283.காணொணாதது
283தேவனூர்
(செஞ்சிக்கு அருகில் உள்ளது)
பரம்பொருளின் இலக்கணத்தை கூறும் அழகான திருப்புகழ்
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன தந்ததான

காணொ ணாதது உருவோ டருவது
பேசொ ணாதது உரையே தருவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது பஞ்சபூதக்
காய பாசம தனிலே யுறைவது
மாய மாயுட லறிவா வகையது
காய மானவ ரெதிரே யவரென வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
மாய னாரய னறியா வகையது
பேத பேதமொ டுலகாய் வளர்வது விந்துநாதப்
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாயருள் நிறைவாய் விளைவது ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
நூறி யேயுயிர் நமனீ கொளுவென
வேல்க டாவிய கரனே யுமைமுலை யுண்டகோவே
வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யேகுடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர்கு றிஞ்சியுடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
சேர நாடிய திருடா வருடரு கந்தவேளே
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
ஞான யோகிக ளுளமே யுறைதரு
தேவ னூர்வரு குமரா வமரர்கள் தம்பிரானே.

பதம் பிரித்து உரைகாண ஒணாதது உருவோடு அரு அது
பேச ஒணாதது உரையே தருவது
காணும் நான் மறை முடிவாய் நிறைவது பஞ்ச பூத


காண ஒணாதது - காண்பதற்கு முடியாதது. உருவோடு அரு அது - உருவமும் அருவமும் கொண்டது. பேச ஒணாதது - பேசுவதற்கும் முடியாதது. உரையே தருவது - பலவித உரை விளக்கங்களுக்கும் இடம் தருவது. காணும் - காணப்படும். நான் மறை - நான்கு வேதங்களின். முடிவாய் நிறைவது - முடிவான பொருளாய் நிறைந்து நிற்பது. பஞ்ச பூத காயம் - ஐந்து பூதங்களால் ஆகிய உடல் மீதுள்ள.


காய பாசம் தனிலே உறைவது
மாயமாய் உடல் அறியா வகையது
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பாசம் அதனிலே உறைவது - ஆசையிலே இருந்து விளங்குவது. மாயமாய் உடல் - மாயப் பொருளாய் நின்று இவ்வுடலால். அறியா வகையது - அறிய முடியாதது. காயம் ஆனவர் எதிரே - காய சித்தி பெற்றவராலும் தம் எதிரே அவர் என வந்து பேசி - அவரைப் போல மனிதராய் வந்து பேசினாலும்.


பேண ஒணாதது வெளியே ஒளி அது
மாயனார் அயன் அறியா வகை அது
பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத


பேணொணாதது - போற்ற முடியாதது. வெளியே ஒளியது - ஆகாய வெளியில் ஒளியாய் நிற்பது. மாயன் அயன் அறியா வகையது - திருமாலும், பிரமனும் அறிய முடியாத வகையில் இருப்பது. பேத பேதமொடு - வேற்றுமை ஒற்றுமை எனப்படும் தன்மைகளுடன். உலகாய் வளர்வது - வளர்வது. விந்து - பீடம். நாதம் - இலிங்கம் எனப்படும்.


பேருமாய் கலை அறிவாய் துரிய
அதீதமானது வினையேன் முடி தவ
பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே


பேருமாய் - பேருடையதாய் கலை அறிவாய் - நூலறிவாகவும். துரிய - யோகியர் தம் மயமாய் நிற்கும் உயர் நிலைக்கும் அதீதமானது - மேற்பட்டதாகும். வினையேன் - வினைக்கு ஈடான என்னுடைய. முடி - முடிந்த தவ பேறுமாய் - தவத்தின் பேறாக உள்ளது அருள் நிறைவாய் - உனது திருவருள் நிறைவாய் விளைகின்றது. ஒன்று நீயே - இத்தகைய இலக்கணங்களை எல்லாம் பொருந்தியவன் நீ ஒருவனே.
வீண் ஒணாதது என அமையாத அசுரரை
நூறியே உயிர் நமன் நீ கொளு(ம்) என
வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே


வீணொணாது என - வீணாண காரியம் கூடாது என்று. அமையாத - அடங்கியிராத அசுரரை நூறி - அசுரர்களைப் பொடியாக்கி உயிர் - (அவர்கள்) உயிரை. நமன் நீ கொளு(ம்) என - யமனே, நீ கொள்வாயாக என்று கூறி வேல் கடாவிய - வேலாயுதத்தைச் செலுத்திய கரனே - திருக்கரத்தை உடையவனே உமை முலை உண்ட கோவே - உமா தேவியின் கொங்கைப் பாலை உண்ட அரசே.


