Srimad Bhagavatam skanda 3 adhyaya 17,18,19 in tamil
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3 அத்தியாயம் 17, 18 and 19


அத்தியாயம் 17.


திதியின் கர்ப்பத்தில் அசுரமேனியுடன் அவர்களிருவரும் வளர்ந்த போதே மூவுலகிலும் அனேக உத்பாதங்கள் தோன்றின. நடுங்கிய மலைகள், எரியும் திக்குகள் , வால் நக்ஷத்திரங்கள் , மரங்களைப் பிடுங்கி எறியும் சுழல் காற்று, மறைந்த சூரியன், உயரக்கிளம்பிய சமுத்திரம், வற்றிய நீர்நிலைகள், விசித்திர நடத்தையுடன் கூடிய மிருகங்கள், பயந்து அலறின பறவைகள், பசுக்கள், இவைகளுடன் தோன்றிய உத்பாதங்களைக்கண்டு உண்மை அறிந்தவர்கள் தவிர மற்றவர்கள் பிரளயம் வந்துவிட்டதாகக் கருதினார்கள்.


நூறுவருடங்கள் கர்ப்ப வாசம் செய்து பிறந்த அந்த அசுரர்கள் இரண்டு மலையரசுகள் போல் வளர்ந்தனர். அவர்களுக்கு காச்யபர் ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபு என்று பெயரிட்டார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஹிரண்ய கசிபு ப்ரம்மதேவரிடம் இருந்து ஒருவரிடம் இருந்தும் மரணம் வாய்க்காமல் இருக்கும் வரத்தைப் பெற்று செருக்குற்று மூவுலகையும் தன் வசமாக்கிக்கொண்டான்..அவனுடைய அன்புத்தம்பியான ஹிரண்யாக்ஷன் போர் செய்ய விரும்பி தனக்கேற்ற எதிரியைத்தேடி தேவலோகம் சென்றான். அவனைக் கண்ட தேவர்கள் கருடனைக் கண்ட பாம்புபோல ஒளிந்தனர்.


பிறகு அவன் சமுத்திரத்தில் இறங்கி அதில் அநேக வருடங்கள் சஞ்சரித்துக்கொண்டு வருணனின் விபாவரி என்னும் பட்டினத்தை அடைந்தான். அங்கு வருணனைக் கண்டு பரிகாசத்துடன் புகழ்ந்து யுத்தம் வேண்டும் என்று கேட்டான். . வருணன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, தான் யுத்தம் செய்வதிலிருந்து விலகி இருப்பதாகவும் அவனுடைய் பலத்திற்கொப்பானவர் புராண புருஷனாகிய ஹரியே என்று கூறி, அவனைப்போன்ற துஷ்டர்களை அழிப்பதற்கே உருவம் எடுத்துக் கொள்கின்ற அவரால் அழிக்கப்படுவாய் என்று கூறினான்.


அத்தியாயம் 18.
பிறகு ஹிரண்யாக்ஷன் ஹரியைத் தேடுகின்றவனாய் நாரதரிடம் இருந்து அவர் பாதாளத்தில் உள்ளார் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றான்.


ததர்ச தத்ராபிஜிதம் தராதரம் ப்ரோன்நீயமானாவனிம் அக்ர தம்ஷ்ட்ர்யா
முஷ்ணந்தமக்ஷ்ணா ஸ்வருசோருணச்ரியா
ஜகாஸ சாஹோ வனகோசரோ ம்ருக;


அங்கு பாதாளத்தில் இருந்து தெற்றிப்பல்லின் நுனியில் உயரத்தூக்கிய பூமியை உடையவரும் சிவந்த கண்ணினுடைய ஒளியால் அவன் சக்தியி அபஹரிக்கிறவரும் எங்கும் ஜெயிப்பவரும் ஆன வராஹப்பெருமானைக் கண்டு, இது காட்டில் சஞ்சரிக்கும் பன்றி என்று சிரித்தான்.


" பன்றி உருவில் உள்ள ஹரியே , இந்த பூமி பாதாளத்தில் இருக்க வேண்டியது. இதைஎடுத்துப்போக விடமாட்டேன். மறைந்திருந்து மாயையால் அசுரர்களைக் கொல்லும் நீ உயிரோடுபோகமாட்டாய். உன்னைக் கொல்வதன் மூலம் என் பதுக்களின் துன்பத்தை துடைப்பேன். நீ அழிந்ததும் ரிஷிகள் மற்றும் உன்னைக் கொண்டாடுபவர்கள் வேரோடு அழிவார்கள்." என்றான்.


