Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    231. சீதளவாரிஜ
    231
    சிறுவை
    சிறுவாபுரி – தற்சமயம் சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது
    வள்ளி மணவாளப்பெருமானை இங்கு தரிசிக்கலாம். வள்ளி மணவாட்டி முருகப்பெருமானின் கைத்தலம் பற்றும் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். திருமணத்தின் போது பெண்களுக்கே உரித்தாக இருக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு மேலோங்க சற்றே சாய்ந்து ஒய்யாரமாக நிற்கும் வள்ளியம்மையை காண இரு கண்கள் போதாது.


    தானன தானன தானா தனாதன
    தானன தானன தானா தனாதன
    தானன தானன தானா தனாதன தனதான
    சீதள வாரிஜ பாதா நமோநம
    நாரத கீதவி நோதா நமோநம
    சேவல மாமயில் ப்ரீதா நமோநம மறைதேடுஞ்
    சேகர மானப்ர தாபா நமோநம
    ஆகம சாரசொ ரூபா நமோநம
    தேவர்கள் சேனைம கீபா நமோநம கதிதோயப்
    பாதக நீவுகு டாரா நமோநம
    மாவசு ரேசக டோரா நமோநம
    பாரினி லேஜய வீரா நமோநம மலைமாது
    பார்வதி யாள்தரு பாலா நமோநம
    நாவல ஞானம னோலா நமோநம
    பாலகு மாரசு வாமீ நமோநம அருள்தாராய்
    போதக மாமுக னேரா னசோதர
    நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
    பூமக ளார்மரு கேசா மகோததி யிகல்சூரா
    போதக மாமறை ஞானா தயாகர
    தேனவிழ் நீபந றாவா ருமார்பக
    பூரண மாமதி போலா றுமாமுக முருகேசா
    மாதவர் தேவர்க ளோடே முராரியு
    மாமலர் மீதுறை வேதா வுமேபுகழ்
    மாநில மேழினு மேலா னநாயக வடிவேலா
    வானவ ரூரினும் வீறா கிவீறள
    காபுரி வாழ்வினு மேலா கவேதிரு
    வாழ்சிறு வாபுரி வாழ்வே சுராதிபர் பெருமாளே.



    பதம் பிரித்து உரை

    சீதள வாரிஜ பாதா நமோநம
    நாரத கீத விநோதா நமோநம
    சேவல் மா மயில் ப்ரீதா நமோநம மறை தேடும்
    சீதள = குளிர்ந்த வாரிஜ = தாமரை மலர் போன்ற பாதா = திருவடியை உடையவரே நமோநம = உன்னை வணங்குகிறேன் நாரத கீத = நாரதருடைய இசையில். விநோதா = மகிழ்ச்சி கொள்பவனே நமோநம =....... சேவல் = கோழிக் (கொடியை) உடையவனே மா = சிறந்த மயில் ப்ரீதா = மயிலின் மீது விருப்பம் உடையவனே நமோநம =.. ........ மறை தேடும் = வேதங்கள் தேடுகின்ற.
    சேகரமான ப்ரதாபா நமோநம
    ஆகம சார சொரூபா நமோநம
    தேவர்கள் சேனை மகீபா நமோநம கதி தோய
    சேகரமான = அழகான ப்ரதாபா = கீர்த்தியை உடையவனே நமோநம =........ .. ஆகம சார சொரூபா = ஆகமங்களின் சாரமே வடிவாகக் கொண்டவனே நமோநம=......... தேவர்கள் சேனை மகீபா = தேவர்களின் சேனைக்கு அரசனே. நமோநம =........ கதி தோய = (அடியார்கள்) நற் கதியை அடையும் பொருட்டு (அவர்களுடைய)
    பாதக நீவு குடாரா நமோநம
    மா அசுரேச கடோரா நமோநம
    பாரினிலே ஜய வீரா நமோநம மலை மாது
    பாதக = தீவினைகளை நீவு = பிளந்து அழிக்கின்ற குடாரா = கோடாலியே நமோநம =.......... .. மா = பெரிய அசுரேச கடோரா = அசுரத் தலைவர்கள் அஞ்சும்படியான கொடுமை காட்ட வல்லவனே நமோநம =.......... .. பாரினிலே = இவ்வுலகில் ஜய வீரா = வெற்றி வீரனாய் விளங்குபவனே நமோநம =.......... மலை மாது = இமய மலைப் பெண்ணாகிய
    பார்வதியாள் தரு பாலா நமோநம
    நாவல ஞான மனோலா நமோநம
    பால குமார சுவாமீ நமோநம அருள் தாராய்
    பார்வதியாள் = பார்வதி அம்மை தரு = பெற்ற பாலா = குழந்தையே நமோநம =... நா வ(ல்)ல = வாக்கு வன்மை உடையவரே ஞான மன உலா = ஞானிகள் மனத்தில் உலவுகின்றவனே நமோநம =............. பால குமார சுவாமி = பால குமார சுவாமியே நமோநம =............... .. அருள் தாராய் = உனது திருவருளைத் தந்து அருளுக.
    போதக மா முகன் நேரான சோதர
    நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர
    பூ மகளார் மருக ஈசா மகா உததி இகல் சூரா
    போதகம் மா முகன் = யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விநாயகருக்கு நேரான சோதர = இளைய சகோதரனே நீறு அணி = திரு நீறு அனிந்த வேணியர் = சடை தரித்த சிவ பெருமானுடைய நேயா = அன்புக்கு உரியவனே ப்ரபாகரா = (ஞான) சூரியனே பூ மகளார் = இலக்குமியின் மருக = மருகனே ஈசா = ஈசனே மகா உததி = பெரிய கடலை இகல் சூரா = பகைத்து (அது சுவற வேல் விட்ட) சூரனே.
    போதக மா மறை ஞான தயாகர
    தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக
    பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா
    போதக மா மறை = சிறந்த வேதங்களை உபதேசிக்க வல்லவனே ஞானா = ஞானனே தயாகர = கிருபைக்கு (இருப்பிடமானவனே) தேன் அவிழ் = தேன் சொட்டும் நீப = கடப்ப மாலையின் நறா = நறு மணம் ஆரும் மார்பக = வீசும் மார்பிடத்தை உடையவனே பூரண மா மதி போல் = அழகிய முழு நிலவைப் போல விளங்கும் ஆறு முக முருகேசா = ஆறு மா முகனே, முருகேசா.
    மாதவர் தேவர்களோடே முராரியும்
    மா மலர் மீது உறை வேதாவுமே புகழ்
    மா நிலம் ஏழினும் மேலான நாயக வடிவேலா
    மா தவர் = தவ முனிவோர்கள். தேவர்களோடே = தேவர்கள் முராரி = திருமால் மா மலர் மீது உறை வேதாவே = சிறந்த தாமரை மலர் மீது வீற்றிருக்கும் பிரமன் புகழ் நாயக = (இவர்கள் யாவரும்) புகழும் நாயகனே மா நிலம் ஏழினும் = பெரிய உலகங்கள் ஏழினும் மேலான = மேம்பட்ட தலைவனாக நாயக = (விளங்கும்) நாயகனே வடிவேலா = கூரிய வேலனே.
    வானவர் ஊரினும் வீறாகி வீறு
    அளகா புரி வாழ்வினும் மேலாகவே திரு
    வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே.
    வானவர் ஊரினும் = தேவர்கள் ஊரைக் காட்டிலும் வீறாகி = மேம்பட்டதாக வீறு = விளங்கி அளகா புரி = (குபேரனுடைய ஊராகிய) அளகாபுரியின் வாழ்வினும் மேலாகவே = மேம்பட்ட சிறப்பினதாக திரு வாழ் = இலக்குமி வாசம் செய்யும் சிறுவா புரி வாழ்வே = சிறுவாபுரி என்னும் தலத்தில் வாழும் செல்வமே சுராதிபர் பெருமாளே = தேவர்கள் தலைவர்களுக்குப் பெருமாளே.

    சுருக்க உரை



    ஒப்புக:
    1. நாரத கீத விநோதர்.....
    முருகவேள் இசைப் பிரியர்.
    திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
    செயித்தருளுமிசைப் பிரிய............திருப்புகழ், கருப்புவிலில்
    2. தேவர்களோடே முராரியு...
    திசைமுகன் முராரி மற்று மரிய பல தேவருற்ற
    ...திருப்புகழ்,முழுகிவடவா
    விளக்கக் குறிப்புகள்
    பாரினிலே ஜய வீரா நமோநம....
    இது சம்பந்தராய் சமணர்களை வென்ற வீரத்தைக் குறிக்கும்.
    நமோ நம....
    உன்னைத் திரும்பத் திரும்ப வணங்குகின்றேன்.
    நாதவிந்துகலாதி, வேத வித்தகா, போதகந்தரு, அரிமருகோனே, போத நிர்க்குண, ஓது முத்தமிழ் சரவண ஜாதா, அவகுண எனத் தொடங்கும் பாடல்களிலும் இவ்வாறு துதி செய்யப்பட்டுள்ன.
Working...
X