Srimad Bhagavatam skanda 4 adhyaya 12 in tamil
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam


ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம்4-அத்தியாயம் 12


அத்தியாயம் 12
துருவன் தன் கோபத்தை விட்டு போரை நிறுத்தியதும், குபேரன் சாரணர்கள், யக்ஷர்கள் , கின்னரர்கள் புடை சூழ அவ்விடம் வந்து துருவனால் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டான். குபேரன் துருவனிடம்


"உன் சகோதரன் இறந்தது அவன் விதியேயாகும். கொல்வது கொல்லப்படுவது இவையெல்லாம் நான் என்ற மாயையினால் ஏற்படுவது. எல்லாவுயிர்கட்கும் ஆத்மாவான பகவானை வழிபட்டு பேத மனப்பான்மையை விட்டு சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுவாயாக. உனக்கு என்ன வரம் வேண்டும் " என்று கேட்டான். அதற்கு துருவன் தனக்கு ஹரியினிடம் இடையறாத ஸ்மரணம் இருக்கவேண்டும் என்று கேட்க குபேரனும் அவ்விதமே ஆகட்டும் என்று வரமளித்து தன் இருப்பிடம் சென்றான். துருவனும் தன் நகரம் அடை ந்தான்.


பிறகு துருவன் யக்ஞபுருஷனான மகாவிஷ்ணுவை யாகயக்ஞங்களால் ஆராதித்து அவரை எல்லா உயிர்களிடத்தும் காணும் நிலை அடைந்தான். எல்லா நற்குணமும் பொருந்தியவனும் ,ஞானிகளை போற்றுபவனும், ஏழைகளுக்கு இரங்குபவனும்,தருமத்தைக் காப்பவனுமாகிய அவனை எல்லோரும் போற்றினர். இங்ஙனம் ஸ்திதப்ரக்ஞனாக பல ஆண்டுகளைக் கழித்துப் பின்னர் ராஜ்ஜியத்தை புத்திரனிடம் ஒப்படைத்து வனம் ஏகினான்.


பதரிகாச்ரம் சென்ற துருவன் ஹரியிடம் இடையறாத பக்தியுடன் தன்னை மறந்து தியானம் செய்துகொண்டு இருந்தான். அப்போது சந்திரனைப் போல் ஒளியுடன் எட்டு திக்குகளையும் பிரகாசப்படுத்திக்கொண்டு ஆகாயத்தில் இருந்து இறங்கிய ஒரு விமானத்தைக் கண்டான். அதில் நான்குபுஜங்களுடன் ச்யாமலவர்ணத்தில் அழகிய ஆடையுடன் கிரீடகுண்டலங்கள் தரித்த இரு யுவர்களைக் கண்டான். அவர்கள் பகவானுடைய பாரிஷதர்கள் என்றறிந்து நாராயண நாமங்களைக் கூறி நமஸ்கரித்தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அவர்கள் நந்தன் ஸுநந்தன் என்ற பத்மநாப தாசர்கள். அவர்கள் பகவானின் திருவடிகளில் நிலைத்த சித்தம் உடையவனும் வினயத்தால் வணங்கி நிற்கின்றவனும் ஆன துருவனைப் பார்த்து, " ஜெயிக்கமுடியாத விஷ்ணுபதம் உம்மால் ஜெயிக்கப்பட்டது. நித்யசூரிகளும் சப்தரிஷிகளும் கூட அடையமுடியாத ,, சந்திரசூரியர்களும் நக்ஷத்திரங்களும் வலம் வரும் உயர்பதத்தை அடைந்து நீர் அதில் இருக்கலாம். இந்த சிறந்த விமானம் பகவானால் அனுப்பப் பட்டது. இதில் ஏறுவீராக, " என்று கூறினர்.


