247.ஆசாரவீன
247
திருநாகேச்சுரம்

தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன தனதான
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் பரதாரம்
ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள குருசேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப்பி றப்பினி லுழல்வாரே
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி
பேரார வாரச் சமுத்தி ரத்தினில்
மீளாம லோடித் துரத்தி யுட்குறு மொருமாவை
வேரோடு வீழத் தறித்த டுக்கிய
போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்
வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு வயலூரா
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
மாயாவி காரத் தியக்க றுத்தருள்
ஞானோப தேசிப் ப்ரசித்த சற்குரு வடிவான
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே


பதம் பிரித்து உரைஆசார ஈன குதர்க்க துட்டர்கள்
மாதா பிதாவை பழித்த துட்டர்கள்
ஆமாவின் ஊனை செறுத்த துட்டர்கள் பர தாரம்


ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் = ஆசார ஒழுக்கங்களில் குறைபாடு உடையவர்களாக விதண்டாவாதம் செய்யும் துட்டர்கள் மாதா பிதாவை = தாய் தந்தையரை பழித்த துட்டர்கள் =பழிக்கின்ற துட்டர்கள் ஆமாவின் ஊன் = பசுவின் மாமிசத்துக்காக செகுத்த துட்டர்கள் = (அதனைக் கொன்ற) துட்டர்கள் பர தாரம் = பிறர் மனைவியை


ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள்
நானா உபாய சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம்


ஆகாது எனாமல் = இச்சிக்கக் கூடாது என்றநல்லறிவு இல்லாமல் பொசித்த துட்டர்கள்=அனுபவித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள்= பலவித தந்திரச் செயல்களை செய்தவரலாறு உடைய துட்டர்கள் ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் = கள்ளைக் குடித்த துட்டர்கள் தமியோர் =திக்கற்றவர்களின் சொம் = சொத்தை


கூசாது சேர பறித்த துட்டர்கள்
ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள்
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை


கூசாது சேர= கூசாமல் தமக்குச் சேரும்படி பறித்த துட்டர்கள் = பிடுங்கிய துட்டர்கள் ஊரார்கள் ஆசை= ஊரில் உள்ளவர்கள் எல்லோருடையஆசைகளையும் (தாமே கொண்டு) பிதற்றும் =அறிவின்றிக் குழறும் துட்டர்கள் = துட்டர்கள்கோலால = கோலாகல வாள் வில் செருக்கு துட்டர்கள் = வாள் போரிலும் விற்போரிலும் அகந்தை பூண்ட துட்டர்கள் குருசேவை = குரு சேவை


கூடாத பாவத்து அவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயில் கடை பிறப்பினில் உழல் வாரே


கூடாத = கிடைக்கப் பெறாத பாவத்து அவத்த =பாவமும் கேடும் கொண்ட துட்டர்கள் = துட்டர்கள்ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் = ஒருவருக்கும் தானம் செய்யாது பணத்தைப் புதைத்த துட்டர்கள்கோமள நாயின் = கும்மாளம் போடும் நாயின் கடைப் பிறப்பினில் உழல்வாரே=இழிவான பிறப்பை அடைந்து அதில் அலைச்சல் உறுவார்கள்


வீசா விசால பொருப்பு எடுத்து எறி
பேர் ஆரவார சமுத்திரத்தினில்
மீளாமல் ஓடி துரத்தி உட்கும் ஒரு மாவை


வீசா = வீசி விசாலப் பொருப்பு = பெரிய மலை (போன்ற அலைகளை) எடுத்து எறி = எடுத்து எறிகின்ற போர் ஆரவார சமுத்திரத்தினில் = மிக்க ஒலியைப் பெருக்கும் கடலில் மீளாமல் ஓடித் துரத்தி = திரும்ப முடியாமல் ஓடித் துரத்தி உட்குறு= பயங் கொண்ட மாவை = சூரனான மாமரத்தை


வேரோடு வீழ தறித்து அடுக்கிய
போராடு சாமர்த்திய திரு கையில்
வேலாயுதா மெய் திருப்புகழ் பெறு வயலூரா


வேரொடு வீழத் தறித்து அடுக்கிய = வேருடன்விழும்படியாக வெட்டிக் குவித்த போராடு சாமர்த்திய திரு கையில் = போரினைச் செய்த
சாமர்த்தியமானதும் திருக்கையில் உள்ளதுமானவேலாயுதா = வேலாயுத்தைதை ஏந்தியவனே மெய்= உண்மையயே கூடிய உனது திருப்புகழ் =திருப்புகழை பெறு வயலூரா = நான் ஓதி, நீ பெற வைத்த வயலூரனே


