Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    229.மனமெ னும்பொருள்
    229
    சிவபுரம்
    (குடந்தைக்கு அருகில் உள்ளது)
    மயிலின் மீது கால் வைத்து நின்ற திருக்கோலத்தில் உற்சவ விக்ரகம்

    தனன தந்தன தானன தானன
    தனன தந்தன தானன தானன
    தனன தந்தன தானன தானன தனதான


    மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
    புனலு டன்புவி கூடிய தோருடல்
    வடிவு கொண்டதி லேபதி மூணெழு வகையாலே
    வருசு கந்துய ராசையி லேயுழல்
    மதியை வென்றுப ராபர ஞானநல்
    வழிபெ றும்படி நாயடி யேனைநி னருள்சேராய்
    செனனி சங்கரி ஆரணி நாரணி
    விமலி யெண்குண பூரணி காரணி
    சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா
    சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
    அசுரர் தங்கிளை யானது வேரற
    சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே
    கனக னங்கையி னாலறை தூணிடை
    மனித சிங்கம தாய்வரை பார்திசை
    கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் முனையாலே
    கதற வென்றுடல் கீணவ ராருயி
    ருதிர முஞ்சித றாதமு தாயுணு
    கமல வுந்திய னாகிய மால்திரு மருகோனே
    தினக ரன்சிலை வேளருள் மாதவர்
    சுரர்க ளிந்திர னாருர காதிபர்
    திசைமு கன்செழு மாமறை யோர்புக ழழகோனே
    திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
    அகமொ டம்பொனி னாலய நீடிய
    சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே.



    பதம் பிரித்து உரை



    மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல்
    புனல் உடன் புவி கூடியது ஓர் உடல்
    வடிவு கொண்டு அதிலே பதி மூணு ஏழு வகையாலே


    மனம் என்னும் பொருள் = மனம் என்னும் ஒரு பொருளுடன் வான் = ஆகாயம். அறை = எறிகின்ற கால் = காற்று கனல் = தீ புனலுடன் = நீர் இவைகளுடன் புவி கூடியது = மண் (ஆகிய ஐந்து பூதங்களும் கூடிய ஓர் உடல் = ஒரு உடம்பு (என்னும்) வடிவு = உருவத்தைக் கொண்டு அதிலே = அதனுள் பதி மூணு ஏழு வகையாலே = தொண்ணூற்று ஒன்று தத்துவக் கூட்டங்களின் கூறுபாடுகளாலே.


    வரு சுகம் துயர் ஆசையிலே உழல்
    மதியை வென்று பராபர(ம்) ஞான நல்
    வழி ஏறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய்


    வரு = ஏற்படும் சுக துயர் ஆசையிலே = இன்பம், துன்பம், ஆசை என்னும் இவற்றிலே உழல் = அலைச்சல் படுகின்ற மதியை = என் புத்தியை வென்று = நான் வென்று அடக்கி பராபர ஞான(ம்) = மேலானதான ஞானம் என்னும் நல் வழி = நன்னெறியை பெறும்படி = நான் அடையும்படி நாயடியேன் = நாய் அனைய அடியேனுக்கு நின் அருள் சேராய் = உன்னுடைய திருவருளைக் கூட்டு விப்பாயாக.


    செனனி சங்கரி ஆரணி நாரணி
    விமலி எண் குண பூரணி காரணி
    சிவை பரம்பரை ஆகிய பார்வதி அருள் பாலா


    செனனி = உலகங்களின் தோற்றத்துக்கு ஆதாரமானவள். {தையும் தழைக்க தோற்று விக்கும் அருளோடு தானே தோன்றியவள்} சங்கரி = சங்கரி{ தன் படைப்பில் வந்த ஆண்மை இழப்பைத் தவிர்ப்பவள்}. ஆரணி = வேத முதல்வி.{அருள் நெறி கற்பிக்கும் வேத தருவின் கிளைகளாக விளங்குபவள்} நாரணி = நாராயணி {நீர்மை நிறைந்தவள்} விமலி = குற்றமற்றவள் {இயல்பாகவே அழுக்கு இல்லாதவள்} எண் குண பூரணி = எண் குணங்கள் நிறைந்தவள் காரணி = எல்லாவற்றுக்கும் காரணமானவள் சிவை = சிவை {மங்கள வடிவினள்} பரம்பரை = பராபரை (எந்தக் கால் வழியிலும் தலைவியாய் இருப்பவள்} ஆகிய பார்வதி அருள் பாலா = ஆகிய பார்வதி தேவி அருளிய குழந்தையே.


    சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற
    அசுரர் தம் கிளை ஆனது வேர் அற
    சிவன் உகந்து அருள் கூர் தரு வேல் விடு முருகோனே


    சிறை புகும் சூரர் = சிறையில் அடைக்கப்பட்ட தேவர்களும் மாதவர் = பெரிய முனிவர்களும் மேல் பெற = மேலான சுக நிலையைப் பெற அசுரர் தம் கிளையானாது = அசுரர்களுடைய கூட்டம் எல்லாம் வேர் அற = வேரோடு அழிய
    சிவன் உகந்து = சிவபெருமான் மகிழ்ந்து அருள் கூர் வேல் விடு = அருளிய கூர்மை கொண்ட வேலைச் செலுத்திய முருகோனே = முருகனே.


    கனகன் அங்கையினால் அறை தூண் இடை
    மனித சிங்கம் அதாய் வரை பார் திசை
    கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே


    கனகன் = இரணியன் அங்கையினால் = தனது அங்கையால் (உள்ளங்கையால்)
    அறை = அறைந்த தூண் இடை = தூணிலிருந்து மனித சிங்கம் அதாய் = நரசிங்கமாய் வரை = மலை பார் = பூமி திசை = திசைகள் கடல் = கடல் (இவை யாவும்) கலங்கிடவே = கலக்கம் கொள்ளபொருதே= (அந்த இரணியனுடன்) போர் செய்து உகிர் முனையாலே = நகத்தின் நுனியாலே


    கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர்
    உதிரமும் சிதறாது அமுதாய் உண்ணும்
    கமல உந்தியன் ஆகிய மால் திரு மருகோனே


    கதற = (இரணியன்) கதறும்படி வென்று = அவனை வென்று உடல் கீண = அவன் உடலைப் பிளந்து அவன் ஆருயிர் = அவனுடைய அருமையான உயிரை உதிரமும் சிதறாது = இரத்தம் சிதறா வண்ணம் அமுது உண்ணும் = அமுதாக உண்ட கமல உந்தியன் ஆகிய = தாமரை போன்ற கொப்புழை உடையவனாகிய மால் = திருமாலின் திரு மருகோனே = அழகிய மருகனே.


    தினகரன் சிலை வேள் அருள் மாதவர்
    சுரர்கள் இந்திரனார் உரக அதிபர்
    திசை முகன் செழு மா மறையோர் புகழ் அழகோனே


    தினகரன் = சூரியன் சிலை = (கரும்பு) வில்லைக் கொண்ட வேள் = மனமதன் அருள் மாதவர் = அருள் நிறைந்த முனிவர்கள் சுரர் = தேவர்கள் இந்திரனார்= இந்திரர்கள் உரக அதிபர் = நாக லோகத்துத் தலைவர்கள் திசை முகன் = பிரமன் செழு மா மறையோர் = சிறப்பு மிக்க வேதம் ஓதுவோர் புகழ் அழகோனே = (இவர்கள் யாவரும்) புகழும் அழகனே.


    திரு மடந்தையர் நால் இருவோர் நிறை
    அகமொடு அம் பொனின் ஆலய நீடிய
    சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே.


