Announcement

Collapse
No announcement yet.

Narasimha vigraha & taxi driver

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Narasimha vigraha & taxi driver

    Narasimha vigraha & taxi driver
    என்ன தம்பி நீங்க எங்க சாமிய வெச்சிருக்கீங்க?' ஓலா காரில் ஏறி, டேஷ்போர்டில் இருந்த அலங்கார லக்ஷ்மிந்ருஸிம்ஹ விக்ரஹத்தைக் கண்டவுடன் கேட்டேன்.


    'அட, இவன் உங்களுக்கும் சாமியா, சரிதான். அவன் தனக்கு வேணுங்கறவங்களைத்தான் வண்டில ஏத்துவான்..' என்ற கார்த்திக் சிரித்தார்.


    'அது சரி. நரஸிம்மர் விக்ரஹம் எப்படி இங்க..?' கேட்டேன்.


    'நரஸிம்மனப் பத்தி சொன்னா நாள் முழுக்க பேசிக்கிட்டே இருப்பேன்,' முக மலர்ச்சியுடன் சொன்ன ஓட்டுனர் மேலும் தொடர்ந்தார்.


    'இவரு எங்கிட்ட வந்தது எப்பிடின்னு தானே கேக்கறீங்க? இவரு என்னோட கத்தாருக்கே வந்தாரு. இவரு இல்லாம நான் இல்லை' என்றவரின் முகமலர்ச்சி உண்மையாகவே தோன்றியது.


    'ஆமாங்க, கத்தார்ல நம்ம சாமில்லாம் இருக்கக் கூடாது. ஆனா, இவரு இருந்தாரு. அங்ஙன கம்பி கட்ற வேலைக்கிப் போனேன். தினமும் காலைல இவருக்கு ஒரு பத்தி ஏத்தி வெச்சுட்டுப் போயிடுவேன். ராத்திரி எந்த நேரமா இருந்தாலும் வந்து, குளிச்சுட்டு, இவரு மேல தண்ணி ஊத்தி ஒரு அபிசேகம் பண்ணிட்டு, பொறவு தான் நான் சாப்புடுவேன். சனிக்கிழமைகள்ல ஒட்டகப் பால் வாங்கி அபிசேகம் செய்வேன்,' என்றவர் என்னைத் தனது உலகத்துக்குள் ஈர்த்தார். பின் இருக்கையில் இருந்த என் மனைவி, மகன் முகங்களில் ஆச்சரியக் குறிகள். நீண்ட உபன்யாசத்திற்குத் தயாரானேன்.


    'ஆனா ஒண்ணுங்க. வெறும் கம்பி கட்டற வேலைக்குப் போன என்னை அந்த காண்டராக்ட்ல பல பேர வெச்சு வேலை வாங்கற நிலைக்கு ஒசத்தினார் சார் நரஸிம்மர். பொறவு நான் கம்பியே கட்டல..'


    'அப்புறம் எப்பிடி இங்க, இந்தியால?' என்றேன்.


    'வந்தப்புறம் ஒரு லாரி வாங்கி விட்டேன். எட்டரை லட்சம் கடன். முழுகிடுவேன் போல இருந்துச்சு. போன மாசம் வரைக்கும் தலை வரைக்கும் கடன். ஆனா, இப்ப வெறும் அம்பதாயிரம் தான் கடன் இருக்கு. அவன் கொடுக்கணும்னு நினைச்சான்னா யாரால தடுக்க முடியும்?' என்றவரை நம்புவதா இல்லையா என்று மனதில் ஓட, வியப்பில் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.


    'ஒண்ணு மட்டும் உண்மைங்க. இவன் பேசற தெய்வம். நான் இவனைப் பார்த்து அழுதுகிட்டே இருக்கேன். முன்னாடி இவன் எங்கிட்ட இல்லீங்க. இவன் எங்கிட்ட வந்தது பெரிய கதை..' என்று தொடர்ந்தவரைக் குறுக்கிடாமல் வாயை மூடிக்கொண்டேன்.


