224.ஆதி முதல் நாளில்
224
கோடைநகர்
வல்லக்கோட்டை என தற்சமயம் அழைக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புத்துரிலிருந்து 10 கி.மீ தூரம். 2 மீட்டர் உயரத்துடன் முருகனின் சரணாகதி காட்டும் கர அமைப்பு சிலை வேறுயெங்கும் காண முடியாதது


தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த தனதான

ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி மின்று விளையாடிப்
பூதல மெலாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் மருகோனே
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடை நகர் வாழ வந்த பெருமாளேபதம் பிரித்தல்

ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து
ஆக மலமாகி நின்று புவி மீதில்


ஆதி முதல் நாளில் = முதல் முதலிலேயே. என்தன் தாய் உடலிலே இருந்து = என்னுடைய தாயின் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று = உடல் அழுக்குடன் இருந்து. புவி மீதில் = (பிறகு) இந்தப் பூமியில்.


ஆசை உடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து
ஆள் அழகனாகி நின்று விளையாடி


ஆசையுடனே பிறந்து = (பிறக்கும் போதே) ஆசையுடன் பிறந்து நேசமுடனே வளர்ந்து =பெற்றோரால் அன்புடன் வளர்க்கப்பட்டு ஆள் அழகனாகி நின்று = அழகுடையவன் என்னும்படி விளங்கி விளையாடி = பல விளையாட்டுகளில் ஈடுபட்டு.


பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து
பூமி தனில் வேணும் என்று பொருள் தேடி


பூதம் எலாம் அலைந்து = பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து மாதருடனே கலந்து = பெண்களுடன் மருவிக் கலந்து பூமி தனில்= பூமியில் வேணும் என்று = வேண்டியிருக்கிறது என்று பொருள் தேடி = செல்வத்தைத் தேடி.


போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன்
பூ அடிகள் சேர அன்பு தருவாயே


போகம் அதில் = சுகங்களிலேயே அலைந்து =திரிதலுற்று. பாழ் நரகு எய்தாமல் = பாழான நரகத்தை நான் அடையாமல் உன் தன் = உனது பூஅடிகள் = மலர் போன்ற திருவடிகளை சேர அன்பு தருவாயே = அருள் புரிவாயாக.


சீதை கொடு போகும் அந்த ராவணனை மாள வென்று
தீரன் அரி நாரணன் தன் மருகோனே


சீதை கொடு போகு ராவணன் = சீதையைக் கொண்டு போன ராவணனை மாள வென்ற = அழியும்படிவெற்றி கொண்ட தீரன் அரி நாரணன் மருகோனே =ஆண்மை மிக்க அரி, நாராணனுடைய மருகனே.


தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று
தேட அரிதானவன் தன் முருகோனே


தேவர் முநிவர்கள் = தேவர்களும், முனிவர்களும்கொண்டல் = மேக நிறம் கொண்ட மால் அரி =திருமாலாகிய அரியும். பிர்மாவு நின்று தேட =பிரமனும் நின்று தேடியும் அரிதானவன் தன் முருகோனே = காணுதற்கு அரிதவனாக நின்ற சிவபெருமானின் குழந்தையே


கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற
கோமளி அநாதி தந்த குமரேசா


கோதை = பார்வதி மலை வாழ் = கயிலை மலையில்வாழ்கின்ற நாதர் = சிவ பெருமானின் இட பாகம்நின்ற = இடது பக்கத்தில் உறைகின்ற கோமளி =அழகி(யும்) அனாதி = தொடக்கம் இல்லாதவளும்ஆகிய உமை தந்த குமரேசா = ஈன்ற குமரேசனே.


கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட
கோடை நகர் வாழ வந்த பெருமாளே.


கூடி வரு சூரர்கள் தங்கள் = ஒன்று கூடி வந்த சூரர்களுடைய மார்பை இரு கூறு கண்ட = இரண்டு பிளவாகப் பிளந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே = கோடை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒப்புக:


கோதைமலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற....


ஏதம் இல பூமொடு கோதைதுணை ஆதிமுதல் வேத விகிர்தன்...
.....சம்பந்தர் தேவாரம்.


விளக்கக் குறிப்புகள்


கூடிவரு சூரர் தங்கள் மார்பை இருகூறு கண்ட...

சூரன் பதுமன் என்னும் இருவரே ஒரு வடிவமாகி சூரபத்மன் என ஆனார்கள். மாமரமாகிய சூரனது உடல் வேலால் தடியப்பட்டுப் பின்னரும் அவன் உடல் அழியாது ஒன்று கூடி மீண்டும் போருக்கு வந்தான். வேல் அவன் உடலை மறுமுறையும் கிழித்து இரு கூறாக்கியது. அவற்றுள் ஒன்று சேவலாகவும் மற்றொன்று மயிலாகவும் மாற முருகன் அருள் புரிந்தார்.

சூருரங் கிழித்துப் பின்னும் அங்கம் திருகூறாக்கி
எஃகம் வான் போயிற்றம்மா) -- - கந்த புராணம்
மெய்பகிர் இரண்டுகூறும் சேவலும் மயிலுமாகி --- கந்த புராணம்