    திரு மடந்தையர் நால் இருவர் = அஷ்ட(எட்டு) இலக்குமிகள் நிறை = நிறைந்த அகமொடு = வீடுகளுடன் அம் பொன்னில் ஆலய = அழகிய பொன்னாலாகிய கோயில் நீடிய = சிறப்புற்று விளங்கும் சிவ புரந்தனில் வாழ் = சிவபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்ற குரு நாயக = குரு மூர்த்தியே பெருமாளே = பெருமாளே.



    சுருக்க உரை

    விரிவுரை குகஸ்ரீ ரசபதி



    சக்தி பாலன்
    சுத்த சைதன்யம் நாதாந்த ரூபம். அது வேதாந்த மோனம். அதன் இயற்கையான அருள்தனியே ஒரு திருமேனி தாங்கியது. தன்னிலிருந்து உலகங்களைத் தந்தது. பேறான அவ்வுருவிற்கு ஜனனி என்று பெயர்.


    இறப்பில் பிறப்பில் உயிர்கள், வீணான துன்பம் எய்தி வேசாரிப் போவன (களைப்படைந்தன). அவைகளின் அயர்வை அகற்ற தூய உயிர்களுள் தொடர்பு கொள்வாளை சங்கரி என்கிறார் ( சங்கரி - இளைப்பை அற்றுபவள் ) (பல்லுயிர் தொகுதியும் பயன்
    கொண்டு உய்யென குடிலை என்னும் தடவயல் நாப்பண் அரள் வித்திட்டு கருணை நீர் பாய்ச்சி தேகம் என்னும் விருட்சம் எழுந்தது.)


    அரும்பும் பூவுமாகி பிஞ்சோடு காய்கனி நிறைந்த அதன் கிளைகளாகி ஆன்ம கிளர்ச்சி செய்வாளை ஆரணி என்றார் ( ஆரணம் - வேத சாக்கை).


    நடுக்கும் பிறவித் தாபம் தீர்க்க நாரணி ஆயினள். ( நாரணம் - ஜலார்ணவம், நாரம் - நீர். இது நாராயணன் என்பதின் பெண் பால் ) புகழ் , குணம் , உருவம் , ஒளி முதலியவைகளால் நாராயணனைப் போன்றவள் என்றபடி.
    (ஒப்புக: வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
    நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்.
    அணம் = வழி/ இடம். நாரணம் = நாரம் (நீர்) + அணம் (வழி) நீராக உள்ள இறைவன்… எதில் பிடிக்கிறோமோ, அந்த உருவத்தைக் கொள்ளும் நீர்… அதே போல் இறைவன்! அந்த இறைவனை அடையும் வழி = நாரணம்!


    இயற்கை செயற்கை இருவகை அழுக்கும் இல்லாதவள். ஆதலின் விமலி என்றார்.


    தன் வயம் , தூய மேனி, இயற்கை உணர்வு, முற்றும் ஓர்தல், இயல்பாகவே பாசம் இல்லாமை, பேரருள், பேராற்றல், அளவிலா பேரின்பம் எனும் எட்டு பண்புகள் நீக்கம் இன்றி நிறைந்தவள் ஆதலின் எண்குண பூரணி என்றார்.


    எவர் செயலும் எவற்றின் இயக்கமும் சக்தி இன்றி நிகழ்வது இல்லை ஆதலின் காரணி என்றார்.


    சிவனார் தேவியை சிவை என்றார். செம்மை தேவி என்பது பொருள். அனந்த கல்யாண குணங்களை உடையவள் எனலுமாம்.


    எக்குணமும் எந்த இனமும் அவர் கால் வழியாகி வருதலின் பரம்பரை என்றார்.


    பர்வத மன்னன் புதல்வி பார்வதி எனப்படுவள். பர்வதங்கட்கு அதிவேதை எனலுமாம். குமரன் சக்திதரன் என்ற குறிப்பை நவசக்தி மயமான பார்வதி அருள் பாலா என்பதில் பெற வைத்தார். ஆகிய என்ற உருவை, ஜனனி ஆகிய, சங்கரி ஆகிய என ஒவ்வொரு பெயருடன் கூட்டி நோக்குவார் உள்ளம் குதுகலிக்கும். எண்குணமாகிய என்று இயைத்து தச நாம இறைவி தந்த தனயா எனவும் , பார்வதியையும் சேர்த்து ஏகாதச நாம எம்பிராட்டி அருளிய குழந்தை என கொள்வதற்கும் இடமுண்டு.


