Give this child to them-Periyavaa
வீணா அலைஞ்சதெல்லாம் போறும்!


ஒரு குடும்பத்தில் ரெண்டாவது பிள்ளைக்கு கல்யாணமாகி, குழந்தை இல்லாததால்.... மூன்றாவது வர்ஷத்திலிருந்து மாமியார் அடிக்கடி புலம்ப ஆரம்பித்தாள்...


"எல்லாம் அவளோட பரம்பரைக் குத்தந்தான்.."


Typical மாமியார்த்தனமான குற்றச்சாட்டை அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்.


"ஒங்க ரெண்டு பேருக்கும் ஒரு குறையும் இல்ல; நிச்சயம் கொழந்தை பொறக்கும்"


டாக்டர்கள் certify பண்ணினார்கள்.


"பொறந்தாலும் பொறக்கலாம்; பொறக்காமலும் போகலாம்"


ஜோஸ்யர்கள் அவர்கள் பங்குக்கு அந்தக் காலத்து வானிலை அறிக்கை போல், அந்தரத்தில் தொங்க விட்டார்கள்.


"ஏன் அங்க இங்கன்னு ஓடிண்டு இருக்கேள்? பேசாம பெரியவாளை போயி...தர்ஶனம் பண்ணுங்கோ! வழி கெடைக்கும்"


பெரியவாளுடைய பக்தர் ஒருவர் குடுத்த தெம்பினால், அடுத்த இரண்டு நாட்களில் அந்தக் குடும்பமே பெரியவா முன் விழுந்தெழுந்தது.


"இது...என்னோட தம்பி..! கல்யாணமாயி ஏழு வர்ஷம் ஆச்சு! பெரியவா அனுக்ரஹத்ல ஸந்தானப்ராப்தி உண்டாகணும்"


அண்ணாக்காரர் வேண்டிக் கொண்டார். தம்பியும் தம்பி பெண்டாட்டியும் பெரியவாளை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


"பாரு!.... நா....ஒண்ணும் மந்த்ரவாதி இல்ல; ஆருடம் சொல்றவன் இல்ல; டாக்டர் இல்ல; தெய்வக்ஞன் இல்ல; ப்ரஹ்மா எழுதியிருக்கறபடிதான் எல்லாமே நடக்கறது-ன்னு ஶாஸ்த்ரம் சொல்றது! வீணா அலைஞ்சதெல்லாம் போறும்! ஶிவா.... ராமா..ன்னு சொல்லிண்டு இருங்கோ!..."


ப்ரஸாதம் குடுத்தார்.


அவர்களுக்கோ ஒரே குழப்பம்.


"பெரியவா என்ன சொல்றார்? பேசாம ஆத்துல ஒக்காந்துண்டு நாம ஜபம் பண்ணச் சொல்றாரா? அதுவே வேண்டின பலனைக் குடுக்கும்ன்னு சொல்றாளா? இப்பவே ரெண்டு பேருக்கும் நாப்பது வயஸு ஆயாச்சு!..."


பெரியவா சொன்னது ஒன்று; இவர்கள் அதைப் 'புரிந்து' கொண்டு செய்தது, வேறொன்று;


எல்லோருமே அப்படித்தானே செய்கிறோம்!


தாங்களாகவே பெரியவா சொன்னதுக்கு ஏதேதோ அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள்.


"நமக்குத்தான் கொழந்த பொறக்காதுன்னார்.... ஆனா ஸ்வீகாரம் பண்ணிக்கலாமே? "


ஏகோபித்த மனஸுடன், ஏதோ அனாதை இல்லத்திலிருந்து அழகான ஆண் குழந்தையை முறைப்படி தத்து எடுத்துக் கொண்டு வந்தார்கள்.


ஆரம்பத்தில் 'இது யாரோ பெத்த குழந்தை' என்று ஒதுங்கியிருந்த மாமியார் கூட கொஞ்ச நாளில் மனஸு மாறி, தன் பேரனை ஸதா இடுப்பில் தூக்கிக் கொண்டு, கீழே விடவே மனஸில்லாமல் கொஞ்சித் தீர்த்தாள்.


சில மாஸங்கள் ஆனந்தமாக கழிந்தது. திடீரென்று அந்தக் குழந்தைக்கு ஏதேதோ புதுஸு புதுஸா வ்யாதிகள்; வேறு வேறு Child Specialists ; குழந்தையின் விளையாட்டு சொப்புக்களை விட, ஏகப்பட்ட மருந்துகள்; வீட்டில் எப்போதும் கவலை, அழுகை.....


கொழுகொழு கண்ணனாக இருந்த குழந்தை, ஒரே நோஞ்சானாக ஆனது. ஒரு வயஸு முடிவதற்குள் இத்தனையும் நடந்துவிட்டது.


"கொழந்தையே இல்லாம.... இருந்திருக்கலாமோ?"


அம்மாக்காரி உள்பட, அத்தனை பேரும் இப்படி நினைக்கும் அளவு போய்விட்டது!


பெரியவாளிடம் குழந்தையைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.


"நாலு வயஸாறது பெரியவா.....இன்னும் நடக்கவே வரல..."


அம்மாக்காரி விக்கி விக்கி அழுதாள்.


பெரியவா குழந்தையைப் பார்த்தார்....எதுவுமே பேசவில்லை. ஒருமணி நேரம் காத்திருந்தும் பெரியவா இவர்கள் பக்கம் திரும்பக்கூட இல்லை. எழுந்து விஶ்ராந்தி பண்ணிக்கொள்ளச் சென்றுவிட்டார். அன்று முழுவதும் பெரியவா வெளியே வரவில்லை. ப்ரஸாதம் பெற்றுக்கொள்ளாமல் அங்கிருந்து நகருவதில்லை என்று அந்தக் குடும்பமும் 'தர்ணா' பண்ணுவது போல் மறுநாளும் பெரியவா முன்னால் ரெண்டு மணி நேரம் நின்றார்கள்.


குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த அம்மாவையும், அப்பாவையும் பெரியவாளின் "சொடக்கு" ஶப்தம் அழைத்தது.


"கொழந்தைய... கீழ படுக்க வை!.."


ஜாடை காட்டினார்.


"பேர் என்ன?.."


"காஶ்யப்"


"நா.....சொன்னாக் கேப்பேளா? ..."

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
"பெரியவா என்ன சொன்னாலும் கேக்க சித்தமாயிருக்கோம்"


"கொழந்தைக்கு ஒடம்பு ஸெரியில்ல; அதுனால, ஒனக்கும் மனஸு ஸெரியா இல்ல.. கொழந்தை பொழைக்கணும், நீயும் நிம்மதியா இருக்கணும். மொத்தத்ல... ஒனக்கும் கொழந்தைக்கும் ஒத்துக்கல!...கொழந்தைட்ட பாஸம் இருந்...து....து....!.."


அம்மாவுக்கு ஹ்ருதயம் அடித்துக் கொண்டது! பெரியவா சொன்ன ஸத்யத்தை லேஸில் ஜீரணிக்க முடியவில்லை.


ஆம்...! பாஸம் past-ல் இருந்தது...


இப்போது?.......


'ஏண்டா தத்து எடுத்துக் கொண்டோம்!' என்று அவளே நினைத்துவிட்டது அந்தர்யாமிக்கு தெரியாதா!


பெரியவாளை சற்று தள்ளி நின்று தர்ஶனம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பணக்கார தம்பதியை, அருகே வருமாறு ஜாடை காட்டினார். அவர்கள் வந்தார்கள்.


"இவாளுக்கு இந்தக் கொழந்தைய ஸ்வீகாரமா குடுத்துடேன்!..."


"ஹா! ஈஶ்வரா! "


வைத்துக் கொள்ளவும் மனஸில்லாமல், பிரியவும் மனஸில்லாமல் தவித்தாள்.


"இவர் எஸ்டேட் ஓனர்..! கொழந்தை கெடையாது..! நன்னா வைத்யம் பண்ணுவா..! ப்ரியமா வளப்பா!"


காஶ்யப்..... தன் புது அப்பா அம்மாவிடம், பழைய அம்மாவால்.... அப்படியே, தூக்கிக் குடுக்கப்பட்டான்!


பெரியவாளுடைய திருக்கரத்தால் ப்ரஸாதம் கிடைத்தது. வீட்டுக்கு வந்ததும் எல்லாரும் பிழியப் பிழிய அழுதார்கள்.


"அன்னிக்கே பெரியவா சொன்னதை நாம மண்டூகங்கள் புரிஞ்சுக்காம போய்ட்டோமே! அலைஞ்சதெல்லாம் போறும்..ன்னார்! அதையும் மீறி, கொழந்தையைத் தூக்கிண்டு வந்தோம்...! நமக்கு இந்த ஜன்மால ஸந்தான ப்ராப்தி இல்லேன்னு பெரியவா நாஸூக்கா சொன்னதை புரிஞ்சுக்கலியே!.."


பாவம்.....புலம்பினார்கள்.


காலம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் ஆற்றியது!


கிட்டத்தட்ட ஏழெட்டு வர்ஷங்கள் கழித்து, அக்குடும்பத்தின் மூத்த அண்ணாவுக்கு ஷஷ்டியப்தபூர்த்தி ! பெரியவாளை தர்ஶனம் பண்ண எல்லாரும் போனார்கள்.


இவர்களுக்கு முன்னால் ஒரு சின்னப்பையன் போய்க் கொண்டிருந்தான்.


பத்து-பன்னெண்டு வயஸுக்குள் இருக்கும். ஸமீபத்தில் போட்ட புதுப் பூணூலுடன், கையில் மஞ்சள் சரடு!


"டேய்! பாரத்வாஜ்!..."


பின்னாலிருந்து அவனுடைய அம்மா அழைத்ததும், இந்தக் குடும்பத்தினரும் எதேச்சையாக திரும்பிப் பார்த்தனர்.


தம்பி பெண்டாட்டி அதிர்ந்து போனாள்!


"நீங்க..நீங்க.....காஶ்யப்....காஶ்ய...ப் !"


அவளால் பேச முடியவில்லை.


"ஆமா..! அதோ அவன்தான்! பாரத்வாஜ்..ன்னு பேர் வெக்கச் சொல்லி பெரியவா அப்போவே உத்தரவாச்சு! போன வாரந்தான் உபநயனம் ஆச்சு!.... ஆமா... நீங்க யாரு?.."


எஸ்டேட் ஓனரின் மனைவி கேட்டாள். அவளுக்கு இவர்களை ஞாபகமே இல்லை.


"நாங்க...மெட்ராஸ்! ..."


அதற்கு மேல் எதுவும் பேசாமல், லேஸாக துளிர்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து பெரியவா முன் நமஸ்காரம் பண்ணினாள், பாரத்வாஜின் [காஶ்யப்]பழைய அம்மா!


நமஸ்காரம் பண்ணி விட்டு, எழுந்து கொண்டு பெரியவாளைப் பார்த்தவளுக்கு, ஒரு க்ஷணம் அப்படியே உடலெல்லாம் சிலிர்த்தது!


ஆம்! பெரியவாளுக்கு நான்கு முகம் தெரிந்தது, அவள் கண்களுக்கு மட்டும்!


ஆம்! ப்ரஹ்மனின் ஶக்தியான ஸரஸ்வதியும் ப்ரஹ்மனும் வேறுவேறா என்ன?


"ப்ரஹ்மா எழுதியிருக்கறபடிதான் எல்லாமே நடக்கறது.."


பல வர்ஷங்களுக்கு முன் பெரியவாளுடைய குரல் உள்ளே ஒலிக்க, வெளியே... ப்ரஹ்மதேவனும் தானே! என்று அவளுக்கு உணர்த்தி, அந்த தாயின் தவிப்பை ஆற்றிக் குடுத்தார்.


வீட்டுக்கு வந்ததும், அவளுடைய புருஷன் கேட்டார்...


