285.ஓலமிட்டிரைத்த
285நாகப்பட்டினம்
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
தான தத்த தத்த தந்த தனதான
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
ஊர்மு கிற்ற ருக்க ளொன்று மவராரென்
றும ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
ஊன ரைப்ர புக்க ளென்று மறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
கோடி யிச்சை செப்பி வம்பி லுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
கூடு தற்கு முத்தி யென்று தருவாயே
வாலை துர்க்கை சத்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது பெற்றெ டுத்து கந்த சிறியோனே
வாரி பொட்டெ ழக்fர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
வாகை மற்பு யப்ர சண்ட மயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
நார ணற்க ருட்சு ரந்த மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
நாக பட்டி னத்த மர்ந்த பெருமாளே.

பதம் பிரித்து உரை

ஓலம் இட்டு இரைத்து எழுந்த வேலை வட்டம் இட்ட இந்த
ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று
ஓலம் இட்டு - ஓலம் செய்யும் அபயக் குறியுடன் இரைத்து - பேரொலி செய்து. எழுந்த வேலை - எழுகின்ற கடல் வட்டமிட்ட - வட்டத்துக்குள் உள்ள இந்த ஊர் - இந்த (உலகில்) உள்ள ஊர்களில் முகில் ஒன்று - மேகம் போல் (கைம்மாறு கருதாது கொடுக்கும் வள்ளல்கள்) தருக்கள் - (கற்பக மரம்) போன்றவர்கள் அவர் ஆர் என்று - யார் இருக்கின்றார்கள் என்று தேடிப் போய்


ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும்
ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல்


ஊமரை - பேசுவதற்கும் வாய் வராதவர்களை ப்ரசித்தர் என்றும் - புகழ் வாய்ந்தவர்கள் என்றும் மூடரைச் சமர்த்தர் என்றும் - முட்டாள்களைப் புத்திசாலிகள் என்றும் ஊனரைப் - உடல் ஊனம் உற்றவரை ப்ரபுக்கள் என்றும் - பெருங் கொடையாளிகள் என்றும் அறியாமல் - எனனுடைய அறிவீனத்தால்


கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த
கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன்


கோல - அழகுள்ள. முத்தமிழ் ப்ரபந்தம் - முத்தமிழ் நூல்களைக் கொண்டு மாலருக்கு - உலக மாயையில் சிக்குண்டவர்களுக்கு உரைத்த - சொல்லுகின்ற அநந்த கோடி - அளவில்லாத கோடிக்கணக்கான இச்சை செப்பி - என் விருப்பங்களைத் தெரிவித்து உழல் நாயேன் - வீணாகத் திரிகின்ற அடி நாயேன்.


கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து
கூடுதற்கு முத்தி என்று தருவாயே


கோபம் அற்று - சினத்தை விடுத்து மற்றும் - பின்னும் அந்த மோகம் அற்று - அந்த ஆசைகளையும் ஒழித்து உனைப் பணிந்து - உன்னை வணங்கி கூடுதற்கு - உன் (திருவடியைச்) சேர்வதற்கு முத்தி என்று தருவாயே - முத்தியை என்று தந்தருள்வாய்.


வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே


வாலை - (என்றும்) இளமை வாய்ந்த துர்க்கை, சத்தி, அம்பிகை - துர்க்கை, சக்தி, அம்பிகை, ஆகிய பெயர்களுடன் லோக கத்தர் பித்தர் - உலக நாயகரும் பித்தருமான சிவபெருமான் பங்கில் - இடது பக்கத்தில் உள்ள மாது - உமா தேவி பெற்று எடுத்து - ஈன்றெடுத்து உகந்த சிறியோனே - மகிழ்ந்த இளையவனே.


வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த
வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா


வாரி - கடல். பொட்டு எழ - வற்றிப் போக க்ரவுஞ்சம் வீழ - கிரௌஞ்ச மலை அழிய நெட்ட அயில் துரந்த - கூரிய வேலைச் செலுத்தி வாகை - வெற்றி பொருந்திய மற் புய - மற் போருக்குத் தக்கதான புயங்களை உடைய ப்ரசண்ட - உடல் வலிமை வாய்ந்த மயில் வீரா - மயில் வாகனத்தை உடைய வீரனே.


ஞாலம் வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற
நாரணற்கு அருள் சுரந்த மருகோனே


ஞால வட்டம் - பூமி மண்டலம். முற்ற - முழுவதையும். உண்டு - உட்கொண்டு. நாக மெத்தையில் - ஆதி சேடன் என்னும் பாம்பாகிய படுக்கையில் துயின்ற - உறங்கும். நாரணற்கு - நாராயணனுக்கு அருள் சுரந்த - திருவருளைப் பொழிந்த. மருகோனே - மருகனே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனை களைந்த
நாக பட்டினம் அமர்ந்த பெருமாளே.


நாலு திக்கும் - நான்கு திசைகளிலும் வெற்றி கொண்ட - வெற்றியை அடைந்த சூர பத்மனைக் களைந்த - சூரபதுமனை அழித்த நாகப் பட்டினத்து அமர்ந்த பெருமாளே - நாகப் பட்டினத்தில் வீற்றீருக்கும் பெருமாளே.சுருக்க உரைவிளக்கக் குறிப்புகள்
ஊமரைப் ப்ரசித்தர்......
கற்றிலாதானை, கற்று நல்லனே, காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை, முற்றனே, என்று மொழியினும் கொடுப்பார் இலை- சுந்தரர் தேவாரம்


நாரணற்கு அருள் சுரந்த மருகோனே....


முருகன் ஞானசம்பந்தராக அவதாரம் செய்துற்ற போது சிவ சாரூபம் வேண்டிக் கச்சியில் தவம் செய்த விஷ்ணுவுக்கு சம்பந்தர் சிவ சாரூபம் அளித்த வரலாற்றைக் குறிக்கும்.


கொண்டற்குச் சித்தி அளிக்கும் பெருமாளே --- திருப்புகழ், செறிதரும்
உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே -- நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் திருவாய் மொழி


நாக மெத்தையில் துயின்ற...


நாகம் ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாராயணனே.. ---நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருவாய் மொழி