை யாடுமுமை தருசேயே
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
கோடிநகர் மேவிவளர் பெருமாளே
பதம் பிரித்து உரை


நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன
நேயம் அதிலே தினமும் உழலாமல்


நீல முகிலான = கரிய மேகம் போன்ற. குழலான =கூந்தலை உடைய மடவார்கள் = மாதர்களின் தனநேயம் அதிலே = கொங்கை மேலுள்ள ஆசையால்தினமும் உழலாமல் = நாள் தோறும் அலைச்சல் உறாமல்.


நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை
நீரில் உழல் மீன் அது என முயலாமல்


நீடு = பெரிய. புவி ஆசை = மண்ணாசை பொருள்ஆசை = பொருள்கள் மேலுள்ள ஆசை. மருளாகி =(இவற்றில்) மயக்கம் கொண்டு. அலை நீரில் = அலை மிகுந்த கடல் நீரில். உழல் = அலைச்சல் உறுகின்ற.மீன் அது என = மீனைப் போல உழலும் பொருட்டுமுயலாமல் = முயற்சி செய்யாமல்
காலனது நா அரவ வாயில் இடு தேரை என
காயம் மருவு ஆவி விழ அணுகா முன்


காலனது = யமனுடைய. நா = (என்னை) விரட்டும்பேச்சு என்கின்ற அரவ வாயில் இடு தேரை என =பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல காயம்மருவி = உடலில் பொருந்தியுள்ள.ஆவி விழ = உயிர்அவன் கையில் அகப்பட்டு விழும்படி. அணுகா முன்= அந்தக் காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக.


காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு
கால் முருக வேள் எனவும் அருள் தாராய்


காதலுடன் = அன்புடன். ஓதும் = உன்னை ஓதுகின்றஅடியார்களுடன் = அடியார் களுடன் நாடி = விரும்பிஒருகால் = ஒரு முறையாவது. முருக வேள் எனவும்= முருக வேள் என்று நான் புகழுமாறு அருள் தாராய்= திருவருளைத் தந்தருளுக.


சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி
தோகை குற மாதினுடன் உறவாடி


சோலை பரண் மீது = (வள்ளி மலைக் காட்டிலுள்ள)சோலை மரங்கள் உள்ள பரண் மீது. நிழலாக = நிழல்தர.தினை காவல் புரி = தினைப் புனத்தைக் காவல் செய்யும் தோகை குற மாதினுடன் = மயில் போல்சாயலை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன்உறவாடி = உறவு கொண்டாடி.


சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ
சோதி கதிர் வேல் உருவு(ம்) மயில் வீரா


சோரன் என = கள்வன் என்று நாடி வருவார்கள் =உன்னைத் தேடி வந்தவர்களான வன வேடர் விழ =காட்டு வேடர்கள் எல்லாம் மாண்டு விழ. சோதி கதிர்= மிக்க ஒளி வீசும். வேல் உருவும் மயில் வீரா =வேலைச் செலுத்திய மயில் வீரனே


கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு
கூடி விளையாடும் உமை தரு சேயே


கோல = அழகுள்ளதும் அழல் = (வினைகளைஅழிப்பதில்) நெருப்புப் போன்றதும் (ஆகிய) நீறுபுனை = திரு நீற்றை அணிந்துள்ள ஆதிசருவேசரோடு = மூலப் பொருளாகிய சிவ பெருமானோடு கூடி விளையாடும் = கூடிவிளையாடுகின்ற உமை தரு சேயே = உமா தேவியார் பெற்றெடுத்த குழந்தையே.
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர்
கோடி நகர் மேவி வளர் பெருமாளே.


கோடு முக ஆனை = தந்தத்தை முகத்தில் கொண்டஆனையாகிய கணபதிக்கு பிறகான துணைவா =பின்னர் தோன்றிய தம்பியே குழகர் கோடி நகர் =குழகர் என்னும் திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி என்னும் தலத்தில் மேவி வளர்பெருமாளே = விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.[link]சுருக்க உரை


கரிய கூந்தலைக் கொண்ட விலை மாதர்களின் கொங்கை மேலுள்ள ஆசையில் நான் தினமும் அலைச்சல் உறாமல், மண்ணாசை,பொன்னாசை ஆகிய மயக்கம் கொண்டு, கடல் நடுவே அலைச்சல் உறும் மீனைப் போல் உழலும் பொருட்டு முயற்சி செய்யாமல்,காலன் என்னை விரட்டும் போது, பாம்பின் வாய்த் தேரை போல் இந்த உயிர் உடலை விட்டு நீங்கும் போது, காலன் என்னை அணுகா முன், உன்னை அன்புடன் ஓதும் அடியார்களுடன் விரும்பி ஒரு முறையாவது முருக வேளே என்று புகழுமாறு உன் திருவருளைத் தந்து அருளுக.


வள்ளி மலைக் காட்டில் தினைக் காவல் புரிந்த மயில் போன்ற வள்ளியுடன் உறவாடி, கள்வன் என்று உன்னைத் தேடி வந்த வேடர்கள் அனைவரும் மாண்டு விழ வேலைச் செலுத்திய மயில் வீரா, வினைகளை அழிக்க வல்ல நெருப்புப் போன்ற திரு நீற்றை அணிந்துள்ள ஆதிப் பிரானாகிய சிவபெருமானோடு கூடி விளையாடும் உமா தேவியின் குழந்தையே, ஆனை முகக் கணபதிக்குத் தம்பியே. கோடி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே, முருக வேளே என்று ஒரு முறையாவது ஓத அருள் புரிவாயாக.[/lionk]


ஒப்புக


1. அரவ வாயிலிடு தேரை என....


செடி கொள் நோய் ஆக்கை அப் பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறு
பறவை... சம்பந்தர் தேவாரதம்.
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே
....திருநாவுக்கரசர் தேவாரம்


2. கோல அழல் நீறு....


திங்களை வைத்து அனல் ஆடலினார் திருநாரையூர் மேய
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே
...சம்பந்தர் தேவாரம்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends