Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    241.ஏட்டின் விதிப்படி
    241
    திருக்கடவூர்
    தாத்த தனத்தன தானன தானன
    தாத்த தனத்தன தானன தானன
    தாத்த தனத்தன தானன தானன தனதான
    ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
    வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
    லேற்றி யடித்திட வேகட லோடம தெனவேகி
    ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
    ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
    மேற்றி யிருப்பிட மேயறி யாமலு முடல்பேணிப்
    பூட்டு சரப்பளி யேமத னாமென
    ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
    பூத்த மலக்குகை தோபொதி சோறென கழுகாகம்
    போற்றி நமக்கிரை யாமென வேகொள
    நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
    பூட்டு பணிப்பத மாமயி லாவருள் புரிவாயே
    வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
    னாட்டை விடுத்திட வேபல சூதினில்
    வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் வனமேபோய்
    வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
    பார்த்து முடித்திட வேயொரு பாரத
    மேற்பு னைவித்தம காவிர மாயவன் மருகோனே
    கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
    மூட்டி யெரித்தப ராபர சேகர
    கோத்த மணிக்கதி ரேநிக ராகிய வடிவேலா
    கூற்று மரித்திட வேயுதை பார்வதி
    யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
    கோட்டு முலைக்கதி பாகட வூருறை பெருமாளே





    பதம் பிரித்தல்

    ஏட்டின் விதிப்படியே கொ(ண்)டு மா புர
    வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில்
    ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது என ஆகி


    ஏட்டின் விதிப்படியே = பிரமனது சீட்டில் கண்டவிதியின்படி கொ(ண்)டு = (இந்த உயிரைக்) கொண்டு போய் மா புர வீட்டில் அடைத்து =நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து இசைவே =பொருந்தவே கசை மூணு = (அடிக்கும்) சவுக்குப்போன்ற, (சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும்) மூன்று நாடிகளை அதிலே ஏற்றி =அதில் பொருத்தி அடித்திடவே = அடித்துச் செலுத்த கடல் ஓடம் என = கடலில் படகு ஓடுவது போல ஏகி = போந்து (காலம் கழித்து)


    ஏற்கும் என பொருள் ஆசை பெ(ண்)ணாசை
    கொளா து என திரியா பரியா தவம்
    ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி


    ஏற்கும் = நல்லது என = என்று பொருள் ஆசை,பெ(ண்)ணாசை கொளா = பொன், பெண் ஆகியஆசைகளைக் கொண்டு து எனத் திரியா =து எனப் (பலர் இகழ) திரிந்தும் பரியா =வருந்தியும் தவம் ஏற்றி = தவம் சேர்ந்துள்ளஇருப்பிடமே அறியாமலும் = இடமேஇன்னதென்று தெரியாமலும் உடல் பேணி =(இந்த) உடலைப் பாதுகாத்து


    பூட்டு சரப்பளியே மதனாம் என
    ஆட்டி அசைத்து இயலே திரி நாளையில்
    பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம்


    பூட்டு = பூட்டப்பட்ட சரப்பள்ளியே = வயிரம்பதித்த கழுத்தணி விளங்க மதனாம் என =மன்மதன் இவன் என்னும்படி ஆட்டி அசைத்து =ஆட்டியும் அசைத்தும் இயலே திரி =ஒழுங்காகத் திரியும் நாளையில் = காலத்தில்பூத்த = நிரம்பின மல குகையோ = மலம் சேர்ந்த குகையோ பொதி சோறு என = பொதி சோறோ இது என்னும்படி கழு காகம் = கழுகும் காகமும்


    போற்றி நமக்கு இரையாம் எனவே கொள
    நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில்
    பூட்டு பணி பத மா மயிலா அருள் புரிவாயே


    போற்றி = விரும்பி நமக்கு இரையாம் எனவே =நமக்கு (இவ்வுடல்) உணவாகும் என்று கொள =கொள்ளும்படி நாட்டில் =பூமியில்ஓடுக்கெனவே=அடங்கியாயிற்று என்று விழு போதினில் = (இவ்வுடல்) விழுகின்ற இறந்துபோகும் அந்தச் சமயத்தில் பூட்டு = (காலில்)அழுத்திக் கட்டியுள்ள பணிப் பதம் = பாம்பின் காலில் கொண்ட மயிலா = அழகிய மயிலோனேஅருள் புரிவாயே = அருள் புரிவாயாக


    வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன்
    நாட்டை விடுத்திடவே பல சூதினில்
    வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய்


    வீட்டில் = (அரக்கு) மாளிகையில் அடைத்து =(பஞ்ச பாண்டவர்களை) இருக்கச் செய்துஎரியே இடு = நெருப்பை இட்ட பாதகன் =பாதகனாகிய துரியோதனன் நாட்டை விடுத்திட= நாட்டை விட்டுப் போகும்படி பல சூதினில் =பல சூதாட்டங்களில் வீழ்த்த = ஏற்பட்டவிதிப்படியே = விதிகளின் படி குரு காவலர் =குருகுலத்து அரசராம் பாண்டவர்கள் வனமே போய் = காட்டுக்குச் சென்று


    வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது
    பார்த்து முடித்திடவே ஒரு பாரத
    மேற் புனைவித்த மகா வீர மாயவன் மருகோனே
    வேற்றுமை உருவோடு இயல் = மாறு வேடம்பூண்டு அஞ்ஞான வாசம் செய்திருந்த நாளது பார்த்து முடித்திட = நாளின் முடிவைப் பார்த்துஒரு பாரதம் மேற் புனைவித்த = (அந்த நாள் முடிந்திடவே) ஒரு பாரதப் போரையே மேலேநடக்கும்படி செய்த மகா வீர மாயவன் மருகோனே = பெரிய வீரனாகிய திருமாலின் மருகனே


    கோட்டை அழித்த அசுரர் பதி கோ என
    மூட்டி எரித்த பராபர சேகர
    கோத்த மணி கதிரே நிகராகிய வடிவேலா


    கோட்டை = (சூரனது மகேந்திரபுரியின்) கோட்டைகளை அழித்து = அழித்து அசுரர் பதி =அசுரர்களின் தலைவனான சூரன் கோ என =கோ என்று கூச்சலிட மூட்டி எரித்த =(அவனுடைய நகரத்தை) நெருப்பு மூட்டிஎரித்த பராபர = பராபரம் பொருளே சேகர =அழகனே கோத்த மணிக் கதிரே = கோக்கப்பட்ட இரத்தின ஒளிக்கு நிகராகிய வடி வேலா =நிகரான கூரிய வேலனே


    கூற்று மரித்திடவே உதை பார்வதி
    யார்க்கும் இனித்த பெ(ண்)ணாகிய மான் மகள்
    கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே


    கூற்று = யமன் மரித்திடவே = இறந்து போகஉதை= உதைத்த பார்வதியார்க்கு = பார்வதிஅம்மையாருக்கு இனித்த = இனிமை தரும்பெ(ண்)ணாகிய = பெண்ணாகிய மான் மகள் =மானின் வயிற்றில் பிறந்த வள்ளியின் கோட்டு= மலை போன்ற முலைக்கு அதிப =கொங்கைக்குத் தலைவனே கடவூர் உறை பெருமாளே = கடவூரில் வீற்றிருக்கும் பெருமாளே



    சுருக்க உரை

    கசை மூணு - சுழுமுனை, இடைக்கலை, பிங்கலை என்னும் மூன்று நாடிகள்
    ஒப்புக
    1 ஏட்டின் விதிப்டி
    நமனோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள் சீட்டுவரக்
    காண்டுநலி காலனணுகா— திருப்புகழ், வாட்டியெனைச்சூழ்
    2 பூட்டு மணிப்பத மாமயில்
    நாக பந்தம யூரா நமோ நமோ ---திருப்புகழ், நாதவிந்துகலாதீ
    3 கூற்று மரித்திட
    சிவபத்தினி கூற்றினை மோதிய பதசத்தினி
    ---திருப்புகழ், சதுரத்தரை
    சீராரும் மார்க்கண்டன் செய்த பூஜனைக்காகச் சினந்து கூற்றைப்
    பாராரும் விண்ணவரும் பன்னகரும் காண இடப்பாதத்தாலே
    காராரும் கரத்தளவினுலகில் விழவுதைதத்தருளி
    வாராரு முலைமடந்தை யருபாகன் இருதாளை மனத்துள் வைப்போம்.
    - அபிராமி அந்தாதி


    அருணகிரியாரின் இந்த அழகிய திருப்புகழ் பாடலை ஒருமுறை என் சித்தியும், திருப்புகழின் பெருமையைப் பரப்பி வருபவருமான திருமதி ராதா முத்துசாமி சென்னையை அடுத்த பள்ளிக்கரணை எனும் ஊரில் ஒரு முருகபக்தர் வீட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது நிஜமாகவே ஒரு நாகப்பாம்பு வீட்டின் தாழ்வாரம் வரை வந்திருந்து நின்று தலையெடுத்து பாடல் முடிந்த பின்னர் மெதுவாக சென்றுவிட்டதையும் இன்றைக்கும் சொல்லுவார். சாட்சாத் முருகன் அவனே பாம்பு வடிவில் வந்து இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுப் போனான் என்பார்.

    -www.vamsadhara.blogspot.com



    திருக்கடையூரில் மார்க்கண்டேயன் இருந்த சமயம் அவன் வயது பதினாறு முடிந்தது. அவன் விதிப்படி ஆயுள் முடியும் நாள் நெருங்கிவிட்டது. எமன் தன் பணியை உரிய நேரத்தில் முடிக்கும்பொருட்டு சிவனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் மார்க்கண்டேயன் மீது தன் பாசக் கயிற்றை வீசினான். தாம் செய்த தவத்தாலும், ஈசனின் அருளாலும் எமனைக் கண்ணாரக் காண முடிந்த மார்க்கண்டேயன் அச்சத்தோடு தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தையே ஆரத் தழுவிக் கொண்டான். யமனும் பாசக்கயிற்றை அந்த லிங்கத்தையும் சேர்த்துக் கயிற்றை வேகமாய் இழுத்து, தன் பக்கம் கொண்டு வர யமன் முயற்சிக்கும்போது பளீரென ஓர் ஒளி வீசியது. இடி இடித்தாற்போன்ற ஓர் சப்தம். அதன் பின்னர் மழை பொழிவது போல் கருணை மழை பொழியத் தயாராக ஈசன் அந்த லிங்கத்தினின்று வெளிப்பட்டார். அவர் கையில் திரிசூலம். அந்த சூலாயுதத்தால் காலனைக் குத்திக் கொண்டே இடது காலால் அவனை உதைத்தும் தள்ளினார். மார்க்கண்டேயன் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு என்றும் பதினாறு வயதாகத் தன்னருகிலேயே இருக்கும்படி பணித்தார் ஈசன் எனபது ஸ்தல வரலாறு. பின்னர் உலக நன்மைக் கருதி யமனையும் உயிர்ப்பித்துத் தன் பணியைச் செவ்வனே செய்து வரும்படி அருளினார்.


    இது ஈசனின் எட்டு வீரச் செயல்களுள் காலனைக் காலால் உதைத்துக் கொன்ற செயல் நடந்த இடம் என்பதால் அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றாக உள்ளது. யமன் ஈசன் மேல் பாசக்கயிற்றை வீசியதால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளைக் கார்த்திகை சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரிச் சங்கை வைத்து 1008 சங்காபிஷேஹம் நடக்கும்போது மட்டுமே காணமுடியும் என்று சொல்கின்றனர். லிங்கத்திருமேனியின் உச்சியில் பிளவும், திருமேனியில் ஏற்பட்டிருக்கும் அடையாளத் தழும்புகளையும் அப்போது மட்டுமே காணலாம் என்கின்றனர். சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹாரமூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும், அங்கே லிங்கம் பிளந்து காலசம்ஹாரர் கையில் திரிசூலத்துடன் வெளிப்படும் காட்சியும் மிகத் தத்ரூபமாய் அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்நிதி எப்போதும் திறப்பதில்லை. திறந்து காட்டிவிட்டு தீப ஆராதனை காட்டி உடனே மூடிவிடுவார்கள். ஒரு நிமிஷ காலமே தரிசிக்க முடியும். இந்தக் காலசம்ஹார மூர்த்திக்கு வருஷத்தில் பதினொரு முறைகள் மட்டுமே அபிஷேஹம் செய்யப் படுகின்றது. அப்போது காணமுடியும் என்கின்றனர்.
Working...
X