Srimad Bhagavatam adhyaya 14 skanda 3 in tamil
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3-அத்தியாயம் 14


அத்தியாயம் 14
விதுரர் ஹிரண்யாக்ஷனுக்கும் வராஹப்பெருமானுக்கும் எக்காரணத்தால் போர் ஏற்பட்டது என்று கேட்க மைத்ரேயர் கூறலானார்.


தக்ஷப்ரஜாபதியின் மகளான திதி மரீசியின் புதல்வரான காச்யபரின் மனைவிகளுக்குள் ஒருவள். ஒருநாள் மாலைப்பொழுதில் அவள் கணவனுடன் உடலுறவு கொள்ள விரும்பினாள் . அப்போது அவர் அது தகுந்தகாலம் அல்ல. பிரதோஷகாலமாகையால் ருத்ரருடன் சம்பந்தப்பட்டது என்றார். ஆனால் காமம் மேலிட்டு அவள் வற்புறுத்தவே காச்யபர் இதுவும் விதியின் செயல் என்றெண்ணி அவளுடைய கோரிக்கையை நிறைவேற்றினார்.பிறகு ஸ்நானம் செய்து மௌநியாகிப் பிராணாயாமம் செய்து நிர்மலமான பிரம்மஜ்யோதியை தியானித்து காயத்ரியை ஜபித்தார்.


திதி தேவி தன் செயலுக்கு வெட்கி அவரிடம் வந்து வணங்கிக் கூறினாள்.
" நான் பூதபதியான ருத்ரருக்கு அபராதம் இழைத்துவிட்டேன் அவர் என் கருவை சிதைக்காமல் இருக்க வேண்டும்."


காச்யபர் கூறினார் ,
"அமங்கலமானவளே சண்டியே , என் சொல்லைக் கேளாமல் நீ நடந்துகொண்டு தேவர்களை அவமதித்தாய். உனக்கு மகா பயங்கரமான இரு புத்திரர்கள் தோன்றுவார்கள். அவர்கள் மூவுலகங்களையும் லோக பாலர்களையும் ஹிம்சித்து கதறும்படி செய்வார்கள்.இறுதியில் பகவான் கோபம் கொண்டுஅவதாரம் செய்து இவர்களை வதைப்பார். ஆனால் உனது பௌத்ரர்களில் ஒருவன் மஹா பாகவதனாக இருப்பான். "


திதி அதைக்கேட்டு வருந்தினாலும் பக்தனான பேரன் பிறப்பான் என்றும் தன் பிள்ளைகள் பகவான் கையால் இறக்கப்போவதனால் நல்ல கதியை அடைவார்கள் என்றும் எண்ணி சமாதானம் அடைந்தாள்.


இங்கு பாகவதம் பகவான் எப்போது அவதாரம் செய்து துஷ்டநிக்ரஹம் சிஷ்டபரிபாலனம் செய்வார் என்று ஒரு சிறந்த ஸ்லோகம் மூலம் கூறுகிறது.


ப்ராணிநாம் ஹன்யமானானாம் ஹீனானாம் அக்ருதாகஸாம்
ஸ்த்ரீனாம் நிக்ருஹ்யமாணானாம் கோபிதேஷு மஹாத்மஸு
ததா விச்வேச்வர: க்ருத்த: பகவான் லோகபாவன:
ஹனிஷ்யதி அவதீர்ய அஸௌ யதாத்ரீன் சதபர்வத்ருக்
(ஸ்ரீமத். பாக. 3.14.39-40)


தீனமான குற்றமற்ற மக்கள் கொல்லப்பட்டு ஸ்திரீகள் துன்புறுத்தப்பட்டு அதனால் , மகான்கள் கோபம் அடைந்த போது, லோகநாயகனும், லோகபாலகனும் ஆன பகவான் கோபம் கொண்டு அவதரித்து இந்திரன் வஜ்ராயுதத்தால் மலைகளை வெட்டியதுபோல அவர்களைக் கொல்வார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே- கீதை .


அடுத்து வரும் அத்தியாயங்களில் சநகாதியரால் சாபமிடப்பட்ட வைகுண்ட த்வாரபாலகர்களைப் பற்றியும் அவர்கள் மூன்று பிறவிகள் விரோதபாவத்தில் எடுத்து வைகுண்டம் திரும்ப வரமளிப்பதையும் ஹிரண்யாக்ஷ வதமும் (விதுரரின் கேள்விக்கு பதில்) கூறப்படுகின்றன. ஹிரண்ய கசிபு வரலாறும் நரசிம்ஹாவதாரமும் ஏழாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.