272. பழியுறு
272திருவிடைக்கழி
உன கமல பதம் நாடி உருகி உள்ளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே என்பது பிரார்த்தனை
தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான தனதான
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப்
படுகுழிபுக் கினிதோறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலோக முழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது விளியாமுன்
உனகமலப் பதனாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோத அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு பெருமாளே

பதம் பிரித்து உரை\பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான
பகரும் வினை செயல் மாதர் தரும் மாய


பழி உறு - பாவம், குற்றம் இவைகளுக்கு இடமான சட்டகமான - உடலாகிய குடிலை எடுத்து - குடிசையை எடுத்து இழிவான பகரும் - இழிவான சொற்களைச் சொல்லும் வினை - வினையைப் பெருக்கும் செயல் மாதர் - தொழிலைச் செய்யும் விலை மாதர்கள் தரும் - கொடுக்கின்ற மாய - மாயமான


படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது
பழமை பிதற்றிடு(ம்) லோக முழு மூடர்


படு குழி - படு குழியில் புக்கு - விழுந்து இனிதேறும் - நல்லபடியாகக் கரை ஏறும் வழி தடவி - வழி உண்டா எனத் தடவிப் பார்த்தும் தெரியாது - தெரியாமல் பழமை - பழங் கொள்கைகளையே பிதற்றிடு - பிதற்றுகின்ற லோக முழு மூடர் - உலகில் உள்ள முழு மூடர்கள்


உழலும் விருப்புடன் ஓது(ம்) பல சவலை கலை தேடி
ஒரு பயனை தெளியாது விளியா முன்


உழலும் - திரிந்து விருப்புடன் - ஆசையுடன் ஓதும் - ஓதுகின்ற பல சவலை - பல விதமான மனக் குழப்பத்தைத் தரும் கலை தேடி - நூல்களைத் தேடி ஒரு பயனை - ஒரு பயனையும் தெளியாது - தெரிந்து கொள்ள முடியாமல் விளியா முன் - இறந்து போவதற்கு முன்பாக


உன கமல பத(ம்) நாடி உருகி உ(ள்)ளத்து அமுது ஊற
உனது திருப்புகழ் ஓத அருள்வாயே


உன - உனது கமல பதம் நாடி - தாமரை போன்ற திருவடிகளை விரும்பி உருகி - மனம் உருகி உ(ள்)ளத்து அமுது ஊறி - உள்ளத்தில் அமுத ரசம் ஊற உனது - உன்னுடைய திருப்புகழ் ஓத - திருப் புகழை ஓதுவதற்கு அருள்வாயே - அருள்வாயாக


தெழி உவரி சலராசி மொகு மொகு என பெரு மேரு
திடு திடு என பல பூதர் விதமாக


தெழி - முழங்குகின்ற உவரி - உப்பு நீரைக் கொண்ட சலராசி - கடல் மொகு மொகு என - மொகு மொகு என்று கொந்தளிக்கவும் பெரு மேரு - பெரிய மேரு மலை திடு திடு என - திடு திடு என்று இடி பட்டு பொடியாகவும் பல பூதர் - பல விதமான பூத கணங்கள் விதமாக - விதம் விதமாக


திமி திமி என பொரு சூரன் நெறு நெறு என பல தேவர்
ஜெய ஜெய என கொதி வேலை விடுவோனே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
திமி திமி என - திமி திமி எனக் களிப்புறவும் பொரு சூரன் - சண்டை செய்த சூரனாகிய (மாமரம்) நெறு நெறு என - நெறு நெறு என்று முறியவும் பல தேவர் - (இதைக் கண்ட) பல தேவர்களும் ஜெய ஜெய என - ஜெய ஜெய என்று போற்றவும் கொதி - கோபம் எழும் வேலை விடுவோனே - வேலாயுதத்தைச் செலுத்தியவனே


அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல
அடல் தரு கெற்சித நீல மயில் வீரா


அழகு தரித்திடு - அழகு கொண்டுள்ள நீப - கடப்ப மாலை அணிந்தவனே சரவண உற்பவ - சரவணப் படுகையில் உற்பவித்தவனே வேல - வேலனே அடல் தரு - வெற்றியைத் தருவதும் கெற்சித - முழங்கி ஒலிப்பதும் ஆன நீல மயில் வீரா - நீல மயில் வீரனே


அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை
அதிப இடைக்கழி மேவும் பெருமாளே
அருணை - திருவண்ணா மலை திருத்தணி - திருத்தணிகை நாக மலை - திருச்செங்கோடு பழனிப் பதி - பழனி நகர் கோடை - வல்லக் கோட்டை அதிப - (இத்தலங்களில் வாழும்) தலைவனே இடைக் கழி மேவும் பெருமாளே - திருவிடைக்கழியில் வீற்றிருக்கும் பெருமாளே

திருஇடைகழி முருகன்
சுருக்க உரைஒப்புக
உளத்து அமுதூற உனது திருப்புகழ் ஓத - மாணிக்ககவாசகர் சென்னிபத்து திருவாசக பாடல் வரிகள்
காயத்துள் அமுது ஊற ஊற நீ
கண்டுகொள் என்று காட்டிய
சட்டகம் - உடல்
திருஇடைகழி