Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 3 adhyaya 26 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 3 அத்தியாயம் 26
    கபிலோபதேசம் (தொடர்ச்சி)
    கபிலர் கூறினார்.
    இப்போது எவ்வாறு ப்ரகிருதியின் குணங்களால் கட்டுப்பட்டு பந்தத்தை அனுபவிக்கும் புருஷன் அல்லது ஜீவாத்மா பிரக்ருதியின் தத்வங்களை உணர்ந்து அதிலிருந்து விடுபடுகிறான் என்பதை விளக்குகிறேன்.


    புருஷன் என்பது அனாதியான ஆத்மா. அவன் ப்ர்க்ருதியின் குணங்களிருந்து வேறுபட்டவன். முக்குணங்களைக் கொண்ட பிரக்ருதியுடன் சம்பந்தப்படுவதனால் ஜீவாத்மா எனப்படுகிறான்.எப்போது ப்ரக்ருதி வேறு தான் வேறு என்று உணர்கிறானோ அப்போது தன்னிலை அடைகிறான்.


    உண்மையில் செயலற்றவனாகவும், சுதந்திரனாகவும் , ஆனந்தரூபனாகவும், சாக்ஷிமாத்திரம் ஆகவும் இருக்கும் ஆத்மா பிரக்ருதியின் சம்பந்தத்தால் தன்னை செயல் புரிபவனாவும் அதன் பலனை அனுபவிக்கிறவனாகவும் எண்ணி சம்சார பந்தத்தில் சிக்கிக்கொள்கிறான்.


    தேவஹூதி புருஷன் பிரகிருதி இவர்களைப் பற்றி விளக்கும்படி கேட்க கபிலர் கூறலுற்றார்.


    பிரகிருதி என்பது எல்லாப் பொருள்களுக்கும் உற்பத்திஸ்தானம். அது ப்ரதானம் என்றும் கூறப்படுகிறது. அது ஆரம்ப நிலையில் வெளித்தோற்றம் அன்றி இருக்கிறது. ஆனால் அனைத்து வஸ்துக்களும் அதிலிருந்து தோன்றுகின்றன.


    அப்படியானால் அது பரப்ரம்மமா என்றால் இல்லை. ஏன் என்றால் பரப்ரம்மம் குணமற்றது. நிர்குணம் . பிரக்ருதியோவென்றால் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களை உடையது. இந்த மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று கலந்தால்தான் உலகஸ்ருஷ்டி.


    பகவானுடைய தூண்டுதலால் அவை கலக்க ஆரம்பிக்கின்றன. ஸ்ருஷ்டி நிறைவடைந்ததும் பகவான் எல்லாவற்றிற்கும் உட்புகுந்து அவற்றின் அந்தராத்மா ஆகிறார்.
    பிரகிருதி எப்படி செயல்படுகிறது என்றால் முக்குணங்களும் கலந்து இருபத்து நான்கு தத்வங்கள் உண்டாகின்றன. அவையாவன:


    ஐந்து ஸ்தூல பூதங்கள்- ஆகாசம், வாயு , தேஜஸ் ( ஒளி),. அப்பு ( நீர்,) பிருதிவி (நிலம்.)
    ஐந்து சூக்ஷ்ம பூதங்கள், சப்தம் , ஸ்பர்சம், ரூபம், ருசி , கந்தம்.
    பத்து இந்த்ரியங்கள் – செவி, தோல், கண், நாவு, நாசி.(ஞானேந்த்ரியங்கள்),
    கை, கால், ஜனன ,விசர்க இந்த்ரியங்கள் , நாக்கு (கர்மேந்த்ரியங்கள் ) நாக்கு இரண்டு வகையிலும் பயன்படுகிறது.
    மனஸ், புத்தி, அஹங்காரம் ,சித்தம் .


    சூக்ஷ்ம பூதங்கள் தன்மாத்திரைகள் எனப்படுகின்றன. இவைகளில் இருந்து ஸ்தூல பூதங்கள் உண்டாகின்றன.
    பரமாத்மா எல்லாப் பொருள்களுக்கும் உட்புகுந்து அந்தர்யாமியாகவும் வெளியில் காலமாகவும் இருக்கிறார்.


    பரமாத்மாவின் சங்கல்பம் வீரியமாக பிரகிருதி என்னும் கர்பாசயத்தில் புகுந்ததும் ஜீவர்களின் கர்மபலனால் தூண்டப்பட்டு பிரகிருதி ஸ்ருஷ்டியைத் துவங்குகிறது. முதலில் உண்டாவது மஹத் தத்வம் (cosmic intelligence). இதன் தூய சத்வ குணம் மேலிட்ட இதன் அதிதேவதைவாசுதேவன்.


