Announcement

Collapse
No announcement yet.

Chettiar becoming kubera -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Chettiar becoming kubera -Periyavaa

    Chettiar becoming kubera -Periyavaa
    கொழந்தை…. என்ன சொல்றான்?….


    செட்டிநாட்டை சேர்ந்த நகரத்தார் குடும்பங்களில் அநேகம் பேர் பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர்கள்.


    தமிழ்நாட்டை பொறுத்தவரை, இனிமேல்… கோவில்களுக்கும், தான தர்மங்களுக்கும் அவர்களைப் போல் வாரி வழங்கியவர்கள் கிடையாது.


    இப்படித்தான், ஒரு செட்டியார், 'ஸகலமும் பெரியவாதான்' என்றிருந்தார். ஸமயம் கிடைக்கும் போதெல்லாம் பெரியவாளை வந்து தர்ஶனம் பண்ணுவார்.


    ஒருமுறை தர்ஶனத்துக்கு வரும் போது, தன்னுடைய ஏழு வயது மகனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்தார். அவர்கள் முறை வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுப் பெரியவா அனுக்ரஹித்த ப்ரஸாதத்தோடு கிளம்பும்போது,


    "அப்பா…!…


    செட்டியாரின் ஏழுவயது குழந்தை தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து, அவரைக் குனியச் சொல்லி, காதில் ஏதோ ரகஸ்யமாக சொன்னான்.


    அவன் சொல்லி முடித்ததும், நிமிர்ந்து பெரியவாளை முற்றிலும் அலஸி ஆராய்ந்த செட்டியார், பையனை அதிஸயமாக ஒரு முறை பார்த்து விட்டு, பதில் ஏதும் சொல்லாமல் நகர்ந்தார்.


    பையன் விடவில்லை! அப்பாக்காரரின் கையைப் பிடித்து இழுத்து, முணுமுணுவென்று ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்.


    விடுவாரா, நம் பொல்லாத கிழவனார்?………..


    பாவம்! குழந்தை என்ன சொல்கிறான் என்று அவருக்கு தெரியலையாம்!


    "கொழந்தை என்ன சொல்றான்?……….."


    "ஒண்ணுமில்ல… பெரியவா….! ஏதோ தெரியாம சொல்றான்"


    "பரவாயில்ல……சொல்லுப்பா….."


    தானாகச் சொல்லாவிட்டால், வாயைப் பிடுங்கியாவது சொல்ல வைக்க மாட்டாரா என்ன?


    "பெரியவா… மடியில ஒரு சின்னக் கொழந்தை, பச்சை கலர்ல, பட்டுப் பாவாடை கட்டிக்கிட்டு உக்காந்திருக்குதாம்….. அது யாருப்பா?…ன்னு கேக்கறான். ஏன்னா, எங்கண்ணுக்கு அப்டியொண்ணும் தெரியல…. பெரியவா"


    செட்டியார் நடுங்கிக் கொண்டே சொல்லி முடித்தார். குழந்தை சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.


    தெய்வம் தன்னுடைய ப்ரபாவத்தை சற்றே வெளிப்படுத்தியது…………


    "என்ன தாத்தா? நா….பொய் சொல்லலேல்ல?..." என்று எண்ணியபடி, 'குறுகுறு' வென்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை வாத்ஸல்யத்தோடு பார்த்தார்…..


    "ஒன் கொழந்தை சொல்றது நெஜந்தான்! "


    சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள் ஆஶ்சர்யத்தால்!


    "என்னது? பெரியவா மடியில கொழந்தைன்னா…. பாலா த்ருபுரஸுந்தரியாத்தான் இருக்கும்!..."


    அத்தனை பேர் மனஸிலும் ஏறக்குறைய இந்த எண்ணந்தான்!


