Advaitam is simple
ரொம்ப பெரிய விஷயம் இல்லை அத்வைதம் -- J.K. SIVAN
இருப்பது போல் தோன்றினாலும் இல்லாதது தான் மாயை . சாஸ்வதம், நிரந்தரம் போல் தோன்ற வைத்து மறைவது தான் மாயை. எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை சூன்யம் என்கிறது பௌத்தம்.
பிரபஞ்சம் என்பவதே மாயைதான். உலகே மாயம், வாழ்வே மாயம், சுகமே மாயம் தான் ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்று ஒரு பரம சத்தியம் நிச்சயமாக இருக்கிறது என்று தான் சங்கரர் அத்வைதத்தில் ஜகத் மித்யா, ப்ரம்மம் சத்யம் என்கிறார்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் நம்மை சுற்றி நடப்பதை கண்ணால் பார்க்கிறோம், அனுபவிக்கிறோம், இது எப்படி சார் மாயை ஆகும்?
மாயை என்பது அடியோடு இல்லாத ஒன்று (அத்யந்த அஸத் ) என்றா சொன்னார் ஆதி சங்கரர்? முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று உதாரணங்கள் காட்டுவது வேண்டுமானால் நிச்சயம் இல்லாதது என்று புரிகிறது. மாயை அப்படிப்பட்டதா? இல்லை. அது இருப்பதாக நினைக்கிற வரை, தோண்றுகிறவரை அது இருப்பது தான். வெயிலில் நான் காணும் கானல் நீர் கண்ணுக்குத் தெரிந்தாலும், அதில் நீர் இல்லை. குடிக்க ஓடும் மான் இறந்து போகிறது. உலகை மாயம் என்று சொல்லும்போது உலகம் கண்ணுக்குத் தெரிகிறதே. அது என்றும் நிரந்தர சத்தியமல்ல என்று தான் படித்து படித்து ஞானிகள் நம்மள ஞாபகமூட்டுகிறார்கள்.
அரை இருட்டில், காற்றில் ஆடும் கயிறு நீளமான பாம்பாக தெரிகிறது. ஒரு மரத்தின் காலை வா வா என்று இருட்டில் நம்மை அழைக்கும் பிசாசு என்று அலறுகிறோம், உடல் வியர்க்கிறது, வார்த்தை வராமல் நாக்கு குழறுகிறது. ஏன்? அது கயிறு நிச்சயம் பாம்பு இல்லை, கிளை பேய் இல்லை என்று புரிபடும் தவறி அது இருப்பது தோன்றுகிறது. அது அப்போது டெம்பரரி யாக இருக்கிறதே. அது தான் சார் மாயை. பாம்பு இருந்தால் பேயைக் கண்டால் நிஜமாகவே ஏற்படும் பயம், பதட்டம் இருக்கிறதா இல்லையா? அது தான் உலக வாழ்க்கை ஈர்ப்பு.
எதையுமே நாம் இது நிச்சயம், நிரந்தரம் என்று நம்பும் வரை அது ஆட்டி வைக்கும் ஆட்டத்துக்கு ஆடத் தான் வேண்டும். இந்த ஆட்டம் பாட்டம் தான் சுக துக்கங்கள். நமது சகல செயல்பாடுகள், காரியங்கள் எல்லாமே இப்படி தான் நடக்கிறது.
தைரியமாக ரெண்டு பேரை கூட்டிக்கொண்டு போய் டார்ச் அடித்து பார்த்தப்புறம் தான் கயிறு தான் பாம்பு இல்லை என்று தெரிந்தது, மரக் கிளை நிச்சயம் பேய் இல்லை என்று தெரிந்து நிம்மதியாக பெருமூச்சு.
ஞானிகள் அதனால் தான் உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே. அதற்கும் ஆதார பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அடித்து சொல்கிறது கொஞ்சம் ஆழ்ந்து புரிந்துகொள்ளும்போது தான் தெரியும். அது தான் ஞானம்.
