258.கடிய வேகம்
258திருமயிலை
தரிசனம் தந்து ஆட்கொள்வீர் என விண்ணப்பம்
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி நெறிபேணாக்
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
குடிலின் மேவி யேநாளு மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானொடு
பதிக தாக வேலேவு மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே- 258 மயிலை
பதம் பிரித்து உரை

கடிய வேகம் மாறாத இரத சூதர் ஆபாதர்
கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்
கடிய வேகம் மாறாத = கடுமையான கோபம் சற்றும் குறையாத இரத சூதர் = நயவஞ்சனை உடைய தீயவர்கள் ஆபாதர் = கீழானோர் கலகமே செய் பாழ் மூடர் = கலகத்தைச் செய்யும் பாழான அறிவிலிகள் வினைவேடர் = தீ வினையே விரும்புவோர்.
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு
கன விகாரமே பேசி நெறி பேணா
கபட ஈனர் = வஞ்சனை கொண்ட இழிந்தோர் ஆகாத இயல்பு நாடியே = இத்தன்மையருடைய நலமற்ற முறைகளை விரும்பி நீடு கன = பெரிய வலிமையுள்ள விகாரமே பேசி= அவ லட்சணங் களையே பேசி நெறி = நல்ல நெறிகளை பேணா = போற்றாத.
கொடியன் ஏதுமே ஓராது விரக சாலமே மூடு
குடிலின் மேவியே நாளும் மடியாதே
கொடியன் = கொடியவன் ஏதும் ஓராது = எதையும் ஆராய்ந்து அறியாமல் விரக சாலமே மூடு = காம ஆசைக் கூட்டங்களே மூடியுள்ள குடிலின் மேவியே = குடிசையாகிய உடலில் இருந்து கொண்டே நாளும் மடியாமல் = தினமும் அழிந்து போகாமல்
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு
குவளை வாகும் நேர் காண வருவாயே
குலவு = விளங்கும் தோகை மீது = மயில் மீது. ஆறு முகமும் வேலும் = ஆறுமுகமும் வேலும். ஈராறு = பன்னிரண்டு. குவளை வாகும் = குவளை மலர் அணிந்த தோள்களும். நேர் காண வருவாயே = என் எதிரே காணும்படி வருவாயாக.
படியினோடு மா மேரு அதிர வீசியே சேட
பணமும் ஆடவே நீடு வரை சாடி
படியினோடு = பூமியோடு மா மேரு = பெரிய மேரு மலையும் அதிர = அதிரும்படி வீசியே = செலுத்தி சேட பணமும் ஆடவே = ஆதிசேடனுடைய பணா மகுடங்கள் அசைவுற நீடு வரை சாடி = பெரிய மலைகளை மோதி.
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு
பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா
பரவை ஆழி நீர் = பரப்பையுடைய கடல் நீர் மோத = மோதவும். நிருதர் = அசுரர்கள். மாள = மாண்டு போக வான் நாடு பதி அது ஆக = தேவர்கள் பொன்னுலகம் செழிப்புள்ள நகரமாக வேல் ஏவும் மயில் வீரா = வேலைச் செலுத்தும் மயில் வீரனே.
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை
வனச வாவி பூ ஓடை வயலோடே
வடிவு உலாவி = அழகுடன் வளர்ந்து ஆகாசம் மிளிர் = ஆகாசம் வரை வளர்ந்து விளங்கும் பலாவின் இருள் சோலை = பலா மரங்களின் பெரிய சோலைகளும் வனச வாவி = தாமரைக் குளமும் பூ ஓடை = பூக்கள் உள்ள ஓடைகளும் வயலோடே = வயல்களும்.
மணி செய் மாட மா மோடை சிகரமோடு வாகு ஆன
மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே.
மணி செய் மாட = அழகுள்ள மாடங்களும் மா மேடை = சிறந்த மாடங்களின் சிகரமோடு = சிகரங்களும் ஒன்று கூடி. வாகு ஆன = அழகு விளங்கும் மயிலை மேவி = மயிலையில் வாழ் தேவர் பெருமாளே = வீற்றிருந்து வாழ்கின்ற தேவர்கள் பெருமாளே.
இரத சூதர் விரத சூதர் எனவும் பிரிக்கலாம். கோபத்தையே விரதமாக கொண்டவர் என பொருள்படும்

