ஹனுமத் ராமாயணம்.-- J.K. SIVAN
இதை படிக்கும் முன்பு ஒரு எச்சரிக்கை.
இதில் கண்ட விஷயத்துக்கு எந்த ஆதாரமும் எந்த நூலிலும் தேட வேண்டாம். அந்த நேரத்தில் ரேஷன் கடையில் சர்க்கரை வாங்க நிற்கலாம்.
வால்மீகி பிறக்கும்போதே கவிஞன் இல்லை. படித்தும் கவித்வம் பெறவில்லை. அவன் ஒரு வேடன். மிருகங்கள் பறவைகளை வேட்டையாடி தின்று விற்று பிழைத்தவன். ஒருநாள் ஒரு கிரவுஞ்ச பக்ஷியை வேட்டையாடினான். ஆம் அவன் கண்களில் ஒரு மரத்தில் இரு பறவைகள் ஜோடியாக உல்லாசமாக அமர்ந்து சல்லாபித்துக்கொண்டிருந்தவை கீழே ஒரு வேடன் கூரான அம்புகளோடு தம்மை குறிவைத்து கொல்ல முயற்சிப்பதை கவனிக்கவில்லை. விர்ரென்று வந்த ஒரு அம்பு இரண்டில் ஒரு பறவையை கொன்றுவிட்டது. மற்ற பறவை தனக்கு நேர்ந்த இந்த துன்பத்தை தாங்கமாட்டாமல் கதறியது. அதன் துக்கம் துயரம், அழுகை வாலமீகியை அடியோடு மாற்றிவிட்டது. இனி வாலமீகி வேடன் அல்ல. ஒரு பறவையின் துயரம் அவனை உலகிலேயே என்றும் அழியாத சோகக் காவியமாக, சீதையின் துக்கமாக ராமாயணமாக நிலைத்து விட்டது.


ராம காவியம் என்றால் முதலில் மனதில் நிற்பது வால்மீகி . அப்புறம் தான் மற்றவர்கள் எழுதிய ராமாயணங்கள். பல்லாயிர சமஸ்க்ரித ஸ்லோகங்கள் அழியாத தெய்வீக புகழை பெற்றுவிட்டன.


ராமாயணத்தை வால்மீகி எழுதி விட்டார் என்ற செய்தி எங்கும் பரவியது. விண்ணிலும் மண்ணிலும் இதே பேச்சு. திரிலோக சஞ்சாரி ஸ்ரீ விஷ்ணு பக்தர் நாரதர் காதிலும் இது விழுந்தது. நாரதர் நேராக வால்மீகி, (இப்போது ரிஷி) இடம் வந்தார்.


''வாருங்கள் நாரத மஹரிஷியே'' என்று உபசரித்து வரவேற்றார் தனது ஆஸ்ரமத்தில் வால்மீகி.,


''வால்மீகி, எங்கும் நீங்கள் எழுதியதாக சொல்லப்படும் ராம காவ்யம் பற்றியே பேச்சாக இருக்கிறதே. எங்கே எனக்கு அதை படித்துக் காட்டுங்கள்''


'ஆஹா என் பாக்யம்'' வால்மீகி தனது ஏட்டுச்சுவடிகளை எடுத்து படித்துக் காட்டினார் ஸ்லோகங்களை முழுதும் கேட்டு ரசித்த நாரதர் பேசாமல் இருந்தார்


''மகரிஷி நான் எழுதியது தங்களது திருப்தியை பெற்றதா பிரபு''
''ம். பரவாயில்லை நன்றாக தான் ராமனைப்பற்றிய காவியத்தை படித்திருக்கிறீர்கள். ஆனாலும் ...''


''சுவாமி என்ன ''ஆனாலும்'' என்கிறீர்கள். எங்காவது தவறிழைத்திருக்கிறேனா?''
பதறினார் வால்மீகி. உடல் நடுங்கியது. முகம் அங்கங்கள் வியர்த்தன . கண் இருண்டது .


''நன்றாக தான் இருக்கிறது என்றேன். ஆனாலும் ஹனுமான் எழுதிய ராமாயணத்தைப் போல் இது இல்லையே? அந்த வானரம் அப்பப்பா, எவ்வளவு உணர்ச்சி பூர்வமாக அற்புதமாக எழுதியிருக்கிறான்'' என்று சொல்லிவிட்டு நாரதர் புறப்பட்டார்.


''ஆஹா இது என்ன விந்தை? ஹனுமான் கூட ராமாயணம் எழுதியிருக்கிறாரா? தெரியாமால் போய்விட்டதே எனக்கு '' -- வால்மீகி ஹநுமானைத் தேடி சென்று ஒருநாள் மலைகள் நடுவே எங்கோ ஹநுமானைப் பிடித்து வணங்கினார்.


''வாருங்கள் வால்மீகி, என் பிரபு ராமனைப் பற்றி எழுதியவர் அல்லவா நீங்கள்.'' ஹநுமானுக்கு மிக்க சந்தோஷம். மெதுவாக வால்மீகி பேச்சை ஆரம்பித்தார்.


