Announcement

Collapse
No announcement yet.

Mouna vratam -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mouna vratam -Periyavaa

    பேச்சு நின்ற ப்ரவசன மேதைக்கு, பேச்சு தந்த பெரியவா!


    பாகவத ஸப்தாஹம், நவாஹம் என்றாலே பல பக்தர்களுக்கு மாயவரம் ஶிவராமக்ருஷ்ண ஶாஸ்த்ரிகள்தான் நினைவிற்கு வருவார்.


    அப்படி ஒரு அருமையான ப்ரவ்சன மேதை! ப்ரவாஹமாக ஸ்லோகங்களும் மேற்கோள்களும் வர்ஷிப்பார்.


    "கேட்டது போதும்!"" என்று யாருக்குமே தோன்றாது. மெய்மறந்து கேட்கும் கூட்டம்.


    அப்படிப்பட்ட பண்டிதருக்கு திடீரென்று ஶரீர அஶக்தி உண்டாகி, மனஸிலும் மறதி இடம் பிடித்ததால், ப்ரவாஹமாக வரும் பேச்சு தடைபட்டது.


    குடும்பமே கலங்கியது.


    திக்கற்றவருக்கு தெய்வமே துணை! என்று வேறு எங்கு போவார்கள்?


    பெரியவாளின் தர்ஶனத்துக்கு வந்து கதறி அழுதார்கள். ஶாஸ்த்ரிகளும் பேச்சு வராவிட்டாலும், கண்களில் வழிந்த கண்ணீரால் தன் இயலாமையை கூறினார்.


    ஸாதரணமாக நம்மைப்போல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோர்க்கு, வாக்கு தடைபட்டால் "நல்லதாப் போச்சு!" என்று நம் குடும்பத்தாரே நினைப்பார்கள்.


    ஆனால், ஶாஸ்த்ரிகளோ, "பகவத் குணங்களை வர்ஷிப்பது தடைபட்டதே!" என்று உருகினார். அவருடைய குடும்பத்தார் மட்டுமில்லாமல், அவருடைய ப்ரவசனத்தைக் கேட்டு உருகிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருந்தினார்கள்.


    நல்ல கார்யம் தடைபட பகவான் விடுவானா?


    "எதுக்கு இத்தனை அழுகை? ஒண்ணும் கவலைப் படாதே! இன்னிக்கே, இப்போவே நீ ஸொஸ்தமாயிடுவே! "


    கம்பீரமாக அபயம் குடுத்துவிட்டு, சில ஸ்லோகங்களை எடுத்துக் கூறினார்.....


    "போ! நம்ம சந்த்ரமௌலீஶ்வரர் ஸன்னதில நின்னுண்டு, இந்த ஸ்லோகங்களை சொல்லு!"....


    ஸாக்ஷாத் சந்த்ரமௌலீஶ்வரரே சொல்லிவிட்டாரே! அப்புறம் என்ன?


    ஸ்வாமி ஸந்நிதியில் நின்றுகொண்டு பெரியவா குறிப்பிட்ட ஸ்லோகங்களை, கண்களும் சேர்ந்து அருவி போல் கொட்ட, மெல்ல சொல்லத் தொடங்கினார் ஶாஸ்த்ரிகள்.


    கூட்டத்தினர் கண்களும், காதுகளும், மனஸும் ஶாஸ்த்ரிகள் மேல்தான்!


    என்ன ஆஶ்சர்யம்!


    அப்படியே மடை திறந்த வெள்ளம் போல் கொஞ்சங்கூட தங்குதடையில்லாமல் ஸ்லோகங்கள் வந்தன! அத்தனைபேரும் ஆனந்தப் பட்டனர். நல்வாக்கை அனுக்ரஹித்த ஸரஸ்வதியான பெரியவாளை அழுதபடி நமஸ்காரம் பண்ணினார்.


    சில நாட்களிலேயே உடல் நிலையும் தேறி பழையபடி ப்ரவாஹமாக ஸப்தாஹமும், நவாஹமும் அவர் வாக்கில் வர ஆரம்பித்தது!


    பெரியவா ஸரஸ்வதி தேவியின் திருநக்ஷத்ரமான மூல நக்ஷத்ரத்தன்று மௌனவ்ரதம் இருப்பார்.


    அதற்கு அவர் சொல்லும் விளக்கம்.


    "ஓயாம எதையாவுது பேசிண்டே இருக்கோம். அது பொறத்தியார்க்கு நல்லது பண்றதா? இல்லியான்னெல்லாம் யோசனை கெடையாது.! மொழிக்காக ஒர்த்தருக்கொர்த்தர் அடிச்சுக்கறதைப் பாத்தா..... நாம எல்லாருமே ஊமைகளாப் போய்ட மாட்டோமா...ன்னு தோணறது!.....


    .....எல்லாரும் முடிஞ்சவரை ஜாஸ்தி பேசாம இருக்க பழகிக்கணும். அவஶ்யமானதுக்கு மட்டும் பேசினாப் போறும்....


    .....வாணா.... [வாழ்நாள்] பூரா, கண்டதைப் பேசிண்டே இருக்கறதுக்கு ப்ராயஶ்சித்தமா, வாக்ஶக்தியை நமக்கெல்லாம் அனுக்ரகம் பண்ற வாக்தேவியோட நக்ஷத்ரமான மூலா நக்ஷத்ரத்தன்னிக்காவுது கொறஞ்சபக்ஷம் எல்லாரும் மௌனவ்ரதம் இருக்க பழகிக்கணும்".


    ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி
Working...
X