    மஹத் தத்வத்தில் இருந்து அஹங்காரம் உண்டாயிற்று. இது மூன்று விதமானது. . அவை வைகாரிகம்,தைஜசம், தாமசம். வைகாரிகத்தில் இருந்து மனதின் உற்பத்தியும், தைஜசத்தில் இருந்து இந்த்ரியங்களின் உற்பத்தியும் , தாமசத்தில் இருந்து பஞ்ச பூதங்களின் உற்பத்தியும் ஏற்பட்டன. இப்படி விரிந்த அஹங்கார தத்துவத்தை ஆயிரம் தலை கொண்ட ஆதிசெஷன் அல்லது சங்கர்ஷணன் என்றும் கூறுகின்றனர்.


    சாத்விக அஹங்காரத்தில் இருந்து ஜீவன் தன்னை கர்த்தா ( agent of action) என்று கருதுகிறான். ராஜச அஹங்காரம் இந்த்ரியங்களுடன் சம்பந்தத்தை ஏற்படுத்துகிறது. தாமச அஹங்காரம் உடலுடன் சம்பந்தத்தை தோற்றுவிக்கிறது. சத்வகுணத்தினால் சாந்தியும் ரஜோகுணத்தினால் சாந்தியின்மையும் தமோ குணத்தினால் அறிவின்மையும் ஏற்படுகிறது.


    சாத்விக அஹங்காரத்தால் தோன்றிய மனதில் சங்கல்பம், தேக சம்பந்தமான உணர்வும், விகல்பம் , விஷயங்களிடம் பற்றுதல் உண்டாயிற்று. இந்த மனோதத்துவத்தை இந்த்ரியங்களை ஆள்பவரான அநிருத்தன் என்று கூறுகின்றனர். யோகிகள் இந்த வடிவை சரத்கால நீலமேக ச்யாமளனாக த்யானிக்கின்றனர்.


    ராஜஸ அஹ்ங்காரத்தினின்று புத்தி தத்வம் தோன்றிற்று .அதனால் பொருள்களைப் பற்றிய அறிவும் இந்த்ரியங்களால் உணரும் சக்தியும் உண்டானது.


    தாமஸ அஹங்காரத்தில் இருந்து சப்த தன்மாத்திரையும் அதிலிருந்து ஆகாசமும் உண்டாயிற்று. ராஜசிக் அஹங்காரத்தில் இருந்து உண்டான செவி சப்தத்தை ,உணரும் இந்த்ரியமாயிற்று. .


    சப்த தன்மாத்திரையில் இருந்து ஸ்பர்ச தன்மாத்திரை, அதிலிருந்து வாயுவும் உண்டாயின. தோல் ஸ்பர்சத்தை உணரும் இந்த்ரியமானது. ஸ்பர்ச தன்மாத்திரையில் இருந்து ரூப தன்மாத்திரையும் , அதிலிருந்து தேஜஸ் அல்லது ஒளியும் உண்டாயின. அதை உணரும் இந்த்ரியம் கண் ஆனது.


    இவ்வாறே ரூப தன்மாத்திரை->ருசி தன்மாத்திரை->அப்பு அல்லது ஜலம்,, அதை உணரும் இந்த்ரியம் நாவு, ருசி தன்மாத்திரை->கந்த தன்மாத்திரை -> பிருத்வி( நிலம்) அதை உணரும் இந்த்ரியம் நாசி என்று ஸ்தூல பிரபஞ்சம் உருவானது.
    சுருக்கமாகச் சொன்னால்,


    தாமச அஹங்காரத்தில் இருந்து முதலில் ஆகாசம் தோன்றியது. இதன் குணம் சப்தம். ஆகாசத்தில் இருந்து வாயு தோன்றியது . சப்தத்துடன் இதன் விசேஷ குணமான ஸ்பரிசம் சேர்ந்தது வாயுவில் இருந்து உண்டானது தேஜஸ் அல்லது அக்னி.சப்தம் ஸ்பரிசம் இவற்றோடு இதன் விசேஷ குணமாவது ரூபம்.,அக்னியில் இருந்து நீர் தோன்றியது. இதற்கு இதன் விசேஷ குணமாகிய சுவையுடன் ,சப்தம் ஸ்பர்சம், ரூபம் இவை சேர்ந்து நான்கு குணங்கள். நீரிலிருந்து தோன்றியது ப்ருதிவி(நிலம்) இதற்கு இதன்விசேஷ குணமாகிய மணத்துடன் கூட மற்ற நான்கு குணங்களும் உண்டு.
Working...
X