பெரியவாளும் யோகியும்
அது 1980 -களின் துவக்கம் காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
"திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு ?"
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: "தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்."
"ம்ம் உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா" என்றார்.


"உத்தரவு பெரியவா" என்று நமஸ்காரம் செய்து விட்டு அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார்.


திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். "சரி புறப்படுவோம்" என்று ஆசீர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.


அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.
யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. 'ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்' என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.


'யப்பா நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது' என்று தீர்மானித்தார் உதவியாளர்.


அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.


உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.


"யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா" என்றார்.


உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. 'பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே ?' என்று குழம்பி நின்ற போது, யோகி எழுந்து விட்டார்.


இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.


பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?


விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?


மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர் தவித்துப் போனார்.


'அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகி ராம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள். இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மஹா பெரியவா ?'


உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி. "என்னப்பா.உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா ?" என்று மெள்ளக் கேட்டார்.

"ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே?" என்றார் படபடப்பாக உதவியாளர்.

"ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்" என்று யோகி சொல்ல. உதவியாளர் விழித்தார்.

பிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.

பெரியவா: "போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்."

யோகி: "ஆம்."

பெரியவா: "கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.

"யோகி: "ராம். ராம்

"பெரியவா: "ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறதுஎன்று பிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்."
யோகி: "இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது."


பெரியவா: "அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிற இடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்து கொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடி கொண்டிருக்கிற இடமே கோவிந்தபுரமே ராம நாம பூமியாக இருக்கிறது."

யோகி: "ராம். ராம்"
பெரியவா: "பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராம நாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாக இருந்து விடேன்."


யோகி: "இந்தப் பிச்சைக்காரனுக்குத் திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயே தங்கி விடுகிறேன்."


பெரியவா: "உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி."


யோகி: "ஆம். இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.


பெரியவா: "ஆஹா அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச் சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பிய வேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்படு."


இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம் சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய் மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரிய சம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பது உதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.