334.ஆனாத ஞான புத்தி யை
334பொது


தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத் த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன தனதான


இந்த திருப்புகழில் 1. ஆனாத ஞான புத்தியை அனுக்ரகித்ததும்
2. நூல்களில் கருத்து அளித்ததும் 3. ஆசா பயோதியைக் கடக்க விட்டதும் 4. வாசா மகோசரத்தில் இருத்து வித்ததும் 5. பிரசித்தி பெற்றதும் 6. உலகேழும் யானாக இருத்தலை அருளியதும், 7. திருப்புகழ் தேனூற ஓதுவித்ததும் 8. திருப்புகழை எவரும் ஓதப் பணித்ததும் 9. பிறப்பற காரண இன்பமாய் என்னில் நீர் கலந்ததுமான வரலாற்று அனுபவங்களை ஒருநாளும் மறவேன் மறவேன் எங்கிறார்


ஆனாத ஞான புத்தி யைக்கொடுத்ததும்
ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்
ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ரழியாதே
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்
ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி துலகேழும்
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்
ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் இடராழி
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய
நானாவி கார புற்பு தப்பி றப்பற
ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் மறவேனே
மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்
மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு
மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி லொருமூவர்
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்
தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்
வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக வனமேவும்
தேநாய காஎ னத்து தித்த வுத்தம
வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்
சேராத சூர னைத்து ணித்த டக்கிய வரைமோதிச்
சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ
மாறாதி சாச ரக்கு லத்தை யிப்படி
சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய பெருமாளே

பதம் பிரித்தல்

1 ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும்
ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும்
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே


ஆனாத - என்றும் கெடாத. ஞான புத்தியைக் கொடுத்ததும் - ஞான அறவைக் கொடுத்ததையும். ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும் - ஆராய்ந்து அறிய வேண்டிய நூல்களில் கருத்தைக் கொடுத்ததும். ஆதேச வாழ்வினில் - ஒரு வழியாக நிலைத்திராத மயக்கம் உள்ள வாழ்க்கையில். ப்ரமித்து - மயங்கித் திளைத்து. இளைத்து - தளர்ச்சி உற்று.
உயிர் அழியாதே - உயிர் அழிந்து போகாமல்.


2 ஆசா பயோதியை கடக்க விட்டதும்
வாசா மகோசரத்து இருத்து வித்ததும்
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகேழும்


ஆசா பயோதியை கடக்கவிட்டதும் - ஆசை என்கின்ற கடலைக் கடக்கும் படியான ஆற்றலைத் தந்ததும். வாசாமகோசத்து - வாக்குக்கு எட்டாத ஒரு நிலையில்.[வாக்கால் உரைக்க மனதால் நினைக்க எவராலும் இயலாத இடம்] இருத்து வித்ததும் - என்னை இருக்கும் படி அருளியதும். ஆபோதனேன் - மிகவும் கீழ்ப்பட்டவனான நான். மிகப் ப்ரசித்தி பெற்று - மிக்க புகழ் எய்தி. இனிது - இனிமையுடன். உலகு ஏழும் - ஏழு உலகில் உள்ளவரும் உள்ளவையும்.


3 யான் ஆக நாம(ம்) அற்புத திருப்புகழ்
தேன் ஊற ஓதி எத்திசை புறத்தினும்
ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி


யானாக - நானே என்னும் அத்துவித நிலையைப் பெற. நாமம் - புகழ் கொண்டதும். அற்புதத் திருப்புகழ் - மிக அற்புதமாக அமைந்துள்ள திருப்புகழ்ப் பாக்களை. தேன் ஊற - தேன் ஊறிய இனிமையுடன். ஓதி - பாடி. எத்திசைப் புறத்தினும் - எல்லா திசைகளிலும் உள்ள. ஏடு ஏவு - நான் எழுதி அனுப்பம் கடிதமோ பாடலோ மரியாதையுடன் போற்றப் படத் தக்க. ராஜதத்தினை - மேன்மையை. பணித்ததும் - எனக்கு அருளிச் செய்ததும். இடர் ஆழி - துன்பக் கடலினின்றும்.