நாசம் ஆதி ப்ராரத்த துக்கம் மிக்கவர்
மாயா விகார தியக்கம் அறுத்து அருள்
ஞான உபதேச ப்ரசித்த சற் குரு வடிவான


நாசம் ஆதி = கெடு முதலிய தீயன பயக்கும்ப்ராரத்த துக்க = இம்மையில் அனுபவிக்க வேண்டிய பழ வினையால் வரும் துக்கம் (ப்ராரப்த்த வினை) மிக்கவர் = மிக்கவர்களுடையமாயா விகாரத் தியக்கம் = மாயை சம்பந்தமான கவலையைத் தரும் மயக்கத்தை அறுத்து அருள் =பழித்தருளும் ஞான உபதேசப் ப்ரசித்த = ஞானஉபதேசம் செய்த புகழைக் கொண்ட சற் குரு வடிவான = சற் குரு வடிவான


நாதா எனா முன் துதித்திட புவி
ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள்
நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே

நாதா = நாதனே எனா முன் துதித்திட = என்று முன்னொரு காலத்தில் உன் தந்தை துதி செய்யபுவி ஆதாரம் ஆய்கைக்கு = உலகுக் கெல்லாம்ஆதாரமாய்ப் பயன்படும்படியான ஒரு நீதி நெறி விளக்கமாகிய முட்ட முற்றருள் = பிரணவப் பொருள் முழுமையும் விவரித்து விளக்கி நீ அருளிய நாகேச நாமத் தகப்பன் =
நாகேசன் என்னும் பெயரை உடைய உன் தந்தையாகிய சிவபெருமான் மெச்சிய பெருமாளே =மெச்சிய பெருமாளேசுருக்க உரை

குகஸ்ரீ ரசபதி விளக்கவுரைஅக்கிரம சூரபதுமன் ஆணவ சொரூபம் ஆனவன். அவனால் உலகம் அலை மோதித் தவித்தது. எம்மான் குமரன் அவனை எதிர்த்தான். மோதல் தாங்க முடியாத சூரன், நெடுங் கடலில் மா மரமாகி நின்றான். விடேன் விடேன் என்று தொடர்ந்தது வேல். கடல் முழுதும் சூரன் கால் வாங்கி ஓடினன். இதனாலும் வேகம் பட வந்த வேலாலும் எழுந்தவை மலைகளா? அல்லது அலைகளா?என்று அறிய இயலாத படி, ஆரவாரித்தது கருங்கடல்.


இருள் தானே இன்னும் சிறிது இருக்கட்டுமே என்று அதற்கு இரக்கம் காட்டுவது நிசிசரர் மன நிலை. ஆணவ இருளால் விளையும் அவதியை நினைபவர் அது அடங்காதா? அடங்கி ஒடுங்காதா? என்றே அழுது கதறுவர்.


இறைவன் வியாபகன். ஆன்மா வியாப்பியம். வியாதி போல் இருக்கிற ஆணவம் வியாத்தி எனப்படும். விரைந்து ஓடும் மா மரத்தை விட்டு விட்டால் மலைகள் போல கடல் அலைகளை மேலும் எழுப்பி அது உலகையே மட்டம் தட்டிவிடும். அதனால் தான் வேல், வேரோடு சாயுமாறு அம்மரத்தை வெட்டி வீழ்த்தியது. அவ்வளவு தானா? அம்மரத்தை பலப்பட பிளந்து, அளவிறந்த கட்டைகளாகவும் அடுக்கியது. இப்படி வரலாறு கந்த புராணத்தில் இல்லை என்று ஏங்க வேண்டா. வடமொழி காந்தத்தில் இல்லாத செய்தி பல தென்மொழி ஸ்காந்தத்தில் இருக்கின்றன. அதிலும் இல்லாத சேதி பல அனுபூதி மான்களின் அறிவிப்பில் உள. அதை அறிவிக்கவே இப்படி உரை செய்தேன்.


தடுத்து அடுக்கிய போராடு சாமர்த்தியம் என்பது வேலுக்கு அடை. வேலனுக்கு அடையாக்கினும்மாம். ( தரித்து - வெட்டி). அடுக்கிய போராடு சாமர்த்தியம் என்பது ஒன்றன் பின் ஓன்றாய் தொடர்ந்து செய்த போர்த்திறம் என்று பொருள் கூறுவதும் ஒரு முறை.