    "நம்ப ஸ்ரீமடத்தோட குரு பாரம்பர்யத்துக்கு அப்டி ஒரு வரப்ரஸாதம்… ஒரு அனுக்ரஹம் இருக்கு. மடத்ல… ஸ்வாமிகளா இருக்கற எங்களோட மடியில, ஸாக்ஷாத் ஶாரதாதேவி ஒக்காந்துண்டு இருக்கறதா ஒரு ஐதீகம்! அது பல ஸமயங்கள்ள, "எங்களோட" கண்ணுக்கே கூடத் தெரியாமப் போறதுண்டு.! …..ஆனா, இப்டியொரு காக்ஷி, ஒரு குபேரனோட கண்ணுக்குத்தான் தெரியும்!…..


    "குபேரனா?…… "


    செட்டியாரும், மற்றவர்களும் வாயைப் பிளந்தார்கள்.


    "ஒம்பிள்ளை ரொம்ப ஸீக்ரம்… குபேரனா ஆய்டுவான்"


    கையைத் தூக்கி ஆஶிர்வாதம் பண்ணினார். வியப்பின் விளிம்புக்கே போய் விட்டார்கள் எல்லாரும்! செட்டியாரோ தான் இப்போதிருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தார்.


    "குபேர அந்தஸ்தா!" கற்பனைகூட பண்ண முடியாதே!


    பெரியவா சொன்னால் அது ஸத்யம். எனவே ஸாத்யம்!


    ஆனால், எப்படி? மனஸில், ஆஶ்சர்யமான இந்தக் கேள்வியோடு, தன் பிள்ளையுடன் ஊர் திரும்பினார்.


    ரெண்டு வர்ஷம் ஓடிவிட்டது….


    ஒருநாள் "அத்ருஷ்ட தேவதை" அவர்கள் வீட்டுக் கதவை, இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்……..!


    செட்டியாரின், தூரத்து ஸொந்தக்காரர் ஒருவர் வந்தார்!


    எதற்காக?


    பெரியவாளுடைய அருள்வாக்கை உண்மையாக்க!


    வந்தவருக்கு வாரிஸு இல்லாததால், ஸொந்த பந்தம் விட்டுப் போகாமல் இருக்கவேண்டி… செட்டியாரின் பையனை "ஸ்வீகாரம்" கேட்டு வந்தார்.!


    மறுத்து சொல்ல முடியாத பந்தம்…..


    பெரியவாளுடைய மடியில் அமர்ந்திருந்த ஶாரதையைப் பார்த்த பாக்யஶாலி, அக்ஷணமே குபேரனானான்!


    ஆம்.! இத்தனைதான்…. என்று கணக்கிட்டு சொல்ல முடியாத ப்ரஹ்மாண்டமான ஸொத்துக்கு, ஒரே வாரிஸாகப் போனான்… அந்தக் குழந்தை!


    பரமேஶ்வரனின் மித்ரன் அல்லவா குபேரன்!


    பரமேஶ்வரனின் கல்யாண குணங்களில் ஒன்று, குபேர மித்ரனாக இருந்தாலும் கூட, தனக்கென உள்ள, திருவோடு, கபால மாலை, ருத்ராக்ஷம் இவைகளைத்தான் அவன் விரும்பி அணிவான்.


    க்ஷணத்தில் யாரை வேண்டுமானாலும் குபேரனாக்கும் ஶக்தி பெரியவாளிடம் இருந்தாலும், அவருக்கு என்னவோ, ஒற்றை காஷாய வஸ்த்ரம், ருத்ராக்ஷம், தண்டம், கமண்டலம்தான்! பிக்ஷாண்டிக்கு பிக்ஷையேற்று உண்பதே உகப்பாக இருக்கும்.


    ஶ்ரீமடத்தின் பீடாதிபத்யம் ஸாதாரண விஷயமில்லை! 2500 வர்ஷங்களுக்கும் மேலாக வாழையடி வாழையாக தெய்வீக ஸம்பத்துடன் விளங்கும் அதன் ஒவ்வொரு ஆசார்யர்களும் அம்பிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்பிகையின் அரவணைப்பில், அவளுடைய ஸ்வரூபமாகவும், ஆதி ஆசார்யாளின் மறு உருவாக நம்மிடையே வலம் வருபவர்கள் என்பது ஸத்யம்!


    ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.
Working...
X