Kasi yatra - Periyavaa
நா..... சொல்ற வழில போ!....


பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதி வந்தார்கள். நல்ல வஸதியானவர்கள்.


"கார்லயா வந்தேள்?....."


"ஆமா...... பெரியவா"


"ட்ரைவர் வெச்சிண்டு வந்தியா? நீயே ஒட்டிண்டு வந்தியா?...."

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
"நாந்தான் ஓட்டிண்டு வந்தேன் பெரியவா......"


"எந்த வழியா வந்தே?....."


"காவேரிப்பாக்கம் வழியா வந்தோம்...."


"நீ.....திரும்பி போறச்சே....நா.... சொல்ற வழில போ!...."


"ஸெரி..... பெரியவா..."


வழியை சொன்னார்.......


"அந்த வழில, அந்த க்ராமத்ல, ஒரு பெரிய ஶிவன் கோவில் வரும்... அந்த கோவில் வாஸல்ல, ஒரு வயஸான தாத்தாவும் பாட்டியும் ஒக்காந்துண்டிருப்பா!....நீ.... அவாளப் போயி பாரு! நா.... அனுப்பிச்சேன்னு சொல்லு! அதோட, முக்யமா.... அவா..... என்ன கேக்கறாளோ... அத... பண்ணிக் குடுப்பியா?...."


"காத்துண்டிருக்கோம் பெரியவா!......"


ப்ரஸாதம் குடுத்தனுப்பினார். அவர்களும் பெரியவா சொன்ன வழியில், அந்த க்ராமத்துக்கு சென்று ஶிவன் கோவிலையும் கண்டுபிடித்தார்கள்.


கோவில் வாஸலில் இருந்த ஒரு சின்ன பெட்டிக் கடையில், மிகவும் ஏழைகள் என்று பார்த்தாலே சொல்லக்கூடிய ஒரு வயஸான தம்பதி அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி வந்து நின்ற பெரிய காரிலிருந்து இறங்கிய தம்பதி, தங்களை நோக்கி வருவதைக் கண்டனர்.


"எங்களை.....பெரியவா அனுப்பினா......"


"என்னது? பெரியவாளா?......."


"பெரியவா!" என்ற தாரக நாமத்தை கேட்ட மாத்ரத்தில், வயஸால் சுருங்கிய கண்களிலிருந்து கண்ணீர் 'குபுக்' கென்று வெளியே ஓடிவந்தது......


"பெரியவா.... ஒங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணுமோ..... அத....என்னை பண்ணித் தர சொல்லிருக்கா...!


"ஆண்டவா!....எங்கியோ கெடக்கோம்...! ஆனாலும், எங்களோட தெய்வம் எங்களை பாத்துண்டே இருக்கே!..."


குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் அந்த பெரியவர்.


"தயங்காம சொல்லுங்கோ.! ஒங்களுக்கு என்ன வேணும்?.... பணம்-னா கூட, தயங்காம சொல்லுங்கோ!..."


"பணத்தை வெச்சிண்டு நாங்க என்ன பண்ணப் போறோம்? எங்களுக்கு இனிமே என்ன வேணும்? ஸாகறதுக்குள்ள, காஶிக்கு மட்டும் ஒரேயொரு தடவை போகணும்! அங்க.... கங்கை-ல ஸ்நானம் பண்ணணும், கண்குளிர அந்த விஶாலாக்ஷியையும், விஶ்வநாதரையும், அன்னபூரணியையும் தர்ஶனம் பண்ணணும்...... அவ்ளோதான்! எங்களால அங்கல்லாம் இந்த வயஸு காலத்ல, சல்லிக்காஸு இல்லாம, எப்டி போக முடியும்-னு பெரியவாகிட்ட பொலம்பிண்டே இருந்தோம்! ப்ரத்யக்ஷ தெய்வம்! "


"ரொம்ப ஸந்தோஷம்! கவலையேபடாதீங்கோ! நீங்க ரெண்டு பேரும், ஸௌகர்யமா காஶிக்கு போறதுக்கும், அங்க... ஆசை தீர கங்கைல குளிக்கறதுக்கும், ஸ்வாமியை தர்ஶனம் பண்றதுக்கும், நா......ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு, ஒங்க ரெண்டு பேரோட ஆசையை நெறவேத்தி வெக்கறேன்..! பெரியவா அந்த பாக்யத்தை எனக்கு தந்ததுக்கு, பெரியவாளுக்கும், ஒங்களுக்கும் நமஸ்காரம் பண்ணிக்கறேன்....."


பணக்கார பக்தருக்கு, அவர்களுக்கான காஶி யாத்ரை ஏற்பாடு பண்ணுவது என்பது, ஒரு பெரிய கார்யமாக இல்லை. காஶியில் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டு, தம்பதிகளையும் தகுந்த துணையோடு அனுப்பி வைத்தார்.


மோக்ஷபுரியான காஶியில்........


ஸூர்யோதயம் ஆகும் ஸமயம், சுழித்துக் கொண்டு ஓடும் பவித்ர கங்கையில் அந்த ஏழை, முதிய தம்பதிகள், ஸங்கல்ப ஸ்நானம், பஞ்ச கங்கா ஶ்ராத்தம், தீர்த்த ஶ்ராத்தம், விஶாலாக்ஷி ஸமேத விஶ்வநாதர், அன்னபூரணி தர்ஶனம், எல்லாவற்றையும், மிகுந்த மனநிறைவோடு, பெரியவாளை ஒவ்வொரு க்ஷணமும் ஸ்மரித்துக் கொண்டே, செய்து முடித்தார்கள். ஸௌகர்யமான ஜாகை, போஜனம், வண்டி எல்லாமே அழகாக ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது.


மறுநாள், கங்கையில் மூழ்கி ஸ்நானம் பண்ணும்போது, "கங்காதரனின் ஆக்ஞையால், என்னைத் தேடி வந்த உங்களை, இனி என்றென்றும் என்னுடைய மடியிலேயே தாங்கிக் கொள்வேன்" என்று சொல்லாமல் சொல்லி, அன்பாக அரவணைத்து, தன் மோக்ஷப்ரவாஹத்தில் கலந்து கொண்டுவிட்டாள் அன்னை கங்கா தேவி!


அவர்களுடைய ஶரீரம் கூட கிடைக்கவில்லை!


காஶியில் மரித்தால் மோக்ஷம்! பெரியவா இந்த ஏழைத் தம்பதிக்கு பண்ணிய ஸௌகர்யமான ஏற்பாடோ மோக்ஷ ஸாம்ராஜ்யம்! அதுவும்..... ஜோடியாக!


பெரியவா ஒவ்வொரு ஜீவனுக்கும் எங்கே, என்ன, எப்படி, முடிவு பண்ணியிருக்கிறார் என்பது அல்ப ஜீவன்களான நமக்கு என்ன தெரியும்?


பெரியவா ஸ்மரணை ஒன்றே நமக்கு காஶி, கங்கை, மோக்ஷம்!


பட்டு சாஸ்திரிகள்
சென்னை
20/9/2017.