பேரொலி செய்யும் கடல் சூழ்ந்த உலகில் உள்ள ஊர்களில், கைம்மாறு கருதாது கொடுக்கும் வள்ளல்கள் யார் உளர் என்று தேடிப் போய், ஊமையர்களையும், முட்டாள்களையும், குற்றம் மிகுந்தோரையும் புகழ்ந்து, அழகிய முத்தமிழ் நூல்களைச் சொல்வதுடன், என்னுடைய விருப்பங்களையும் தெரிவிக்கும் அடியேன். நான் சினம் தணிந்து, ஆசைகளை ஒழித்து, உன் திருவடிகளைக் கூடுவதற்கு முத்தியை என்று தந்தருள்வாய் ?
சிவ பெருமான் இடப் பக்கத்தில் அமர்ந்துள்ள உமா தேவி பெற்றெடுத்த இளையவனே. கடல் வற்ற, கிரௌஞ்ச மலை அழிய, வேலைச் செலுத்திய மயில் வாகனனே. ஆதிசேடன் மீது துயிலும் நாராணனுக்கு அருள் புரிந்தவனே. சூர பதுமனை அழித்தவனே. எனக்கு முத்தியை என்று தருவாயோ ?
விளக்கக் குறிப்புகள்
ஊமரைப் ப்ரசித்தர்......
கற்றிலாதானை, கற்று நல்லனே, காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை, முற்றனே, என்று மொழியினும் கொடுப்பார் இலை- சுந்தரர் தேவாரம்
நாரணற்கு அருள் சுரந்த மருகோனே....
முருகன் ஞானசம்பந்தராக அவதாரம் செய்துற்ற போது சிவ சாரூபம் வேண்டிக் கச்சியில் தவம் செய்த விஷ்ணுவுக்கு சம்பந்தர் சிவ சாரூபம் அளித்த வரலாற்றைக் குறிக்கும்.
கொண்டற்குச் சித்தி அளிக்கும் பெருமாளே --- திருப்புகழ், செறிதரும்
உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே -- நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் திருவாய் மொழி
நாக மெத்தையில் துயின்ற...
நாகம் ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாராயணனே.. ---நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருவாய் மொழி
Bookmarks