Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 2 -அத்தியாயம் 5 part 1



    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    அத்தியாயம் 5
    பிரம்மாவிடம் நாரதர் கேட்ட கேள்வி
    யத்ரூபம் யததிஷ்டானம் யத: ஸ்ருஷ்டம் இதம் பிரபோ
    யத் ஸம்ஸ்த்தம் யத்பரம் யத் ச தத் தத்வம் வத தத்வத: (பா. 2.5.2)


    "இந்த பிரபஞ்சத்தின் லக்ஷணம் என்ன? ஆதாரம் என்ன ? எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டது? இதன் முடிவு என்ன ? எதை ஆச்ரயித்து இருக்கிறது? இதைப்பற்றிய உண்மையை எனக்குக் கூறுமாறு பிரார்த்திக்கிறேன்."


    மேலும் நாரதர் கூறியதாவது ,
    முக்காலும் உணர்ந்த உங்களுக்கு இது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது. உங்கள் சங்கல்பத்தின் மூலமே சகலவிதமான சிருஷ்டியை செய்கிறீர்கள். ஒருசிலந்தியைப்போல் தங்களிடம் இருந்தே இந்தப்ரபஞ்சம் தோன்றியதாக அறிகிறேன்.


    ஆனாலும் தாங்கள் தவம் செய்ததாக அறிகிறேன். இந்த ஞானம் யாரிடம் இருந்து பெற்றீர்கள்? உங்களுக்கு மேலிருக்கும் உங்களை இயக்கம் அந்த சக்தி யாது? இதை விளக்க வேண்டும்.


    பிரம்மா கூறினார்.
    எனக்கு மேல் என்னை இயக்கும் சக்தியான அந்த பகவானைப் பற்றி நான் கூறுவதைக் கேள்.
    எவருடைய வெல்லுதற்கரிய மாயையால் எல்லோரும் என்னை சிருஷ்டிகர்த்தா என்று கூறுகிறார்களோ அந்த பகவானை த்யானிப்போமாக.
    அவருடைய கண்பார்வை செல்லும் இடத்தில் நிற்பதற்கும் எந்த மாயை வெட்கப்படுகிறாளோ அவளால் மயக்கப்பட்ட மூடர்கள் 'நான்' 'எனது' என்று பிதற்றுகிறார்கள்.
    வஸ்து, கர்மம் காலம் ஸ்வபாவம் . ஜீவன் இவை எல்லாவற்றிற்கும் பகவானே ஆதாரம்.


    நாராயண பரா வேதா தேவா நாராயணாஞ்கஜா:
    நாராயணபரா லோகா நாராயணபரா மகா:
    நாராயணபரோ யோகோ நாராயணபரம் தப:
    நாராயணபரம் ஞானம் நாராயணபராகதி: (பாக. 2.5.15-16)


    வேதங்கள் நாராயணனைப பற்றியவை. தேவர்கள் நாராயணனின் அவயவங்களில் தோன்றியவர்கள். உலகங்கள் நாராயணனை ஆச்ரயித்தவை. யக்ஞங்கள் நாராயணனைக் குறித்தே.யோகம் நாராயணனை அடையவே . தவம் நாராயணனுக்கே அர்ப்பணம்.ஞானத்தின் நோக்கம் நாராயணனே. நாராயணனை அடைவதே பிறவியின் குறிக்கோள்.


    நானும் அவரால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவ்னே. அவர் அருளால் சிருஷ்டியை மேற்கொள்ளுகிறேன். இவ்வாறு கூறிவிட்டு பிரம்மா பகவத்ஸ்ருஷ்டியை விளக்குகிறார்.


    அதற்கு முன் பகவான் எதைக்கொண்டு இந்த உலகத்தை ஸ்ருஷ்டித்தார் எனற கேள்வி எழுகிறது.
    ஒரு வஸ்துவை சிருஷ்டிக்க மூன்று காரணங்கள் தேவை. ஒன்று உபாதான காரணம். இரண்டு, நிமித்தகாரணம் . மூன்று ஸஹகாரி காரணம்.


    ஒருபானை செய்வதற்கு களிமண் வேண்டும் . இது உபாதான காரணம். மண் மட்டும் இருந்தால் பானை வருமா? அதைச்செய்ய குயவன் வேண்டும். இது நிமித்த காரணம் . அதை குயவன் எப்படி செய்வான்? அதற்கு குயவனின் சக்கரம் வேண்டும் அல்லவா? இதுதான் ஸஹகாரி காரணம்.