    ஞான சக்திதரன்
    புண்ணியம் செய்தனர், பொன்னுலகம் எய்தினர், உயர்ந்த அமுதம் உண்டனர். அதனால் சுரர் எனும் பெயர் பெற்று மகிழ்ந்தனர். ( சுரை - அமுதம் ). பாவம் இடையே படபடத்தது. புனித தேவர்கள் அவுணர் இட்ட சிறையில் புகுந்தனர். சன்மார்க்கம் விரும்பி சாதகராவர் மாதவர்.அசுர ஆட்சி பாழும் தடைகள் பல விளைவித்தன. அதனால் இன்ப தவசிகள் கீழ் நிலை எய்தினர். அசுர அரசு கால் சாய்ந்தால், விடுதலை பெற்று சுரர் மேலுலகு எய்துவர். மாதவர் சாதனை மேல் நிலை எய்தும். இதற்கென்றே சிவபிரான், நாயகமாவது ஒரு தனிச் சுடர் வேல் நல்கியே மதகைக் கை கொடுத்தான் என்று கந்த புராணம் கூறுகிறது.


    ரட்சக சக்தியின் மருகன்


    திதியை காசிபர் தேவியாகக் கொண்டார். அகால உறவால் அசுரர்கள் பிறந்தனர். பிறந்தவருள் இரணியன் பெரியவன். வலிமை மிக்கவன். வல்லான் வகுத்ததே வாய்க்கால். அது அவன்
    சிந்தனையில் எழுந்த செய்தி.


    புனித ஈசன் உளன் என்பது பொய். அது கோழைகள் ஏழைகள் கொள்கை.கடவுள் செய்தி கற்பனைக் காதை. இந்த நினைவு கொண்டு எழுந்தான். நானே கடவுள் என்று நடமாடினான்
    அப்பப்பா எவ்வளவு பெரிய நாஸ்திகம்.


    உலக மாதருடன் பாதாளத்தில் உணவுண்டான். கடும் பகல் பொழுதை கற்பக நாட்டில் கழித்தான். இரவில் பிரம்ம லோகத்தில் இருந்தான். சந்திர மண்டலத்தும் சூரிய மண்டலத்தும் செறுக்கும் அவன் ஆணை சென்றது. அவன் வலி, அவன் போகம், அவன்
    அதிகாரம் என்றும் உலகில் எவர்க்கும் இல்லை. அது மட்டுமா, சிவன் என்பார் தலையைச் சீவினான். ஹரி ஹரி என்பார் கழுத்தை அறுத்தான். அஞ்சினர் அமரர், நடுங்கினர் முனிவர். எவர் வாயும் ஓம் இரண்யாய நம என்னும்ஒலியையே எழுப்பியது. பள்ளியில் மாணவர் இரணிய விலாசமே படித்தனர். இரணய கதாகாலட்சேமம் எங்கும் எழுந்தது. வேத அத்யேனத்தை அந்தணர் விட்டனர். ஓயாது இரணிய மகாத்யமே ஓதலாயினர்.அவ்வளவு பரிதாபம் அங்லு இருந்தது. எதனால் இந்த அச்சம் ?.


    ஆணாலும் பெண்ணாலும் அலியாலும் அழியான். எந்தப் பிராணியாலும் அந்த ஆயுதத்தாலும் ஒழியான். சாபம் எவர் தந்தாலும் சாகான். விண்ணிலும் மண்ணிலும் இரவிலும் பகலிலும் இல்லை மரணம் என்று இறுமாந்தான். இதனால் தான் எவரும் அஞ்சினர். அந்த நாஸ்திக ஆட்சி நாடெங்கும் நடந்தது.