கருவில் தங்கிய காலத்தின் அருமையால் புவியில் ஒரு சிலர் புகழ் எய்தியுளர். எனவே அவர் புகழ் கருப்புகழ் என்னும் அளவில் அடங்கி விடும். வர வர அது புழுங்கி பொய்த்து பொன்றி விடும். அருளாளன் முருகன் புகழ் தான் திருப்புகழ். அது என்றும் மெய்யாய் விளங்குவது. பாத காணிக்கை போல், பரமன் திருப்புகழை பாடுகின்றார்கள் பக்தர்கள். அவைகளைப் பெற்றுக் கொள்கிறவன் வளமார் நிலை தரு வயலூரான். அதனால் தான் மெய்திருப்புகழ் பெறு வயலூரா என்று அன்பொடு முனிவர் அழைக்கின்றார்.


முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் ப்ரார்த்தப் பெயர் பெற்று வரும். இது நல் வினை தீ வினை என்று உயிரை நாடி வரும். சுகம் போல சொக்க வைப்பது நல்வினை. துன்பம் என தீ வினைத் தன் தோற்றம் காட்டும். ஆனால் உண்மையில் இரண்டும் மோதுகின்ற துக்க முழுமை தான் . இப்படி நாசாதி ப்ரார்த்த துக்க மிக்கவர் உலகர்.


அடடா, இவ்வளவு தானா? அண்ட பிண்ட சராசரம் யாவும் மாயா விகாரமே . மண் என, பொன் என, பெண் என தோன்றி மயக்கும் இந்த விகாரப் பாட்டை உயிர்கள் விரும்பும் விபரீதத்தை யாரிடம் சொல்லி ஆறுவது?. அவைகளால் எவ்வளவு தொல்லைகள்?, கவலைகள்?, துக்கங்கள்?. ஆணவம் அடங்க, கன்மம் கலங்க, மாயா விகாரம் மாய, மாயா விகார தியக்கு அறுத்தருள்ஞானோபதேச ப்ரசித்த சற்குரு நாதா என்று இடையறாது அழைத்துக் கொண்டிருப்பது தான் நலம். (தியக்கு - தியக்கம், தியங்க வைக்கும் கவலை). அனுட்டான உருவில் இதை அன்று சிறக்கக் காட்டினார் சிவபிரான்.


ஆணவ மாவைத் தரித்த வேலாயுதா, ப்ரார்த்த துக்கம் மாயா விகாரத் தியக்கு அறுத்தருள் சற்குரு வடிவான நாதா, என்று சிவனார் முன்னின்று துதிக்க ஓம் பொருள் முழுவதையும் சிறக்க அருளiனன் சிவ குமரன். அதை முட்ட முற்ற அருள் என்கிறேன். ( முட்ட - முழுதும், முற்ற நிறைவு பெற ).


முறை துறை மறக்க வைக்கும் மும்மதம் தீர வழி துறை அறியாது உலகம் வருந்துகிறது. தாவும் கொடி போல் எவரைத் தழுவினாலும் அவர்களை கை விடும் படி செய்துவிடுகிறது காலத் தத்துவம். அட பாவமே, ஆதாரம் இல்லாமல் இப்படி எத்தனை நாள் தான் அவதிப்படுவது? ஆதாரமான இடம் எது?. அதை ஆய்ந்து அறிதற்கு வழி வகை தோன்ற முட்ட முற்று அருள் முருகனை மறக்குமோ இந்த மனம்.


கும்ப கோணத்தை அடுத்துளது திருநாகேஸ்வரம். அத்தலத்தில் சிறக்க விற்றிருக்கின்றார் சிவபிரான். அவர்க்கு உபதேசத்தை குமரன் அருளiனன். மேன்மைச் சேயின் உபதேச அருமையை என்றும் மெச்சுகின்றார் தந்தையார். தகப்பன் மெச்சிய பெருமாளே, உம்மை உணராத உலகர் பலர் எப்படி எப்படி துஷ்டத்தனத்தில் துருதுருக்கின்றனர். மனம் நாற, உடல் நாற, வாய் நாற பாழான ஒழுக்கம் பயில்வார் பலர். இவர்கள், தம் நிலை அறியார். பெரிதும் விதண்டை பேசுவார். ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் எனும் பெயரினர் இவர்.


தாம் திருந்தார். திருத்தும் பெற்றோர்களை எத்தனை இழி மொழிகளால் ஏச இயலுமோ அத்தனையும் ஏசுவார். மாதா பிதாவை பழித்த துட்டர்கள் எனப் பெறுவர் இவர்.


கோமாதாவை வழிபடலை மறந்து , கொல்லவும் துணியும் கொடியோர்களை என்னென்று கூறுவது? இப்படியும் ஒரு சிலர் உளர். ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் எனப் பெறுவர் இவர்.