    இப்போது பகவான் எப்படி உலகை சிருஷ்டித்தார் என்று பார்த்தால், உபநிஷத் கூறுகிறது, 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்,' (சாந்தோ. உப. 6.2.1) ஆதியில் ஸத் அதாவது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. அதனால் பிரம்மம்தான் உபாதான காரணம். அப்படியானால் எதைக்கொண்டு எதன் உதவியால் உலக ஸ்ருஷ்டி ஏற்பட்டது? அதற்கு உபநிஷத் சொல்லும் பதில்,


    'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய,' அது சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன்.,அதனால் பிரம்மமே மூன்று காரணங்களாகவும் இருக்கிறது.
    ஆனால் இது பிரம்மமே உலகமாக மாறிவிட்டது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. அப்படி அல்ல. மாயையினால் பிரம்மமே உலகாக தோற்றம் அளிக்கிறது.


    இப்போது பிரம்மா கூறிய பகவானின் சிருஷ்டி ஏற்பட்ட விதத்தைப் பார்க்கலாம்.
    சத்வம் ரஜஸ் தமஸ் இதி நிர்குணஸ்ய குணா: த்ரய:
    ஸ்திதிஸர்கநிரோதேஷு க்ருஹீதா மாயயா விபோ:


    நிர்குணன் ஆகிய பகவான் சத்வம் ரஜஸ் தமஸ் என்கிற பிரக்ருதியின் மூன்று குணங்களை மாயையால் தோற்றுவிக்கிறான். ஜீவன் ஈஸ்வரனுடைய மாயையினால் முக்குணங்களின் வசப்பட்டு சம்சாரத்தில் கட்டுப்படுகிறான். அவன் அருளால் இதை உணர்ந்தவர் மாயையிலிருந்து விடுபடுகிறார்கள்.


    கீதையில் பகவான் கூறியது என்ன என்று பார்த்தால்,
    த்ரிபிர்குணமயை: பாவை: ஏபி: சர்வம் இதம் ததம்
    மோஹித: நாபிஜானாதி மாமேப்ய: பரம் அவ்யயம் (ப.கீ. 7.13)
    இந்த பிரபஞ்சம் முக்குணமாகிற மாயையினால் மூடப்பட்டுள்ளது. அதன் வசப்பட்டோர் என்னை இதைக் கடந்தவனாக காண்கிறதில்லை.
    தைவி ஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
    மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே(ப.கீ.7.14)
    என்னுடைய முக்குணமான மாயை கடக்க முடியாதது. யார் என்னை சரண் அடைகிறார்களோ அவர்கள் மட்டுமே இதைக் கடக்கின்றனர்.
    இதன் பின்னர் பிரம்மா சிருஷ்டியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்.
    ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 2-அத்தியாயம் 5 தொடர்ச்சி


    பகவான் மாயையின் சக்தியால் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார். மாயையிலிருந்து காலம், கர்மவாசனைகள் இவை தோன்றின. காலத்தினால் தூண்டப்பட்டு பகவானின் சங்கல்பத்தினால் மஹத் தத்வம் தோன்றியது. மஹத் தத்வம் என்பது மூன்று குணங்களின் சேர்க்கையால் உண்டாயிற்று. மஹத் அல்லது புத்தியிடம் இருந்து அஹம்காரம் ( நான் என்ற உணர்வு) உண்டாயிற்று.


    சத்வகுண்த்தில் இருந்து ஏற்பட்ட அஹம்காரத்திலிருந்து பேத திருஷ்டி வருவதில்லை. இதில் தமஸ் கலக்கும்போதுதான் நான் , பிறர் என்ற உணர்வு வருகிறது.
    அஹம்காரம் மூன்று குணங்களுக்கேற்ப மூன்றுவகைப்படும். ஸாத்விக அஹம்காரம் வைகாரிகம் அல்லது ஞான சக்தி. ராஜசிக அஹம்காரம் தைஜசிகம் அல்லது க்ரியா சக்தி. தாமச அஹம்காரம் த்ரவ்ய சக்தி. ( பஞ்ச பூதங்களின் சிருஷ்டி சக்தி)