    'மொதல்லயும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப, இவரு எங்கிட்ட இல்லை. டேஷ்போர்டுல பிள்ளையார் பார்க்கறீங்கல்ல அவரு மட்டும் தான் இருந்தாரு. அவரும் நான் செஞ்ச பிள்ளையாரு. நான் எதப் பார்த்தாலும் செஞ்சுடுவேன். பிள்ளையாரு, முருகன், அம்மன் இப்பிடி பல தெய்வங்களைக் கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஒரு மாதிரி முருகன் பைத்தியமாவே இருந்தேன். ஆனா பிள்ளையார், முருகன்னு மாறி மாறி வந்து இப்ப கடைசில நரஸிம்மரப் புடிச்சிருக்கேன்,' என்றவர் ஒரு நிமிடம் அமைதி காத்தார்.


    'இவுரு எப்பிடி வந்தார்னு சொல்லல இல்ல? டேஷ்போர்டு வெறும இருந்துச்சு. வெச்சா இவரதான் வெக்கணும்னு இருந்தேன். உங்கள மாதிரி ஒரு அய்யிரு ஏறினாரு. நரஸிம்மர் சிலை எங்க கிடைக்கும்நு கேட்டேன். அவுரு 'கிரி டிரேடர்ஸ்'லன்னாரு. ஒடனே போயி வாங்கிடணும்னு பார்த்தேன். கைவரல. ஒவ்வொரு முறை மயிலாப்பூர் போனாலும் உடனே சவாரி வந்து வேற எங்கியாவுது போயிடுவேன்.


    நார்மலா சனிக்கிழமைல வண்டிய எடுக்க மாட்டேன். அன்னிக்கி பெருமாளுக்கான நாள். அவருக்கான பூஜை, கோவில் அப்டின்னு இருந்துடுவேன். ஆனா ஒரு சனிக்கிழமை வண்டிய எடுத்தேன். நரஸிம்மா உன்னை வாங்காம ஓய மாட்டேன், இரு வறேன். இன்னிக்கி எவ்வளாவு வசூல் ஆகுதோ அதை வெச்சு வாங்கறதுன்னு முடிவு செஞ்சு காலைல வண்டிய எடுத்தேன். நாள் முழுக்க சவாரி. அதுவரைல அவ்வளவு சவாரி எடுத்த்தே இல்லை. சரி நரஸிம்மன் ஆழம் பார்க்கறான்னு எல்லா சவாரியையும் எடுத்தேன். பாருங்க, அன்னிக்கி மட்டும் மூணு முறை மயிலாப்பூர் சவாரி வந்துச்சு. ஒவ்வொரு முறை கிரி டிரேடர்ஸ் போகணும்னு இறங்கினாலும் உடனே வேற ஒரு சவாரி வந்துடும். கடைசியா கடை சாத்தற நேரத்துல கபாலி கோவில் சவாரி ஒண்ணு வந்துது. ஆள இறக்கி விட்டுட்டு கடைக்குள்ள ஓடறேன். கடை சாத்தற நேரங்கறாங்க. லைட்டு கூட அணைச்சுட்டாங்க. எப்பிடியாவுது எங்கிட்ட வந்துடு நரஸிம்மானு அழுதுகிட்டே அங்க கேக்கறேன். மேல போங்கறாங்க. நரஸிம்மர் சிலை விக்ரஹம் வேணும்னு அழுதுகிட்டே கேக்கறேன். இருட்டுல ஒருத்தர் எடுத்துக் கொடுக்கறாரு. பார்க்கக் கூட இல்ல. அப்பிடியே வாங்கினு வந்துட்டேன். அன்னிலேர்ந்து இவுரு எங்கூட இருக்காரு.


    தினமும் பூ அலங்காரம். வாரம் ஒரு முறை வஸ்திரம் மாத்துவேன். உள்ள பாருங்க,' என்றார். டேஷ்போர்டில் இருந்த பெட்டியில் பல வண்ணங்களில் வஸ்திரங்கள்.


    'இந்த மண்டபம்?' என்று கோவிலாழ்வாரைப் பற்றிக் கேட்டேன்.


    'அது இன்னொரு கதைங்க,' என்று துவங்கியவரைச் சிறிது பொறாமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தேன்.