சுருக்க உரை

விளக்கக் குறிப்புகள்
விகாரமே பேசி நெறி போணா...
விகாரம் = துர்க்குணங்கள். (காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசுயை).
ஆபாதர் ஆபாதனன் என்பதின் மரூஉ. ஆபாதனன் -= தீயவன்259.திரை வார் கடல் சூழ்
259மயிலை
தனனா தனதானன தனனா தனதானன
தனனா தனதானன தனதான
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுடையோ துதல் திகழாமே
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் தலைவாமால்
வரைமா துமையாள்தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு னடியாராய்
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல் அருள்வாயே
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய லிலராகி
இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ ரிடர்தீர
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுசூரனை மடிவாக
வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய பெருமாளே
.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பதம் பிரித்து உரை

திரை வார் கடல் சூழ் புவி தனிலே உலகோரோடு
திரிவேன் உனை ஓதுதல் திகழாமே
திரை வார் = அலைகள் கொண்ட கடல் சூழ் = கடலால் சூழப்பட்ட புவி தனிலே = பூமியில உலகோரோடு = உலகத்தாரோடு உனையே ஓதுதல் = உன்னையே ஓதி திகழாமே = புகழ்தல் இல்லாமல் திரிவேன் = திரிகின்றவன்.
தின(ம்) நாளும் மு(ன்)னே துதி மனது ஆர பி(ன்)னே சிவ
சுதனே திரி தேவர்கள் தலைவா மால்
தின நாளும் = நாள்தோறும் முன்னே துதி = முன்னதாகத் துதிக்கும் மனது ஆர = மன நிலை நிரம்பப் பெற்று பின்னே = அதற்குப் பின் சிவ சுதனே = சிவ குமரனே திரி தேவர்கள் தலைவா = மும்மூர்த்திகளின் தலைவனே மால் = பெரிய.
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என
அறையா அடியேனும் உன் அடியராய்
வரை மாது = (இமய) மலை மாதாகிய உமையாள் தரு = பார்வதி தேவி ஈன்றருளிய மணியே = மணியே குக = குகனே என = என்று அறையா = ஓதி அடியேனும் உன் அடியராய் = அடியேனாகிய நானும் உன் அடியாராய்.
வழி பாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு
மகா நாள் உளதோ சொ(ல்)ல அருள்வாயே
வழி பாடு உறுவாரோடு = வழிபாடு செய்பவர்களோடு அருளாதாரமாய் இடு = அருளன்பு கூடியவராகின்ற மக நாள் உளதோ = விசேட நாள் ஒன்று உண்டோ? சொல்ல அருள்வாய் = சொல்லருள் புரிவாயாக.
இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும்
இழிவாகி மு(ன்)னே ஏய் இயல் இலராகி
இறை = தலைமை பூண்ட வாரண தேவனும் = ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு உரிய தேவனாகிய இந்திரனும் இமையோரவர் ஏவரும் = பிற தேவர்கள் யாவரும் இழிவாகி = இழிவான நிலையை அடைந்து முன் = முன்பு ஏய் இயல் இலராகி = தமது தகுதியை இழந்தவர்களாகி.
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக
இடரே செ(ய்)யவே அவர் இடர் தீர
இருளோ மனதே உற = மயக்க இருள் கொண்ட மனம் கொண்டவராக அசுரேசர்களே = அசுரத் தலைவர்கள் மிக = நிரம்ப இடரே செய்யவே = துன்பச் செயல்களைச் செய்து வர அவர் இடர் தீர = அந்தத் தேவர்களின் துன்பம் நீங்க.
மற மா அயிலே கொ(ண்)டு உடலே இரு கூறு எழ
மத மா மிகு சூரனை மடிவாக
மற மா அயிலே கொண்டு = வீரம் வாய்ந்த சிறந்த வேலாயுதத்தைக் கொண்டு உடலே இரு கூறு எழ = உடல் இரண்டு கூறுபட மத மா மிகு = ஆணவம் மிகுந்த சூரனை மடிவாக = சூரனை அழிவுற.
வதையே செ(ய்)யு மா வலி உடையாய் அழகாகிய
மயிலாபுரி மேவிய பெருமாளே.
வதையே செயயு = வதை செய்த மா வலி உடையாய் = பெரிய வலிமையைக் கொண்டவனே அழகாகிய = அழகான மயிலா புரி மேவிய பெருமாளே = மயிலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

விளக்கக் குறிப்புகள்
. திரி மூர்த்திகள் = மும் மூர்த்திகள்.
ஒப்புக
மதமா மிகு சூரனை மடிவாக...
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருது குரிசில் எனப்பல...திருமுருகாற்றுப்படை
குகனே அணோரணியான் மஹதோ மஹியானாத்மா குஹாயாம் தைத்திரீய உபநிஷத்