Announcement

Collapse
No announcement yet.

Rudraksha mala to a person who did not lie - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rudraksha mala to a person who did not lie - Periyavaa

    ருத்ராக்ஷம் யார் அணியலாம்?
    பெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பஶுபதிநாதர் கோவிலுக்கு சென்று அருமையான தர்ஶனம் பெற்றார்.


    அந்த உன்னதமான ஶிவ க்ஷேத்ரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.


    பிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பஶுபதிநாத் ப்ரஸாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் ஸமர்ப்பித்தார்.


    " பஶுபதீஶ்வரரை நன்னா தர்ஶனம் பண்ணினியா?…"


    " பெரியவா அனுக்ரஹத்ல… நன்னா தர்ஶனம் பண்ணினேன்…"


    கையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்…..


    "ஸெரி…. இத.. என்ன பண்ணப் போற?….."


    "பெரியவா அனுக்ரஹம் பண்ணிக் குடுத்தேள்..ன்னா, கழுத்துல போட்டுக்கலான்னு…."


    இழுத்தார்…..


    பெரியவா மெளனமாக சில நிமிஷங்கள் இருந்தார்…


    "அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?.."


    ஒரே தடாலடியாக கேட்டார்.


    பக்தருக்கு தூக்கிவாரிப் போட்டது!


    "ஆஹா! பெரியவா…….. இனிமே பொய்யே சொல்லமாட்டேன்!"


    இப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா?


    "இல்ல.. பெரியவா…! ஸத்யமா… என்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..!."


    "ஏனோ …..?"


    "ஏன்னா, நா… ஒரு Bank Oficer. அதுனால, பொய் சொல்லாம சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. "இப்டி எழுது"…ன்னு எனக்கு மேல இருக்கற officer உத்தரவு போட்டா… என்னால மறுக்க முடியாது பெரியவா…."


    பரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.


    பெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.


    "இந்தா பிடி! பொய் சொல்லாதவா யாருக்காவுது…. இந்த மாலையைக் குடு!"


    பக்தருக்கோ பரம ஸந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்!


    நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கி கொண்டார்.


    "ஆஹா! என் wife சொன்னா மாதிரியே ஆச்சு! இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ!..ன்னு சொன்னா! அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுட்டா……!.."


    ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.


    "பொய்யே சொல்லாத ஒர்த்தர்…. நம்மாத்து பூஜை ரூம்லேயே இருக்கார்ங்கறதே, இன்னிக்கித்தான் எனக்கு புரிஞ்சுது"


    மனைவியிடம் கூறி ஸந்தோஷப்பட்டார்.


    கணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலாதரனாக காக்ஷியளித்த தங்களுடைய பெரியவாளை நமஸ்கரித்தனர்.


    கொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் ஸொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்.


    "ஒன்னோட ஸொந்தக்காரன், அதான்! அந்த bank-ல ஆஃபீஸரா இருக்கானே! அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு! தெரியுமோ? ஏன்னா…… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…"


    இந்த அருமையான அனுக்ரஹ லீலையில், பெரியவா நம் எல்லாருக்கும் ஒரு உபதேஸத்தையும் அளித்திருக்கிறார்.


    ருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளஸி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்யமாக இருக்கவேண்டியது….. ஸத்யம் ! இதுதான் பெரியவா திருவாக்கு!


    ஸ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.
Working...
X