வேத நான்முக மறையோனொடும் விளையாடியே
குடுமியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே


வேத நான் முக - வேதத்தை கற்றவனும் நான்கு முகத்தை உடையவனும் ஆகிய மறையோனொடும் - அந்தணன் பிரமனோடும் விளையாடியே - (பேசி) விளையாடி. குடுமியிலே - அவன் குடுமியிலே. கரமொடு வீற மோதின திருக்கரத்தால் பலமாகக் கொட்டிய மறவா - வீரனே. குறவர் - குறவர்களின் குறிஞ்சியூடே - மலை நிலத்து ஊராகிய வள்ளி மலையில்.


சேண் ஒண் ஆய் இடும் இதண் மேல் அரிவையை
மேவியே மயல் கொள லீலைகள் செய்து
சேர நாடிய திருடா அருள் தரு கந்த வேளே


சேண் ஒணாய் இடும் - மிக உயரம் பொருந்தியுள்ளதாகக் கட்டப்பட்ட இதண் மேல் அரிவையை - பரண் மீது இருந்த வள்ளியாகிய பெண்ணிடம் மேவியே - சென்று மயல் கொள் - காம மயக்கம் கொள்ளும்படியான லீலைகள் செய்து - திருவிளையாடல்களைச் செய்து சேர - அவளுடன் அணைய நாடிய - விரும்பிய. திருடா - திருடனே அருள் தரு கந்த வேளே - அருள் பாலிக்கும் கந்த வேளே.


சேர ஒணா வகை வெளியே திரியும் மெய்
ஞான யோகிகள் உளமே உறை தரு
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே.


சேர் ஒணா வகை - யாரும் தம்மிடம் அணுக முடியாத வகையில் வெளியே திரியும் - வெளியிலே திரிந்து கொண்டிருக்கும் யோகிகள் - மெய்ஞ் ஞான யோகிகள் உளமே உறை தரு - உள்ளத்தில் வீற்றிருக்கும். தேவனூர் வரு குமரா - தேவனூரில் எழுந்தருளியிருக்கும் குமரனே. அமரர்கள் தம்பிரானே - தேவர்கள் தம்பிரானே.


தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்கெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டுசுருக்க உரை

விளக்கக் குறிப்புகள்
காண ஒணாதது......
பரம் பொருள் இலக்கணம் விளக்கப் பட்டுள்ளது. கீழ்க்கண்ட திருப்புகழ்ப்
பாக்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது.
வாசித்துக்காணொணதது..176,
வேதத்திற்கேள்வியிலாதது...244,
இனி வரவிற்கின்ற திருப்புகழ்கள்
அகரமுதலென...323,
ஓலமறைகளறைகின்ற..442,
மக்கட்குக்கூறரி...,
சுருதியூடுகேளாது...
கதறிய ....


பேதபேதமொடுலகாய் வளர்வது....
ஆறு ஆர் சுவை, ஏழ்ஓசையொடு எட்டுத்திசைதான் ஆய்
வேறு ஆய், உடன் ஆனான் இடம் வீழிமிழலையே --- சம்பந்தர் தேவாரம்
குடுமியிலே கரமொடு வீற மோதின மறவா....
பிரணவத்தின் பொருள் தெரியாது பிரமன் விழித்த பொழுது முருகன் அவனைக் குட்டிச் சிறையில் இட்டார்.
மறையவன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் கதிர்வேலா
---- திருப்புகழ் -முகசந்தி
பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில்..... திருப்புகழ், கறைபடுமுடம்பி


சேர நாடிய திருடா...
செம்மான் மகளைத் திருடும் திருடன்... -------- கந்தர் அனுபூதி


சேரொணாவகை வெளியேதிரியும் மெய்ஞ்ஞான.....
பறவை யான மெய்ஞா ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடு..... ---- திருப்புகழ், தறையின் மானுட
வேல், திருமால், வள்ளி, தேவனூர்