அயலவர் மனையாளை அகப்படுத்த பாதக சாதகம் பல செய்வர். ஐயோ இப்படியும் ஒரு சிலர் இருக்கின்றனரே. பரதாரம் ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் எனப்பெறும் பொல்லாதவர்கள் இவர்கள்.


பல வகையான பாவ தந்திரத்தில் பணம் தேடும் கொடியோர் கூட்டம் ஒருபுறம்.நானா உபாயத் சரித்திர துட்டர்கள் இவர்கள்.


ஓயாத மது போதையை உலகில் உவப்பாரும் உளரே. ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் என்று அகில உலகமும் இவர்களை அறிந்துளது.


ஏழை எளiயவர் தம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அரும் பாடு பட்டு சேர்த்த சொல்ப சொத்தை ஒரு சேர கொள்ளை அடிக்கும் குழுவினரும் ஒரு சிலர்.தமியோர் சொம் கூசாது சேர பறித்த துட்டர்கள் இவர்கள் ஆ இது எவ்வளவு கொடுமை


அளவிலாத தம் பேராசையை மறைக்க அவன் ஆசையைப் பார். இவன் வேட்கையைப் பார். மட்டற்ற அவாவால் மயங்குகின்றவன் இவன் என ஊரிலிருக்கும் ஒவ்வொருவரையும் குறை கூறும் கொடியோரும் உள்ளனரே.ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள். இவர்கள் ஆரவாரச் செய்தியை ஓத ஒரு நா போதுவதோ?


சிலம்பம் பயின்ற திமிரால், ஆளை அடிப்பது எம் தொழில் என்று அகங்கரிப்பார்க்கும் அளவுளதோ. கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள்.இவர்கள் செய்தி கொடுமையிலும் கொடுமை. பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டி எனவும், பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும், பிறர் துயர் என் துயர் எனவும் இறுதியே வரினும் என் மனக்கிடக்கை எம்பிரான் என்று பாரதத்தில் பீமன் பகர்வதாக ஒரு பகுதி வருகிறது. இத்தகைய மனத்தரே உலகை ஈடேற்ற உதித்தவர்கள்.


அண்மையில் ஆச்சார்ய மூர்த்திகள் எழுந்தருளி இருந்தும் அவரை சேவிக்க கொடுத்து வைக்காத கொடிய தீவினையாளர் எவ்வளவோ பேர் இன்றும் உலகில் இருக்கின்றனரே. குரு சேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள்இவர்கள்.


பாடுபட்டு சம்பாதித்த பணத்தை தாமும் அனுபவியாமல் பிறர்க்கும் உதவாமல் பிறகு நமக்கு உதவும் என்ற நிiனைவால் மண்ணில் புதைத்து வைத்து மறைந்தவர்கள் எவ்வளவு பேர்கள்? ஈயாது தேடி புதைத்த துட்டர்கள் சரித்திரம் சகிக்க முடியவில்லையே.


இந்த ஏகாதச துட்டர்கள் என்னாளும் உருப்படார். இவர்கள் செயல்களை பண்ணி உரைக்கும் கால் பாரதமாம். அவர்கள் செயல்களை மேலும் விரித்து எண்ணுதலும், பேசுதலும், எழுதுதலும் பாதகம். இவ்வளவு சொன்ன இதுவே போதும். இத்தகையர் பேசத் தகாத நாயினும் கேடு கெட்ட பிறப்பெடுத்து எண்ணிலா வேதனைகளை எய்துபவர்கள்.


வேலாயுதா, வயலூரா, குருநாதா, பெருமாளே, மேல் உரைத்த துட்டர்கள் தொடர்பு நேராதபடி கா கா கா என்று கனிவோடு விண்ணப்பித்து கதறிய படி வாழ்க திருப்புகழ் வளம். ( இதை படித்து இன்புற நமக்கு வழங்கியவர் அன்பர் அய்யப்பன்)
மெய்த் திருப்புகழ்ப் பெறு வயலூரா:


அருணகிரியார் தடுத்தாட் கொள்ளப்பட்டுத் திருப்புகழ் நித்தம் ஓதும் பெற்றினைப்
பெற்ற தலம் வயலூர்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடுமன்பது செய்ப்பதி யிற்றுந் தவநீயே -------- திருப்புகழ், கோலகுங்கு


திகழ்ப்படு செய்ப் பதிக்கு ளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழனிக் கிரிக்குமரப் பெருமாளே ------------ திருப்புகழ், குறித்தமணி