Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
அத்தியாயம் 22
மனு கூறியது.


"புண்ணியம் செய்தோர்க்கே உம்மைப் போன்றவர்களுடைய தரிசனம் கிடைக்கும். நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம். என் வேண்டுகோளைக் கேட்கவேண்டும். இவள் என் பெண். ப்ரியவ்ரதனுக்கும் உத்தானபாதனுக்கும் சகோதரி.


நாரதரிடம் இருந்து தங்கள் வயது, குணம், கல்வி, நடத்தை இவற்றைப்பற்றி கேட்டபின் தங்களை கணவராக வரித்துவிட்டாள். க்ருஹஸ்த தர்மானுஷ்டானத்தில் எவ்விதத்திலும் உமக்கு ஏற்றவள். இவளை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தயை கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்."
கர்தமர் கூறினார்.


"நல்லது. இந்தக் கன்னியை ஒரு நிபந்தனையுடன் அங்கீகரிக்கிறேன். இவள் என்னிடம் இருந்து மகப்பேற்றைப் பெறும்வரை இவளுடன் இருப்பேன். பிறகு பகவான் ஆக்ஞைப்படி துறவறம் ஏற்க விரும்புகிறேன்."


மனு அவர் மனைவியையும் பெண்ணையும் கலந்தாலோசித்து அவர்களுக்கு இதில் சம்மதம் என்று அறிந்து தன் பெண்ணான தேவஹூதியை கர்தம பிரஜாபதிக்கு விவாகம் செய்து வைத்தார். அவளுக்கு சீராக மனுவின் மனைவியான சத்ரூபை விலையுயர்ந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் மற்ற குடும்பத்திற்கு வேண்டியவற்றையும் கொடுத்தாள்.


பிறகு மனுவானவர் நல்ல வரனுக்கு இடத்தில் பெண்ணைக் கொடுத்ததால் மகிழ்ச்சியும் அவளைப்பிரிவதால் வருத்தமும் ஒருசேர அனுபவிப்பவராய் தன் தேசம் திரும்பினார்.


அத்தியாயம் 23
தேவஹூதி கர்தமருக்கு உள்ளன்புடனும் விடாமுயற்சியுடனும் சேவை செய்து வந்தாள்.ஆசைகள் அற்று தன் தேக சௌக்கியத்தைக் கூட கவனியாமல் சேவை செய்த அவளைக் கர்தமர் பாராட்டி தவம், ஸமாதி, வித்தை இவை மூலம் அவர் அடைந்த யோக சக்தி அனைத்தும் அவளைச் சேர்ந்து விட்டன என்றுகூறினார்.


தேவஹூதி அவரிடம் மகப்பேற்றை யாசிக்க அவர் அவளை மகிழ்விக்க எங்கும் செல்லக்கூடிய விமானம் ஒன்றைத் தோற்றுவித்தார்., அது எல்லா சௌகர்யங்களும் அழகுகளும் நிறைந்த அரசமாளிகை போல இருந்தது.


பணிவிடையால் மெலிந்து அழகு குலைந்த தேவஹூதி கணவர் சொன்னபடி பிந்துஸரஸ்ஸில் நீராடப் புகுந்த போது அங்கு ஓர் சிறந்த மாளிகையைக் கண்டாள். அங்கு அவளுக்கு சிச்ரூஷை செய்ய ஏராளமான பணிப்பெண்கள் இருந்தனர். அவர்கள் அவளை நீராட்டி சிறந்த ஆடைகளை உடுத்தி அணிகளால் அலங்கரித்தனர். அப்போது மிகுந்த அழகுடனும் பொலிவுடனும் விளங்கிய தேவஹூதி அவள் கணவரை நினைக்க, அடுத்த க்ஷணத்திலேயே அவருடன் இருக்கக் கண்டாள்.


அங்கு அவளுக்கு பணிசெய்ய அனேக வித்யாதர ஸ்திரீகளைக் கண்டு அவருடைய யோக பலத்தை நினைந்து வியப்படைந்தாள்.


பிறகு கர்தமர் அவளை அந்த விமானத்தில் ஏற்றி தேவர்களே செல்லக் கூடிய மகாமேருவின் பாகங்களில் குபேரனைப்போல் சஞ்சரித்து, தேவலோக நந்தன வனத்திலும் மானசரோவர் ஏரியிலும் மனைவியுடன் ரமித்தார். பூவுலகம் முழுவதையும் மனைவிக்கு சுற்றிக் காண்பித்தபின் ஆஸ்ரமத்திற்குத் திரும்பி ஆவலுடன் பல வருடங்கள் இன்பமுற்றிருந்தார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பிறகு கர்தமர் தன்னை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து தேவஹூதியிடம் ஒன்பது பெண் குழந்தைகளை உண்டாக்கினார். அப்போது முன் சொன்ன நிபந்தனைப்படி துறவறம் மேற்கொள்ள எண்ணிய அவரைப்பார்த்து தேவஹூதி கூறினாள்.


"உமது புத்திரிகளுக்கு பதிகள் தேடவேண்டும்., நீங்கள் வனம் சென்றபின் எனக்கு நல்வழி கூற ஒரு பிள்ளை வேண்டும். இவ்வளவு காலம் பகவானை நினைக்காமல் வீணாகக் கழித்துவிட்டேன்.


அறிவற்றவர்களிடம் வைக்கும் பற்று சம்சார்த்திற்குக் காரணமாகும் ஆனால் சாதுக்களிடம் வைக்ப்பட்டால் அதுவே பற்று நீங்குவதற்கு காரணமாகும். நான் உங்களிடம் வைத்த பற்று அவ்வாறே ஆகட்டும். முக்தியை அளிக்கும் சக்தியுடைய உங்களை நான் அடைந்தும் சம்சாரபந்தத்தில் இருந்து விடுபடவில்லையானால் நான் மாயையால் வஞ்சிக்கப்பட்டவள் என்பது உறுதி.


அடுத்த அத்தியாயத்தில் கர்தமர் தேவஹூதியிடம் பகவானே அவளுக்குப் பிள்ளையாக வருவார் என்று கூறுவதும் கபிலாவதாரமும் வர்ணிக்கப்படுகிறது.
இந்த ஸ்கந்தத்தில் முக்கியமானவை வராஹாவதாரமும் கபிலாவதாரமும்தான். அதனால் பிற சம்பவங்களை கொஞ்சம் சுருக்கி அளிக்கிறேன்.