337.இரவொடும் பகலே
337பொது


தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா தனதான


இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே வயதாகி
நரைக ளும்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறே விழலாகி
நயன முந்தெரி யாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே
நடன குஞ்சித விடே கூடா தழிவேனோ
திருந டம்புரி தாளி தூளி
மகர குண்டலி மாரீ சூரீ
திரிபு ரந்தழ லேவீ சார்வீ யபிராமி
சிவனி டந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ ணம்பிகை வாலா சீலா அருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
அழகி ளங்குற மானார் தேனார் மணவாளா
அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னீள்வா
னமரர் கந்தரு வானோ ரேனோர் பெருமாளே.பதம் பிரித்து உரை

இரவொடும் பகலே மாறாதே
அநுதினம் துயர் ஓயாதேயே
எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி


இரவொடும் பகலே - இரவும் பகலுமாக. மாறாதே - நீங்குதலின்றி. அநுதினமும் - நாள்தோறும். துயரே - துக்கம். ஓயாதேயே - இடைவிடாமல் பீடிக்க. எரியும் உந்தியினாலே - நெருப்பைப் போல் போல் எரிகின்ற வயிற்றால் (பசியால்). மாலே - ஆசைகள். பெரிதாகி - பெரிதாய் வளர்ந்து.


இரை கொளும்படி ஊடே பாடே
மிகுதி கொண்டு ஒழியாதே வாதே
இடைகளின்சில நாளே போயே வயதாகி


இரை - உணவு. கொளும்படி - கொள்ள வேண்டி. ஊடே - வாழ்க்கையில்.பாடே - வருத்தமே. மிகுதி கொண்டு ஒழியாதே - அதிகமாக அடைந்து நான் ஒழியாமல். வாதே - தருக்கம் பேசுவதிலேயே. இடைகளின் - இவ்வாறு வாழ்க்கையின் மத்தியில். சில நாளே போயே - சில காலம் கழிய. வயதாகி - மூப்பு எய்தி.


நரைகளும் பெரிதாயே போயே
கிழவன் என்றொரு பேரே சார்வே
நடைகளும் பல தாறே மாறே விழல்ஆகி


நரைகளும் பெரிதாயே போயே - நரைகள் அதிகமாகப் போய். கிழவன் என்று ஒரு பேரே சார்வே - கிழவன் என்ற ஒரு பேர் சாரவே வந்து கூடிட. நடைகளும் பல தாறே மாறே - நடையும் நேரின்றி கோணலாய். விழல் ஆகி - கீழே விழுந்து விடுவதாய்.
நயனமும் தெரியாதே போனால்
விடிவது என்று அடியேனே தானே
நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ


நயனமும் - கண்ணும். தெரியாதே போனால் - குருடானால். அடியேன் தானே என்று விடிவது - அடியவனாகிய நான் எப்போது தான் துன்பம் நீங்கி இன்பம் பெறுவது. விடிவது என்று - துன்பம் நீங்கி இன்பம் பெறுவது. நடன குஞ்சித வீடே - நடன குஞ்சித பாதமாம் வீட்டை. கூடாது அழிவேனோ - அடையாமல் அழிந்து போவேனோ.


திரு நடம் புரி தாளி தூளி
மகர குண்டலி மாரீ சூரீ
திரி புரம் தழல் ஏவி சார்வீ அபிராமி

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
திரு நடம் புரி தாளி - திரு நடனம் செய்யும் திருவடியை உடையவள். தூளி - திறு நீற்றுத் தூளை பூசுபவள். மகர குண்டலி - மகர மீன் போன்ற குண்டலங்களை அணிபவள். மாரீ - துர்க்கை. சூரீ - மாகாளி. திரி புரம் தழல் ஏவி - திரி புரங்களில் நெருப்பை ஏவியவள். சார்வீ - புகலிடமானவள். அபிராமி - அழகி.
சிவன் இடம் தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி ஆயீ மாயீ
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா


சிவன் இடம் தரி - சிவனது இடப் பாகத்தில் தரித்து இருப்பவள். நீலீ - நீல நிறத்தவள். சூலீ - சூலாயுதத்தை ஏந்தியவள். கவுரி - பொன்னிறத்தவள். பஞ்சவி - ஐந்தாவது சக்தியாகிய அநுக்கிரக சக்தி. ஆயி - தாய். மாயீ - மகமாயி. சிவ பெண் அம்பிகை - சிவாம்பிகை. வாலா - வாலாம்பிகை. சீலா - தூய்மையானவள் (ஆகிய பார்வதி). அருள் பாலா -அருளுகின்ற குழந்தையே.
அரவம் கிங்கிணி வீரா தீரா
கிரி புரந்து ஒளிர் நாதா பாதா
அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா


அரவம் - ஒலி செய்கின்ற. கிங்கிணி வீரா - கிண்கிணை அணிந்துள்ள வீரனே. தீரா - தீரனே. தேன் ஆர் - இனிமை நிறைந்த. கிரி புரந்து ஒளிர் - மலைகளைக் காத்து ஒளி வீசும். நாதா - நாதனே. பாதா - திருவடிச் செல்வத்தை உடையவனே. அழகு - அழகிய. இளங் குற மானோர் - அழகும் இளமையும் பொருந்திய குற மானாகிய வள்ளியின். தேன் ஆர் மணவாளா - தேன் போன்று இனிமை நிறைந்த மணவாளனே


அரி அரன் பிரமா ஓடே மூ
வகையர் இந்திர கோமான் நீள் வான்
அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே.


அரி அரன் - திருமால், சிவபெருமான். பிரமா ஓடே - பிரமன் எனப்படும். மூவகையர் - மூவகைத் தேவர்கள். இந்திர கோமான் - இந்திரன் என்னும் அரசன். நீள் வான் அமரர் - பெரிய விண்ணலுகத்துத் தேவர்கள். கந்தரு வானோர் - கந்தருவர்கள் எனப்படுவோர். ஏனோர் - பிற எல்லா வகையர்க்கும். பெருமாளே - பெருமாளே.சுருக்க உரைவிளக்கக் குறிப்புகள்


1 திருநடம் புரிதாளி....
பரத்தினுச்சியி னடநவி லுமையரு ளிளையோனே...
---திருப்புகழ், தொடத்துளக்கி
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
---திருப்புகழ், முகத்தைமினு


2. திரிபு ரந்தழ லேவீ சார்வீ யபிராமி...
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி
-- திருப்புகழ் முகிலுமிரவி