Announcement

Collapse
No announcement yet.

Viranminda nayanar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Viranminda nayanar

    விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்" –
    J.K. SIVAN


    ஏதோ ஒரு விறல் எங்கோ மாட்டிக்கொண்டு யாரோ அதை மீட்ட மாதிரி ஒரு பெயர் ஒரு சிவபக்த சிகாமணிக்கு . உண்மையில் அவர் பெயர் ''விரல் மீண்ட நாயனார்'' அல்ல. அவரை ''விறன் மிண்டர்'' என்று தான் சுந்தரர் அழைக்கிறார். அது தான் அந்த நாயனார் பெயரா? அல்லது காரணப்பெயரா என்று அறிய கால தாமதமாகலாம். எனவே அவரது சரித்திரத்துக்குள் மட்டும் போவது உசிதம்.


    இந்த நாயனார் சேரநாட்டை சேர்ந்தவர். மலையாள தேசத்தில் மலைகள் அதிகம். அதில் ஒரு மலைநாடு தான் செங்குன்றூர் எனும் கிராமம். அந்த ஊர்க்காரர் இந்த சிறந்த சிவபக்தர். வேளாண்மை தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு அற்புதமான மனிதர். எல்லா சிவன் கோயில்கள் இருக்கும் ஊர்களுக்கு செல்வார். அங்கே திருப்பணி ஆற்றுவார். அங்கு வரும் பக்தர்களை உபசரித்து அவர்களுக்கு சேவை செய்வார். அவர்களை வணங்கிவிட்டு தான் உள்ளே கோவில் கொண்டுள்ள சிவனை தரிசிப்பார். சிவனை விட சிவனடியார் முதலில் வழிபடவேண்டியர் இப்படி ஒரு அபூர்வ பழக்கம் அவருக்கு. சிவனடியார்க்கு அடிமையான அவர் பற்றற்ற ஒரு உண்மை துறவி எனலாம்.


    இப்படிப்பட்ட நாயனார் சேரநாட்டின் அனைத்து சிவன் கோவில்களையும் சென்றடைந்து பக்தர்களை சேவித்து, வணங்கி அவர்களுக்கு சேவை செய்து பிறகு அந்தந்த கோவில் பரமேஸ்வரனை வணங்கிய பின் சோழநாடு செல்கிறார்.


    சோழநாடு அடையுமுன்பு வழியெல்லாம் இதே போல் சிவனடியார்களைக் கண்டு மகிழ்ந்து வணங்கி ஒரு வாறு சோழநாடு அடைகிறார்.


    திருவாரூர் தியாகராஜனைபற்றி கேள்விப்படாதார் யார்? விறன்மிண்டர் வெகு ஆவலோடு தாயை நாடும் சேயாக திருவாருர் ஆலயத்தில் நுழைகிறார். நிறைய பக்தர்கள் எங்கிருந்தோ எல்லாம் வருவதைக்கண்டு மகிழ்ந்து அவர்களை வணங்கி தன்னாலான சேவையை அவர்களுக்கு செயகிறார். தியாகேசனை கண்ணார தரிசனம் செய்கிறார். அந்த புனித க்ஷேத்ரத்தை விட்டு அகல மனமின்றி சிலநாள் அங்கே தங்குகிறார்.


    ஒருநாள் பக்தர்கள் சிலர் பேசுவது காதில் விழுகிறது.


    ''இன்று என்ன விசேஷம் அதிக பக்ஷமாக பக்தர்கள் இங்கே கூடி இருக்கிறார்களே?'' என நாயனார் கேட்க ஒருவர்
    '' நீர் இந்த ஊர்க்காரர் தானே, அல்லது ஊருக்கு புதிதா?''
    ''சுவாமி நான் இந்த ஊருக்கு புதிதானவன், சிவனின் பழைய பக்தன்''
    ''ஓ அது தான் உமக்கு சமாச்சாரம் தெரியவில்லை''
    ''சுவாமி என்ன சமாச்சாரம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?''
    ''இன்று இங்கு யார் வருகிறார் தெரியுமா உமக்கு?''
    ''தெரியவில்லையே ''
    ''பல க்ஷேத்ரங்களுக்கு சென்று பரமசிவனை வழிபாட்டு பாடல்கள் பாடி, இறைவனே மிகவும் விரும்பும் ஒரு சிவ பக்தனான சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இங்கே விஜயம் செய்கிறார்.''
    ''ஓ அப்படியா, அது தான் இவ்வளவு ஆரவாரமா, பக்தர்கள் கூட்டமா?''
    ''அதோ சிவபக்தி ஜொலிக்க நெற்றியில் திருநீறணிந்து நிற்கிறாரே அவர் தான் சுந்தரரின் மனைவி பறவை நாச்சியார்'' ஒவ்வொரு நாளும் தவறாது இங்கே பரமேஸ்வரனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்பவர்''
    '' அடடா நான் என்ன பாக்யம் செயதேன் இந்த திவ்ய தரிசனம் பெற?'' என்று பக்தியால் ஆனந்த கண்ணீர் வடித்து பறவை நாச்சியார் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறார் விறன்மிண்டர்.


    தூரத்தில் பக்தர்கள் கோஷம் கேட்கிறது. ''பரமேஸ்வரா பார்வதி பதே, தியாகேசா, என்று ஒலி கேட்க, சுந்தரரின் பாடல்களைப் பாடியவாறு ஒரு பக்தர் குழாம் நெருங்கிவருகிறது. அழகே உருவான வாலிபனாக சுந்தரர் வெகுநாள் கழித்து சந்திக்கும் நண்பனைக் காண ஆவலோடு கூப்பிய கரங்களோடு உள்ளே வருகிறார்.


    ஆலயத்தில் தேவாசிரிய மண்டபம் பொங்கி வழிகிறது. பக்தர்கள் கூட்டம் பத்து நூறாகி ஆயிரமாகும் அளவு பரமேஸ்வரா, ஓம் நமசிவாய சப்தங்களோடு நிறைகிறது. 'நம்பி ஆரூரர் வாழ்க, என்று ஒரு கோஷம்'' சுந்தரரின் கண்கள் பறவை நாச்சியாரை கண்டு மகிழ்கிறது. நாச்சியார் ஓடிவந்து அவருக்கு அருகே நிற்கிறார். சுந்தரர் இனிய குரலில் ஆரூரனைபோற்றி பாடுகிறார்.


    சுந்தரரின் கண்களில், கூட்டமோ, மண்டபமோ, நாச்சியாரோ, எதுவுமே தென்படவில்லை. உள்ளே சர்வாலங்கார பூஷிதனாக காட்சி தரும் சிவபெருமானையே இமைக்காமல் தரிசிக்கிறார். நேராக கற்பகிரஹம் நோக்கி செல்கிறார்.


    விறன்மிண்ட நாயனார் இதுவரை சுந்தரரை சந்தித்ததில்லை, ''இவரா சுந்தரமூர்த்தி எனும் நம்பியாரூரர்'' சிறந்த சிவபக்தர், பெருமானே தோழராக ஏற்றுக்கொண்டவர். இவ்வளவு சிவபக்தர்கள் நிறைந்த இந்த மண்டபத்தில் யாரையுமே அவர் காணவுமில்லை, வணங்கவுமில்லையே. ஏன் ? சிவனை விட பக்தர்கள் அல்லவோ உயர்ந்தவர்கள்? அது கூட தெரியாத சுந்தரர் நிச்சயம் சிவபக்தர் இல்லை. இவர் தவறு செய்தவர். இவர் ஆலயத்தில் நுழையக்கூட தகுதி அற்றவர். அவரை விட இந்த சுந்தரரை இவ்வாறு நடந்துகொள்ள அனுமதித்த பரமசிவனும் கடவுள் அல்ல''. அதிர்ச்சி அடைந்த விறன்மிண்டர் தான் எங்கிருக்கிறோம் என்பதை மறந்தவராக நேராக சுந்தரரை நோக்கி ஓடுகிறார். தடுக்கிறார் அவரை.


    ''சுந்தர மூர்த்தி, சற்று நில்லும். என்ன காரியம் செய்து விட்டீர்? ''
    ''சிவபக்தர் நீங்கள் யார், அடியேன் என்ன தவறு செய்தேன் , பொருத்தருளவேண்டும்'' என்கிறார் சுந்தரர் திகைப்புடன்.
    ''இதோ இந்த எண்ணற்ற சிவபக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ இங்கே சிவதரிசனம் பெற பல நாட்களாக காத்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நீங்கள் வணங்கவேண்டாமா முதலில், சிவபக்தர்கள் அல்லவோ சிவனை விட உயர்ந்தவர்கள். அவர்களை மதிக்காதவருக்கு எப்படி முக்தி கிடைக்கும் சொல்லுங்கள். நீங்கள் சிவபக்தர் குழாம் சேர்வதற்கு அருகதை அற்றவராகி விட்டதால், பக்தர்கள் குழாம் உங்களை விளக்கி வைக்கிறது. அது தான் ஞாயம்.'' என்கிறார் விறன்மிண்டர்.


    ''ஆஹா அடியேன் செய்தது பிழை தான். என எல்லோரையும் வணங்குகிறார் சுந்தரர்.
    விறன்மிண்டர் ஆவேசம் கொண்டு மேலும் கர்ஜிக்கிறார்.


    '' உம்மை இப்படி பக்தர்களை உதாசீனப்படுத்த ஒத்துழைத்த சிவனும் தவறிழைத்தவர் தான். பக்தர்களை அவமதித்த உம்மை புறக்கணிக்க தவறிய குற்றம் அவரும் இழைத்துவிட்டார். ''


    சித்தப்ரமை பிடித்தவர் போல் விறன்மிண்டர் இவ்வாறு உரக்க ஒலித்தவுடன் சுந்தரர் கண்களில் நீர் பெறுகிறது.


    ''தியாகேசா.....இதுவும் உன் சோதனையா? எப்படிப்பட்ட தவறை, பாபத்தை நான் செயது விட்டு தவிக்கிறேன். இதற்கு என்ன தண்டனையோ அதை நீயே இப்போதே கொடுக்கவேண்டும். இந்த சிவனடியார்கள் அனைவருக்கும் நான் அவர்கள் திருவடி பணியும் தாசனாக வேண்டும் அதற்கு எனக்கு அருள் புரியவேண்டும்'' என்கிறார் சுந்தரர். கருவறையில் தோன்றும் சிவபிரானை வேண்டி கண்ணீர் உகுக்க சிவனின் குரல் அவருக்கு கேட்கிறது :


    ''சுந்தரா, "நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி "தில்லைவாழந்தணர்" என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை "தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார். நாம் அவரியற்றிய திருத்தொண்டர் தொகை எனும் சிவநேச செல்வார்கள், நாயன்மார்கள் அனைவரையும் அறிகிறோம். அத்தனைபேருக்கும் நான் திருவடி தொண்டன் என்கிறார் சுந்தரர்.


    ஒன்று நிச்சயம் தெரிகிறது. சிவன் தான் விறன்மிண்டர் உடலில் புகுந்து இவ்வாறு ஆவேசம் கொண்டு பேச வைத்து அதன் மூலம் தானே அடியெடுத்துக் கொடுத்து நமக்கு சுந்தரரை ஒரு கருவியாக உபயோகித்து திருத்தொண்ட தொகையை அருளியிருக்கிறார். தென்னாடுடைய சிவனே போற்றி என்று உரக்க பாடுவோம். கைகூப்பி தொழுவோம்.
Working...
X