    'நரஸிம்மர் வந்துட்டாரு. அவர வண்டில அமர்த்தியாச்சு, பூவெல்லாம் போட்டாச்சு, ஆனா நாள் பூரா வெய்யில்ல உக்காந்திருக்காரு. நாம ஏஸில இருக்கமே, இவரு இப்பிடி வெய்யில்ல வாடறாரேன்னு மனசு கேக்கல. ஒரு சின்ன குடை வாங்கி வெச்சேன். போதல, ஒரு கண்ணாடிக் கூண்டு செஞ்சு அதுக்குள்ள கார் ஏஸிய விடலாம்னு முயற்சி பண்ணினேன். ஒரு அய்யிரு சவாரில வந்தாரு. அது வேண்டாம். கண்ணாடில்லாம் வாணாம். சின்ன மண்டபம் மாதிரி இருக்கட்டும். காத்தோட்டமா இருக்கட்டும்நு சொன்னாரு. மண்டபம் பலதும் வெச்சு பார்த்தேன். ஒண்ணும் சரியில்லை.


    'அப்பதான் ஒரு சவாரி வந்ததுங்க. ஏறினவரு நரஸிம்மரையே பார்த்துக்கிட்டிருந்தாரு. என்னங்கன்னு கேட்டேன். இல்ல, சோளிங்கர் போகணும். வேளையே அமையலன்னு வருத்தப்பட்டாரு. இங்கன இவரப் பார்த்தீங்கல்ல, இவரு உங்கள கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. ஒரு வாரம் கழிச்சுப் பாருங்கன்னேன். சிரிச்சுக்கிட்டே ' ஏம்பா ஒரு மண்டபம் வைப்பா' ன்னாரு. 'தேடிக்கிட்டிருக்கேன்'ன்னேன்.


    ஒரு வாரம் கழிச்சு போன் பண்றாரு. இங்க வாப்பான்னு ஒரு அட்ரஸ் சொல்றாரு. போயி பார்த்தா பெரிய மரப் பட்டறை ஓனரு. அறுபது பேர் வேலை செய்யறாங்க அவர்ட்ட. என்னப் பார்த்துட்டு ஓடி வராரு. நாலு பேரக் கூப்பிட்டு தம்பிக்கு என்ன மாடல் புடிக்குதோ அதுல ஒரு சின்ன மண்டபம் செஞ்சு குடுங்கறாரு. எனக்குப் புல்லரிக்குது. அவரு எங்க, நான் எங்க. நாலு டிசைன் கொடுத்தாங்க. கடைசில இந்த டிசைன் தான் புடிச்சுது. செஞ்சும் குடுத்தாரு. அதே வாரம் சோளிங்கர் போயிட்டு போன் பண்றாரு.


    நான் ஏதோ செய்யறென்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அவன் செஞ்சுக்கறான். நாமெல்லாம் பொம்மைங்க சார். அவன் ஆட்டறான், நாம் ஆடறோம்,' என்றவர் அவ்விடத்தில் ஒரு சின்ன சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர் போல தெரிந்தார்.


    'அன்னிலேர்ந்து பெருமாள் மண்டபத்துல ஒக்காந்துட்டு இருக்கார்,' என்று தொடர்ந்தவர், 'ஆங், நான் எப்படி நரஸிம்மர் பித்து ஆனேன்னு கேட்டீங்கல்ல?' என்று கேட்டவர் தொடர்ந்தார். கேட்டதையே மறந்து நான் அமர்ந்திருந்தேன்.


    நெய்வேலி பக்கத்துல முத்தாண்டிக் குப்பம்னு ஒரு ஊர் இருக்கு ( நானும் நெய்வேலி என்பதால் தெரிந்திருந்தது). அங்க கருப்புசாமி கோவில்ல பூசாரியா இருந்தேன்,' என்றார்.


    'கருப்பு கோவில்ல பூசாரியா? நீங்க வேலூர்ன்னு தானே சொன்னீங்க?' என்றேன் சந்தேகத்துடன்.


    'சொல்றேன், சொல்றேன். வேலூர் தான். திருச்சில ஐ.டி.ஐ. படிக்கப் போனேன். அங்க முத்தாண்டிக் குப்பத்துல இருந்து இன்னொரு பையன் படிச்சான். அவன் கைல 'கருப்பு சாமி' பச்சை குத்தியிருந்திச்சு. என்னன்னு கேட்டேன். சாமின்னான். போயி பார்க்கலாம்னு போனா, கருப்பு என்னைப் புடிச்சு இழுத்துக்கிட்டான். ஐ.டி.ஐ., அப்புறம் கருப்பு கோவில் பூசாரியாயிட்டேன். அப்ப, பெரிய பூசாரி மகாபலிபுரம் பக்கத்துல இருந்து ஒரு சாமி விக்ரஹம் கொண்டு வந்தார். 'டேய், இது சின்ன சைஸ்னு பார்க்காத. ரொம்ப பவரு. சுத்த பத்தமா இருக்கணும். பேரு நரஸிம்மர்'ன்னாரு. அப்பலேர்ந்து நரஸிம்மர் மேல பக்தி வந்துடுச்சு. ரெண்டர மணி நேரம் ஒத்தக் கால்ல நின்னு, நரஸிம்மா, நரஸிம்மான்னு அவரோட பேரையே சொல்லிட்டு அழுதேன். பொறவு என் வாழ்க்கையே மாறிடுச்சு. அவரோட சிலைய வாங்கணும்னு அப்பவே தீர்மானிச்சேன். ஆனா, அவன் தீர்மானிக்கணுமே. அவன் எப்ப நினைக்கறானோ அப்பதான் நம்மகிட்ட வருவான்,' என்ற கார்த்திக் வேறு தளத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்.