4 ஏறாத மா மலத்ரய குணத்ரய
நானா விகார புற்புதம் பிறப்பு அற
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே
ஏறாத - கரை ஏற முடியாத. மா மலத்ரய - பெரிய மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும். குணத்ரய - சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும். நானா விகாரம் - பலவிதமான கலக்கங்களும் ( காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை) எனப்பட்ட துர்க் குணங்கள் கூடியதும். புற்புதம் - நீர்க்குமிழி போல் தோன்றி மறைவதுமான. பிறப்பு அற - பிறப்பு நீங்கும் வகைக்கு. ஏது ஏமமாய் - இன்பம் தருவதான. எனக்கு அநுக்ரகித்ததும் - எனக்கு வரமாக தந்து அருளியதும். மறவேனே - நான் மறக்க மாட்டேன்.


5 மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர்
மா மேரு பூதர தனு பிடித்து ஒரு
மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர்


மா நாகம் நாண் - (வாசுகி என்னும்) பெரிய பாம்பாகிய கயிற்றை. வலுப்புறத் துவக்கி - பலமாக கட்டியுள்ள. ஓர் - ஒப்பற்ற. மா மேரு பூதரத் தநு பிடித்து - பெரிய மேரு மலையாகிய வில்லைப் பிடித்து. ஒரு - ஒப்பற்ற. மாலாய - திருமாலாகிய. வாளியை - அம்பை. தொடுத்து - செலுத்தி. அரக்கரில் ஒரு மூவர் - திரிபுரத்தில் இருந்த அசுரர்களில் மூன்று பேர் மட்டும்.


6 மாளாது பாதகம் புரத்ரயத்தவர்
தூளாகவே நுதல் சிரித்த வித்தகர்
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும்


மாளாது - இறந்து போகாமல். பாதகம் - பாபச் செயலில் ஈடுபட்டிருந்த. புரத்ரயத்தவர் - முப்புரத்து அசுரர்கள். தூளாகவே - பொடியாய் விழ. முதல் - முன்பு. எரித்த - புன்முருவல் செய்து எரித்த. வித்தகர் - பேரரிஞராகிய சிவபெருமான். வாழ்வே - பெற்ற செல்வமே. வலாரி - தேவேந்திரன். பெற்றெடுத்த - அடைந்து வளர்த்த. கற்பக வனம் மேவும்- கற்பக மரங்கள் நிறைந்த தோப்பு உள்ள.


7 தே(ம்) நாயகா என துதித்த உத்தம
வான் நாடர் வாழ விக்ரம திரு கழல்
சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி


தேம் நாயக - பொன் உலகத்துக்குத் தலைவனே. என - என்று. துதித்த உத்தம - போற்றித் துதித்த மேலானவரே. வான் நாடர் வாழ் - தேவர்கள் வாழும்படி. விக்ரம திருக்கழல் - வல்லமை பொருந்திய உனது திருவடியை. சேராத சூரனை - சிந்தித்துப் போற்றாத சூரனை. துணித்து அடக்கி - வெட்டி அடக்கி அ வரை மேதி - அந்த கிரௌஞ்ச மலையைத் தாக்கி.


8 சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ
மாறா நிசாசர குலத்தை இப்படி
சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே.