''மஹாவீர ஆஞ்சநேயா, நீங்கள் ராமாயணம் ஒன்று எழுதியிருக்கிறதாக நாரதர் சொன்னார். அதை எனக்கு வாசித்துக் காட்டவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்''


'வாருங்கள் என்று ஹனுமான் பல மலைகளாக இருந்த இராமாயண சுவடிகளை காட்டி படித்தார். ஹனுமான் ஸ்ரீ ராம சீதா தேவியை நேரில் கண்டு ராவண யுத்தத்தில் பங்கு கொண்டு ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவரது ராமாயணம் அற்புதமாக அமைந்திருந்தது.


''சுவாமி தங்கள் இயற்றிய ராமாயணம் அற்புதம். அதிசயம் '' -- வால்மீகி சொல்லும்போது கண்களில் நீர் வெள்ளம். நாக்கு தழுதழுத்தது. இலக்கண பிழை, சொற்குற்றம், பொருள்குற்றம் எதுவுமில்லாமல் அற்புத சந்தங்களோடு அமைந்திருந்தது ஹனுமத் ராமாயணம்''.


' பிறகு ஏன் உங்களுக்கு சோகம், துக்கம் ,வருத்தம். நான் எழுதியது நன்றாக இல்லையா?" என்று வினவினார் ஹனுமான்.


'' நீங்கள் எழுதியது அற்புத காவியம். மிகவும் நன்றாக உள்ளது.


'' பின் எதற்காக வருத்தம்?''


'' உங்கள் ராமாயணத்தை படித்தபின் கேட்டபின் நான் எழுதிய ராமாயணம் எடுபடாது.யாரும் தொடக்கூட மாட்டார்கள்''


''ஹாஹாஹா'' என்று சிரித்தார் ஹனுமான். ''அவ்வளவு தானே. இதற்கா விசனம் உங்களுக்கு. இதோ பாருங்கள், ''


''அடுத்த கணமே ஹனுமான் தான் எழுதிய சுவடிகளை தாங்கி இருந்த மலைகளை அப்படியே புரட்டி கடலில் ஆழ்த்தி விட்டார். இனி என் ராமாயணம் இல்லை. ராமகாவியம் என்றால் அது வால்மீகி எழுதிய ஒன்று, அது ஒன்றே தான். இனி ஹனுமான் எழுதிய ராமாயணத்தை ஒருவருமே படிக்கமுடியாது. கேட்க இயலாது ''


'ஐயோ பிரபு நீங்கள் ஏன் இவ்வாறு செயதீர்கள்?'' அலறினார் வால்மீகி''


''வால்மீகி, உங்களுக்கு நீங்கள் எழுதிய ராம காவியத்தால் அழியாப்புகழ் கிடைக்க வேண்டும். உலகத்தோருக்கு அது மிக மிக அவசியம். எனக்கு என் ராமன் சீதா மனத்தி லேயே என்றும் உள்ளார்கள். எனக்கு எழுத்தில் அது அவசியம் இல்லை. ஒவ்வொருகணமும் ஸ்ரீ ராமனை நினைக்கும்போது ஒரு ராமாயணம் என்னுள் உருவாகிறது. என்னை மகிழ் விக்கிறது. அரும்பாடு பட்டு உழைத்த உங்கள் மஹா காவ்யம் நிலைத்திருக்க வேண்டும். ராமன் புகழ் எங்கும் பரவ வேண்டும். எல்லோரும் பாடவேண்டும். உலகம் அதில் மகிழ வேண்டும். இது ஒன்றே என் விருப்பம். ராமனுக்கு நான் செய்யும் சேவை. நானே அதை எங்கு கேட்டாலும் அங்கேயே அமர்ந்து முழுதுமாக ரசிப்பேன்''

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ராமாயணம் எங்கு ப்ரவசனம் நடந்தாலும் நாம சங்கீர்த்தனம் எங்கு நடந்தாலும் அங்கே ஸ்ரீ ஹநுமானுக்கு ஒரு ஆசனம் நிச்சயம் உண்டு.


வால்மீகி யின் ராமாயணம் ஒரு ஆழமாக அரும்பாடு பட்டு வெட்டிய அமிர்தம் நிரம்பிய கிணறு. ஹனுமானின் ராமாயணம் மனதில் தானாகவே பீறிட்டு வெளிவந்த எல்லையில்லாத சுவையான நீரூற்று. காட்டுச்சுனை.


இரு கைகளையும் கூப்பி கண்மூடி ஹநுமானைத் தொழுத வால்மீகியின் வாயிலிருந்து புறப்பட்ட சொல் ''ராமனை விட ராமனைப்பற்றிய எண்ணம் , அவன் நாமம் உயர்ந்தது. இதுவே ஆஞ்சநேயன் எப்போதும் சொல்லும் ''ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் சீதா ராம்''' எனும் ராம மந்திரம். ''ராம் ஸே படா, ராம் கா நாம் '' ( राम से बड़ा राम का नाम ).