293.சயிலாங்கனைக்கு
293மதுராந்தகம்
தனதாந்த தத்த தனதனத்தத்
தந்தனத் தனந்த தனதானா
சயிலாங்க னைக்கு ருகியிடப்பக்
கங்கொடுத் தகம்பர் வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையிடத்துக்
கங்கைவைத் தநம்பர் உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழநித்தத்
த்வம்பெறப் பகர்ந்த வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற்
றுங்குருத் துவங்கு றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததியிற்கொக்
கன்றனைப் பிளந்து சுரர்வாழ
அகலாண்ட முற்று நொடியினிற்சுற்
றுந்திறற்ப் ரசண்ட முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகுலப்பொற்
குன்றிடித் தசங்க்ர மவிநோதா
மதுராந்த கத்து வடதிருச்சிற்
றம்பலத் தமர்ந்த பெருமாளேபதம் பிரித்து உரை

சயில அங்கனைக்கு உருகி இட பக்கம்
கொடுத்த கம்பர் வெகு சாரி
சயில அங்கனைக்கு - மலை மகளாகிய பார்வதிக்கு உருகி - (அவள் பக்திக்கு) மனம் உருகி இடப் பக்கம் கொடுத்த - தமது இடப் பாகத்தைத் தந்து அருளிய கம்பர் - சிவபெருமான் வெகு - பலவிதமான சாரி - வட்டமாய் ஓடுதல் முதலான கூத்துக்களையும்
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து
கங்கை வைத்த நம்பர் உரை மாள
சதி தாண்டவ அத்தர் - தாள ஒத்துக்களையும் கொண்ட ஆடலை உடையவர் சடை இடத்து - சடையில் கங்கை வைத்த நம்பர் - கங்கை வைத்துள்ள பெருமான் உரை மாள - (இத்தகைய சிவனுக்கு) வாக்கு அழியவும்
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த
த்வம் பெற பகர்ந்த உபதேசம்
செயல் மாண்டு - செயல் அழியவும் சித்தம் அவிழ - மனம் ஒடுங்கவும் நித்தத்வம் பெற - நிலையான தன்மையைப் பெற பகர்ந்த உபதேசம் - (நீ) செய்த உபதேசத்தை
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும்
குருத்துவம் குறையுமோ தான்
சிறியேன் தனக்கும் - சிறியவனாகிய எனக்கும்
உரை செயில் - நீ
சொல்லிஅருளினால் சற்றும் - கொஞ்சமேனும்
குருத்வம் குறையுமோதான் - உனது குரு மூர்த்தியாகி பதவி குறைந்து விடுமோ?
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்
தனை பிளந்து சுரர் வாழ
அயில் வாங்கி - வேலாயுதத்தை எடுத்து எற்றி - செலுத்தி உததியில் - கடலிலிருந்த கொக்கன் தனை - மாமர வடிவமாக நின்ற சூரனை
பிளந்து - பிளந்து சுரர் வாழ - தேவர்கள் வாழும்படி
அகில அண்டம் முற்றும் நொடியினில் சுற்றும்
திறல் ப்ரசண்ட முழு நீல
அகில அண்டம் முற்றும் - சகல அண்டங்களையும்
நொடியினில் - ஒரு நொடிப் பொழுதில் சுற்றும் - சுற்றிய திறல் - வலிமை வாய்ந்த ப்ரசண்ட - கடுமையான முழு நீல - முழுநீலம் கொண்ட
மயில் தாண்ட விட்டு குது குல பொன்
குன்று இடித்த சங்க்ரம விநோத
மயில் தாண்ட விட்டு - மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும் முது - பழைய குல - சிறந்த பொன் குன்று - பொன் மயமான மேரு மலையை இடித்த - செண்டால் இடித்துத் தள்ளியவனுமாகிய சங்க்ரம - போர் விநோதா - விளையாடல் உடையவனே
மதுராந்தகத்து வட திரு
சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே
மதுராந்தகத்து வட - மதுராந்தகத்துக்கு வட திசையில் உள்ள திருச் சிற்றம்பலத்து - திருச் சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே - வீற்றிருக்கும் பெருமாளேசுருக்க உரை

விளக்கக் குறிப்புகள்
செண்டு - பிரம்பு போன்ற ஒரு ஆயுதம்; ஆனால் இரண்டு வளைந்த நுனியிருக்கும் ஐயனார்க்கும் இந்த ஆயுதம் உண்டு இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது. { கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே திருப்புகழ் மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கையில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம் }
1இடப் பக்கம் கொடுத்த கம்பர்
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா -திருப்புகழ்,பொற்பதத்தி
இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா -திருப்புகழ், கடல்பரவ


2குருத்வம் குறையுமோதான்
இங்ஙனம் வினவுதல் முருகனோடு அசதியாடுதலாகும் (பரிகசித்தல்)


அருணகிரி நாதர் சிவனுக்கு உபதேசித்த இரகிசியத்தைத் தமக்கும்
உபதேசிக்குமாறு பல உத்திகளைக் கையாண்டு உள்ளார்
நயமாகக் கேட்டது -
நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய்என ஓதிய தெப்பொருள்தான் --- கந்தர் அனுபூதி

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவ - திருப்புகழ்,அகரமுதல்

ஏமாற்றும் வகையில் கேட்டது -
வேண்டாமை யொன்றைய டைந்துள
மீண்டாறி நின்சர ணங்களில்
வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையோனாய்
--திருப்புகழ்,மாண்டாரெலும்
ஏசும் வகையில் கேட்டது -
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசம்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற் றுங்கு ருத்து வங்கு
றையுமோதான் - திருப்புகழ், இப்பாடல்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
3அகிலாண்ட முற்று நொடியினிற் சுற்றுந் திறல்
முருகன் சூரனைச் அழித்த பின் மயில் மீது அகில அண்டங்களைச் சுற்றினார்
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா,
திருப்புகழ், தொடத்துளக்கி