அந்த வார்த்தைகளைக் கேட்டு துருவன் நீராடி, நித்யானுஷ்டானங்களைச் செய்து முனிவர்களை வணங்கி அவர்கள் ஆசியைப் பெற்றார். அப்போது யமதருமன் அருகில் வரக்கண்டார். அவர வேண்டுகொளுக்கிணங்கி அவர் தலைமேல் பாதத்தை வைத்து ஹிரண்யமயமான திவ்ய சரீரத்துடன் விமானத்தில் ஏறினார். அப்போது அவர் தாயை எண்ணி அவளை விட்டுத் தான் மட்டும் சுவர்க்கம் புகுவதா என்று நினைக்க அதை உணர்ந்த தேவ ஸ்ரேஷ்டர்கள அவள் அவருக்கு முன்பே விமானத்தை செல்வதைக் காட்டினர்.


பிறகு துருவன் தேவ விமானத்தில் மூவுலகையும் சப்தரிஷிமண்டலத்தையும் கடந்து சாந்தமும், சமத்ருஷ்டியும், ஸகல உயிர்களிடமும் தயை உள்ளவர்களும், பகவானே சர்வமும் என்று எண்ணுபவர்களும் அடையகூடியவிஷ்ணுபதத்தை அடைந்தார். இவ்வாறு துருவன் மூவுலகுக்கும் சிகாமணியாய் விளங்கினார். துருவ நக்ஷத்திரம் ஆகிய அவரைச் சுற்றி நக்ஷத்திரமண்டலம் சுழல்கிறது.


பிரசேதஸர்களின் ஸத்திர யாகத்தில் நாரதர் வீணாகானத்துடன் துருவனின் மகிமையை பின் வருமாறு பாடினார்.


துருவன் தவத்தால் அடைந்த பதவியை அடையும் வழியை உணர்ந்தவர்களான வேதவித்துக்களாலும் அடைவது எளிதல்ல. அப்படி இருக்க ஒரு க்ஷத்ரியன் அடைவது என்பது துர்லபம்
.
ஐந்து வயதிலேயே சிற்றன்னையின் சொல்லினால் இதயம் புண்பட்டு மனம் வருந்தி வனம் சென்று என் உபதேசத்தை ஏற்று அனுஷ்டித்து பக்தியினாலன்றி வேறு எதனாலும் ஜெயிக்கமுடியாத பிரபுவை எவர் ஜெயித்தாரோ அவர் புகழைப் பாடுவோம் .


ஐந்தாறு வயதிலேயே வெகு சில நாட்களிலேயே வைகுண்ட நாதனை திருப்தி செய்து அவருடைய பதத்தை அடைந்தாரோ அவர் புகழைப் பாடுவோம். க்ஷத்ரிய குலத்தில் உதித்த வேறு எவனாவது அவர் அடைந்த பதவியை அடைய ஆசையாவது கொள்வானா?
மைத்ரேயர் கூறினார் .
விதுரரே , உமக்கு சாதுக்கள் போற்றும் உத்தம கீர்த்தி வாய்ந்த துருவ சரித்திரம் என்னால் கூறப்பட்டது. இது ஸ்ரத்தையுடன் படிப்பவருக்கு ஐஸ்வர்யம், புகழ், அமைதி மற்றும் நீண்ட ஆயுள் இவை வாய்க்கும். பாபங்களைப் போக்கும். சுவர்க்கத்திற்கும் நிலையான ( த்ருவமான)பதவிக்கும் வழிவகுக்கும்., இதைக் கேட்பவருக்கு பகவானிடம் த்ருடமான பக்தி ஏற்பட்டு எல்லா துன்பமும் விலகும். இது ஒரு தீர்த்தயாத்திரை செல்வதற்கு சமமானது.


பௌர்ணமியிலும், கிருஷ்ணபக்ஷ சதுர்தசியிலும் , த்வாதசி அன்றும் . ச்ரவண நக்ஷத்திரத்திலும், சூரிய அஸ்தமனத்திலும், ஞாயிற்றுக்கிழமை அன்றும் இதை ஸ்ரத்தையுள்ளவர்களுக்கு சொல்ல வேண்டும்.
எவன் தத்துவத்தை உணராதவர்க்கு பகவத்விஷயமான ஞான அமிர்தத்தை அளிப்பானோ அவனுக்கு எல்லா தேவதைகளும் அருள் புரிவார்கள்>