    பிள்ளைகள் நால்வர் அவனுக்குப் பிறந்தனர். இறுதி மகன் பிரகலாதன். பள்ளியில் அவன் படிக்க வந்தான். மாணவரும் ஆசிரியரும் இரணியாய நம என்றனர். இவன் ஓம் நாராயணாய நம என்றான்.ஆசிரியர் அஞ்சினர். எவ்வளவு சொல்லியும் தன் நிலையில் மைந்தன் தளர்ந்திலன். ஆசிரியர் குலை நடுங்கினர். இரணியனிடம் கூறினார்.


    தந்தை மைந்தனை அழைத்தான். இனி அப்படிச் சொல்லாதே. அயலவர் கூறி இருந்தால் அவர் நாக்கை அறுத்திருப்பேன். ஆம் கொடியன் அவன். உன் சிறிய தந்தையை கொன்றவன். என்னையும் பல தடவை எதிர்த்தான். தாக்கிய அதிர்ச்சி தாங்காமல் ஓடி கடலில் ஒழிந்தான். ஓயாது உறங்குவான்.அத் தூங்கு மூஞ்சியின் ஒடுங்கும் பெயரையா ஓதுவது. இப்படி எவ்வளவோ சொன்னான்.இணங்காது சிரித்த மைந்தனைச் சீறினன். இம்சைகள் பல செய்தான். பக்தி விசுவாசமும் சத்திய ஞானமும் பாலனைக் காத்தன. எங்கேடா திருமால்?. சாணில் அணுவில் நூறு பக்கில் ஒன்றான கோணில், மேரு குன்றில், இதோ எதிர் நிற்கும் தூணில் எங்குமுளன் எம்பெருமான். அப்படியா உம்பர்க்கும்


    உனக்கும் சகாயனை இக்கம்பத்தில் காட்டு பார்ப்போம் என்று இரணியன் கர்ஜித்தான். அஹ ஹஹ ஹா, பெரு நகை தூணிலிருந்து பிறந்தது. யாரடா சிரித்தவன்? ஹரி தானா, நீருள் பதுங்கினை. நிலத்திலும் வந்தாயா. என் பொன் மாளிகை உள்ளும் புகுந்தாயா. ஓடி வந்து தூணிலும் ஒளிந்தாயா. போர் புரியும் திறம் இருந்தால் வெளியே புறப்படடா என்று ஆத்திரம் கொண்டு தூணை அறைந்தான். பிளந்தது தூண். பிறந்தது சிங்கம். எட்டு திக்கிலும் அது அளவளாவி எழுந்தது. எவ்வளவு பயங்கரமான ரூபம்!


    பிரளயகால தீ போன்ற பிடரி மயிர். யுக இறுதியில் வரும் வாயு போல மூச்சுக் காற்று. எதிர்த்த அவுணர்களை அழித்தது உக்ர நரசிம்மம்.கோர தாண்டவம் செய்து கொக்கரித்தது. இப்போதாவது
    வணங்கி வாழலாம் என்றான் பிரகலாதன். இதன் தாள்களையும் தோளஙகளையும் தள்ளுவேன். வாளை அதன் பின் வணங்குவேனடா என்று எழுந்து கொதித்து எதிர்த்தான். மனித உருவும் விலங்குமான நரசிங்கத்தின் கணக்கில்லாத கைகள் அவனைக் கட்டிப் பிடித்தன.


    விண்ணும் மண்ணும் இல்லாத தொடை மேல் வைத்து ஆயுதம் அல்லாத கை நகங்களால் அவனைப் பிளந்து உதரத்தோடு அவன் உயிரையும் பருகி நானிலத்திற்கு விடுதலைத் தந்தது நரசிம்மம்.


    அறத்திற்கு மாறாக எழும் அசுர வாழ்வு இக்கதியைத்தான் அடையும் என்று சங்க நாதம் செய்தது தர்ம தேவதை. இவ்வரலாறு எத்தனையோ நுட்பங்களைக் தம் கருவில் கொண்டது.அவுணர் ஆட்சியை அழித்த முருகன், இரண்யாசுர நாஸ்திகத்தை அடர்த்த
    மாலுக்கு மருகன் என்பதை எண்ணும் போதெல்லாம் இதயம் நெகிழும்.