அப்போது அதைக்கண்டு பயந்து நடுங்கிய பூமியைப் பார்த்த பகவான் ஜலத்தில் இருந்து முதலையால் அடிக்கப்பட்ட பெண்யானையுடன் ஒரு ஆண் யானை கிளம்புவது போல் வெளிக்கிளம்பினார். அசுரன் அவரைத் துரத்த , அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பூமியை ஜலத்தின் மேல் கண்ணுக்குப் புலப்படும் இடத்தில் வைத்து அவருடைய சக்தியால் அது மறுபடி முழுகாமல் இருக்கச்செய்தார்.


பிறகு ஆபரணங்கள் அணிந்து பொன் கவசத்துடன் கதையைத் தூக்கிக்கொண்டு தொடரும் அசுரனைப் பார்த்து, சிரித்து பரிஹாசத்துடன் கூறினார்.
ஸத்யம் வயம் போ வனகோசரா ம்ருகா
யுஷ்மத்விதான் ம்ருகயே கிராம சிம்ஹான்
ந ம்ருத்யுபாசை; ப்ரதிமுக்தஸ்ய வீரா:
விகத்தனம் தவ கிருண்ணந்தி அபத்ர


" ஆம் நாங்கள் காட்டில் திரியும் மிருகங்கள்தான். உன்னைப்போல கிராம சிங்கங்களை (நாய்களை) தேடி அலைகிறோம். துஷ்டனே , யமபாசத்தால் பீடிக்கப்பட்டவனின் பிதற்றலை வீரர்கள் லக்ஷியம் செய்ய மாட்டார்கள். பாதாளத்தின் சொத்தான பூமியை நான் திருடிக்கொண்டு போவதால் உன் போன்ற பலமிக்க எதிரியை எதிர்த்து நிற்கத்தான் வேண்டும். என்னை ஜெயித்து பந்துக்களின் துன்பத்தை துடைப்பேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்று,"


இவ்வாறு பகவானால் பரிஹசிக்கப்பட்ட ஹிரண்யாக்ஷன் சீண்டப்பட்ட நாகம்போல் கோபம் கொண்டு அவர் மேல் பாய்ந்தான். அவனை உடனே கொல்லாமல் சிறிதுநேரம் விளையாடின வராஹப் பெருமானை பார்த்து பிரம்மா கூறினார்.
"என்னிடம் வரம் பெற்றவனான இந்த அசுரன் உலகத்தை துன்புறுத்திக்கொண்டிருக்கிறான். சந்த்யாகாலம் நெருங்குகிறது. அசுரர்களுக்கு பலம் கொடுக்கும் இரவு வருமுன் இவனைக் கொன்றுவிடுங்கள். இந்த அபிஜித் முஹுர்த்தம் முடியும் முன் இவனை அழிக்கவேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்"\


அத்தியாயம் 19
பிரம்மா காலரூபியான அவருக்கே காலத்தைப்பற்றி உபதேசித்ததைக் கேட்ட பகவான் சிரித்தார் .
பிறகு பகவானுக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் மும்முரமான யுத்தம் நடந்தது. அசுரன் வீசிய கதையை கருடன் பாம்பைப் பிடிப்பது போல பிடித்தார். பிறகு அவன் சூலாயுதத்தை எய்தபோது ஹரியின் சக்ராயுதம் தூளாக்கியது. அதைக்கண்ட அசுரன் அவர் மார்பில் முஷ்டியால் அடித்து மறைந்தான். . அது அவர் மார்பில் வாசம் செய்யும் ஸ்ரீதேவிக்கு அணிவிக்கப்பட்ட புஷ்பமாலையென அவருக்கு மிக லேசாக இருந்தது.


பிறகு அசுரன் மாயாயுத்தம் செய்தான் . மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட சேனைகள், ராக்ஷசர்கள் , இயற்கை உத்பாதங்கள் ஆகிய எல்லாவற்றையும் ஹரியானவர் சுதர்சனாஸ்திரம் கொண்டு நாசம் செய்தார். அப்போது அவனுடைய மரணத்தை சூசகம் செய்வதுபோல் திதியினுடைய மார்பிலிருந்து உதிரம் வழிந்தது. இதயம் படபடத்தது
.
அசுரமாயை பயனற்றுப் போன பின்பு ஹிரண்யாக்ஷன் பகவான் முன்னே தோன்றி அவரை தன் கைகளால் சிறைப்படுத்த முயல்கையில் அவரைத் தன் கைகளுக்கு வெளியே இருக்கக்கண்டான். வஜ்ரம் போன்ற முஷ்டிகளால் அவரைக் குத்த முயன்ற போது பகவான் அவன் கன்னத்தில் இந்திரன் வ்ருத்ராசுரனை அடித்தது போல் அடித்தார். அதனால் நிலை குலைந்து வேரோடு சாய்ந்த மரம் போல கீழே விழுந்தான்.


யோகிகள் எவரை தியானம் செய்கின்றார்களோ அந்த பகவானால் காலால் மிதிக்கப்பட்டு அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே உயிரை விட்டான்.