    தாமச அஹங்காரத்தில் இருந்து முதலில் ஆகாசம் தோன்றியது. இதன் குணம் சப்தம். ஆகாசத்தில் இருந்து வாயு தோன்றியது . சப்தத்துடன் இதன் விசேஷ குணமான ஸ்பரிசம் சேர்ந்தது வாயுவே பிராணசக்தி. வாயுவில் இருந்து உண்டானது தேஜஸ் அல்லது அக்னி.சப்தம் ஸ்பரிசம் இவற்றோடு இதன் விசேஷ குணமாவது ரூபம்.,அக்னியில் இருந்து நீர் தோன்றியது. இதற்கு இதன்விசேஷ குணமாகிய மணத்துடன் கூட மற்ற நான்கு குணங்களும் உண்டு
    .
    சாத்விக அஹம்காரத்தில் இருந்து மனஸ், அதன் அதிஷ்டான தேவதையான சந்திரன், பத்து இந்த்ரியங்களின் அதிஷ்டான தேவதைகள் இவை தோன்றின. ராஜச அஹம்காரத்தில் இருந்து பத்து இந்த்ரியங்கள் உண்டாயின. இவ்வாறு சிருஷ்டிக்கு தேவையான எல்லாம் தோன்றினபிறகும் அவை தனித்தனியாகவே இருந்தன. பிறகு பகவானின் சங்கல்பத்தால் அவை கலந்து சமஷ்டி ரூபம், தனித்தனிரூபம் இவை உண்டாயின. இதுதான பகவானின் விராட் ரூபம் .


    புருஷ சூக்தத்தில் சொல்லியுள்ளபடி ,
    ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
    ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அதய்திஷ்டத் தசாங்குலம்
    புருஷ: - பரமபுருஷரானவர்
    ஸஹஸ்ர சீர்ஷா- ஆயிரக்கணக்கான தலை
    ஸஹஸ்ராக்ஷ: - ஆயிரக்கணக்கான கண்கள்
    ஸஹஸ்ரபாத்- ஆயிரக்கணக்கான பாதங்கள்


    இது ஒரு உருவகம் அன்றி உண்மை இல்லை. புருஷ: என்பது இறைவனைக் குறிக்கிறது. அவன் எங்கும் சர்வவ்யாபி என்பதையே இவ்வண்ணம் சித்தரிக்கப் படுகிறது. அகில உலகமும் அவன் உருவமே என்ற அர்த்தத்தில் ஆயிரம் தலைகள் கண்கள் இவை சொல்லப்படுகின்றன. சர்வம் பிரம்ம மயம் என்பதே இதன் பொருள்.


    இதைத்தான் உபநிஷத் கூறுகிறது.' தத் ஐக்ஷத பஹுச்யாம் பிரஜாயேய – பிரம்மம் சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன் என்று.


    நாராயண பட்டத்ரி சிருஷ்டியைப்பற்றி கூறும்போது,
    'பேதை: தாம் பிரதிபிம்பத: விவிசிவான் ' மாயையினால் பிரதிபலிக்கப்பட்டு பலவாகத் தோன்றினான். என்கிறார்.


    பகவானின் விஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது. பதினான்கு உலகங்களும் அவன் தேஹமாக ஞானிகள் காண்கிறார்கள். இடுப்புக்கு கீழ் ஏழும் இடுப்பிற்கு மேல் ஏழுமாக . இடுப்பு பூலோகம். நாபி புவர்லோகம் ,ஹ்ருதயம் ஸ்வர்லோகம், மார்பு மஹர்லோகம், ஜனலோகம் கழுத்து, தபோலோகம் இதழ்கள். தலை சத்யலோகம். இதற்கு மேல் பிரம்மலோகம் அலல்து வைகுண்டம் ஸ்ருஷ்டிக்குள் அடங்காதது. என்றும் உள்ளது.


    இதே போல கீழ் லோகங்கள் பாதாளம் வரை. இதை வேறுவிதமாகவும் கூறுகின்றனர். பாதங்கள் பூலோகம், நாபி புவர்லோகம், தலை சத்ய லோகம்.
    பகவானுடியி விஸ்வ ரூபம் மேலும் விவரமாக அடுத்த அத்தியாயத்தில் வர்ணிக்கப்படுகிறது.
Working...
X