    'நரஸிம்மர் விக்ரஹம் வந்ததும் வண்டில இன்னும் யந்திரம் தான் வெக்கலை. மத்தபடி எல்லாம் பண்ணிட்டேன். பலரும் வருவாங்க, யந்திரம் இருந்தா தோஷம் வரும். அதால வெக்கலை. பாருங்க பெருமாளுக்கு வஸ்திரத்துக்குள்ள பூணூல் போட்டிருக்கேன், தாயாருக்கு கருகுமணி போடணும்னு ஒரு மாமி சொன்னாங்க, போட்டிருக்கேன். சின்னச்சின்னதா கிரீடம், மாலைன்னு செஞ்சு போட்டுக்கிட்டே இருக்கேன். இவருக்கு எவ்வளவு செஞ்சாலும் இன்னும் செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்கு. நான் எங்க செய்யறேன். அவன் செஞ்சுக்கறான்.


    'சில மாசம் முன்னால ஒரு வயசானவரு ஏறினாரு. நரஸிம்மன் வந்தா சிவனும் வரணுமேன்னாரு. புரியல விட்டுட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சி மச்சான் சின்ன பஞ்ச லோக சிவ லிங்கம் வாங்கியாந்தான். ஒரு மாசம் வெச்சு பூஜை பண்ணினான். முடியல்லடா, நீ வாங்கிக்கோன்னு எங்கிட்ட குடுத்துட்டான். இப்ப அவரு ஊர்ல ஒரு சின்ன ஊஞ்சல்ல உக்காந்திருக்காரு. சின்ன கலசம் செஞ்சு அதிலேர்ந்து தண்ணி விழறாப்ல செஞ்சிருக்கேன். சிவன் அபிஷேப் பிரியன், ஆனா நரஸிம்மர் அலங்காரப் பிரியர். அதால தினமும் இவருக்கு இங்க பூ அலங்காரம்,' என்றார்.


    நீண்ட நெடிய கலாச்சார விழுமியத்தின் தாக்கம் ஏழை எளிய மக்களின் உள்ளும் இறங்கி, வடிந்து, கலந்து, உதிரத்தில் ஓடிக்கொண்டிருப்பதையும், பெருமாள் தனது பக்தர்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறான் என்றும் மனதில் ஓட, நானும் ஜானகியும் மகன் பரத்ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.


    'எனக்கு ஒரு ஆசையும் இல்லை சார். நம்ம பெருமாளுக்கு ஊர்ல ஒரு சின்ன கோவில் கட்டணும். விதம் விதமா அலங்காரம் செய்யணும். அவன் எப்பவும் குளிர்ச்சியாவே இருக்கணும், அவ்ளோதான் சார்'


    'கல்யாணம் ஆயிடுச்சா?' என்றேன், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள.


    'இல்லை. பார்த்துக்கிட்டிருக்காங்க. ஒரு பாலிஸி உண்டு சார். பொண்ணு ஏழையா இருந்தாலும் எப்பிடி இருந்தாலும் என்னை நம்பி வாழ வந்தா, சுகமா இருக்கணும். அதால ஊர்ல பதினஞ்சு லட்சத்துல கீழயும் மேலயுமா வீடு கட்டியிருக்கேன். அம்மா அப்பா அங்க இருக்காங்க. லாரி ஓடுது. கார் இருக்கு. வர்ற பொண்ணு கஷ்டப்படாம இருக்கும்,' என்றவரை வாழ்த்துவதா, வணங்குவதா என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன்.