சேறு ஆய - சேறு போன்ற. சோரி - இரத்தம். புக்கு -
பாய்வதால். அளக்கர் - கடலும். திட்டு எழ - மலை மேடு போல் எழ. மாறா - பகைத்து நின்று. நிசாசர குலத்தை - அரக்கர் கூட்டத்தை. இப்படி - இந்த விதமாக. சீராவினால்
- உடை வாளால். அறுத்து அறுத்து - துண்டு துண்டாக அறுத்து. ஒதுக்கிய - தள்ளிய. பெருமாளே - பெருமாளே.சுருக்க உரை

விரிவுரை நடராஜன்

முப்புரத்தின் தலைவர் மூவர். புனித சிவத்தை அவர்கள் பூஜிக்கும் தொழிலினர்.
அதனால் அரச நிர்வாகத்தை அரக்கர் ஏற்றனர். இரக்கமற்ற அவர்களால் எங்கும் அக்கிரமங்கள் எழுந்தன.
மன்னர் மருண்டனர். விண்ணவர் வெருண்டனர். பாதளர் பதைத்தனர். அறிந்த சிவனார் எழுந்தார். வேர்களால் நிலம் தாங்கும் மேரு மலை வன்மை வில்லாகி வளைந்தது. நாண வாசுகி நாணியாயினர். அரி பரந்தாமர் அம்பானார். அக்கணையும் வில்லும் கைக் கொண்ட புனித இறைவர் பூமியாகிய தேரில் புறப்பட்டார்.
வில்லான மேரு , நாணியான வாசுகி, அம்பான அரி ஒவ்வொருவரும் எங்களால்தான் அழியப் போகிறது முப்புரம் என்று எண்ணி இறுமாந்தனர். அவர்கள் நினைவை சிவனார்
அறிந்தார். முப்புரங்களை நோக்கி முறுவலித்தார். சிரிப்பில் நெருப்பு சிதறியது. அரை நொடியில் முப்புரங்கள் அழிந்தன. சதி செய்த அவுணர்கள் சாம்பல் ஆயினர். அந்நிலையிலும், அவுண அதிபர்கள் எழுந்திலர். இறை வழிபாட்டிலேயே இருந்தனர்.
அவர்களின் தவக்கனல் சிவக்கனல் வெம்மையைத் தணித்தது. அதன் பின் சிறந்த அம்மூவரும் சிவகணர் ஆயினர். இது சிவ பாரம்மிய செய்தி.


நினைத்தவைகளை கற்பகம் நிறைவேற்றும், அக்கற்பகத் தருக்கள் எங்கும் விண்ணில் இருக்கின்றன. கனிவோடு இந்திரன் அவைகளை காப்பாற்றுகின்றான். தேவர்கள் வாழும்
அத்தேசம் தேவலோகம் எனப்பெறும். பயனான கற்பக மலர்கள், தேவர்கள், பரனை அர்ச்சிக்க பயன்படுகின்றன. இதனால் புண்ணியர்கள் தங்கும் அப்பொன்னுலகம், குமரா,
வளர்விக்கும் உனது அருள் நோக்கில் வாழ்கிறது. அந்த அருமையை அறிந்து, சிரித்த வித்தகர் வாழ்வே கற்பக வனம் மேவும் தேம் நாயகா என்று துதித்து அருமை வானவர்
உம்மிடம் அடைக்கலம் ஆகின்றனர்.


வாழ்த்தும் வானவர் வாழ்வு பெற என்றும் திருவுளத்தில் எண்ணுவீர். விக்ரமத் திருவடிகளைத் தியானிப்பவர்கள் விக்ரமர் என்று ஆவார். அவைகளை மறந்தவர் அக்ரமர் என்றாகி ஆரவாரம் எழுப்புவர். அருள் நெறிக்குப் புறம்பான சூரபதுமன்
ஆதியவரால் அமரர்கட்கு வாழ்வு இல்லை. அது கருதி, இரண்டு உயிர், ஓர் உடலாக இருந்த சூரபதுமனை, இரு கூறு ஆக்கினீர். ஒரு பாதி மயிலாக, மறுபாதி சேவலாக அவைகளை ஊர்தியும், கொடியுமாக மடக்கி அடக்கினீர்.