ஞானம் வருகிற வரையில் நிறைய தோற்றங்கள் உண்மை போல தான் தெரியவரும். கனவு காண்கிற வரையில் கனவு நிஜமாக நடப்பது போல், மலையின் மீது ஏறி அங்கிருந்து கால் தவறி விழுந்து தூக்கத்தில் உளறு கிறோம். மெய்யாக இருந்து, நாம் விழித்துக் கொண்டால் நான் எப்படி நங்கநல்லூரில் படுக்கையில் இருப்பேன். மலை அடிவாரத்தில் அல்லவோ உடல் சின்னாபின்னமாகி இருக்கும்.?
அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் வரையில் உலகம் மெய்யாக தான் தோன்றும். ஞானம் பெற்று விழித்துக் கொண்டபின் உலக காட்சிகள் எல்லாமே மறைந்து போகிறது. அப்பட்டமான பொய், , அக்மார்க் உண்மையாக தோன்றியதெல்லாம் புரியும். சிரிப்பு வரும். நாமா இப்படி ஏமாந்தோம்?
இப்படி டெம்போரரியாக நிஜம் போல் தோன்றுவதை பிரதி பாஸிக ஸத்தியம் என்று சொல்வது வழக்கம். தெருவில் நடக்கும்போது ''அட யாரோ வெள்ளி சாமான் ஒன்றை கீழே போட்டுவிட்டார்கள் என்று ஆசையாக எடுத்துக் கொள்பவன் அது சூரிய ஒளியில் மின்னிய கிளிஞ்சல் '' என்று தெரிந்து கொள்ளும்வரை அவனுக்கு கிளிஞ்சல் வெள்ளி தான். பிரம்மத்தில் மாயையால் உலகம் தாற்காலிகமாக மினுமினுக்குகிறது.
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம். பூஜ்யம் 0 அதற்கு மதிப்பில்லை. அதன் அருகே ஏதாவது நம்பர் இருந்தால் தான் அதற்கு மதிப்பு. பிரம்மத்தை தெரிந்து கொண்டால் மாயை புரியும். இந்த பூஜ்ய ராஜ்யத்தை புரியாமல் ஆளும் கிருஷ்ணனை புரிந்து கொண்டால் எல்லாமே புரிந்துவிடும்.
அவன் சர்க்கரை. சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்து வைத்திருக்கிறது. பார்க்க வேறு வேறு ரூபம். ஆனால் எல்லாமே ஒரே இனிப்பு தானே. ஒரே பிரம்மம் பிரபஞ்சத்தில் இத்தனையுமாக காட்சி அளிக்கிறது.
பச்சை கலரில் பாகற்காய் பொம்மை ஒன்று சர்க்கரையினால் செயது வைத்தால்? குழந்தை இது கசக்கும் என்று ஓடி விடும். தொடாது. பார்ப்பதற்கு அது கசப்பு வஸ்துவாக தெரிகிறது. உண்மையில் மிக இனிப்பான சர்க்கரை என்று தெரிந்தால் பாகற்காய் காணாமல் ல்போகிறது.
சதானந்த பிரம்மத்தை உணர்ந்து கொண்டால் உலகம் இல்லாதது புரியும். புரிந்து கொள்ளும் எல்லோரும் தாடி வைத்த ஜடாமுடி வேதகால ரிஷிகள் தான். நாம் பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்ட ரிஷிகள். ஞானிகள்.
அதனால் தான் சொல்கிறோம். கீதை சொல்கிறது. நமக்கு கருப்பு ஞானிக்கு வெளுப்பு. நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு. பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டு தான். இருட்டான மாயைத்தான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. எப்படியா? மாயையும் பிரம் மத்தை சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. சந்திரன் சூரியனிடம் ஒளி பெறுவதை போல.
இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. எதிரே வரும் லாரி, கார், பஸ், பளிச்சென்று முழு விளக்கு வெளிச்சத்தில் நமக்கு எல்லாம் தெரியவேண்டுமே ஏன் எல்லாமே இருண்டு போகிறது. ஒன்றுமே பார்க்க முடியவில்லை, கண் கூசுகிறது.
நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பது இதனால் தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends