Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 4 adhyaya 8 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 4- அத்தியாயம் 8


    மைத்ரேயர் ஸ்வாயம்புவமநுவின் புத்திரர்களான உத்தான பாதன் , ப்ரியவ்ரதன் இவர்களின் வம்சத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்து முதலில் உத்தான பாதனைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.


    மைத்ரேயர் கூறினது.
    உத்தான பாதனுக்கு ஸுருசி, ஸுநீதி என்று இரு மனைவிகள் . ஸுருசி அவனுக்கு பிடித்தவளாக இருந்தாள். ஸுநீதியை அவ்வரசன் அலட்சியம் செய்தான். ஒரு சமயம் அரசன் உத்தானபாதன் ஸுருசியின் புதல்வனான் உத்தமனை மடியில் வைத்து சீராட்டிக்கொண்டிருந்தபோது ஸுநீதியின் மகனான துருவன் தந்தையின் மடியில் தானும் ஏற விரும்பினபோது ஸுருசியின் கோபத்துக்கு பயந்து உத்தானபாதன் அவனை அனுமதிக்கவில்லை.


    அப்போது ஸுருசி கர்வத்துடன் தன் சக்களத்தி பிள்ளையான அவனைப் பார்த்து உத்தானபாதன் எதிரிலேயே கடுஞ்சொற்களைக் கூறினாள்.
    " நீ என் வயிற்றில பிறக்காத காரணத்தால் ராஜகுமாரனாக இருந்தாலும் அரசனுடைய ஆசனத்தில் ஏறத்தகுதியற்றவன்,. அது வேண்டுமானால் தவத்தால் பகவானை ஆராதித்து அவன் அனுக்ரஹத்தால் என் வயிற்றில் பிறக்க வேண்டும். "


    அவளுடைய கொடும்சொற்களால் தடியால் அடிபட்ட பாம்புபோல் கோபத்துடன் பெருமூச்சு விட்டு பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த தந்தையை விட்டு தாயின் அருகாமையில் வாய் விட்டு அழுதுகொண்டே சென்றான். அந்த இளம் சிறுவனான துருவனை மடியில் வைத்து மற்றவர் மூலம் நடந்ததை அறிந்து ஸுநீதி மிகவும் வருந்தினாள்
    .
    பேதை ஸுநீதி தன் இயலாமையை நினைத்து வருந்தி பிள்ளையிடம் கூறினாள்.
    "ஒருவரிடமும் வெறுப்புக் கொள்ளாதே. பிறருக்கு துன்பம் விளைவிப்பவர் அதன் பயனை பின்னர் அனுபவிப்பர். ஸுருசி கூறியது உண்மைதான். துர்பாக்கியவதியான் என் வயிற்றில் பிறந்ததால் அல்லவோ உனக்கு இந்த நிலை. என்னை மனைவியாகவோ அல்லது பணியாளாகவோ கூட ஏற்க அரசர் மறுக்கிறாரே. உன் மாற்றாந்தாய் கூறியதை உள்ளபடி ஏற்று உன் எண்ணம் நிறைவேற பரந்தாமனைப் பூஜிப்பாயாக. "


    " எவருடைய சேவையினாலும் ஆராதனையினாலும் பிரம்மாவும் உன் பாட்டனார் ஸ்வாய்ம்புவ மனுவும் மேன்மை அடைந்தார்களோ அந்த எங்கும் நிறைந்தவரான மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி பாகவததர்மத்தை பின்பற்றி பக்தவத்சலனான் அந்த பகவானை பக்தியுடன் பூஜிப்பாயாக."


    அன்னைசொல் கேட்ட துருவன் உடனே தந்தையின் தலைநகரத்தில் இருந்து வெளிக் கிளம்பினான். இதைக்கேட்ட நாரதர் ஆச்சரியத்துடன் அவன் முன் வந்தார். அவனுடைய தலையில் தன் கையை வைத்து ஆசீர்வதித்துக் கூறினார்.


    "மகனே, விளையாடும் வயதில் இருக்கும் நீ நடந்தை நினைத்து அது உனக்குச் செய்யப்பட்ட அவமானமாக நினைக்கக் கூடாது. அவமானத்தினால் ஏற்படும் துன்பமோ கௌரவப்படுத்துவதால் இன்பமோ பற்றினால் ஏற்படுகிறது. சுகதுக்கங்கள் நம் கர்மபலனாக ஏற்படுகின்றன. அவைகளை பாராட்டலாகாது. எல்லாமே பகவானின் சங்கல்பம் என்று அறியவேண்டும்."


    "முனிவர்கள் கடும் தவத்தாலும் கண்டறிய முடியாத அந்த பகவானின் அருளை நீ தாயின் உபதேசத்தால் எளிதில் அடைந்துவிட முடியும் என்று எண்ணுகிறாய் அது மிகக் கடினம். ஆகையால் இந்த எண்ணத்தைக் கைவிட்டு திரும்புவாயாக. உரிய காலமும் வயதும் வரும்போது நீ முயற்சிக்கலாம்."


    பகவத் சங்கல்பத்தால் ஏற்படும் இன்பதுன்பங்களை பொருட்படுத்தாமல் இருப்பவன் பின்னர் அறியாமை நீங்கி நற்கதி பெறுகிறான். நம்மைவிட மேலான நிலையில் உள்ளவரைக்கண்டு பொறாமைப் படக்கூடாது. நம்மை விட கீழான நிலையில் உள்ளவரைக் கண்டு இரங்க வேண்டும்., நமக்கு சமமானவரோடு நட்புப் பாராட்டவேண்டும். இந்த வழியில் செல்வோருக்கு என்றும் துன்பமில்லை. "


    ( பகவானை அடையும் மார்க்கத்தை உபதேசிக்க வே நாரதர் வந்தார். . அவருடைய மேற்சொன்ன வார்த்தைகள் அவனுக்கு நிச்சய புத்தி இருக்கிறதா என்று சோதிக்கவே.)


    துருவன் கூறினான்.
    "சுகதுக்கங்களை சமமாக பாவிக்கும்படி நீங்கள் கூறிய தெல்லாம் எங்களைப்போன்றவர்க்கு நலமானதானாலும் அறிந்துகொள்ளக் கடினமானது. க்ஷத்ரிய மனம் கொண்ட என்னால் ஸுருசியின் வார்த்தைகளைப் பொறுக்க இயலவில்லை. ஆதலால் தேவ ரிஷியே என் முன்னோர்களாலும் மற்றோர்களாலும் அடைய்படாதததும் மூவுலகுக்கும் மேலானதும் ஆன பதவியை அடைய விரும்பும் எனக்கு உபதேசித்தருள்வீர்."


    நாரதர் கூறினார்.
    "அறம் ,பொருள், இன்பம் , வீடு என்ற உயர்நலத்தை எவன் விரும்புகின்றானோ அவன் அதை அடைவதற்கு ஒரே வழி ஹரியின் திருவடி சேவையே. அகையால் புண்ணியமான யமுனைக்கரைக்குச் செல். அங்கு மதுவனம் என்ற இடத்தில் ஹரியும் ஸாந்நித்தியம் எப்போதும் உள்ளது. "


    "அந்த மங்கலமான யமுனையில் நீராடி அங்கு வசித்து ப்ராணாயாமத்தால் பிராணன் இந்த்ரியங்கள் மனமா இவற்றை சுத்தமாக்கி வலிமை பெற்ற மனத்தால் ஹரியை த்யானிக்க வேண்டும்."


    அடுத்து எவ்வாறு ஹரியை த்யானிக்க வேண்டும் என்று கூறி மந்திர உபதேசம் செய்கிறார்.








    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 4 அத்தியாயம் 8 (தொடர்ச்சி)


    நாரதர் கூறினார் .
    "எப்போதும் இருள் புரியக் காத்திருப்பவரான ஹரியை பிரசன்ன வதனராகவும், அழகிய மலர்ந்த முகத்தினராகவும், ரமணீயமான அங்கங்களை உடையவராகவும் , ஸ்ரீவத்சம், வன மாலை , மேகச்யாமள வர்ணம், நான்கு கைகளில் சங்கசக்ர கதாபத்மத்துடனும், கிரீட குண்டலங்கள் தோள்வளை இவை தரித்தவராகவும், பொன் பாத சரம் , பீதாம்பரம் இவை அணிந்து, இரத்தின வரிசை போல் பிரகாசிக்கின்ற நகங்களுடன் கூடிய திருவடியால் பக்தர்களின் இதயத்தாமரையில் புகுந்து நித்திய வாசம் செய்கின்றவரும் ஆன அவரை ஏகாக்ரசித்தத்துடன் த்யானம் செய்ய வேண்டும்."


    இவ்வாறு பரம மங்களமான பகவானுடைய ரூபத்தை த்யானிக்கும் மனது விரைவில் பரமானந்தத்தினால் நிறைந்து விடும். அதன் பின் அதிலிருந்து ஒருபோதும் வழுவாது. எந்த மந்திரத்தை ஏழுநாள் தொடர்ந்து ஜபம் செய்தால் ஒரு புருஷன் தேவர்களை நேரில் காண்பானோ அந்த சிறந்ததும் ரகசியமானதும் ஜபித்தற்குரியதும் ஆன மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். அது 'ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ,' என்பதாகும்."


    இவ்வாறு உபதேசிக்க ப்பட்ட துருவன் நாரதரை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டு மதுவனம் நோக்கி புறப்பட்டான் .


    இதற்கிடையில் நாரதர் உத்தான பாதனுடைய அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவன் வருத்தமுற்றிருப்பதைப் பார்த்து ஒன்றும் அறியாதவர் போல் அதன் காரணத்தைப் பற்றி வினவினார். உத்தான பாதன் கூறினான்.


    " கருணையில்லா கொடுமனத்தனாகிய நான் புத்திசாலியும் உயர்ந்த உள்ளத்தை உடையவனும் ஆன என் மகனையும் அவன் அன்னையையும் உதாசீனம் செய்தேன். அதனால் என் ஐந்தே வயதுள்ள மகன் நாட்டைவிட்டு வெளியேறக் காரணமானேன்.


    பசியுடனும் ஆதரவற்றவனும் ஆன அவனைக் காட்டில் கொடிய மிருகங்கள் தாக்கினால் என்ன செய்வான்? பெண்பித்துக் கொண்ட நான் எவ்வளவு கீழானவனாக மாறிவிட்டேன் ! அன்புடன் என் மடியில் உட்கார வந்த என் அருமை மகனை உதாசீனம் செய்தேனே !" எனக்கூறி வருந்தும் அவனைப் பார்த்து நாரதர் கூறினார்.


    "உன் மகன் பகவானால் பாதுகாக்கப்படுகிறான். நீ அவனுடைய பெருமையை அறியமாட்டாய். அவன் உலகில் சிறந்தவனாக விளங்கப் போகிறான். திக்பாலகர்களும் அடைய முடியாத மேன்மையை அடைந்தவனாக விரைவில் திரும்புவான். " இதைக்கேட்ட அரசன் தன் ராஜ்ஜியத்தைக் கூட மறந்து மகனைப் பற்றிய நினைவில் ஆழ்ந்தான்.


    துருவன் நாரதர் சொன்ன வண்ணம் யமுனை நதிக்கரையில் ஸ்நானம் செய்து மதுவனம் அடைந்து ஹரியைப் பற்றிய த்யானத்தில் ஆழ்ந்தான். மூன்று நாட்களுக்கு ஒருமுறை விளாம்பழமும் இலந்தைப் பழமும் மட்டும் ஆகாரமாகக் கொண்டு ஒரு மாதம் ஹரியை ஆராதித்தான்.


    பிறகு உதிர்ந்த இலைகளையும் புல்லையும் மட்டும் உணவாகக் கொண்டு இரண்டாவது மாதத்தைக் கழித்து ஹரியைப் பூஜித்தான் . மூன்றாவது மாதம் ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை நீர் மட்டும் அருந்தியும், நான்காவது மாதத்தில் பனிரெண்டு நாட்களுக்கு ஒருமுறை காற்றை உணவாகக்கொண்டும் மூச்சை அடக்கியும் ஹரியை த்யானித்தான்.. ஐந்தாவது மாதம் மூச்சை முழுவதும் அடக்கியவனாக ஒற்றைக் காலில் கட்டையைப்போல் நின்று த்யானத்தில் ஆழ்ந்தான்.


    மனதை புத்தியில் அடக்கியவனாய் த்யானிக்கும் பகவானின் ஸ்வரூபத்தைத் தவிர வேறு எதையும் காணவில்லை. பிரபஞ்சத்தின் ஆதாரமான பிரம்மஸ்வரூபத்தைக் குறித்து செய்யப்பட அவனுடைய தவத்தால் மூவுலகமும் நடுங்கியது. அவன் அவ்வப்போது தன் காலை மாற்றி நிற்கையில் அந்தப் பாதத்தின் அழுத்தத்தைத் தாங்காமல் பூமி ஒரு படகில் யானை ஏறியது போல அதிர்ந்தது.


    தேவர்கள் முதலிய எல்லோரும் மூச்சுவிட முடியாமல் அவனுடைய தவத்தின் வேகத்தால் மூச்சு விட முடியாமல் ஸ்ரீ ஹரியை சரண் அடைந்தனர். பகவான் ஹரியும் அவர்களைத் தேற்றி துருவன் என்னும் சிறுவன் உலகம் இதுவரை காணாத தவம் இயற்றுகிறான் என்றும் அதன் விளைவே அவர்களின் இடர் என்றும் கூறித் தான் அவனுக்கு அருள் செய்து உலகைக் காப்பதாகக் கூறினார்.


    அடுத்த அத்தியாயத்தில் துருவனுக்கு பகவான் ப்ரத்யக்ஷமாகி அருள் புரிந்த வரலாறு கூறப்படுகிறது.
Working...
X