ஆணவ சூரனை மறைத்த மாயாமலையையும் க்ரவுஞ்சத்தையும் தவிடு பொடியாக்கினீர். 1008 அண்டங்களின் அமரர்களை அடக்கி ஆண்ட அவுணர் அனைவரையும் சீரா எனும் திருக்கை வாளால் சிதைத்தீர். அரக்கரை அழித்து அமரரைக் காத்தவர் சிவபெருமான். அச்சிவம் அளித்த சேயாகி அவுணரை அழித்து
அமரருக்கு அருளிய பெருமிதச் செல்வப் பெருமாளே.
அரைக்கீரையின் குணம் யாது ?, முளைக்கீரை என்ன செய்யும்?, நெய்யை உருக்குவது ஏன்? மோரைப் பெருக்குவது எதற்கு?, சந்திர ஒளியால் சார் பயன் யாது?, காலை, பகல், மாலை வெயில் படலாமா? படுவதால் வியாதி விளையும் இவை முதலிய பல சேதிகளை நூல்கள் கூறும். அவைகளைக் கற்றறிவம், அல்லது கேட்டறிவம். அறிந்தவைகளை சோதித்து அனுபவமும் பெறுவம். இது தான் புத்தி எனப்பெறும். சாத்திர பாஷையில் இவைகள் பாசஞானம் எனப்பெறும். இது இரவலாகப் பெற்ற
அறிவு என்பர்.


இவைகட்கு அயலானது பசுஞானம். இது ஆன்மாவின் சொந்த அறிவு. இரவல் அறிவை விட சொந்த மதிக்கு சுதந்திரம் அதிகம். எனினும் இந்த அறிவு தடித்தது. தடிப்பில் விளைவது தடுமாற்றம். இதன் வழியே இடர் அடைந்தவர் அளவிலர். இதன்
பெயர் ஞானபுத்தி இதைப் பசு ஞானம் என்றும் பகர்வர்.


கற்ற அறிவையும் , கேள்வி வழி பெற்ற அறிவையும், சொந்த அறிவையும் சத்கருமத்தில் ஈடுபடுத்தி, வரத குமரா, நின்னை வழிபட்டு, தஞ்சம் தஞ்சம், சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள் என்று ஏத்தி, போற்றி இறைஞ்சுதல் செய்தால் பரம அருளோடு நீர் பாலிப்பது பதிஞானம். ஏற்றத் தாழ்வு எய்தாமல் என்றும் ஒரு படியதாய் இருக்கும் அந்த அருள் அறிவு ஆனாத ஞான புத்தி என்று அறியப்பெறும். முதன் முதலாக அதை அருளிய உமது பேரருளை என்றும் மறக்க முடிவது இல்லையே. ஆனாத ஞான புத்தியை அருளி அதன் பிறகு வித்தக நூல் நுட்பங்களை விளங்க வைத்த அருளை என்றும் எளியேன் மறவேன் பெருமா.


வாழ்க்கையா இது?. தொட்ட இடமெல்லாம் ஒட்டும் அறிவே வர வரக் கரைந்து தேய்ந்து கரைந்து விடும். என்ன வேதனை? பாடுபட்ட பணம் பையை நிறைத்தது, எடுக்கக் கனமாய் இருந்தது. அது கண்டு மனம் இறுமாந்தது. விருவிருத்து
செலவினங்கள் விளைந்தன. வர வர பை லேசாயது. இறுதியில் ஒன்றும் இல்லை ஏமாந்து பொகிறது இதயம். அழகு என்று எதையும் உணர்வு அணுகுகிறது. ஆனால் வளர்ந்த அழகு வளர்ந்து சுருண்டது. துள்ளித் திரிந்த காலம் ஒன்று. முன்னேற முடியாமல் , முழு உறக்கம் வாராமல் ,சிறக்க உண்டது ஜீரணிக்காமல், ஒடுங்கி முடங்கும் உடலம் இது. வீணாகும் வாழ்க்கையில் போலி வெளிச்சம் தானே பொங்ககிறது. தோற்றம் கண்டோம், மாற்றம் அறிந்தோம். இறுதியில் சங்கு ஒலிக்கிறது. இந்தக் கண்றாவி வாழ்வில் ஒருவரை ஒருவர் ஏய்ப்பது போல் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்தியை எவரிடம் சொல்லி ஆற்றுவது ?.