    வாசக சக்தி.


    பகலாட்சி பருதிக்கு உரியது. கனத்த இருளாட்சி காமனுக்கு உரியது. அருளாட்சி முனிவருக்கு உரியது. புண்ணிய ஆட்சியர் பொன்னாடர். போக ஆட்சியன் தேவேந்திரன். தாங்கும் ஆட்சியர் நாகாதிபர். படைக்கும் ஆட்சியர் பிரம்மன். வேத ஆட்சி வேதியர்க்கு உரியது. அவர்கள் அனைவரும் முருகனது திருமேனிப் பொலிவு திருவுள்ளத்து அழகு திருவருட் பெருமை எனும் சௌந்தர்ய ஆட்சிகளை புகழ்ந்து துதித்து புளகிதம் எய்துவர்.
    புகழ் அழகோனே என வரும் பகுதியிலுள்ள செய்திகளை எண்ணும் போதெல்லாம் உள்ளம் இன்புறும்.


    சிவபுர ஆட்சி


    செல்வத்திரு, தான்ய லக்ஷமி, தைர்ய மங்கை, வீர விளக்கு, வித்யா தேவி, புகழ் புனிதை, வென்றி மகள், அரச மாது எனும் அட்ட லக்ஷ்மிகள் இருந்து குலாவும் திரு மாளிகைகள் என்றும் சிவபுரத்தில் இருக்கின்றன. இனிய அப்பதியில் எழுந்தருளி இருப்பவனே, குருப்பெயர் தாங்கினர்க்கு வழிகாட்டும் நாயகனே, பெரும, அருளாட்சி செய்.
    தத்துவங்கள் 96. சிவ தத்துவங்கள் ஐந்தையும் விட்டால், எஞ்சிய தத்துவங்கள் 91. இவைகளால் மாறி மாறி உடல் கொண்டேன். ஆசை பிறப்பை அளித்தது. ஆசை வழியே அவதி அடைகிற அறிவை, அடக்கி ஆள இருந்த வழி இரண்டு. ஒன்று அரள் நூல்களின் தொடர்பால் தோன்றும் அறிவு நெறி. அடுத்தது அருள் நெறி. இந்த இரண்டும் சித்திக்க பார்வதி பாலன், முருகன், திருமருகன், அழகன், நாயகன், பெருமாள் எனும் ஆறு பெயராள்
    உமது அருளில் அடியேன் அழுந்திய உறவு கொண்டு அருள் என்று வினயம் கொண்டு விண்ணப்பித்த படி.





    ஓப்புக


    1. பதி மூணு ஏழு வகையாலே...




    அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
    அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம்
    ... திருப்புகழ், அதலவிதல


    2. எண் குண பூரணி....
    தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை.


    கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
    தாளை வணங்காத் தலை).......................................................... திருக்குறள் .


    3. சிவன் உகந்து அருள் கூர் வேல்விடு முருகோனே...


    எப் படைக்கும் நாயகமாவதொரு தனிச் சுடர் வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான்....................................................................... கந்த புராணம்


    4. கனக னங்கையி லாறை தூணிடை....


    கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த
    கோபவரி நார சிங்கன் மருகோனே....................... திருப்புகழ், நீலமயில்.




    5. அகமொ டம்பொனி னாலய...


    நகர் மதிள் கனம் மருவிய சிவபுரம்........................ . சம்பந்தர் தேவாரம்.


    விளக்க குறிப்புகள்
    தத்துவங்கள் 96. இவற்றுள் சிவ தத்துவம் ஐந்து நீங்க மற்ற 91 தத்துவக் கூட்டங்களால் ஆகிய உடல்.


    எட்டு இலக்குமிகள் --- தன லக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, வித்தியா லக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி விஜய லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி.
Working...
X