"ஆமா.. இத்தன வர்ஷம் கழிச்சு எப்டி அந்த அம்மாவை அடையாளம் கண்டு பிடிச்சே?..."


"அன்னிக்கு காஶ்யப்பை தூக்கிக் குடுத்தப்போ, அவாளோட உதட்டுக்கு எடது பக்கம், ஒரு குந்துமணி ஸைஸ்ல மச்சம் இருந்துது..."


ஆனால் இப்போது அவள் மனஸ் உண்மையிலேயே அமைதி அடைந்தது.


எல்லாமே பகவத் ஸங்கல்பம் என்ற ஸத்யத்தை நாம் மனஸார உணர்ந்துவிட்டால், எது நமக்கு இல்லையோ, அது இல்லையே என்ற குறை உண்டாகாது.


'ப்ரஹ்மா எழுதினதை மாத்த முடியாது" என்று பெரியவா சொன்னதை அந்த அம்மா ஸரியாக புரிந்து கொண்டிருந்தால், இத்தனை ப்ரச்சனையே வந்திருக்காது.


ப்ரஹ்மா என்பதும் பெரியவாதானே! பெரியவாளுக்கு அன்னியமாக ப்ரஹ்மாவை நினைத்ததால்தானே இந்தப் பாடு?


குழந்தை இல்லை என்பது, முதலில் ஒரு பெரிய குற்றமோ குறையோ இல்லை. அதற்காக பகவத் ஸங்கல்பத்துக்கு (இயற்கை) மாறாக, நாமாக ஒரு கார்யத்தை செய்யப் புகுந்தால், அதன் விளைவுக்கும் நாமேதான் பொறுப்பேற்க வேண்டும்.


நம்மிடம் இருப்பதைத் தவிர, இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படுவதை [ஞாயமான ஆசைதானே! என்று தோன்றுவதெல்லாம், நம் மனஸு நமக்குக் கூறும் ஸமாதானம்] தவிர்த்தாலே, நாம் நிம்மதியாக வாழ முடியும். நிம்மதியான மனஸில்தான் பகவானை ஸதா ஆராதிக்க முடியும். கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் நம் வாழ்வு முடிந்துவிடும். அதற்குள் நம்மை கடைத்தேற்றிக் கொள்ளும் வழி கிடைக்கும் போது, அதை 'டக்'கென்று உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.


குழந்தை இல்லையா? அதுவும் கடவுள் சித்தம் !


அதிகமான ஸொத்து சேர்க்கவோ, school, college admission-க்கு அலையவோ, டாக்டர்கள் பின்னால் படையெடுக்கவோ வைக்காமல், பகவானின் ஸ்தலங்களுக்கும், தீர்த்தங்களுக்கும் உடம்பில் தெம்பிருக்கும் போதே செல்லலாம், ஸம்பாத்யத்தில் நம் அத்யாவஶ்ய தேவைக்கு மேல் உள்ளதை, தர்ம கார்யங்களுக்கு செலவிடலாம் என்று நல்லதை எண்ணி, வாழ்க்கையை தாமரை இலைத் தண்ணீர் போல வாழ முடியும்.


வயஸான காலத்தில் நமக்கு ஆதரவு வேண்டாமா? என்றால், இன்றைக்கு ஸகட்டுமேனிக்கு திறக்கப்பட்டிருக்கும் old age home நமக்கான பதிலை சொல்லும். அந்த காலத்தில் வானப்ரஸ்தம் என்று வைத்தது போல், இன்று old age home இருக்கிறது.


எறும்புக்கு தன்னளவு தெரிந்ததை வைத்துக் கொண்டு, உலகம் இவ்வளவுதான்! என்று எடை போட்ட மாதிரி, நாமும் நம்முடைய இத்துனூண்டு அறிவை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி எண்ணுகிறோம். நமக்கெல்லாம் மேலே இருக்கும் அறிவிற்கு அறிவானவனை அறிந்து கொண்டால், நாமும் அமைதியில் மூழ்கலாம்.