இந்த ஆதேச வாழ்வில் எத்தனை பிரமை. மயங்கும் இந்த மதி கெட்ட சூழ்நிலையில் இளைப்புத் தான் கண்ட பலன். முயல்வுகளால் விரையமாகிறது மூச்சு. கண்டதை எல்லாம் காணித்து அந்த ஆசைக் கடலில் ஆழ்வது அல்ல வாழ்வு, இதைப் பார், இதைக் காண், உன்னை நீ உணர் என்று சாரகீன சாகரத்தைத் தாண்டுமாறு செய்த உமது தண்ணருளை என்றும் மறவேன் இறைவவோ. சொல்லால் சொல்லிக் காட்ட
இயலாத என்றும் சுழன்று வரும் மனமும் கண்டறியாத மோனப் பரவெளி, வாசாமகோசரம் எனப்பெறும். தர்ப்பர, சிற்பர அத்தனி இடத்தில் எளிய என்னையும் பொருளாக்கி இருத்தினை. அந்தக் கருணையை அத்தா அடியேன் என்றும் மறவேனே அடியேன் மிகவும் கிஞ்சித்ஞன். அற்ப அறிவும் அற்பத் தொழிலும் உடைய எனக்கு எல்லா வகையாலும் அப்பெயர் பொருந்தி உளது. அங்ஙனம் கீழ்த்தரமாய் இருந்த என்னை, கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி சொன்ன எந்தை என்று எவரும் ஏத்திப் போற்றும் ஏற்றம் அளித்த உமது பேரருளை மறக்க முடியுமோ மா தேவா ?
எண் சாண் உடல், ஐந்தரை அடி உயரம், இவ்வளவுதானா நீ. பரந்த நோக்கோடு பார் அனைத்தையும் பார் என்று பணித்தீர். இது என்ன அதிசயம். உலகில் வாழும் உயர் திணை அக்ரிணை யாவும் நான் தானா? எங்கும் என்னையே அல்லாவா காண்கிறேன். எப்பொருளும் என் மயமாய் இருக்கிறதே. உலகம் ஏழும் யானாக மகா வாக்கிய அனுபவத்தை காட்டிய உமது பேரருட் செயலை மறவேன் அரசே என்றும் மறக்கவே
மாட்டேன்.
உயர்ந்த சந்தத் திருப்புகழை நானா ஓதினேன். ஊனெல்லாம் , தோலெல்லாம், ஊறும் உதிரமெல்லாம், என்பெல்லாம் என்பினுள் துளை எல்லாம் பாகாய் உருகும் படி தேன்
போல் இனிக்க நீர் உள்ளிருந்து ஓதுவித்த கருணையை ஒருநாளும் மறவேன் இவ்வெளியேன்.
இவைகளை ஓதுங்கள். உய்யலாம், வாழ இது தான் வழி என்று நாடு முழுதும் உணர உணர்த்தினேன். அதை உடனே ஏற்று உரிமையோடு நாடு முழுவதும் திருப்புகழை ஓதுகிறது, ஓதி உய்தி பெறுகிறது. இந்த இராஜதத்தை அருளியது நீர் தானே. அடியேன் இதனை மறக்க இயலுமோ?
அநியாய தடிப்பு அளிப்பது ஆணவம். மாய்மாலம் செய்து மயக்கியது மாயை. கால் தட்டி விழ வைக்கிறது கன்மம், மோசமான இப்படி மோதும் மலம் மூன்றும் மலத்ரயம்
எனப்பெறும். இறுமாந்து பேசி செயலில் இறங்க வைக்கிறது ராஜசம், அட சரிதான் போ என்று அலட்சியப்படுத்தி சோம்பலில் நித்திரையில் சொக்க வைக்கிறது தாமசம், ஞானியர் ஆடும் திருக் கூத்தோடு நானும் ஆடுவேன் என்று நல்லவன் போல நடிக்க வைக்கிறது சாத்வீகம். அந்த குணத்ரயங்களின் கூத்து கொஞ்சம் நஞ்சம் அல்லவே. இடர்க் கடலில் இருந்து கரை ஏறாத படி மலத்ரயங்கள் மல்லாடுகின்றன. குணத்தரயங்கள் குதி போடுகின்றது, இவைகளால் என்றும் துன்பம் எதனிலும் வேதனை. இது தான் உலகம். சார்ந்த மலச் சார்பால், குண உறவால், குட்டை நெட்டை, சிவப்பு கருப்பு, ஆண் பெண் இவைகளுடன் குல பேதம், மொழிச் சண்டைகள் சமயச் சச்சரவு செய்யும் அளவிலா விகாரப் பிறப்புகள் நீர் மேல் குமிழிபோல் நிறைகின்றன. தப்பு தாளம் இட்டு தளதளக்கின்றன. உடைகிறது வாழ் நாள், ஒழிகிறது சரிதை. இப்படி எத்தனை தரம் பிறப்பது ? மினுக்கி குலுக்கி இறப்பது? இந்தா பார், இங்கே வா என அழைத்து காரண இன்பமாய் என்னில் நீர் கலந்து இருந்ததை கருதுகிறேன் துரையே. இப்படி ஏது ஏமமாய் எனக்கு அநுக்கிரகித்ததும் நினைக்கவே நெஞ்சம் நிகழ்கிறதே.