    'ஓரமா நிறுத்துங்க. ஏ.டி.எம்.ல பணம் எடுக்கணும்' என்றவனிடம், 'நீங்க பணம் கொடுக்கல்லேன்னாலும் பரவாயில்லீங்க. பெருமாளுக்குப் பிரியமானவர் நீங்க,' என்றவருக்கு என்னிடம் பதில் இல்லை.


    ஒரு ஏ.டி.எம். கையிருப்பை மட்டும் காட்டி, பணம் தர முடியாது என்றது ( ஐ.சி.ஐ.சி.ஐ.). வண்டிக்கு வந்தவுடன்,' சார், எனக்கு வர வேண்டியது எப்படியும் வந்துடும் சார். ஒரு சவாரி நூறு ரூபா கொடுக்கணும், பணம் இல்லை, கையிருப்பு எண்பது ரூபா தான். இருக்கறதக் கொடுத்துட்டு பின்னாடி சில நாள் கழிச்சு மனசு கேக்கல தம்பி ஒன்னோட பாங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுன்னு கேட்டு கூட நூறு ரூபா அனுப்பி வெச்சார். எனக்கு என்ன தரணும்னு நரஸிம்மருக்குத் தெரியும் சார்,' என்ற அந்த வேதாந்தி பாரதத்தின் ஆன்மா என்றால் தவறில்லை என்று நினைத்தேன்.


    அருகில் எச்.டி.எப்.சி. ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து வந்த் போது, 'அது போகட்டும் சார். உங்க நம்பரக் கொடுங்க. என்னோட 'நரஸிம்மர் வாட்ஸப்' குரூப்ல சேர்த்துக்கறேன். வாரா வாரம் என்ன அலங்காரம்னு என்னோட பேசஞ்சர்ஸ் எல்லாருக்கும் அனுப்பிக்கிட்டிருக்கேன்,' என்று கூக்ளி போட்டு வீழ்த்தினார்.


    சரி தம்பி. நரஸிம்மருக்கு சாப்பிடறதுக்கு என்ன கொடுப்பீங்க?' என்றேன்.


    'நைவேத்யமா ஸார்? பானகம் தான். தினமும் பானகம் உண்டு,' என்றவரிடம் மேலும் கேட்க ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பரிபூரணமான பிரேமையுடன், அசைக்கமுடியாத பக்தியுடன் நரஸிம்மரின் சேவையே தனது வாழ்வின் பயன் என்று வாழ்ந்துவரும் கார்த்திக்கை விட சிறந்த ஸ்ரீவைஷ்ணவன் உண்டோ என்று எண்ணிக் கொண்டிருந்தபோது,


    ' இன்னொரு விஷயம் சார். இன்னிக்கிக் காலைல ஒரே சவாரில என்னோட டெய்லி டார்கெட் முடிஞ்சுது. வீட்டுக்குப் போகலாம்னு 'Go Home' அழுத்திக்கிட்டே இருக்கேன். பதில் வரலை. மீண்டும் அழுத்தினேன். வரலை. சரி, நரஸிம்மன் நமக்கு வேற வேலை வெச்சிருக்கான் போல' ந்னு பத்து நிமிஷம் செல்போன நோண்டிக்கிட்டிருந்தேன். அப்ப உங்க கால் புக் ஆச்சு. பெருமாள் தன் அடியார்களைத்தான் தன் கிட்ட அனுமதிப்பார் சார்,' என்ற கார்த்திக்கின் உருவில் பார்த்தசாரதி அமர்ந்திருந்தார்.


    'அஹோபிலம் போயிருக்கீங்களா?' என்றேன்.


    'அவசியம் போகணும் சார். ஆனா, நாம முயற்சி பண்ணா நடக்காது. அவனுக்குத் தெரியும். எப்ப வரச் சொல்றானோ போகணும். கூடிய சீக்கிரம் வரச் சொல்வான்னு நினைக்கறேன்,' என்றார்.


    இறங்குமிடம் வர, மனமில்லாமல் இறங்கி விடைபெற்ற பின் கார் நகர்ந்தது. நரஸிம்மரும் அவரது ஆத்மார்த்தமான பக்தரும் சிறிய ஆட்டத்துடன் நகர்ந்தனர்.


    'ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி


    நாடி நாடி நரசிங்கா வென்று வாடிடும் இவ்வாணுதளே'


    படித்ததில் பிடித்தது 😊
Working...
X