மைத்ரேயர் கூறினார்.
இவ்வாறு ஹிரண்யாக்ஷனை வதம் செய்த பின்பு பிரம்மாதி தேவர்களால் துதிக்கப்பட்டு வைகுண்டம் சென்றார்.


சூதர் கூறினார்.
யோ கஜேந்த்ரம் ஜஷக்ரஸ்தம் த்யாயந்தம் சரணாம்புஜம்
க்ரோசந்தீநாம் கரேணூனாம் க்ருச்ரத: அமோசயத் த்ருதம்( 3. 19. 35)


எவர் முதலை வாய்ப்பட்டு தன்னை சரணம் அடைந்த கஜேந்திரனை பெண் முதலைகள் கதறிக்கொண்டிருக்கும்போது விடுவித்தாரோ
,
யோ வை ஹிரண்யாக்ஷ வதம் மஹாத்புதம் விக்ரீடிதம் காரணசூகராத்மன;
ச்ருணோதி காயதி அனுமோததே அஞ்சஸா விமுச்யதே பிரம்மவதாதபி த்விஜா: (3.19. 37)


அவர் பூமியை உத்தாரணம் செய்ய வராஹமாக வந்து விளையாட்டாக ஹிரண்யாக்ஷனை வதம் செய்தாரோ அதை கேட்பாரும் பாடுவோரும் ஆமோதிப்போரும் விரைவில் பிரம்மஹத்தி முதலிய பாபவ்ங்களில் இருந்து விடுபடுவர்.


ஏதத் மஹாபுண்யபலம் பவித்ரம் தன்யம் யசஸ்யம் பதம் ஆயுராசிஷாம்
ப்ராணேந்த்ரியாணாம் யுதி சௌர்யவர்த்தனம்
நாராயணோ அந்தே கதிரங்க ஸ்ருண்வதாம்


புண்யம் மிகுந்ததும் பரமபாவனமானதும் பொருள், புகழ், பதவி, ஆயுள், ஆசைகளின் பூர்த்தி இவை தருவதும்,பிராணனுக்கும் இந்த்ரியங்களுக்கும் போரில் வல்லமையை வளர்ப்பதும் ஆன இக்கதையை கேட்பவர்க்கு முடிவில் நாராயணனே அடைக்கலமாக ஆகிறான்.


பகவத சப்தாஹ பாராயணம் செய்வோரின் முதல் நாள் பாராயணம் இத்துடன் முடிவடைகிறது.


ஹிரண்யாக்ஷன் என்பதன் பொருள் ஹிரண்யம் , அதாவது பொன்னில் கண்ணுடையவன் என்று முன்னமே பார்த்தோம். பொன் என்பது பணம் பதவி மற்றும் இந்த உலகத்தில் எவை எல்லாம் அஹங்காரத்தைத் தருமோ அவை எல்லாவற்றையும் குறிக்கும். கசிபு என்னும் சொல் உணவு, உடை இவைகளைக் குறிக்கும். அதாவது உடமைகள் ஹிரண்ய கசிபு என்ற சொல்லுக்குப் பொருள் பொன்னே உணவு, உடை எல்லாம் என்பது. ஆங்கில்த்தில் materialism என்று சொல்வது. உலக சுகமே எல்லாம் என்ற உணர்வு.


ஜெயவிஜயர்கள் காமக்ரோதாதிகளை குறிக்கும் மூன்று பிறவி எடுத்தனர். ஹிரண்யாக்ஷன் - ஹிரண்ய கசிபு, ராவணன் கும்பகர்ணன், சிசுபாலன்- தந்தவக்ரன், இதில் ஹிரண்யாக்ஷன் மதம் , ஹிரண்ய கசிபு குரோதம். ராவணன் காமம் , கும்பகர்ணன் மோகம், சிசுபாலன் மாத்சர்யம் தந்தவக்ரன் லோபம்.
ஹிரண்யாக்ஷன் , ஹிரண்யகசிபு இவர்களை அழிக்க எடுத்தது வராஹன் நரசிம்மன் என்று இரண்டு அவதாரங்கள். ராவணன்- கும்பகர்ணன் இவர்களை அழிக்க ராமாவதாரம் ஒன்றுதான். சிசுபாலன் தந்தவக்ரன் இவர்களை அழிக்கவும் ஒரே கிருஷ்ணாவதாரம்தான். இதிலிருந்து மதம் , க்ரோதம் இவைகளை வெற்றி கொள்வது கடினம் என்று தெரிகிறது. மேலும் முதல் ஜன்மத்தில் இருந்து படிப்படியாக தீவிரம் குறைந்து கடைசியில் பகவானுடன் சேருகிறார்கள் என்று உணர்த்துகிறது