1. ஆனாத ஞான புத்தியை அனுக்ரகித்ததும்
2. நூல்களில் கருத்து அளித்ததும்,
3. ஆசா பயோதியைக் கடக்க விட்டதும்,
4. வாசா மகோசரத்தில் இருத்து வித்ததும்,
5. பிரசித்தி பெற்றதும்,
6. உலகேழும் யானாக இருத்தலை அருளியதும்,
7. திருப்புகழ் தேனூற ஓதுவித்ததும்
8. திருப்புகழை எவரும் ஓதப் பணித்ததும்
9. பிறப்பற காரண இன்பமாய் என்னில் நீர் கலந்ததுமான வரலாற்று அனுபவங்களை ஒருநாளும் மறவேன் மறவேன் என்று வீரிட்டு கூறி விளம்பிய படி.
(ஒவ்வொரு பகுதியையும் விரித்து விளக்கினால் இந்த திருப்புகழே ஒரு நூலாக விரியுமாதலின் ஓரளவு செய்தியே கூறப்பட்டது) .


விளக்கக் குறிப்புகள்
பாதகப் புரத்ரயத்தவர்....
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்--- திருப்புகழ், குருவியென.
தோகையைப் பெற்ற இடப் பாக ரொற்றைப் பகழித்
தூணிமுட் டச்சுவறத் திக்கிலெழுபாரச் சோதி
--- திருப்புகழ், போகற்பக்
2.ஒரு மூவர் மாளாது....
திரிபுரம் எரிபட்ட பொழுது சிவ வழி பாட்டால் மாளாது பிழைத்த மூவரில் இருவர் சிவபெருமான் கோயிலில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் சிவ நடனத்தின் போது முழவு வாத்தியம் முழக்கும் பேற்றினைப் பெற்றார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மூவெயில் செற்றஞான்று உய்ந்த மூவரில்
இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று பின்னை
ஒருவன் -- நீகரிகாடு அரங்கு ஆக
மானைநோக்கி ஓர் மாநடம் மகிழ
மணிமுழா முழக்க அருள் செய்த---சுந்தரர் தேவாரம்https://thiruppugazhamirutham.shutterfly.com/meanings